Published:Updated:

விஜய் சேதுபதியும் நிக்கி கல்ராணியும் இணைந்து கலக்கிய `பாண்டிச்சேரி ஆம்லேட்'!

விஜய் சேதுபதி, நிக்கி கல்ராணி

மாஸ்டர் செஃப் தமிழ்: ‘அவித்த முட்டை’, ‘ஆம்லேட்’ ஆகிய இரண்டு வடிவங்களைத் தவிர வேறு எதுவும் தெரியாத என்னைப் போன்றவர்கள், முட்டைக் கடையை வேடிக்கை பார்க்கும் கோழி மாதிரி இந்த விநோத அயிட்டங்களைப் பார்த்து திகைக்க வேண்டியிருந்தது.

Published:Updated:

விஜய் சேதுபதியும் நிக்கி கல்ராணியும் இணைந்து கலக்கிய `பாண்டிச்சேரி ஆம்லேட்'!

மாஸ்டர் செஃப் தமிழ்: ‘அவித்த முட்டை’, ‘ஆம்லேட்’ ஆகிய இரண்டு வடிவங்களைத் தவிர வேறு எதுவும் தெரியாத என்னைப் போன்றவர்கள், முட்டைக் கடையை வேடிக்கை பார்க்கும் கோழி மாதிரி இந்த விநோத அயிட்டங்களைப் பார்த்து திகைக்க வேண்டியிருந்தது.

விஜய் சேதுபதி, நிக்கி கல்ராணி
வகுப்புத் தேர்வில் ஒரு மாணவன் ‘முட்டை’ வாங்கினால் அவன் தோற்றுவிட்டான் என்று பொருள். ஆனால் மாஸ்டர் செஃப்பில் ஞாயிற்றுக்கிழமை (05-07-2020) நடந்த போட்டியில் ‘முட்டை’தான் வெற்றிக்குக் காரணமாக இருந்தது.

இந்த பத்தாவது எபிசோடில் நடந்தது என்ன?

கடந்த எபிசோடில் நடந்த ‘ரீ என்ட்ரி’ போட்டியில் தாரா வெற்றிபெற்று உள்ளே வந்தார். சசி ஆனந்தும் சசியம்மாளும் வெளியே போனார்கள். (சசி-ன்ற பேர்ல ஏதாச்சும் பிரச்னை இருக்கோ? நோ... நான் பாலிட்டிக்ஸ் பேசலை).

இந்த 12 போட்டியாளர்களுக்குள் நடக்கவிருக்கும் ‘Immunity pin’ பற்றிய அறிவிப்பை ஒரு சஸ்பென்ஸூடன் அறிவித்தார் நிக்கி கல்ராணி. உதவியாளர் ஒருவர் மூடியபடி கொண்டு வந்திருந்த பிளேட்டை நிக்கி திறக்க, உள்ளே ஏதோ எரிந்து போன பறவைக்கூட்டின் நடுவே ஃபிரெஷ்ஷாக ஒரு முட்டை இருந்த தோற்றத்தில் ஒரு உணவு இருந்தது. (கேட்டால் பிரெஞ்சில் ஏதாவது வாயில் நுழையாத பெயராகச் சொல்வார்கள். நமக்கெதற்கு வம்பு!).

நிக்கி கல்ராணி
நிக்கி கல்ராணி

ஆக... இன்று முட்டையை வைத்துதான் போட்டி நடக்கப் போகிறது என்பதை குறியீடாக தொடக்கத்தில் வெளிப்படுத்தி விட்டார்கள். போட்டியின் விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன.

இதில் மூன்று சுற்றுகள் நடக்கும். முதல் சுற்றில் ஆறு நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதிலிருந்து தேர்வாகும் மூன்று நபர்கள்தான் அடுத்த சுற்றுக்கு செல்வார்கள். அந்த மூன்று நபர்களுக்குள் நிகழும் போட்டியில் வெல்பவருக்குத்தான் ‘இம்யூனிட்டி பின்’ வழங்கப்படும்.

