மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி, கணக்கு வகுப்பு போல மிக இறுக்கமாக இருக்கிறது என்று சிலர் மேலோட்டமாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதனுள் எத்தனை சுவாரஸ்யங்கள் இருக்கின்றன என்பதை உள்ளே வந்து பார்த்தால்தான் தெரியும். ‘நச்’சென்று சரியான அளவில் உப்பு, காரம் போட்டு சமைக்கப்பட்ட ஒரு பண்டம் போல, இந்த எபிசோடில் மகிழ்ச்சி, கோபம், வன்மம், கண்ணீர் போன்ற உணர்ச்சிகள் மிகையாகி விடாமல் சரியான கலவையில் இருந்தன.
செஃப் கெளஷிக் பொதுவாகவே ‘நான் கடவுள்’ ஆர்யா மோடில்தான் இருப்பார். ஆனால், மணிகண்டன் இன்று செய்த அழிச்சாட்டியம் அவரை ருத்ரதாண்டவம் ஆட வைத்து விட்டது. க்ளைமாக்ஸில் கண்ணீர் காட்சியும் இருந்தது.
ஓகே... 18-வது எபிசோடில் என்ன நடந்தது?
‘பிளாக் ஏப்ரல் சேலன்ஞ்’தான் இந்த எபிசோடின் ஹைலைட். சமைக்கும் பொருட்களில் எந்த ட்விஸ்ட் இருந்தாலும் சம்பந்தப்பட்ட போட்டியாளர்கள் களத்தில் இருப்பார்கள். இதுதான் வழக்கம். ஆனால் இன்று அதிலும் ஒரு ட்விஸ்ட் நடந்தது. ஆறு போட்டியாளர்கள் எதை வைத்து சமைக்க வேண்டும் என்பதை வெற்றி பெற்று பால்கனிக்குச் சென்று விட்ட தேவகி, சுமித்ரா ஆகிய இருவர்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.
அலமாரியில் ஆறு சமையல் பொருள்கள் இருந்தன. “நீங்க செலக்ட் பண்றதுக்கு முன்னாடி ஒரு நிமிஷம். கிருதாஜுக்கும் இப்படி ஒரு அட்வான்டேஜ் முன்னாடி கிடைச்சது. அவர் என்ன செய்தார் நினைவிருக்கிறதா? சக போட்டியாளர்களுக்கு நெருக்கடி தரும் வகையில் செயல்படாமல் நட்பு கருதி விட்டுக் கொடுத்து விட்டார். அவர் எலிமினேட் ஆனதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். இது ஒரு போட்டி. எனவே நட்பையெல்லாம் ஒரமாக வைத்து விட்டு யாருக்கு எது தந்தா சிரமப்படுவாங்களோ... அதை செலக்ட் பண்ணுங்க” என்று கறார் குரலில் சொன்னார் செஃப் கெளஷிக்.
‘தெரியாம வந்து மாட்டிக்கிட்டமோ’ என்று திகைத்த இருவரும், கலந்து பேசி ஒருவழியாக ஆறு போட்டியாளர்களுக்கும் சிரமம் தரக்கூடிய பொருட்களைத் தேர்ந்தெடுத்தார்கள். யார் எதில் பலமோ அதைத் தவிர்க்கும்படியாக இந்தப் பட்டியல் அமைந்தது. “மணிகண்டனுக்கு செளகரியமா செலக்ட் பண்ணிட்டிங்க போலயே?” என்று செஃப் ஆர்த்தி கேட்ட போது ‘ஆமாம்ல’ என்று திகைத்த தேவகி “அவர் எது கொடுத்தாலும் எதையாவது செஞ்சிடறாரு” என்று பரிதாபமாக சொன்னார் தேவகி. (அது என்னென்ன பொருட்கள் என்பதை பின்னால் பார்ப்போம்).
