Published:Updated:

மீண்டும் சீரியஸ் லாக்டெளன், மீண்டும் சீரியல் ஷூட்டிங் நிறுத்தம்! - புது எபிசோடுகள் ஒளிபரப்பாகுமா?!

சென்னையில் கொரோனா ஆடும் கோரத் தாண்டவத்தால், மூன்று மாத இடைவெளிக்குப் பின் தொடங்கப்பட்ட சீரியல்களின் ஷூட்டிங்குகள் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளன.

முன்னதாக கடந்த மார்ச் மாதத்தில் லாக் டௌன் தொடங்கியதும் சீரியல்களின் ஷூட்டிங்குகள் நிறுத்தப்பட்டு, பழைய சீரியல்களை மறு ஒளிபரப்பு செய்தன சேனல்கள்.

இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், ``சீரியல்களையே நம்பியிருக்கும் குடும்பங்கள் வேலைவாய்ப்பை இழக்கின்றன. எனவே ஷூட்டிங் நடத்த அனுமதிக்க வேண்டும்'' என அரசிடம் வலியுறுத்தினார்கள், டிவி சீரியல் தயாரிப்பாளர்கள்.

லாக் டௌனுக்குப் பிந்தைய ஷூட்டிங்
லாக் டௌனுக்குப் பிந்தைய ஷூட்டிங்

அரசும் அனுமதி கொடுத்தது. முதலில் 20 பேருக்கு மேல் கலந்து கொள்ளக் கூடாது என்ற அரசு பிறகு அந்த எண்ணிக்கையை 60 ஆக உயர்த்திக்கொள்ள அனுமதித்தது. இதைத் தொடர்ந்து ஒருவழியாகக் கடந்த வாரம்தான் `செம்பருத்தி’, `பாண்டியன் ஸ்டோர்ஸ்’ உள்ளிட்ட முன்னணி சேனல்களின் பிரைம் டைம் ஹிட் சீரியல்களின் ஷூட்டிங்குகள் தொடங்கின. இந்த நிலையில் தற்போது மறுடியும் சென்னையில் முழு ஊரடங்கு காரணமாக ஷூட்டிங் தடைபட்டுள்ளது.

சீரியல் தயாரிப்பாளர்கள் சிலரிடம் பேசினோம்.

``கொரோனாவால் சொல்ல முடியாத துன்பத்தை அனுபவிச்சிட்டிருக்கிற மக்களுக்கு பொழுதுபோக்கு அவசியமான்னு சிலர் சாதாரணமா கேட்டுடுறாங்க. இப்படிப் பேசறவங்க, `இதுவும் ஒரு இண்டஸ்ட்ரிதாங்கிறதையும் ஒரு சீரியலை நம்பி நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இருக்குங்கிறதையும் புரிஞ்சுக்கணும். மத்த சில தொழில்களுக்குத் தளர்வு கொடுக்கத் தொடங்கிய பிறகே சீரியல் ஷூட்டிங்கிற்கு அனுமதி கேட்டோம்.

`60 பேர்தான் கலந்துக்கணும்’, `ஆர்ட்டிஸ்டுகளுக்கு இன்ஷூரன்ஸ் எடுக்கணும்’, `கேரவன்ல ஏசி போடக்கூடாது’... இப்படி நிறைய நிபந்தனைகளுடன் அனுமதியும் தந்தாங்க. முதல் ரெண்டு நாள் கொஞ்சம் சிரமமா இருந்துச்சு. ஆனா, அந்தச் சூழலையும் பழகிக்கத் தொடங்கினா, அதுக்குள்ள மறுபடியும் லாக் டௌன். என்ன சொல்றதுன்னே புரியலைங்க.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

ஷூட்டிங் தொடங்கியாச்சுன்னு சில சீரியல்கள்ல புது எபிசோடு குறித்த ப்ரமோவெல்லாம் வந்திடுச்சு. இப்ப மறுபடியும் அதே ரிப்பீட்டு சீரியல்களைத்தான் ஒளிபரப்ப வேண்டிய நிலை’’ என்கிறார்கள் இவர்கள்.

வரும் 19-ம் தேதி வெள்ளிக்கிழமை சென்னையில் முழு ஊரடங்கு தொடங்குவதால் இன்றுடன் எல்லா ஷூட்டிங்குகளும் நிறைவடைய இருக்கின்றன. `ஜூன் 30-ம் தேதிக்குப் பிறகு என்ன நிலை’ என்றால், அப்போதைய நிலவரத்தைப் பொறுத்துதான் தெரியும் என்கிறார்கள்.

கடந்தவாரம் ஷூட்டிங் நடந்தபோது பல்வேறு சீரியல்களின் படப்பிடிப்புத் தளங்களுக்கு விசிட் செய்து ஷூட்டிங்கைப் பார்வையிட்ட சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவர் ரவி வர்மாவிடம் பேசினேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரவி வர்மா
ரவி வர்மா

``20 ஸ்பாட்டுகளுக்கு மேல சின்னத்திரை நடிகர் சங்கத்துல இருந்து விசிட் போனோம். ஆர்ட்டிஸ்டுகளுக்கு பாதுகாப்பு அம்சங்கள் எப்படி இருக்குங்கிறதைத் தெரிஞ்சுக்கலாம்னுதான் போனோம். அரசு வழிகாட்டுதல்களை ஃபாலோ பண்ணித்தான் ஷூட்டிங் நடந்தது. ஷூட்டிங்கே நடக்காம இருக்குறதுக்கு இது பரவால்லன்னு தோணுச்சு’’ என்றார்.

இதனிடையில், 60 பேர்களுடன் நடந்த ஷூட்டிங் மூலம் பல்வேறு பாசிட்டிவான விஷயங்களும் நடந்தேறியதாகச் சொல்கிறார்கள் சிலர்.

``ஷூட்டிங் ஸ்பாட்ல சுத்தத்தைப் பராமரிக்கிறதுக்கு இந்த லாக் டௌன் ரொம்பவே உதவியிருக்கு. ஆர்ட்டிஸ்டுகள், டெக்னீஷியன்கள்கிட்ட முன்னவிட இப்ப ரொம்பவே விழிப்புணர்வு வந்திருக்கு'' என்கிறார் `நீ தானே என் பொன் வசந்தம்’ தொடரின் ஹீரோ ஜெய் ஆகாஷ்.

``ஐம்பது சதவிகிதம் பேரை வச்சே முன்னாடி தந்த அதே தரத்துடன் சீரியலை எடுக்க முடியும்னா, அது சீரியலின் தயாரிப்புச் செலவைக் குறைக்க நிச்சயம் வழி செய்யும்னு நம்புறேன்'' என்கிறார் தயாரிப்பாளர் ஒருவர்.

ஜெய் ஆகாஷ்
ஜெய் ஆகாஷ்

கடைசியாகக் கிடைத்த தகவலின்படி, கடந்த ஒருவாரம் நடைபெற்ற ஷூட்டிங்கின் எபிசோடுகளை கையில் வைத்துக் கொண்டு புதிய எபிசோடுகளின் ஒளிபரப்பைத் தொடங்கி விட முடியாது என முடிவு செய்திருக்கின்றன சேனல்கள். ஏனெனில் ஜூன் 30-க்குப் பிறகு நிலைமை எப்படி இருக்கும் என்பதை இப்போது கணிக்க இயலாது.

எனவே, சீரியல் ரசிகர்களுக்கு அடுத்த சில வாரங்களுக்கும் அதே பழைய ரிப்பீட்டு சீரியல்கள்தான். சீரியல் பிரியர்கள் செம சோகத்தில் இருக்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு