சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

வல்லமை தாராயோ - இந்தியாவின் முதல் டிஜிட்டல் டெய்லி சீரிஸ்!

வல்லமை தாராயோ
பிரீமியம் ஸ்டோரி
News
வல்லமை தாராயோ

தொலைக்காட்சியிலிருந்து OTT-க்கு விகடன் டெலிவிஸ்டாஸ் கிளை விரித்திருப்பது என்பது இயல்பாக நடைபெற்ற மகிழ்ச்சியான விஷயம்.

உலகத்தின் இயக்கத்தில் எப்போதும் மாறாத ஒன்று மாற்றம்தான். அந்த மாற்றத்தை நிகழ்த்தும் கணமும் மகத்தானது. கலையும் தொழில்நுட்பமும் கைகோத்து இந்த மாற்றங்களை நிகழ்த்துகின்றன. தியேட்டர்களில் இருந்த சினிமா, இன்று ஓடிடி தளம் வழியாக வீட்டுக்கே வந்திருக்கிறது. குறும்படங்கள், ஆவணப்படங்கள், வெப்சீரிஸ் என்று கலைவடிவங்களும் அதன் தளங்களும் மாறுகின்றன. அப்படித்தான் இப்போது ஒரு புதிய முயற்சி ‘வல்லமை தாராயோ.’

‘விகடன் டெலிவிஸ்டாஸ்’ மற்றும் ‘மோஷன் கன்டென்ட் குரூப்’ ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து உருவாக்கும் ‘வல்லமை தாராயோ’ டெய்லி சீரிஸ், தினந்தோறும் யூடியூப்பில் மட்டுமே ஒளிபரப்பப்படவிருக்கிறது. மருத்துவமனையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட வெற்றித்தொடரான `எமர்ஜென்சி’யை இயக்கிய சிதம்பரம் மணிவண்ணன்தான் இந்த டெய்லி சீரிஸின் இயக்குநர். ‘கோலங்கள்’ புகழ் வி.திருச்செல்வம் கதை, திரைக்கதை எழுதியிருக்கிறார். அக்டோபர் 26ஆம் தேதி விஜயதசமியிலிருந்து, திங்கள் முதல் வெள்ளி வரை பிரைம் டைமில் ‘VikatanTV’ யூடியூப் சேனலில் ‘வல்லமை தாராயோ’ ஒளிபரப்பாகிறது.

வல்லமை தாராயோ -  இந்தியாவின் முதல் டிஜிட்டல் டெய்லி சீரிஸ்!

``தொலைக்காட்சியிலிருந்து OTT-க்கு விகடன் டெலிவிஸ்டாஸ் கிளை விரித்திருப்பது என்பது இயல்பாக நடைபெற்ற மகிழ்ச்சியான விஷயம். யூடியூப் மற்றும் மோஷன் கன்டென்ட் குழுமத்தோடு இணைந்து இந்தியாவின் முதல் டெய்லி சீரிஸை வழங்குவது பெருமகிழ்ச்சி’’ என்று விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநரான பா.சீனிவாசன், இந்தப் புதிய முயற்சி பற்றி உற்சாகமாகப் பேசினார். ``தொலைக்காட்சிகளில் பார்த்துவந்த பல தொடர்களைத்தான் ரசிகர்கள் யூடியூப்பிலும் பார்த்துவந்தார்கள். இப்போது விகடன் டெலிவிஸ்டாஸோடு இணைந்து நாங்கள், யூடியூப் ரசிகர்களுக்கு எனத் தனித்துவமான டெய்லி சீரிஸை வழங்கப்போவதை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது’’ என்றார் மோஷன் கன்டென்ட் (இந்தியா) குழுமத்தைச் சேர்ந்த சுதீப் சன்யால்.