இந்த மூன்று சுற்றுக்குமே சேர்த்து எட்டு முட்டைகள் மட்டுமே வழங்கப்படும். எனவே அவற்றை சாமர்த்தியமாகவும் கடைசி ரவுண்டுக்கு வரும்படியும் உபயோகிப்பது ஒவ்வொரு போட்டியாளரின் முன்னுள்ள சவால்.

பொதுவாக ஜெயிப்பவர்கள்தான் பால்கனிக்குச் செல்வார்கள். இன்று தோற்றவர்கள் செல்ல வேண்டும்.

******

முதல் சுற்றுக்கான போட்டி. Egg White Meringue Challenge (கூகுள்ல இதை தேடிக் கண்டுபிடிக்கறதுக்குள்ள தாவு தீர்ந்துடுச்சு!) முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்து ஒரு குடுவையில் நன்றாக அடிக்க வேண்டும். இதனால் வெள்ளைக்கருவுடன் காற்றும் இணைய அது குடுவையின் பரப்பில் நன்றாக ஒட்டிக் கொள்ளும். வெள்ளைக்கரு சற்று இறுகுவதற்கு சர்க்கரை சேர்க்கலாமாம். குடுவையை தலைகீழாக கவிழ்த்து பார்த்தால், பத்து எண்ணும்வரை அது கீழே விழாமல் இருக்கவேண்டும்.

டெக்னிக்கல் வார்த்தைகள் எல்லாம் போட்டு செஃப் ஆர்த்தி சொன்ன விளக்கத்தை ‘முட்டை கவுத்தா விழாத போட்டி’ என்று எளிமையாக விஜய் சுருக்கிச் சொன்னது சிறப்பு. போலவே போட்டிக்கு ‘முட்டை பாஸ் போட்டி’ என்கிற லோக்கல் பெயரையும் அவர் சூட்டினார்.

இந்தச் சவாலில் உள்ள உள்குத்து என்னவெனில் முட்டையை Electric Whisker கொண்டு அடிக்காமல் கையினால் செய்ய வேண்டும். Whisk-ஐ கையால் உபயோகப்படுத்தி முட்டையை அடிப்பது எளிதானதல்ல. கை பயங்கரமாக வலிக்கக்கூடிய செய்முறை. இப்படி ஏற்கெனவே தயார் செய்திருந்த குடுவையை கவிழ்த்து ஆர்த்தி டெமோ செய்து காட்ட, பிரெஞ்சு திரைப்படத்தில் வரும் ‘லிப்லாக்’ காட்சி மாதிரி முட்டையின் வெள்ளைக்கரு, குடுவையுடன் இறுக்கமாக ஒட்டிக் கிடந்தது.

மாஸ்டர் செஃப் தமிழ்
மாஸ்டர் செஃப் தமிழ்

இதற்கு நேரக்கெடு ஏதுமில்லை. முதலில் செய்து முடிக்கும் ஆறு நபர்கள் தேர்வாகி விடுவார்கள். உடல் பலத்தைப் பயன்படுத்தும் போட்டி என்பதால் ஆண்களுக்குச் சற்று எளிதாக இருந்தாலும் ‘’கை வலிக்குது சார்” என்று பெண் போட்டியாளர்கள் மெலிதாக கதறிக் கொண்டிருந்தார்கள்.

என்றாலும் இந்தப் போட்டியில் முதலில் வென்றவர் நவ்ஸீன்தான். இதன் பிறகு கிருத்திகா, கிருதாஜ், மணிகண்டன், ஆர்த்தி மற்றும் தாரா ஆகியோர் பின்தொடர்ந்தார்கள். பரிசோதனையின் போது, செஃப் ஆர்த்தி, குடுவையை கவிழ்த்து பத்துவரை எண்ணும் போது போட்டியாளர்களுக்குள் டென்ஷன் எகிறியது. ஒரு துளி முட்டை விழுந்தாலும் மார்க் ஷீட்டில் முட்டை விழும். மறுபடியும் அதை செய்ய வேண்டும்.

‘முட்டை கவுத்தா விழாத’ இந்தப் போட்டியில் தோற்றுப் போன ஆறு நபர்களும் பால்கனிக்குச் சென்றார்கள்.

