Published:Updated:

விஜய் சேதுபதி மாஸ்டர் செஃப்பில் இல்லையாம்… அதிர்ந்த போட்டியாளர்களும், ரம்யா நம்பீசன் என்ட்ரியும்!

மாஸ்டர் செஃப் - ரம்யா நம்பீசன்

நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் மாஸ்டர் செஃப் தமிழ் நிகழ்ச்சியில் கடந்த சனிக்கிழமை (02-10-2021) ஒளிபரப்பான 17-வது எபிசோடின் விமர்சனம் இங்கே!

Published:Updated:

விஜய் சேதுபதி மாஸ்டர் செஃப்பில் இல்லையாம்… அதிர்ந்த போட்டியாளர்களும், ரம்யா நம்பீசன் என்ட்ரியும்!

நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் மாஸ்டர் செஃப் தமிழ் நிகழ்ச்சியில் கடந்த சனிக்கிழமை (02-10-2021) ஒளிபரப்பான 17-வது எபிசோடின் விமர்சனம் இங்கே!

மாஸ்டர் செஃப் - ரம்யா நம்பீசன்

மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் என்னென்ன உணவுகள் சமைக்கப்படுகின்றன, அதன் ரெசிப்பி என்ன என்பதை விடவும் போட்டியின் விதிமுறைகளைத் தெரிந்து கொள்வதில்தான் அதிக ஆவல் ஏற்படுகிறது. அந்தளவுக்கு இந்த ஃபார்மேட்டில் ரணகளமான சுவாரசியத்தைக் கூட்டுகிறார்கள்.

இந்த எபிசோடில், ‘பெட்டிக்குள் பெட்டி’ என்கிற சவால் அமைந்தது. இதில் சிலர் சேஃப் கேம் ஆடினார்கள். ஆனால், மேலும் சிலர் துணிந்து அடுத்த நிலைக்கு சென்றார்கள். அதுதான் ஒரு நல்ல திறமைசாலிக்கு அழகு. கடுமையான சவால்கள்தான் நமக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை நாமே ஆச்சரியப்படும்படியாக வெளியே கொண்டு வரும்.

ஓகே.. 17-வது எபிசோடில் என்ன நடந்தது?

மாஸ்டர் செஃப் தமிழ்
மாஸ்டர் செஃப் தமிழ்

“நாங்க ஸ்ட்ரிக்ட்டா இருக்கறதா நீங்க நெனக்கலாம். ஆனா நீங்க வந்தப்ப எப்படி இருந்தீங்க... இப்ப என்னெல்லாம் முன்னேற்றம் அடைஞ்சிருக்கீங்கன்னு உங்களுக்கே புரியும்” என்று நீதிபதிகள் போட்டியாளர்களிடம் சொன்னது உண்மை. அந்த சீரியஸ்தான் இந்த நிகழ்ச்சியின் அடிப்படை பலமே. இன்று செஃப் ஆர்த்தி புடவை அணிந்திருந்த காட்சி பார்க்கவே கண்ணுக்கு இதமாக இருந்தது.

“என்னாச்சு... விஜய்யை காணோமே?” என்று நீதிபதிகள் ‘செவ்வாய்கிழமை’ தூர்தர்ஷன் டிராமா மாதிரி பாவ்லா செய்து கொண்டிருக்கும் போது, கதவைத் திறந்து புயல் போல் உள்ளே வந்தவர் நடிகை ரம்யா நம்பீசன். அவர் அணிந்திருந்த ஆடையை வடிவமைத்தவருக்கு திருஷ்டி சுத்திப் போட வேண்டும். அப்படியொரு அட்டகாசமான டிசைன்.

“இனிமே விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போறதில்லை. நான்தான். ஷோவை ஆரம்பிக்கலாமா?” என்று சீரியஸ் மோடில் ரம்யா ஆரம்பித்த போதே அது விளையாட்டு என்று தெரிந்தாலும் ‘ஒருவேளை விஜய் சேதுபதி அவசரமா வேற ஷூட்டிங்குக்கு போயிட்டாரோ?!” என்கிற சந்தேகம் போட்டியாளர்களுக்கு வந்தது. அவர்கள் சந்தேகப்படுவதிலும் நியாயம் உள்ளது. பல்பொடி விளம்பரம் உள்ளிட்ட எதையும் விசே விட்டு வைப்பதில்லை.

நிகழ்ச்சியின் பன்ச் லைனை தப்பும் தவறுமாக, வேண்டுமென்றே ரம்யா சொல்ல, அதை சரியாக உச்சரித்தபடி pantry அறையிலிருந்து entry கொடுத்தார் விஜய் சேதுபதி. (‘pantry – entry’… படிக்கும் போதே கவிதை மாதிரி இல்ல?!).

“நான் வரலைன்னவுடனே யாரெல்லாம் சந்தோஷப்பட்டது? ஒழுங்கா கையைத் தூக்கிடுங்க” என்று போட்டியாளர்களை ஜாலியாக எச்சரித்த விசேவின் கையில் ‘பீட்ஸா’ இருந்தது. அதுவொரு குறியீட்டு அடையாளம். விசேவின் தொடக்க காலத்தில் ‘பீட்ஸா’ என்கிற திரைப்படத்தில் அவரும் ரம்யாவும் இணைந்து நடித்தார்கள்.

மாஸ்டர் செஃப் தமிழ்
மாஸ்டர் செஃப் தமிழ்

“நான் சின்ன வயசுல பார்த்த படம் அது” என்று இருவரையும் பங்கமாக கலாய்த்தார் மணிகண்டன். (வளர்த்த கடா முட்டுது!). “அப்படிங்களா. சார்.. உங்க வயசு என்ன சார்?” என்று பதிலுக்கு கடித்தார் விஜய் சேதுபதி. பிறகு தனது விசில் திறமையின் மூலம் சபையை மகிழ்வித்தார் ஆல்ரவுண்டர் மணிகண்டன்.

“ஓகே... போட்டிக்குள்ள போகலாமா?” என்று விஜய் சேதுபதி சொன்னதும், போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ‘இன்னிக்கு என்ன இருக்குமோ?’ என்று தங்களின் சமையல் மேடையை திகிலுடன் பார்த்தனர். ஒவ்வொருவரின் மேடையிலும் ஒரு பெரிய ட்ரங்க் பெட்டி (Mystery box) இருந்தது. நீதிபதிகளின் உத்தரவுக்கு பின்னர் அனைவரும் பெட்டியைத் திறந்தார்கள். பெட்டிக்கு அஞ்சலி செலுத்துவது போல் பக்கத்தில் ஒரு கறிவேப்பிலைக் கொத்து.

“கறிவேப்பிலையை மட்டும் வெச்சு சமைக்கிறவங்க இப்பவே கையைத் தூக்கலாம். அடுத்த பெட்டியில் இருப்பதைப் பார்க்க ஆசைப்படுகிறவர்கள் காத்திருக்கலாம்” என்று அறிவிக்கப்பட்டவுடன் ‘கையைத் தூக்குவதா... வேண்டாமா’ என்று குழப்பமும் சந்தேகமும் பலருக்கு வந்தது. அடுத்த பெட்டியில் ‘வேப்பிலை’ இருந்து, இரண்டையும் சேர்த்து சமைக்கச் சொன்னால் என்ன செய்வது? மாஸ்டர் செஃப்பில் சொன்னாலும் சொல்வார்கள்.

ஆகவே மணிகண்டன், சுனிதா மற்றும் நித்யா ஆகிய மூவர் மட்டும் ‘கறிவேப்பிலை டீலுக்கு’ ஒத்துக் கொண்டு தனி வரிசையில் வந்து நின்றார்கள். இவர்கள் கறிவேப்பிலையை மட்டும் மையமாகக் கொண்டு சமைத்தால் போதும். ஆனால் இதற்கு 30 நிமிடம் மட்டுமே தரப்படும்.

இப்போது மற்றவர்கள் அதற்கு அடுத்த பெட்டியைத் திறந்தார்கள். அதில் இருந்த ஆச்சரியம் – Chuda Cheese. இது வித்தியாசமான சுவையில் இருக்குமாம். இந்த இரண்டாவது நிலைக்கு கைதூக்குகிறவர், கறிவேப்பிலை + Chuda cheese என்கிற கூட்டணியில் சமைக்க வேண்டும். இதற்கு தரப்படும் நேரம் 45 நிமிடங்கள். இதைத் தேர்ந்தெடுத்தவர் சுமித்ரா மட்டுமே.

