’கிடா பூசாரி மகுடி’ திரைப்படத்தில் ஹீரோயினாக தமிழ்த் திரையுலகத்தில் அறிமுகமானவர் கேரளாவைச் சேர்ந்த நடிகை நட்சத்திரா. இந்தப் படத்துக்குப் பிறகு ஒருசில படங்களில் நடித்தாலும் அவர் எதிர்பார்த்த அளவுக்கு சினிமா கை கொடுக்கவில்லை என்பதால், சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார்.
ஜீ தமிழ் சேனலில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி சில மாதங்களுக்கு முன்பு முடிவடைந்த ‘யாரடி நீ மோகினி’ தொடரில் ’வெண்ணிலா’ என்கிற கேரக்டரில் அப்பாவிப் பெண்ணாக நடித்தார். இந்தத் தொடர் நட்சத்திராவுக்கு பரவலான கவனத்தைக் கொடுத்தது.’யாரடி நீ மோகினி’ முடிவைடைந்ததும், தற்போது கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் ‘வள்ளி திருமணம்’ சீரியலில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு ‘யாரடி நீ மோகினி’ தொடரில் நட்சத்திராவுடன் நடித்த நடிகை ஸ்ரீநிதி, ‘நட்சத்திரா திருமணம் தொடர்பாக ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதை மறுத்து நட்சத்திராவும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த வீடியோவில், நட்சத்திரா திருமணம் செய்துகொள்ளப் போகிற நபர் சரியானவர் அல்ல என்றும், அந்த நபரின் குடும்பம் நட்சத்திராவைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் சொன்னவர், அந்த நபரைக் கல்யாணம் செய்தால் நட்சத்திராவுக்கு ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சித்ராவின் நிலைதான் வரும்’ எனவும் கூறியிருந்தார். ஸ்ரீநிதியின் வீடியோவைத் தொடர்ந்து நட்சத்திரா திருமணம் செய்துகொள்ளப் போகிற அந்த நபர் குறித்து சின்னத்திரை ஏரியாவில் விசாரித்தோம்.

‘நட்சத்திரா காதலிப்பது நிஜம்தான். காதலரின் பெயர் விஷ்வா. ஜீ தமிழ் சேனலில் சில சீரியல்களின் தயாரிப்பு நிர்வாகப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். விஷ்வாவின் சகோதரியும்கூட சீரியல்களில் நடித்து வருகிறார்’ என உறுதியாகத் தெரிவித்தனர் நட்சத்திரா மற்றும் விஷ்வா இருவரையுமே நன்கு தெரிந்த சிலர்.
விஷ்வாவின் குடும்பத்துக்கு சினிமா தயாரிப்பாளரும் நடிகர் விஜய்யின் உறவினருமான சேவியர் பிரிட்டோ குடும்பத்துடன் நல்ல நட்பு உண்டாம். அந்தத் தொடர்பில்தான் சேவியர் பிரிட்டோ ஜீ தமிழ் சேனலில் தயாரிக்கும் சீரியல்களின் தயாரிப்பு மேற்பார்வையை விஷ்வாவும் அவரின் சகோதரியும் கவனித்து வருவதாகச் சொன்னார்கள்.
தொடர்ந்து விஷ்வாவிடமே நாம் இது தொடர்பாகக் கேட்ட போது,
'சில பேச்சுவார்த்தைகள் போயிட்டிருக்கு. ரெண்டு தரப்பு வீட்டுலயும் பெரியவங்க பேசிட்டிருக்காங்க. அதுல நல்லவொரு முடிவு எடுக்கப்பட்டதும் நாங்களே முறைப்படி மீடியாவுக்கு அறிவிக்கலாம்னு இருக்கோம்' என்றார்.
சில வாரங்களுக்கு முன்னர் 'வள்ளி திருமணம்' சீரியலில் கதைப்படி நட்சத்திராவுக்கு திருமண எபிசோடு ஷூட் செய்யப்பட்டது. அப்போது நிஜ திருமணம் தொடர்பாக நாம் கேட்டதற்கு, சில மாதங்களில் இருக்கும் என அவருமே சொல்லி இருந்தார். இந்தப் பின்னணியில் தற்போது இந்த ஜோடியின் திருமணம் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதாவது ஜூலை முதல் வாரத்தில் நடந்து முடிந்திருக்கிறது.

'நட்சத்திராவைத் தூக்கி வளர்த்த தாத்தா உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். பள்ளிப் படிப்பு வரை நட்சத்திரா அந்தத் தாத்தாவின் வீட்டிலிருந்தே வளர்ந்தவர். அந்தத் தாத்தாவின் ஒரே ஆசை நட்சத்திராவை மாலையும் கழுத்துமாகப் பார்த்து விட வேண்டும் என்பதுதான். அதனால தாத்தாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக குடும்பக் கோயிலில் வைத்து வீட்டுப் பெரியவர்கள் முன்னிலையில் நட்சத்திரா - விஷ்வா திருமணம் நடந்து முடிந்தாகச் சொல்கிறார்கள், நட்சத்திராவின் நெருங்கிய நட்பு வட்டத்தினர்.சின்னத்திரை நண்பர்களுக்காக விரைவில் சென்னையில் வரவேற்பு நடக்க இருக்கிறதாம்.