சிதம்பரம் மணிவண்ணன் - வி.திருச்செல்வம்
சிதம்பரம் மணிவண்ணன் - வி.திருச்செல்வம்

`வல்லமை தாராயோ’ டெய்லி சீரிஸின் கதை, திரைக்கதை எழுதியிருக்கும் இயக்குநர் வி.திருச்செல்வம், “விகடன் தயாரிப்பில் `கோலங்கள்’ சீரியல் மூலமாகத்தான் நான் அறிமுகமானேன். அப்போதிலிருந்து இப்போ வரைக்கும் விகடன் புதுமையான விஷயங்களைத் தொடர்ந்து பண்ணிட்டே இருக்காங்க. யூடியூப் சேனலுக்காக ஒரு சீரியல் பண்ணலாம்னு அவங்க சொன்னப்போ ஆச்சர்யமாகவும் பிரமிப்பாகவும் இருந்துச்சு. ‘80 எபிசோடுகள் வரக்கூடிய ஒரு சீரியல் பண்ணலாம்’னு விகடன் நிறுவனம் முடிவு பண்ணினப்போ, அந்தத் தொடருக்கு நான் சொன்ன கதை சரியாக இருக்கும்னு முடிவு பண்ணினாங்க. அதுதான் இப்போ `வல்லமை தாராயோ’ டெய்லி சீரிஸா மாறியிருக்கு. தொலைக்காட்சிகளில் 1000 எபிசோடுகளுக்கு சீரியல் பண்ணுறதைவிட, இந்த மாதிரி குறைவான எபிசோடுகளுக்கு சீரியல் பண்ணுறது ரொம்பவே நல்லாருக்கு. சீரியல் ஆரம்பிக்கும்போதே இத்தனை எபிசோடுகள்தான் என முன்னாடியே முடிவு பண்ணிட்டு எடுக்குறது ரொம்ப நல்ல விஷயமா எனக்குத் தோணுது. எண்பதே எபிசோடுகள் என்பதால் கதையும் விறுவிறுப்பாக சுவாரஸ்யமாக நகரும்.

வல்லமை தாராயோ -  இந்தியாவின் முதல் டிஜிட்டல் டெய்லி சீரிஸ்!

இது ஒரு பெண்ணை மையப்படுத்திய கதை. ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து அது சுயமாக சிந்திக்கிற வரைக்கும் பெற்றோர்களின் சிந்தனைதான், பிள்ளைகளின் சிந்தனையாகவும் இருக்கும்னு சொல்லுவாங்க. அதுவே அந்தக் குழந்தை பெண் குழந்தையாக இருக்கும் பட்சத்தில், திருமணம் ஆகுற வரைக்கும் பெற்றோர்கள் சொல்றதைக் கேட்டும், கல்யாணத்திற்குப் பிறகு கணவர் சொல்றதைக் கேட்டும் நடக்கவேண்டிய சூழல். இப்படிப்பட்ட சூழலில் இருக்கிற ஹீரோயின், தன்னோட கனவை நோக்கி நகர முயல்கிறாள். அதில் அவள் சந்திக்கிற பிரச்னைகள், உறவுச் சிக்கல்னு கதை நகரும். பெண்களுக்கு ரொம்பவே பாசிட்டிவிட்டியைக் கொடுக்கிற சீரியலாக இது இருக்கும்’’ என்பவரின் வார்த்தைகளில் நம்பிக்கைச்சுடர்.

`வல்லமை தாராயோ’ தொடரின் இயக்குநர் சிதம்பரம் மணிவண்ணன் கனவுகளைச் சுமந்த வார்த்தைகளை முன்வைக்கிறார்.

வல்லமை தாராயோ -  இந்தியாவின் முதல் டிஜிட்டல் டெய்லி சீரிஸ்!

“ ‘புட் சட்னி’ யூடியூப் சேனலில் நான் இயக்கிய `எமர்ஜென்சி’ வெப் சீரிஸைப் பார்த்துட்டுத்தான் விகடனிலிருந்து எனக்கு ‘வல்லமை தாராயோ’ டெய்லி சீரிஸை இயக்குறதுக்கு வாய்ப்பு வந்துச்சு. விகடனிலிருந்து ஒரு வாய்ப்பு வரும்போது, அதை மிஸ் பண்ணிடக்கூடாதுன்னு நினைச்சேன். அதே மாதிரி, இந்தியாவிலேயே முதல் முறையாக யூடியூப்பிற்காக ஒரு பிரத்யேக சீரிஸ்; அதுவும் நார்மல் வெப் சீரிஸ் மாதிரி இல்லாமல் 80 எபிசோடுகளில் பண்ணணும்னு சொன்னப்போ, ரொம்பவே ஆர்வமாகிடுச்சு. `எமர்ஜென்சி’ வெப் சீரிஸை முடிச்சிட்டு படம் இயக்குற ஐடியாவில்தான் இருந்தேன். ஆனால், கொரோனா காரணமாகப் பட வேலைகளில் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டுச்சு. அந்தச் சமயம்தான் இந்த வாய்ப்பு. `வல்லமை தாராயோ’ டெய்லி சீரிஸோட 80 எபிசோடும் 10 படங்கள் அளவிற்கு இருக்கும். அதனால, சினிமா எடுக்கும் திருப்தியை இந்த டெய்லி சீரிஸும் தரும்.