இப்போது மூன்றாவது கட்டம். ‘அடுத்த பெட்டியில் என்னதான் இருக்குன்னு பார்த்துடணும்” என்று தேவகி மிகவும் ஆவலாக இருந்தார். ஆனால் மூன்றாவது பெட்டியைத் திறந்ததும் அனைவரின் முகங்களும் அதிர்ச்சியில் உறைந்தன. “இதைப் பார்க்க ஏதோ ஜந்து மாதிரி இருக்கு. இந்த மூஞ்சை நான் முன்ன பின்ன பார்த்ததேயில்ல. பேசாம கறிவேப்பிலை டீலுக்கே ஒத்துக்கிட்டிருக்கலாமோ?” என்று கண்கலங்கினார் கிருத்திகா.

மாஸ்டர் செஃப் தமிழ்
மாஸ்டர் செஃப் தமிழ்

தேளுக்கு எக்ஸ்ட்ரா கைகால்கள் முளைத்து நண்டு போல் இருந்த அதன் பெயர் ‘சிங்கி இறால்’. ‘Indian lobster’ என்று சொல்வார்கள். இதில் அறுபது வகைகள் உள்ளன. ரொம்ப காஸ்ட்லியான சமாச்சாரம் இது.

ஆக மூன்றாம் பெட்டியையும் திறந்தவர்கள் கறிவேப்பிலை + சுடா சீஸ் + சிங்கி இறால் ஆகிய மூன்றையும் வைத்து சமைக்க வேண்டும். இதற்கு தரப்படும் நேரம் 60 நிமிடம்.

இந்தப் போட்டியில் இரண்டு பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு வெற்றிபெற்றவர்கள் பால்கனிக்கு செல்வார்கள். மீதமுள்ளவர்கள் கறுப்பு ஏப்ரன் அணிந்து அடுத்த சவாலைச் சந்திக்க வேண்டும் என்பதால் போட்டியாளர்களுக்குள் பரபரப்பு நிலவியது.

“அய்யோ... இதை எந்தப் பக்கம் இழுக்கறதுன்னே தெரியலையே” என்று சிங்கத்துடன் சண்டையிடுவது போல் சிங்கி இறாலுடன் போராடிக் கொண்டிருந்தார் கிருத்திகா. “இதன் மத்த பாகங்களை தூக்கிப் போட்டுடாதீங்க... எல்லாத்தையுமே சமைக்கலாம். டேஸ்ட்டா இருக்கும்” என்று டிப்ஸ் தந்தார் செஃப் ஹரீஷ்.

கறிவேப்பிலையை தேர்வு செய்த மணிகண்டன் அதனுடன் சிக்கனையும் கலந்து எதையோ மும்முரமாக போராடிக் கொண்டிருக்க “நல்லா வருமில்லையா?” என்று மிரட்டி விட்டு அன்புடன் ஆசி வழங்கினார் செஃப் கெளஷிக். கிருத்திகா தயார் செய்திருந்த ஒரு வஸ்து உடைந்து விட்டதால் டென்ஷன் ஆனார். கவுன்ட்டவுன் சொல்லும் கடைசி நொடி வரை ப்ரீஸ்ஸரில் எதையோ ஆராய்ந்து கொண்டிருந்தார் சுனிதா.

ஒருவழியாக இந்தப் போட்டி முடிந்து பலி பீடத்துக்கு உணவுகளை கொண்டு வரச் சொன்னார்கள். முதலில் வந்தவர் சிங்கத்துடன் போராடிய கிருத்திகா. இவர் சமைத்திருந்த உணவின் தலைப்பு எளிமையாக அமைந்து விட்டது. ‘இறால் விருந்து’. ‘அது விருந்தா இல்லையான்னு நாங்க சொல்லணும்’ என்னும் முகபாவத்தில் எடுத்துச் சுவைத்த கெளஷிக், ஸ்பூனை நீட்டியபடி கிருத்திகாவை முறைத்துப் பார்த்தார். அப்போதே கிருத்திகாவிற்கு குளிர்சுரம் வந்திருக்கும். (ஆத்தாடி... இவர முறைக்கறது.. சிங்கி இறால் மாதிரியே இருக்கே!).