அடுத்த சுற்று. Poached Egg. விசே மாதிரி இதை லோக்கல் மொழியில் சுருக்கமாகச் சொன்னால், அவித்த முட்டைக்கும், ஹாஃப் பாயிலுக்கும் பிறந்த குழந்தை. முட்டையை உடைத்து சுடுதண்ணீருக்குள் போட வேண்டும். இதில் நீரின் டெம்ப்ரேச்சர் முக்கியம். வெள்ளைக் கருவின் உள்ளே மஞ்சள் கரு பாதுகாப்பாக இருக்கவேண்டும். சமைத்து முடித்து தட்டில் வைத்து மேலே கத்தி கொண்டு கீறினால் உள்ளே இருக்கும் மஞ்சள் கரு மெதுவாக வெளியே வர வேண்டும். அது கட்டியாகவும் ஆகியிருக்கக்கூடாது. அதிக நீராகவும் இருக்கக்கூடாது. இதை செஃப் ஹரீஷ் டெமோ செய்து காட்டினார்.

‘அவித்த முட்டை’, ‘ஆம்லேட்’ ஆகிய இரண்டு வடிவங்களைத் தவிர வேறு எதுவும் தெரியாத என்னைப் போன்றவர்கள், முட்டைக் கடையை வேடிக்கை பார்க்கும் கோழி மாதிரி இந்த விநோத அயிட்டங்களைப் பார்த்து திகைக்க வேண்டியிருந்தது.

‘‘வீட்ல இதை நிறைய முறை செஞ்சிருக்கேன். ஸோ... எனக்கு ஈஸிதான்’’ என்று முதலில் பெருமையடித்த சில பெண்மணிகள், போட்டியின் போது தடுமாறினார்கள். விதிக்கப்பட்டிருந்த வடிவத்தின்படி அது சரியாக அமையவில்லை. எனவே அதை கீழே ஊற்றிவிட்டு இன்னொரு முட்டையை எடுத்தார்கள். ஆனால் கடைசி சுற்றுவரை முட்டையை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற சவால், அவர்களின் நெருக்கடியை அதிகரித்தது.

மாஸ்டர் செஃப் தமிழ்
மாஸ்டர் செஃப் தமிழ்

சற்று கடினமாக அமைந்த இந்தப் போட்டியில் “சார் நான் முடிச்சுட்டேன்’’ என்று ஆர்வமாக ஓடி வந்த நவ்ஸீனை, ‘ரிஜக்ட்டட்’ என்று சொல்லி கருணையே இல்லாமல் திருப்பியனுப்பினார் ஹரீஷ். நவ்ஸீன் சமைத்திருந்த மஞ்சள் கரு நீராக வெளியே வராமல் உள்ளே இறுகியிருந்தது. ‘தான்தான் முதலில் செய்து முடிக்கவேண்டும்’ என்கிற பரபரப்பில் இருந்த மணிகண்டன் சிலபல முட்டைகளை வீணாக்கினார்.

இப்படியே ‘ரிஜக்ட்டட்’ லிஸ்ட் பெரிதாகிக் கொண்டே போனது. ஆர்த்தி செய்திருந்தது சரியாக இருந்தாலும், வடிவம் சரியாக அமையாததால் நிராகரிக்கப்பட்டது. என்றாலும் இந்தப் போட்டியை முதலில் முடித்தவர் மணிகண்டன். பிறகு கிருதாஜ் மற்றும் நவ்ஸீன் ஆகியோர் செய்து முடித்து அடுத்த சுற்றுக்கு தேர்வானார்கள்.

நிகழ்ச்சியில் சுவாரஸ்யத்தை இணைப்பதற்காகவோ அல்லது நேரத்தைக் கடத்துவதற்காகவோ... அடுத்த சுற்றுக்கு செல்வதற்கு முன்னால் செஃப் கெளஷிக் ஒரு கேள்வி கேட்டார். “விஜய், நிக்கி நீங்க ஒரு போட்டியை செய்றீங்களா?”

“நிக்கி செஃப்பா இருக்கட்டும். நான் ஹெல்ப் பண்றேன்’’ என்று பாதுகாப்பாக பின்னால் நின்றுகொண்டார் விஜய் சேதுபதி. நிக்கிக்கும் நிறைய தயக்கம் இருந்தாலும் இந்தச் சவாலை எதிர்கொண்டார். அவர்கள் செய்ய வேண்டியது ‘பிரெஞ்ச் ஆம்லெட்’.

