Published:Updated:

``என் ரொமான்ஸ் பார்த்துட்டு மனைவி திட்டல... ஆனா,...?!'’ - `வள்ளி’ ராஜ்குமார்

``பாக்யராஜ் வீடு எங்க இருக்குன்னு எல்லார்கிட்டையும் கேட்டு ஒருவழியா இரவு அவர் வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். அவருக்கு பக்கத்துல சப்பணம் போட்டு உட்கார்ந்துட்டேன்''

ராஜ்குமார்
ராஜ்குமார் ( வள்ளி சீரியல் )

தங்கம், வாணி ராணி, முந்தானை முடிச்சு, சரவணன் மீனாட்சி போன்ற ஹிட் சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்கள் நடித்தவர் நடிகர் ராஜ்குமார். தற்போது `வள்ளி' சீரியலில் லீட் ரோலில் நடித்துவருகிறார். கிராமத்து முகம், இயல்பான நடிப்பு, கலகலப்பான பேச்சு இதுதான் இவரின் ப்ளஸ்.  சத்யமங்கலம் டூ சின்னத்திரை வந்த பயணத்தை நம்மிடம் கலகலப்பாக பகிர்ந்து கொண்டார் ராஜேஷ்.

ராஜ்குமார்
ராஜ்குமார்

சீரியல் எண்ட்ரி ?

என் சொந்த ஊர் சத்யமங்கலம். சின்ன வயசுல இருந்தே சினிமால மேல ஒரு க்ரஷ்.  நடிகனாக என்னென்ன திறமைகள் வேணுமோ அதை சின்ன வயசுல இருந்தே வளர்த்துக்க ஆரம்பிச்சேன். ஸ்கூல் படிக்கும்போது  நாடகங்களில் நடிப்பேன். என்னோட சினிமா ஆசையைப் பற்றி அப்பாக்கிட்ட சொன்னேன். அவர் என் கனவுக்கு பச்சைக் கொடி காட்டினார். எனக்கு ஃபுல் சப்போர்ட் பண்ணுவேன்னு சொன்னார். எங்க ஊரில் நிறைய பட நிறுவனங்கள் ஷூட்டிங் எடுக்க வருவாங்க. அந்த சமயத்துல என் அப்பா என்னை ஷூட்டிங் பார்க்க கூட்டிட்டுப் போவார். அங்கு வந்திருக்கும் இயக்குநர், தயாரிப்பாளர் போன்றவர்களிடம் என் பையனுக்கு சான்ஸ் கொடுங்கன்னு கேட்பார்.

என் அப்பா நெசவுத் தொழிலாளி. முன்னாடி பாக்யராஜ் ரசிகர் மன்றத் தலைவரா இருந்தார். அவருக்கும் சினிமா ரொம்ப பிடிக்கும். அதனாலதான் என் கனவுகளை புரிஞ்சிக்கிட்டார். சத்யமங்கலம், பொள்ளாச்சி அப்படின்னு எங்க ஷூட்டிங் நடந்தாலும் எனக்காக சான்ஸ் கேட்க போய்டுவார். அப்பா பாக்யராஜ் ரசிகர் மன்றத் தலைவரா இருந்ததால அவருக்கு பாக்யராஜிடம் ஓர் அறிமுகம் இருந்துச்சு. ஒருவாட்டி `சொக்கத் தங்கம்' பட ஷூட்டிங்கிற்காக பாக்யராஜ் சார் பொள்ளாச்சி வந்திருந்தார்.