“இது ஆப்பா இல்ல... மத்தவங்களுக்கு சேஃபா’ன்னு பார்ப்போம்’ என்ற விஜய் சேதுபதி, ஆறு போட்டியாளர்களையும் அரங்கத்துக்கு வரவழைத்தார். கறுப்பு ஏப்ரன் போட நேர்ந்ததற்காக நித்யா கண்ணீர் விட்டு அழுதார். “இந்த நிகழ்ச்சிக்காக நான் நிறைய தியாகம் செஞ்சிருக்கேன்” என்று அவர் கலங்குவதைப் பார்த்த போது மற்றவர்களுக்கும் அந்த சோகம் பரவியது.
விஜய் சேதுபதி ஒரு வண்டியை தள்ளிக் கொண்டு வந்தார். அதில் ஆறு சமையல் பொருள்களும் வெளிப்படையாக பார்க்கும்படி இருந்தன. அதன் கூடவே தேவகி + சுமித்ரா தேர்ந்தெடுத்திருந்த வரிசையில் அந்தந்த போட்டியாளர்களின் புகைப்படங்களும் இருந்தன. ஆனால் அவை மறைக்கப்பட்டிருந்தன.
“இங்க ஆறு பொருள்கள் இருக்கு. இதில் உங்களுக்கு என்ன பொருள் வேணும்னு தேர்ந்தெடுக்கலாம்” என்று விஜய் சேதுபதி சொல்ல ஆளாளுக்கு ஒன்றை ஆசையாக சொன்னார்கள். ஆனால் தேவகியும் சுமித்ராவும் தேர்வு செய்திருந்த பட்டியல் முற்றிலும் வேறு. இது அவர்களின் எதிர்பார்ப்புக்கு முரணாக அமைந்திருந்தது. இதை அறிந்ததும் அவர்களின் முகங்கள் மாறின. ‘‘இதை வைத்து எப்படி சமைப்பது?” என்று விழித்தார்கள்.
அந்தப் பட்டியல்:
கிருத்திகா (சுண்டைக்காய்), வின்னி (கொய்யா), மணிகண்டன் (இறால்) நவ்சீன் (கத்தரிக்காய்), நித்யா (பேரீச்சம்பழம்), சுனிதா (பேஸில் இலை).
“இப்ப ஒரு ஃபிளாஷ்பேக். உங்க நண்பர்களுக்கு செளகரியமா அமையுற மாதிரி பொருட்களைத் தேர்ந்தெடுங்கன்னு பால்கனி வெற்றியாளர்களை கேட்டுக்கிட்டோம். ஆனா, அவங்க ரூம் போட்டு யோசித்து உங்களுக்கு எது கஷ்டமோ அதை செலக்ட் செஞ்சிருக்காங்க. செஃப்களும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தாங்க. உங்க நண்பர்களை ஏன் இப்படி டார்ச்சர் பண்றீங்கன்னு” என்று விஜய் சேதுபதி அப்படியே பிளேட்டை மாற்றிப் போட்டு சொல்ல போட்டியாளர்களின் முகங்களில் திகைப்பு. பால்கனியில் நின்றிருந்த தேவகியும் சுமித்ராவும் சிரிப்பை அடக்கிக் கொண்டு ‘’அய்யோ... நாங்க அப்படிச் செய்யல” என்று கையை ஆட்டினார்கள்.
ஆக, தங்களுக்குச் சிரமமான பொருட்களை வைத்து சமைக்க வேண்டியிருக்குமோ என்று போட்டியாளர்கள் யோசித்துக் கொண்டிருந்த போது இதில் ஒரு ட்விஸ்ட். ‘பண்டமாற்று முறை’ என்கிற பழைய சமாச்சாரம் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதாவது ஒவ்வொரு போட்டியாளரும் மற்றவர்களிடம் பேசி சம்மதிக்க வைத்து தங்களிடமிருக்கும் பொருளை சற்று தந்து அவர்களிடமிருந்து இரண்டு பொருட்களை வாங்க வேண்டும். ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் மூன்று பொருட்களை வைத்து சமைக்க வேண்டும்.