மாஸ்டர் செஃப் தமிழ்
மாஸ்டர் செஃப் தமிழ்

சிறப்பு விருந்தினரான ரம்யா, உணவுப் பிரியர் விஜய் சேதுபதியையும் மிஞ்சி விடுவார் போலிருக்கிறது. போட்டியாளர்கள் எதைக் கொண்டு வந்தாலும் ‘’நல்லாயிருக்கு...செம’’ என்று பாராட்டித் தள்ளினார். சிலர் பஃபே பார்ட்டிகளில் தட்டில் ஏராளமான உணவை எடுத்து வைத்துக் கொண்டு கண்மறைவான மூலைக்குச் சென்று மொக்குவார்கள். பார்த்திருக்கிறீர்களா? அது போல் தட்டில் வைத்து பின்வரிசைக்கு சென்று விட்டார் விஜய் சேதுபதி.

இரண்டாவதாக வந்த சுனிதா கொண்டு வந்த உணவு ‘கறிவேப்பிலை கிரீம் புருனே’. உலகின் பணக்காரர்களில் ஒருவரின் பெயரை வைத்திருக்கிறார் போலிருக்கிறது. இது இனிப்புப் பண்டம். “உங்க சிந்தனை மிகச் சிறப்பு. கறிவேப்பிலையை வைத்து இப்படி ஒரு சுவையைக் கொண்டு வர முடியும்ன்றது இன்னிக்குத்தான் தெரியும். என் ரெஸ்டாரன்ட்டில் இதை அறிமுகப்படுத்தப் போறேன்” என்று செஃப் கெளஷிக் சொன்னதும் உற்சாகத்தின் எல்லையில் மிதந்தார் சுனிதா. வசிஷ்டர் வாயால் கிடைத்த அரிதான ஆசீர்வாதம் இது. “இந்த நிகழ்ச்சியில் இதுவரைக்கும் அவர் யாருக்கும் இப்படி சொன்னதில்லை. பெஸ்ட் காம்ப்ளிமென்ட் எனக்கு கிடைச்சது” என்பது சுனிதாவின் பூரிப்பு.

அடுத்த வந்த தேவகிக்கும் ஏறத்தாழ இதே மாதிரியான புகழுரையும் பாராட்டும் கிடைத்தது. அவர் கொண்டு வந்திருந்த உணவு ‘சிங்கி இறால் கிச்சடி’. “பக்குவமா சமைக்கப்பட்டிருக்கு” என்று கெளஷிக் சொன்னதும் மகிழ்ச்சியில் நம்பவே முடியாமல் திகைத்துப் போய் உறைந்து நின்றார் தேவகி. (ஓகே... அவங்க சாதாரணமா இருந்தாலே இப்படித்தான் இருக்கும்!).

மாஸ்டர் செஃப் தமிழ்
மாஸ்டர் செஃப் தமிழ்

அடுத்து வந்தவர் நித்யா. இவர் உணவின் தலைப்புக்கு பெயர் சூட்டியிருந்தது, ஸ்பானிஷ் திரைப்படத்தின் டைட்டில் போல் இருந்தது. ‘கறிவேப்பிலை அக்லியோ ஹேண்ட்மேட் பாஸ்தா’. “எக்ஸலன்ட்டா இருக்கு” என்று இதை சுவைத்த பின் பாராட்டுரை வழங்கினார் ஹரீஷ். (விசே என்ன சொன்னார் என்பதை குறிப்பிடவே தேவையில்லை.) “நீங்க தேங்காய் எண்ணைய்யை உபயோகப்படுத்தியதுதான் வில்லனா போச்சு” என்று நெகட்டிவ் கமென்ட்டுகளும் வந்தன.

‘கெளடா கறிவேப்பிலை டார்ட்’ என்று பெயர் சூட்டப்பட்ட உணவை கொண்டு வந்தவர் சுமித்ரா. கறிவேப்பிலை + சீஸ் கூட்டணியில் சமைத்தவர் இவர் மட்டுமே. ‘Simple & Classy’ என்று ஸ்டைலான மற்றும் சுருக்கமான கமென்ட்டை வாங்கி மகிழ்ச்சியோடு திரும்பினார் சுமித்ரா.