நானும் அப்பாவும் அவரை சந்திக்கப் போனோம். நான் அப்போ ப்ளஸ் டூ படிச்சு முடிச்சிருந்த சமயம். பாக்யராஜ் சாரை பார்த்து `பையன் ரொம்ப நடிக்க ஆசைப்படுறான். ஒரு வாய்ப்பு கொடுங்க’ -ன்னு கேட்டார். ஆனால், பாக்யராஜ் சார் `ரொம்ப சின்னப் பையனா இருக்கான். இன்னும் கொஞ்சம் வளரணும். காலேஜ் படிக்க வைங்க’-ன்னு சொல்லி அனுப்பிட்டார். அதன்பிறகு காலேஜ்ல சேருவதற்கு முன்னாடி ஒரு சின்ன வேலைல சேர்ந்தேன். அப்புறம்  ஒருகட்டத்துல இதெல்லாம் வேலைக்கு ஆகாதுன்னு எனக்குப் புரிஞ்சது. நேரடியா சென்னைக்கு போய் சான்ஸ் தேடலாம்னு முடிவு எடுத்தேன். அப்பாவையும் கன்வின்ஸ் பண்ணேன்.

ராஜ்குமார்
ராஜ்குமார்

பாக்யராஜ் சார் பிறந்த நாளைக்கு அவரின் கோவை ரசிகர் மன்ற நிர்வாகிகள் அவரை சந்திக்க சென்னைக்கு கிளம்பிட்டு இருந்தாங்க. அவங்கக் கூடயே அப்பா என்னை அனுப்பி வைக்க முடிவு எடுத்தார். 2002-ல் ஒரே ஒரு சூட்கேஸுடன்  எங்க ஊரை விட்டு சென்னைக்குக் கிளம்பினேன். ஓர் அம்பாசிடர் காரில் 8 பேருடன் சேர்ந்து சென்னை நுங்கம்பாக்கம் வந்து சேர்ந்தேன். அன்று (ஜனவரி 7, 2002) பாக்யராஜ் சார்  பிறந்தநாள் என்பதால வீட்டுக்கு வெளியே அவரின் ரசிகர்கள் கூட்டம். நானும் அவங்களோட ஒருவரா வீட்டுக்குள்ள போனேன்.

என்னைப் பார்த்ததும் அடையாளம் கண்டுபிடிச்சிட்டார். `பொள்ளாச்சில பார்த்தோம்ல'-ன்னு கேட்டார். அப்புறம் இரவு வந்து பாருங்க பேசலாம்னு சொல்லி அனுப்பிட்டார். அப்போ எனக்கு சென்னை ரொம்ப புதுசு. சாப்பிடலாம்னு வெளியே போனேன். வழி மாறி எங்கோ போய், பாக்யராஜ் வீடு எங்க இருக்குன்னு எல்லார்கிட்டையும் கேட்டு ஒருவழியா இரவு அவர் வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். அவரோட பர்சனல் அறையில் அவருக்கு பக்கத்துல சப்பணம் போட்டு உட்கார்ந்துட்டேன். எனக்கு சான்ஸ் வாங்கிக் கொடுங்கன்னு கேட்டேன்.

அதற்கு அவர், `அன்னைக்கே கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்கன்னு சொன்னேன்ல. நீங்க ரொம்ப சின்ன பையனா இருக்கிங்க’ -ன்னு சொன்னார். `இல்லீங்க சார் என்னால எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியல. எனக்கு நடிப்புதான் ஆசை, லட்சியம். எனக்கு ஒரு ரெண்டு நாள் உங்க வீட்டில் தங்க இடம் கொடுங்க. அதன் பிறகு நான் வேலை தேடிக்கிட்டு சென்னையில் தங்க இடமும் பார்த்துக்குறேன்'னு சொன்னேன். அவர் கொஞ்சம் யோசிச்சிட்டு, `சரி இங்க கொஞ்ச நாள் தங்கிக்கோ'ன்னு சொன்னார். அப்புறம் என் நண்பர் மூலமா ஹோட்டல்ல பார்ட் டைம் வேலை கிடைச்சது. தங்க வீடும் பார்த்துக்கிட்டேன்.