‘சந்தைக்கடை சேலன்ஞ்’ ஆரம்பித்தது. ‘’என் கிட்ட கத்தரிக்கா இருக்கு... உன் கிட்ட இருந்து சுண்டைக்காய் தர்றியா” என்று ஆளாளுக்கு பேரம் பேச ஆரம்பித்தார்கள். மணிகண்டன் கெத்தாக சுற்றும் படியாக அவருக்கு இறால் அமைந்தது. எனவே தனது அழிச்சாட்டியத்தை ஆரம்பித்தார். “நவ்சீன்... உங்களுக்கு இறால் வேண்டுமா? மணிகண்டன் மாஸ்டர் செஃப் வின்னர்’னு மூன்று முறை சொல்லணும். ஓகேவா?” என்று கேட்க நவ்சீன் எரிச்சலுடன் இதற்கு மறுத்து விட்டார். மணிகண்டனின் இந்தச் செயலுக்கு மற்றவர்களும் முகம் சுளித்தார்கள்.
ஆனால், மணிகண்டன் வைத்திருந்த இறால் முக்கியமானது என்பதால் சிலர் அரைமனதுடன் பண்ட மாற்றுக்கு சம்மதித்தார்கள். ஒரு கட்டத்தில் நவ்சீனும் ‘சரி ஒழிஞ்சு போ’ என்ற முகத்துடன் அவர் கேட்ட கோஷத்தைப் போட்டு இறாலை வாங்கிக் கொண்டார். ஆனால் மணிகண்டனின் அழிச்சாட்டியத்துக்கு சுனிதா மட்டும் கடைசி வரை இறங்கி வரவில்லை. எனவே வம்பாக மணிகண்டனும் தராமல் இருந்தார்.
“மணிகண்டா... நீ பண்றது சரியா” என்று விஜய் சேதுபதி இதில் தலையிட்டாலும் ”அண்ணே... இது கேம்ணே... என்னோட ஸ்ட்ராட்டஜி” என்று மணி கெத்தாக பதில் சொல்ல விஜய் சேதுபதியின் முகத்தில் மெல்லிய கோபம் வந்தது.
மணிகண்டன் கறாரான உத்தியைப் பயன்படுத்துவது ஓகே. ஆனால் அது தனக்கு வேண்டிய பொருளை சாமர்த்தியமாக கேட்டு வாங்குவதாக அமைய வேண்டும். ‘எனக்கு வாழ்க கோஷம்’ போட்டால் தருவேன் என்று அவர் சொல்வது முறையானதல்ல.
“பார்த்துக்க... குறைந்தது மூன்று பொருளோடு நீ சமைக்க வேண்டும்” என்று விஜய் சேதுபதி எச்சரித்தாலும் கெத்தாக உலவினார் மணி. பிறகு நித்யா வந்து இவரிடம் சில பொருட்களை வாங்க ஒருவழியாக பேரம் முடிந்தது. “மணிகண்டனை வாழ்த்தி பொருளை வாங்கினது எப்படி இருந்தது?” என்று விஜய் சேதுபதி கேட்க ‘’கேவலமா இருந்தது” என்று வெறுப்பாக சொன்னார் நவ்சீன். அதிர்ந்து பேசாத நவ்சீனையே கோபப்பட வைக்கும் வகையில் மணிகண்டனின் அழிச்சாட்டியம் அமைந்து விட்டது.
ஒவ்வொரு போட்டியாளரும் தாங்கள் பேரம் பேசி வாங்கிய சமையல் பொருள்களின் விநோதமான கூட்டணியை வைத்து சமைக்கத் தொடங்கினர். எதை வேண்டுமானாலும் சமைக்கலாம். நேரம் 60 நிமிடம்.