அப்துல்
அப்துல்

திருச்செல்வம் சாரும் சினிமாவுக்கான விறுவிறுப்பையும் சுவாரஸ்யத்தையும் திரைக்கதையில் கொண்டு வந்திருக்கார். இது யூ டியூப் பார்வையாளர்களை மனதில்கொண்டு உருவாக்கப்பட்ட டெய்லி சீரிஸ். அதனால் நடிகர்களும் யூ டியூப் பார்வையாளர்களுக்குப் பரிச்சயமானவங்களா இருக்கணும்னு யோசிச்சோம். ஹீரோயினா ஷாலி நிவேகாஸ், ஹீரோவா கெளசிக் நடிச்சிருக்காங்க. முக்கியமான கேரக்டர்களில் அப்துல், சரண்யா ரவிச்சந்திரன், பார்வதி நடிச்சிருக்காங்க. கேமரா மேன் சத்யா வெங்கட்ராமன், எடிட்டர் மதிவதனன் J A, இசையமைப்பாளர் K C பால சாரங்கன்னு என்னோடு `எமர்ஜென்சி’ வெப் சீரிஸில் வொர்க் பண்ணின அதே டெக்னிக்கல் டீம்தான் இதிலும் வொர்க் பண்ணியிருக்காங்க. அவுட்புட் ரொம்பவே நல்லா வந்திருக்கு. யூடியூப்பிற்காக பிரத்யேகமாக எடுக்கப்படுற முதல் சீரிஸை நான் இயக்குவதில் எனக்கு எவ்வளவு சந்தோஷம் இருக்கோ, அதே அளவிற்கு மிகப்பெரிய பொறுப்பும் இருக்கு. அந்தப் பொறுப்பை உணர்ந்து இந்த டெய்லி சீரிஸை இயக்கிட்டு இருக்கேன்னு நம்புறேன்’’ என்று சொல்லும்போது உற்சாக மின்னல்கள்.

`வல்லமை தாராயோ’ வலிமைபெறும்!

‘வல்லமை தாராயோ’வை ஏன் மிஸ் பண்ணக்கூடாது? சில காரணங்கள்....

ஷாலி நிவேகாஸ்
ஷாலி நிவேகாஸ்

* இந்தியாவிலேயே யூடியூப்பிற்காக மட்டும் பிரத்யேகமாக உருவாக்கப் பட்டிருக்கும் முதல் டெய்லி சீரிஸ், ‘வல்லமை தாராயோ.’

* காத்தாடி ராமமூர்த்தி, ஆர்.எஸ்.சிவாஜி மற்றும் தற்போது யூடியூப்பில் பிரபலமாக இருக்கும் ஷாலி நிவேகாஸ், கெளசிக், பார்வதி, அப்துல் என மூன்று தலைமுறை நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

* யூடியூப்பில் சென்சார் இல்லை என்றாலும், எல்லா வயதினரும் பார்க்கக்கூடிய வகையில் இந்தத் தொடர் எடுக்கப்பட்டிருக்கிறது.

* பெண்கள் எப்படி பல தடைகளைத் தாண்டி, வெற்றிகரமான வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள் என்பதுதான் கதை மையம். அதே சமயம், கட்டாயத் திருமணத்தின் விளைவுகளையும் அழுத்தமாகப் புரிய வைக்கும்.

* தமிழில் சில படங்களில் நடித்திருக்கும் சரண்யா ரவிச்சந்திரனுக்கு ‘வல்லமை தாராயோ’ தொடரில் முக்கியமான கேரக்டர். இவரின் நடிப்பைப் பார்த்தபிறகு, அவருக்கெனச் சில காட்சிகளைக் கூடுதலாகச் சேர்த்திருக்கிறார்கள்.