“அது என்ன பிரெஞ்சு ஆம்லெட்? நாம லோக்கலா பேரு வைப்போம்” என்ற விசே, அதற்கு ‘பாண்டிச்சேரி ஆம்லேட்’ என்று நாமகரணம் சூட்டினார். (பாண்டிச்சேரி ஆம்லெட்னா... நல்ல ‘சைட்டிஷ்’ஷா இருக்கும் போல). உப்பும் உறைப்புமாக விசே, நிக்கி கூட்டணி செய்து முடித்த அந்த ஆம்லெட்டை பிரெஞ்சுக்காரன் எவனாவது சாப்பிட்டிருந்தால் கண்ணீர் விட்டிருப்பான் போல!

விஜய் சேதுபதி, நிக்கி கல்ராணி
விஜய் சேதுபதி, நிக்கி கல்ராணி

விஜய் சேதுபதி, வெங்காயம் தக்காளி நறுக்கித்தர, நிக்கி என்னென்னமோ போட்டு கலக்கி ஒரு மாதிரியாக ஆம்லெட் வடிவத்துக்குக் கொண்டு வந்தார். அதை விஜய் சேதுபதி திருப்பிப் போட முயலும்போது அது பாத்திரத்துடன் ஒட்டிக் கொண்டிருந்தாலும் மிக லாகவமாக அவர் திருப்பிப்போட, ‘கீரிக்கும் பாம்புக்கும் நடக்கும் சண்டையை வேடிக்கை பார்ப்பது போல' போட்டியாளர்கள் விஜய் சேதுபதிக்காக கைத்தட்டி மகிழ்ந்தார்கள். (நல்லா சர்க்கஸ் பண்ற மேன் நீ!). சமையலின் போது நிக்கி டென்ஷனாக இருக்க, விசே வழக்கம் போல் கூலாக இருந்தார்.

‘பிரெஞ்சு ஆம்லெட்’ என்று அழைக்கப்படும் ‘பாண்டிச்சேரி முட்டை பிரட்டல்’ என்கிற அந்த வஸ்து நீதிபதிகளின் முன் பரிசோதனைக்காக வைக்கப்பட்டது. விஜய் சேதுபதியின் முதுகுக்குப் பின்னால் நிக்கி பயத்துடன் ஒளிந்துகொண்டார்.

ஆனால் அதை சுவைத்துப் பார்த்த செஃப்கள், அடுத்த ஷோவுக்கு விஜய் சேதுபதி வரவேண்டுமே என்கிற காரணத்தினாலோ, என்னவோ, ‘நல்லாயிருக்கு… வாழ்த்துகள்’ என்று சொல்ல இருவரின் முகங்களிலும் புன்னகை. தான் செய்திருந்த ‘பாண்டிச்சேரி ஆம்லெட்டை’ பிரசாதம் போல அனைத்துப் போட்டியாளர்களுக்கும் வழங்கி மகிழ்ந்தார் விசே.

‘Immunity Pin’ஐ வெல்வதற்கான கடைசி சுற்று ஆரம்பித்தது. மக்கள் ‘பாண்டிச்சேரி காமெடியை’ மறந்து சீரியஸ் ஆனார்கள். இறுதியில் தேர்வாகியிருக்கும் மூன்று நபர்களும் தாங்கள் மீதம் வைத்துள்ள முட்டையை வைத்து, அவர்களின் இஷ்டப்படி, ஒரு சுவையான உணவைத் தயார் செய்ய வேண்டும். இதற்கான நேரம் 60 நிமிடம்.

‘இந்தத் தேர்வில் முட்டை வாங்கி விடக்கூடாது’ என்கிற ஜாக்கிரதையுணர்ச்சியுடன் போட்டியாளர்கள் பரபரப்பாக இயங்கத் துவங்கினார்கள். தன்னிடமிருந்த எண்ணெய் தீர்ந்து போனதால், பின்னால் இருந்த நவ்ஸீனிடம் இரவல் கேட்டார் மணிகண்டன். நவ்ஸீன் எண்ணெயைத்தர, கருணையே இல்லாமல் தாராளமாக ஊற்றிக் கொண்டார் மணி. பின்னர் நவ்ஸீனுக்கு எண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்டது ஒரு பரிதாபம். (எங்கு போனாலும் இந்த இரவல் கலாசாரம் போகாது போல!)