விசே அருகில் வந்து பேசினாலும் அவருக்கு சாவகாசமாக பதில் சொல்ல முடியாத பரபரப்பில் வேலை செய்து கொண்டே பேசினார் கிருத்திகா. மணிகண்டனுக்கு ஏழரை சனி உச்சத்தில் இருந்தது போல. இவரின் அருகில் வந்த செஃப் கெளஷிக் “நீங்க செய்யற சொதி கூட சாலட் எப்படி செட் ஆகும்... யோசிச்சுப் பண்ணுங்க” என்று எச்சரிக்கை மணி அடிக்க “அதெல்லாம் முடிச்சப்புறம் பாருங்க” என்று கெத்தாக மணிகண்டன் சொல்ல, கெளஷிக்கின் முகம் மாறியது. “முன்னாடியும் இப்படித்தான் எச்சரிச்சேன். கேட்காம எலிமினேஷன் ரவுண்ட்ல வந்திருக்கீங்க. சரி... பார்த்துக்கங்க” என்று எரிச்சலுடன் விலகினார்.
“ஹோம் குக்ஸ்... இன்னமும் 15 நிமிஷம்தான் இருக்கு. வெற்றி பெற்று இந்த பால்கனிக்குப் போகப் போறீங்களா... இல்ல உங்க வீட்டு பால்கனில நிக்கப் போறீங்களா?” என்று ரைமிங்கில் எச்சரிக்கை விடுத்தார் கெளஷிக். மணிகண்டன் இடியாப்பத்தை குச்சியில் சுற்ற முயல அது சரியாக வராததால், அப்படியே வேர்க்கடலை பொட்டலம் போல இலையில் போட்டார்.
பரபரப்பான இந்தப் போட்டி ஒருவழியாக முடிந்தது. “வாங்க சார்... இருக்கு உங்களுக்கு” என்று நீதிபதிகள் உள்ளுக்குள் கறுவினார்களோ என்னமோ, மணிகண்டனை முதலில் அழைத்தார்கள். அவர் தன் உணவுக்கு வைத்திருந்த பெயர் ‘என் சமையல் மணக்கோலம்’. இறா + கத்தரிக்காய் + பேரீச்சம்பழம் + கொய்யா போன்றவற்றை வைத்து சமைத்திருந்தார்.
மணிகண்டனின் உணவை சுவைத்துப் பார்த்த நீதிபதிகள் ஒவ்வொருவரின் முகங்களும் மாறின. இறால் சரியாக சுத்தப்படுத்தப்படாததை ஹரீஷ் சுட்டிக் காட்டினார். தன்னுடைய டர்ன் வந்த போது கோபத்தின் உச்சிக்கே சென்றார் கெளஷிக். “நான் அப்பவே என்ன சொன்னேன்? யாராவது salad-ன்ற பேர்ல கொய்யாக்காயை அப்படியே நறுக்கி வைப்பார்களா. சாலட்னா எப்படி இருக்கணும். நாங்கள்லாம் இன்டர்நேஷனல் செஃப்ஸ். எங்ககிட்ட இப்படி ஒரு பொருளையா எடுத்து வருவீங்க?” என்று லெஃப்ட் அண்ட் ரைட்டில் கெளஷிக் எகிறித் தள்ள, கலங்கி அழும் நிலைக்குச் சென்றார் மணிகண்டன்.
அடுத்து அழைக்கப்பட்டவர் சுனிதா. இவர் கொண்டு வந்தது ‘வழுதனங்கா பின் வீல்’. கத்தரிக்காய் + பேஸில் இலை + கொய்யா ஆகியவற்றை வைத்து சமைத்திருநதார். ‘’சமைக்கறதுக்கு மெயின் பொருள் இல்லைன்னாலும் நீங்க சமாளிச்சிருக்கிற விதம் அற்புதம்’’ என்கிற பாராட்டு சுனிதாவுக்கு கிடைத்தது.