இரண்டு வருடங்கள் அப்படியே போச்சு. நைட் ஷிஃப்ட் பார்ப்பேன். பகல் முழுக்க வாய்ப்பு தேடி அலைவேன். அப்புறம் வடபழனியில ஒரு பெரிய ஹோட்டல்ல வேலைக்குச் சேர்ந்தேன். அங்கு நிறைய சினிமா தொடர்பான நபர்கள் வந்துபோவாங்கன்னு அந்த ஹோட்டல்ல வேலைக்குச் சேர்ந்தேன். முன்பெல்லாம் சினிமாவில் நுழைய சின்னத்திரைதான் பெஸ்ட் வழி. இப்போ தான் யூடியூப், ஷார்ட் பிலிம் இதெல்லாம் வந்துச்சு. அதனால நான் ராஜ் மியூசிக் டிவியில் வி.ஜே வேலைக்கு அப்ளை பண்ணேன். வேலையும் கெடச்சது. அப்படிதான் என் சின்னத்திரை என்ட்ரி நடந்துச்சு.

இரண்டு வருடங்கள் தொகுப்பாளராக ராஜ் மியூசிக்ல வேலை பார்த்தேன். பின்னர் பழைய கான்டாக்ட்ஸ் வெச்சு வாய்ப்புகள் தேட ஆரம்பிச்சேன். ஹோட்டல்ல வேலை செய்தபோது இயக்குநர் அஷோக் குமார் நட்பு கிடைச்சது. அவரை நேரில் சந்திச்சேன். அவர், `தங்கம் சீரியலில் வெற்றிமாறன்-ன்னு ஒரு கபடி பிளேயர் கதாபாத்திரம் இருக்கு. கிராமத்துப் பையன் ரோல். நீ நல்லா பொருந்துவ'ன்னு சொன்னார். என் நம்பர் வாங்கி வெச்சிக்கிட்டார். அதன்பிறகு கொஞ்சநாள் போனதும் அவரே போன் பண்ணி கூப்பிட்டார். நிறைய போராட்டங்களுக்குப் பிறகுதான் தங்கம் சீரியல் வாய்ப்பு கிடைச்சது. அதுவும் மாஸ் ரோல். ரொம்ப ஈடுப்பாட்டோட அந்த சீரியலில் நடிச்சேன். அந்த கேரக்டர் எனக்கு நல்ல பேர் வாங்கி கொடுத்துச்சு. எனக்கு லைஃப் கொடுத்தது. என்ன ஒரு கஷ்டம்னா, அந்த சீரியல் முடியுற வரை என் கேரக்டர் பயணிக்கல. இடையில முடிச்சிட்டாங்க. அதன்பிறகு வாணி ராணி, முந்தானை முடிச்சு சீரியல் வாய்ப்பு வந்துச்சு. அதன்பிறகு வள்ளி சீரியலில் லீட் ரோல். இப்போ வரைக்கும் வள்ளி வெற்றிகரமா ஓடிக்கிட்டு இருக்கு.

ராஜ்குமார்
ராஜ்குமார்

தொடர்ந்து பாசிடிவ் ரோலில் நடிச்ச நீங்க பாரதி கண்ணம்மா சீரியலில் நெகடிவ் ரோலுக்கு எப்படி ஓகே சொன்னீங்க?

பாரதி கண்ணம்மா வாய்ப்பு வந்தபோது அது நெகடிவ் ரோல்னு சொல்லல. நான் சரவணன் மீனாட்சி சீரியலில் காமெடி ரோலில் நடிச்சிருப்பேன். அதே மாதிரியான கேரக்டர்தான் இதுவும்னு சொன்னாங்க. முதலில் கண்ணம்மாவுக்கு எதிரா பேசுவேன். அப்புறம் கண்ணம்மாவுக்கு ஆதரவா அந்த வீட்டுக்கே போய்டுவேன்னு சொல்லியிருக்காங்க. அதனால கணபதி கதாபாத்திரம் முழுக்க முழுக்க நெகடிவ்வா இருக்காது.

நீங்கள் நடித்ததில் உங்களுக்குப் பிடித்த கதாபாத்திரம்?