இப்படி இரவல் வாங்குவது போட்டி விதிமுறைக்குள் வருமா என்று தெரியவில்லை. ஆனால் நவ்ஸீனின் நற்செயலை ‘குட்’ என்று பாராட்டினார் செஃப் கெளஷிக். பரபரப்பான நிமிடங்களுக்குப் பிறகு மூவரும் தங்களின் முட்டை சமையலை முடித்து பரிசோதனைக்கு எடுத்து வந்தார்கள்.

மாஸ்டர் செஃப் தமிழ்
மாஸ்டர் செஃப் தமிழ்

முதலில் வந்த கிருதாஜ் தயார் செய்திருந்த உணவின் பெயர் ‘திரமிசு மை வே’. (வாயில் நுழையற பெயரா வைக்கக்கூடாதா?). இதை பரிசோதித்த செஃப் ஆர்த்தி ‘முட்டை ஸ்மெல் வருதே’ என்று முகஞ்சுளித்தார். (முட்டையை சமைத்தா அதானே வரும்?!)

அடுத்து வந்த நவ்ஸீன் தயாரித்திருந்த உணவு ‘சேவரி செளக்ஸ்’. இதற்கு ‘முட்டை பப்ஸ்’ என்று லோக்கல் பெயர் சூட்டி மகிழ்ந்தார் விசே. (இவன்தான்யா... நம்மாளு!).

முட்டை பப்ஸை ருசித்த கெளஷிக், “நவ்ஸீன். இதை உங்க கிட்ட இருந்து எதிர்பார்க்கவேயில்ல” என்று கடுமையாகச் சொல்ல, நவ்ஸீனின் முகத்தில் டென்ஷன் ஏறியது. ஒரு சிறிய சஸ்பென்ஸிற்குப் பிறகு ‘இவ்ளோ கொஞ்சமாவா செஞ்சு கொண்டு வர்றது? எனக்கு இன்னமும் நிறைய சாப்பிடணும் போல இருக்கு. அவ்வளவு நல்லாயிருக்கு” என்று கெளஷிக்கே சொன்னதும், ஆர்ட்பிலிம் மாதிரி எப்போதும் சலனமில்லாமல் இருக்கும் நவ்ஸீனின் முகத்தில், பாரதிராஜா பட நாயகிகள் போல புன்னகை மத்தாப்புகள் வெடித்தன.

கெளஷிக் தந்த அதே சான்றிதழை இதர நீதிபதிகளும் வழங்க மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்றார் நவ்ஸீன். வான்கோழி முட்டையை வைத்து சமைத்துத் தந்தாலும் கூட போதாமல் “அப்புறம் வேற என்ன இருக்கு?” என்று நாக்கைச் சப்புக் கொட்டிக் கொண்டே கேட்கும் விசே, “நெஜம்மாவே முட்டை பப்ஸ் சூப்பர். இன்னமும் சாப்பிடணும் போல இருக்கு” என்றவுடன் உற்சாகத்தின் எல்லைக்கே சென்றார் நவ்ஸீன்.

எப்போதுமே ஆர்வமாக செயல்படும் மணிகண்டனின் செயல், இம்முறை ஆர்வக்கோளாறாக மாறி விட்டது. மீதமிருக்கும் முட்டையை வைத்து நாலைந்து டிஷ்களை செய்து நீதிபதிகளை அசத்திவிட வேண்டும் என்கிற பரபரப்புடன் அவர் இயங்கிக் கொண்டிருந்தார். “மணிகண்டன்... நீங்க செய்யற சமையல்ல வாசனை அப்படி தூக்குது. உங்க உணவை டேஸ்ட் பண்ண ஆவலா காத்துக்கிட்டு இருக்கோம்" என்று நீதிபதிகளும் சொல்லி மணிக்கு பில்டப்பை ஏற்றி விட்டார்கள்.