முன்னர் எலிமினேட் ஆன தாராவைப் போலவே தன் மெனுவுக்கு வித்தியாசமாக பெயர் சூட்டுவதில் நவ்சீன் இப்போது தேறி விட்டார். அவர் வைத்திருந்த பெயர் ‘சந்தைக்கு வந்த விந்தை’. (மார்க்கபந்து மொதோ சந்து மாதிரி கவிதையா இருக்கு). இவருடைய பிளேட் வசீகரமாக அலங்கரிக்கப்பட்டிருந்தாலும் இவர் உணவைச் சுவைத்த அனைவருமே முகத்தைச் சுளித்தார்கள். காரணம் சுண்டைக்காய். “நீங்க என்ன கான்செப்ட்ல சமைச்சிருக்கீங்கன்னே புரியலை’ என்று அதிருப்தியுடன் சொன்னார் ஹரீஷ். “நிறைய பொருட்களை வெச்சு அகலக்கால் வெச்சுட்டீங்க. சிம்ப்பிளா யோசிச்சிருக்கலாம்” என்றார் கெளஷிக். சோர்ந்து போன முகத்துடன் திரும்பினார் நவ்சீன்.
‘கடாஃபி இறால் பால் சுவை சாறு’ – இதுதான் நித்யா தன் உணவுக்கு வைத்திருந்த பெயர். இதைச் சாப்பிட்டதும் இம்சை அரசன் வடிவேலுவைப் போல புன்னகை செய்து காட்டினார் கெளஷிக். “எங்க பாட்டி கையால சாப்பிட்ட ஞாபகம் வந்துடுச்சு” என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார் ஹரீஷ். ஒட்டுமொத்தமாக பாசிட்டிவ் கமென்ட் வந்தவுடன் நித்யா சந்தோஷமடைந்தார்.
இப்போது நீதிபதிகள் ஒரு அதிரடி காரியம் செய்தார்கள். மற்றவர்களின் உணவைச் சோதிப்பதற்கு முன்பே “நீங்க பால்கனிக்கு ஓடுங்க... அப்பதான் உங்க பல்ஸ் சரியாவும்” என்று ஹரீஷ் சொல்ல, நித்யாவின் முகமெங்கும் மகிழ்ச்சி. கறுப்பு ஏப்ரன் அணிந்ததற்காக கண்ணீர் சிந்திய முகத்தில் இப்போதுதான் சிரிப்பு எட்டிப் பார்த்தது.
அடுத்து வந்த வின்னியும் இதே அங்கீகாரத்தை பெற்றார். அவர் கொண்டு வந்திருந்த உணவு ‘சந்தையின் சுவை’. இறால் பக்கோடா + கொய்யா சாஸ் + பேஸில் ரைஸ் என்று அவர் சமைத்திருந்த விதம் நீதிபதிகளைக் கவர்ந்து விடவே உடனே பாஸாக்கி பால்கனிக்கு அனுப்பினார்கள்.
கடைசியாக வந்தவர் கிருத்திகா. இவர் கொண்டு வந்த அயிட்டம் ‘கொஸ்து சம்பா சாதம்’. இது முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பிடித்த உணவாம். அவர் சிதம்பரம் வரும் போதெல்லாம் இந்த உணவை கேட்டு விரும்பிச் சாப்பிடுவாராம். தன் பாட்டியின் வழியாக இந்தத் தகவல் தெரியும் என்றார் கிருத்திகா. செஃப் ஆர்த்தி இவரின் உணவைப் பாராட்டினாலும் வெயிட்டிங் லிஸ்ட்தான் கிருத்திகாவுக்கு வாய்த்தது.
கடைசியாக நின்றிருந்த நான்கு நபர்களில் மூவர் மட்டுமே பால்கனிக்கு செல்ல முடியும். ஒருவர் எலிமினேட் ஆவார். அது மணிகண்டனாக இருக்கும் என்று தோன்றியது.
முதலில் பாஸானவர் கிருத்திகா. அதற்குப்பிறகு ஆச்சரியமாக மணிகண்டனின் பெயர் அறிவிக்கப்பட்டது. மணி செய்திருந்த சாலட் பிரச்னையைத் தாண்டி இறாலை அவர் முழுமையாக சுத்தம் செய்யாமல் இருந்து ஃபுட் பாய்சனிங் ஆகி உயிர் ஆபத்தைக்கூட ஏற்படுத்தலாமாம். என்றாலும் இதர அயிட்டங்கள் ஓகே என்பதால் மயிரிழையில் தப்பித்தார்.