ராஜ்குமார்
ராஜ்குமார்

எனக்கு `வாணி ராணி' சீரியலில் கார்த்திக் கேரக்டர் ரொம்ப பிடிக்கும். அப்புறம் என்னோட ரியல் கேரக்டர் ஓரளவுக்கு மேட்ச் ஆகுற ரோல் சரவணன் மீனாட்சி சீரியல் சக்திவேல் கதாபாத்திரம்தான். நான் ரொம்ப சீரியஸா இருக்கவே மாட்டேன். திடீர்னு குழந்தைகளோட டான்ஸ் ஆடுவேன். கோவம் வந்தாலும் உடனே சரி ஆகிடுவேன்.

எப்பவும் ஜாலியா இருப்பேன்னு சொல்றீங்க நீங்க ரொம்ப கலங்கிய மொமன்ட் இருக்கா?

ஆமா இருக்கு. எனக்கு லைஃப் தங்கம் சீரியல்தான். ஆனால், ஒரு சில பிரச்னைகளால என்னோட கதாபாத்திரத்தை அப்படியே முடிச்சிட்டாங்க. கடைசிவரை அந்த கதாபாத்திரம் சீரியலில் வரல. எனக்கு அது ரொம்ப ஃபீல் ஆகிடுச்சு. மொட்டை மாடிக்கு போய் ரொம்ப அழுதுட்டேன். கிட்டத்தட்ட ஏழெட்டு வருஷ போராட்டத்துக்குப் பிறகு கிடைச்ச வாய்ப்பு அது. மகிழ்ச்சியான தருணங்கள கொடுத்த அந்த வேலை பாதியில பறிக்கப்பட்டத என்னால தாங்கிக்க முடியல. அப்புறம் என்னை நானே தேத்திக்கிட்டேன்.

நெகிழ்ச்சியான மொமன்ட்?

தங்கம் சீரியல்ல வெற்றிமாறனா அறிமுகமான பிறகு முதன்முறையா எங்க ஊருக்குப் போனேன். என்னை டிவியில பார்த்த ஊர்க்காரங்க ரொம்பவே மகிழ்ச்சிய வெளிப்படுத்துனாங்க. அப்படியே என்னை சூழ்ந்துக்கிட்டாங்க. அதைப் பார்த்து என் அப்பா ஃபீல் ஆயிட்டாரு. என் நம்பிக்கை வீண்போகலைன்னு சொல்லி கண்கலங்கினார். இதுல இன்னொரு ஹைலைட் என்னன்னா என் ஊர் குழந்தைக்கு வெற்றிமாறன் அப்படிங்குற பேர் வெச்சாங்க. அதையெல்லாம் மறக்கவே முடியாது.

என்னை டிவியில பார்த்த ஊர்க்காரங்க ரொம்பவே மகிழ்ச்சிய வெளிப்படுத்துனாங்க. அப்படியே என்னை சூழ்ந்துக்கிட்டாங்க.

வள்ளி சீரியலில் நான் அழுற மாதிரி ஒரு காட்சி வரும் . அதைப் பார்த்து என் பொண்ணு தேம்பித் தேம்பி அழுதிருக்கா. நான் ஷூட்ல இருந்தப்போ எனக்கு வீட்ல இருந்து போன் பண்ணி சொன்னாங்க. பாப்பா என்ன சொன்னாலும் சமாதானம் ஆகல. அழுதுட்டே இருக்கான்னு சொன்னாங்க. ஷீட்டிங் முடிச்சிட்டு சீக்கிரம் வீட்டுக்கு வாங்கன்னு சொன்னாங்க.

சினிமா அனுபவம்?