மாஸ்டர் செஃப் தமிழ்
மாஸ்டர் செஃப் தமிழ்

ஆனால் பல உணவு வகைகளை சிரமத்துடன் தயார் செய்த மணிகண்டன், குறிப்பிட்ட நேரத்திற்குள் அதை தட்டில் வைப்பதில் கோட்டை விட்டுவிட்டார். தட்டு வெச்சியே. சோறு வெச்சியா’ காமெடி மாதிரி ஆகி விட்டது.

இறுதி நொடிகளுக்கான ‘கவுன்ட்டவுன்’ சொல்லப்பட்டு முடிந்த பிறகும் அவர் ரொட்டிகளை தட்டில் வைத்ததை பார்த்த ஆர்த்தி ‘அதை எடுத்துடுங்க’ என்று கறார் காட்ட வேண்டியிருந்தது.

மணிகண்டன் செய்திருந்த உணவு ‘முட்டை கோப்தா கிரேவி’. ஆனால் அது மட்டுமே தட்டில் இருந்ததால் அவருக்கே அவநம்பிக்கையாக இருந்தது. அதையே கெளஷிக்கும் சுட்டிக் காட்டினார். ‘இது ஓகே. ஆனால் இதர அயிட்டங்களும் இணைந்திருந்தால் செமயாக இருந்திருக்கலாம். ரொம்ப நம்பிக்கை வெச்சோமே. மணிகண்டா’ என்று வருந்தியதில், மணியின் முகத்தில் தர்மசங்கடம் வழிந்தது. ஆனால் மணி செய்திருந்த உணவையும் காலி செய்த விசே, ‘அற்புதம்... சிறப்பு மணி’ என்று பாராட்டினார்.

ஆக... இந்தப் போட்டியில் வென்று ‘Immunity pin’ஐ வெல்லப் போகிறவர் நவ்ஸீன் என்பது அப்போதே தெளிவாகிவிட்டது. அதிக சஸ்பென்ஸ் வைக்காமல் இதை விசே அறிவிக்க, செஃப் ஆர்த்தி அந்த பின்னை நவ்ஸீனுக்கு அணிவித்தார்.

“கவனமாக இருங்க. இந்த பின் உங்களுக்கு பாதுகாப்பு தரும் அதே சமயத்தில் அதிக தன்னம்பிக்கையைக் கொடுத்து விடக்கூடாது’ என்று விசே எச்சரித்தது நல்ல உபதேசம்.

மாஸ்டர் செஃப் தமிழ்
மாஸ்டர் செஃப் தமிழ்

“நவ்ஸீன்... நானே உங்ககிட்ட கத்துக்கிட்ட விஷயம் ஒண்ணு இருக்கு. போட்டி என்னதான் கடுமையா இருந்தாலும் நீங்க கூலா.. அமைதியா செயல்படறீங்க... அதைப் பார்க்கறதுக்கே சந்தோஷமா இருக்கு” என்று கெளஷிக் பாராட்ட, “இது எங்க அம்மாகிட்ட இருந்து கத்துக்கிட்டது. 'பதறாத காரியம் சிதறாது’ன்னு சொல்லுங்க" என்பது போல் மாறாத புன்னகையுடன் நவ்ஸீன் பதில் சொன்னார்.

அடுத்த வார நிகழ்ச்சி இன்னமும் சுவாரஸ்யமாக இருக்கும் போலிருக்கிறது. போட்டியாளர்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கே நேரடியாகச் சென்று சமைக்கப் போகிறார்கள். அது மட்டுமில்லை. அவர்கள் அணியாகச் செயல்படுவதால் தனிநபர் மோதல்களும் நடக்கப் போகின்றன. அதற்காக டீசரில் இந்தக் காட்சித் துளிகள் காட்டப்பட்டன.

சமையலை விடவும் சண்டையைக் கவனிப்பதில் நமக்கு ஆர்வம் அதிகம் உண்டுதானே? அது என்ன குடுமிப்பிடிச் சண்டை என்பதை அடுத்த வாரத்தில் பார்த்து தெரிந்து கொள்வோம்.