மீதமிருந்த இருவரில் சுனிதாவின் பெயரும் அறிவிக்கப்பட்டது. ஆக பாக்கியிருந்த நவ்சீன்தான் எலிமினேட் ஆகிறார். “நீங்க இதுவரை செஞ்ச டெஸர்ட்லாம் வேற லெவல். நீங்க டெஸர்ட் குயின்” என்று மனமார பாராட்டினார் செஃப் ஆர்த்தி.
“நீங்க சின்ன வயசுல என்ன ஆகணும்னு ஆசைப்பட்டீங்க. இப்ப இங்க சபைல சொல்லுங்க?” என்று கெளஷிக் கேட்டதும், அதுவரை சோகமாக நின்றிருந்த நவ்சீன் அந்த அழுத்தம் தாங்காமல் உடைந்து அழ ஆரம்பித்துவிட்டார். பதறிப் போன இதர போட்டியாளர்கள் ஓடி வந்து நவ்சீனை அரவணைத்து ஆறுதல் தந்தனர். விஜய் சேதுபதியின் முகம் கூட கலங்கி விட்டது.
கெளஷிக் அந்தக் கேள்வியைக் கேட்டதற்குக் காரணம் இருந்தது. செஃப் ஆவதுதான் இளமைக் காலத்திலிருந்தே நவ்சீனின் லட்சியமாம். “உனக்கு எதுக்கு அந்த ஆசையெல்லாம்? கல்யாணம் பண்ணிக்கிட்டு வீட்ல சமைக்கற வழியைப் பாரு” என்று சிலர் சொல்வார்களாம். நவ்சீன் எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதை யோசித்தால் இதன் பின்னால் இருக்கும் கூடுதல் சமூக அழுத்தத்தை உணர முடியும்.
“உங்களை அப்படிப் பேசினவங்க கிட்ட போய் சொல்லுங்க. ஒரு செஃப் ஆவறதுக்கு உண்டான அத்தனை தகுதியும் உங்களுக்கு இருக்கு” என்று செஃப் கெளஷிக் சொன்ன போது சபையே உணர்ச்சியில் ததும்பியது. கல்லுக்குள் ஈரம் மாதிரி பேசுவது சற்று கரடு முரடாக இருந்தாலும் கெளஷிக்கின் மனதுக்குள் எத்தனை மென்மையான பகுதி இருக்கிறது என்பதை அறிந்த தருணம் அது. கெளஷிக்கின் ஆறுதலான வார்த்தைகளைக் கேட்டதும்தான் நவ்சீனின் முகத்தில் சற்று சிரிப்பு வந்தது.
“நீங்க எனக்கு ரொம்ப பிடிச்ச போட்டியாளர். நீங்க இல்லாம எனக்கு வருத்தமாத்தான் இருக்கும். மணி இப்ப நீங்க சொல்லுங்க... யாரு மாஸ்டர் செஃப் வின்னர்?” என்று விஜய் சேதுபதி கேட்க ‘நவ்சீன்தான வின்னர்’ என்று உணர்ச்சிகரமாக சொன்னார் மணிகண்டன்.
போட்டியாளர்கள் அனைவரும் இணைந்து நவ்சீனை வாசல் வரைக்கும் சென்று வழியனுப்பி வைத்த அந்தக் காட்சி இருக்கிறதே... அற்புதம்! அவர்கள் சமைத்த உணவை விடவும் அருமையாக இருந்த காட்சி இது.
ஆக போட்டியாளர்களின் எண்ணிக்கை ஏழாகச் சுருங்கியிருக்கிறது. அடுத்த எபிசோடில் என்னென்ன கலாட்டாக்கள் நிகழும்?
காத்திருந்து சுவைப்போம்.