‘மீன்குழம்பும் மண்பானையும்’ என்ற படத்தலைப்பு மாதிரி வின்னி சூட்டியிருந்த பெயர் ‘சிங்கி இறாலும் பச்சைப்புளி சாறும்’. இதைச் சாப்பிட்ட ஹரீஷ், நாக்கைச் சப்புக் கொட்டிக் கொண்ட பிறகு “நான் எப்பவுமே சொல்வேன் இல்லையா... சாப்பிட்டவுடனே இப்படி ஒரு சத்தம் வரணும்” என்று பாராட்டுரை வழங்கினாலும் ‘பெப்பர் அதிகம்’ என்று வின்னியின் மகிழ்ச்சியில் காரத்தைப் போட்டார் செஃப் ஆர்த்தி.

அடுத்ததாக நவ்சீன் வந்தவுடனே ‘டெஸர்ட்டுதானே கொண்டு வந்திருக்கீங்க?” என்று கிண்டலடித்தார் விஜய் சேதுபதி. இவர் தொடர்ந்து டெஸர்ட்டுகளாக செய்வதைப் பார்த்த நீதிபதிகள் ‘இனிமே அதைச் செஞ்சா கொண்டே புடுவோம்’ என்று ஏற்கெனவே செல்லமாக மிரட்டியிருந்தார்கள். நவ்சீன் சூட்டியிருந்த பெயரைக் கேட்டதும் சபையே அதிர்ந்து சிரித்தது. ‘சிங்கி இறால் சீமாட்டி’.

“ஏதோவொண்ணு மிஸ் ஆகுது” என்று முகத்தைச் சுளித்தார் விஜய் சேதுபதி. “கடல் உணவு சமைக்கும் போது உப்பு விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்” என்பது போல் ஹரீஷ் டிப்ஸ் கொடுத்தார். (நோட் பண்ணுங்க மக்களே!).

மாஸ்டர் செஃப் தமிழ்
மாஸ்டர் செஃப் தமிழ்

கடைசியாக வந்தவர் விஜய் சேதுபதியின் செல்லப் பிள்ளை மணிகண்டன். இவர் வைத்திருந்த பெயரைக் கேட்டவுடன் பகீர் என்றது. யாருக்கோ அஞ்சலி போஸ்டர் அடித்ததைப் போன்று ‘என் தாயின் கருவறைத் தோட்டம்’ என்று கலவரமாக பெயர் வைத்திருந்தார். கறிவேப்பிலை+சிக்கன் கூட்டணியில் இவர் சமைத்திருந்த அயிட்டம் எவரையுமே கவரவில்லை. செஃப் ஆர்த்தி இது குறித்து கேட்ட போது, மணிகண்டன் இடக்குமடக்காக பதில் சொன்ன விதத்தை விஜய் சேதுபதி சற்று சீரியஸாகவே கண்டித்தார்.

முடிவுகள் அறிவிக்கப்படும் நேரம். இதில் தேவகியின் ‘சிங்கி இறால் கிச்சடி’ முதல் இடத்தைப் பிடித்தவுடன் அவரால் நம்பவே முடியவில்லை. வழக்கம் போல் நடிகர் பாண்டியராஜனின் பார்வையுடன் திகைத்து விழித்தபடி நின்றிருந்தார். அடுத்த இடத்தை தட்டிச் சென்றவர் சுமித்ரா. ஆக... இந்த இருவர் மட்டும் வெற்றி பெற்று பால்கனிக்குச் செல்கிறார்கள். மீதமுள்ளவர்கள் கறுப்பு ஏப்ரன் சோதனையைக் கடக்க வேண்டும்.

‘’ஃபை ஃபை ஃபை கலாய்ச்சி ஃபை…’’ என்கிற கருத்துள்ள பாடலை பாடியபடி விடைபெற்றார் ரம்யா நம்பீசன். அடுத்த எபிசோடில் எதை வைத்து சமைக்கச் சொல்லப் போகிறார்கள் என்பதை நினைத்தால் இப்போதே கலவரமாகத்தான் இருக்கிறது. என்னதான் ஆகிறது என்று காத்திருந்து சுவைப்போம்.

காத்திருந்து சுவைப்போம்!