பாக்யராஜ் சார் என்னை பாரிஜாதம் படத்தில் நடிக்க வெச்சார். அவரின் மகள் சரண்யா நடித்த அந்தப் படத்துலதான் முதன்முதலா கேமரா முன்னாடி நிறுத்தினார். அந்த படத்தில் ஓப்பனிங் காட்சியில் சரண்யாவுக்கு லவ் லெட்டர் கொடுக்கணும். அந்த சீனில் என்னை நடிக்க வைக்க ரொம்ப கஷ்டப்பட்டார். ஒருவழியா அந்த சீன் ரொம்ப நல்லா வந்துச்சு. ஆனால், கடைசில எடிட்டிங்கில் அந்தக் காட்சிய தூக்கிட்டார். அதன்பிறகு சித்து ப்ளஸ் டூ படத்தில் ஹோட்டல் ரிசப்ஷனிஸ்டா நடிக்க வெச்சார்.  என்னோட கெட்ட நேரம் அந்தக் காட்சிகளும் எடிட்டிங்ல போயிடுச்சு. அதன் பிறகு தான் தங்கம் வாய்ப்பு வந்துச்சு.

ராஜ்குமார்
ராஜ்குமார்

வள்ளி சீரியலில் உங்களுக்கு நாயகிக்கும் செம கெமிஸ்ட்ரி. அதைப் பார்த்து உங்க மனைவி பொசஸிவ்வா ஃபீல் பண்ணையிருக்காங்களா?

கடவுள் புண்ணியத்துல எனக்கு அந்தப் பிரச்னை வரல. நாங்க 2 வருஷம் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டோம். கல்யாணத்துக்கு முன்னாடி எங்க அப்பா என் மனைவிக்கிட்ட தெளிவா சொல்லிட்டாரு. `பையன் நடிப்புத் துறையில் இருக்கான். அதனால பெண்கள் கூட நடிக்குறத நீ சகஜமாதான் பார்க்கணும்’ -ன்னு அட்வைஸ் பண்ணார். கல்யாணம் ஆன புதுசுல என் மனைவிய வள்ளி சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கூட்டிட்டு வந்தேன். வள்ளியாக நடிக்கும் வித்யாவுக்கும் கல்யாணம் ஆன புதுசு. அவங்களும் அவங்க கணவர கூட்டிட்டு வந்தாங்க. அன்னைக்கு வள்ளி சீரியலில் ஃபர்ஸ்ட் நைட் சீன். அந்த கதைப்படி நாயகனுக்கு நாயகிக்கும் ஃபர்ஸ்ட் நைட் ஏற்பாடு ஆகி கேன்சல் ஆகிட்டே இருக்கும். அன்னைக்கு கொஞ்சம் ரொமான்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டபோது என் மனைவி பக்கத்துலயேதான் இருந்தாங்க. க்ளோஸ் அப் ஷாட் எடுக்கும்போதெல்லாம் என் மனைவி எந்த ரியாக்‌ஷனும் கொடுக்கல. என் மனைவி எந்தப் பிரச்னையும் பண்ணமாட்டாங்க. ஆன என் பொண்ணு,`அப்பா நீ அந்த ஆண்டியோட என்ன பண்ணிட்டு இருக்க. அவங்கக்கூடலாம் பேசக் கூடாது. அதெல்லாம் தப்பு’-ன்னு திட்டுவா.

சினிமா வாய்ப்பு வந்தா நடிப்பீங்களா?

ஒரு சின்ன காமெடி ரோல் கிடைச்சாக்கூட போதும். என்னை நான் நிரூபிச்சிடுவேன்.
``என்  ரொமான்ஸ்  பார்த்துட்டு மனைவி திட்டல... ஆனா,...?!'’ -  `வள்ளி’ ராஜ்குமார்

என்னோட இலக்கு எப்பவுமே சினிமா தான். எனக்கு பயங்கர நம்பிக்கை இருக்கு. என் மனைவி சொல்லிட்டே இருப்பாங்க. தினமும் என்னோட எண்ணங்கள் சினிமாவை நோக்கிதான் இருக்கு. ஒரு சின்ன காமெடி ரோல் கிடைச்சாக்கூட போதும் . என்னை நான் நிரூபிச்சிடுவேன்'' என்று நம்பிக்கையுடன் முடிக்கிறார் ராஜ்குமார்.