Election bannerElection banner
Published:Updated:

'குக்கு வித் கோமாளி'க்குப் போட்டி... சன் டிவியில் விஜய் சேதுபதியின் 'மாஸ்டர் செஃப்'... என்ன ஸ்பெஷல்?

விஜய் சேதுபதி - மாஸ்டர் செஃப்
விஜய் சேதுபதி - மாஸ்டர் செஃப்

விஜய் டிவியின் 'குக்கு வித் கோமாளி'யை சமாளிக்க இப்போது சன் டிவி 'மாஸ்டர் செஃப்' நிகழ்ச்சியை தமிழ் சமூகத்துக்கு அறிமுகப்படுத்துகிறது. Brutally honest review-க்கு புகழ்பெற்றது இந்நிகழ்ச்சி.

''யு-ட்யூப்ல குக்கிங் சேனல் ஒன்னு ஆரம்பிச்சிருக்கேன். லைக் பன்ணு, சப்ஸ்கிரைப் பண்ணு, பெல் ஐகானை அழுத்து'' என நம் நட்பு வட்டத்துக்குள்ளேயே திடீர் குக் கோமாளிகளை ஏகத்துக்கும் ஏற்றுவிட்ட பெருமை கொரோனா லாக்டெளனையே சாரும்.

செய்த டிஷ் நன்றாக இருக்கிறதோ இல்லையோ, அதற்கு வாயில் நுழையாத பெயர் வைத்து, பிராக்கோளி, லெட்யூஸ், செலரி இலைகள் என கொஞ்சம் இங்கிலீஷ் வெஜிடபிள்களைத் தூவி, சிக்கன் - மட்டன் நாட்டுகோழி ரசம் எனக் காக்டெய்ல் கலந்து, போட்டோ போட்டு லைக்ஸ் அள்ளும் வெறி ஒவ்வொரு குடிமகனுக்குள்ளும் குடி கொண்டுவிட்டதால் சமையல் நிகழ்ச்சிகள் எப்போதும்போல இப்போதும் ட்ரெண்டிங்கில் இருக்கின்றன.

90-களில் பொதிகையில் ஒளிபரப்பான 'சாப்பிட வாங்க' தொடங்கி இப்போது விஜய் டிவியின் டிஆர்பியை ஏகத்திற்கும் எகிற வைத்திருக்கும் 'குக்கு வித் கோமாளி' வரை ஏகப்பட்ட ட்ரெண்ட் செட்டிங் சமையல் நிகழ்ச்சிகள் உண்டு. ஆனால், இந்த 'குக்கு வித் கோமாளி' முதல் இன்னபிற சமையல் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் முன்னோடி அல்லது இன்ஸ்பிரேஷன் என்றால் அது உலக ஹிட்டான 'மாஸ்டர் செஃப்' தான்.

45 நாடுகளில் ஏறக்குறைய 30 ஆண்டுகளாக கோலோச்சிக் கொண்டிருக்கும் ரியாலிட்டி ஷோதான் மாஸ்டர் செஃப். பிரிட்டனில் முதல்முறையாக மெகா ஹிட்டான இந்நிகழ்ச்சிக்கு தாய்வீடு ஹெல்ஸ் கிச்சன் (Hell's kitchen) எனப்படும் மற்றொரு ரியாலிட்டி ஷோ. விஜய் டிவியின் 'குக்கு வித் கோமாளி'யை சமாளிக்க இப்போது சன் டிவி 'மாஸ்டர் செஃப்' நிகழ்ச்சியை தமிழ்ச் சமூகத்துக்கு அறிமுகப்படுத்துகிறது.

மாஸ்டர் செஃப் தமிழ்
மாஸ்டர் செஃப் தமிழ்

மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியின் ஸ்பெஷல் என்ன?!

மாஸ்டர் செஃப் எத்தனையோ நாடுகளில் ஒளிபரப்பப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும் மாஸ்டர் செஃப் ஆஸ்திரேலியாவுக்குக் கிடைத்த ஆரவார வரவேற்பைப் பற்றிச் சொல்லியாக வேண்டும்.

2009-ம் ஆண்டு தொடங்கி 2021 வரையிலும் இதுவரை 13 சீசன்கள் கண்ட வெற்றித் தொடர் இது. ஆஸ்திரேலியா ரியாலிட்டி ஷோக்கள் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு குறுகிய காலத்திலேயே பல லட்சம் பார்வையாளர்களை ஈர்த்த மாபெரும் நிகழ்ச்சி. சமையல் தொழிலை பிரதான வருவாயாக கொண்டிராத 18 வயதிற்கு மேற்பட்ட எவர் வேண்டுமானாலும் பங்கேற்கலாம் என்ற விளம்பரங்களைப் பார்த்து ஆயிரக்கணக்கானோர் இந்நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். பல போட்டியாளர்கள் சமைத்ததை, 3 பேர் கொண்ட நடுவர் குழு ருசி பார்த்து அதிலிருந்து 50 பேரைத் தேர்ந்தெடுக்கும். பின்பு அந்த 50 பேரின் சமைக்கும் திறன், சமையலில் கடைபிடிக்கும் டைமிங், சமைத்ததை பிரசன்ட் செய்த விதம், குழுவுடன் இணைந்து சமைக்கும் கூட்டு சமையல் எனப் பல சுற்றுகள் வைத்து அவர்களின் தனித்திறமைகளை ஆராய்வார்கள். முதலிலிருந்த 50 பேரில் ஒவ்வொருவராக வடிகட்டப்பட்டு, இறுதியில் 12 பேராகச் சுருக்கி அதில் இருந்து ஒருவர் டைட்டில் வின்னராக அறிவிக்கப்படுவார். ஏற்கெனவே இருக்கும் 3 நடுவர்கள் மட்டுமல்லாது பார்வையாளர்களே உணவைச் சுவைத்து கருத்துச் சொல்லும் நாட்டாமையாக இருந்த எபிசோடுகளும், வாக்கெடுப்பின் மூலம் வெற்றியாளரை தேர்ந்தெடுத்த கதைகளும் உண்டு.

இதில் பங்கேற்று வெற்றி பெறும் டைட்டில் வின்னருக்கு ப்ரொஃபஷனல் செஃப்பிடம் இருந்து தொழில்முறை சமையல் பயிற்சி பெறும் வாய்ப்பும், அவர்கள் நிகழ்ச்சியில் சமைத்த பிரத்யேக ரெசிப்பிக்கள் தாங்கிய ஒரு புத்தகம் வெளியிடும் வாய்ப்பும், கூடவே $250,000 டாலர் ரொக்கப் பணமும்... அதாவது நம்மூர் மதிப்பில் ஏறக்குறைய 1.8 கோடி ரூபாய் (ஆ………வ்!!) பரிசாகக் கொடுக்கப்படும்.

மாஸ்டர் செஃப்
மாஸ்டர் செஃப்

''நீ செஞ்சிருக்கிறதுக்கு பேரு சமையலா?'', ''சோறு வச்சியே அதுக்கு பேரு வச்சியா'' எனப் போட்டியாளரின் உணர்வுகளைத்தூண்டி அவர்களை கோபப்படவைக்கும், அழவைக்கும், சிரிக்கவைக்கும் ஏராளமான எமோஷனல் பலகாரங்கள் நிகழ்ச்சியில் உண்டு.

Brutally honest review என்கிற பெயரில் போட்டியாளர் சமைத்து வைத்த உணவை ருசி பார்த்த பின் எதுவுமே சொல்லாமல் நடுவர் அதைக் குப்பைத் தொட்டிக்குள் கொட்டிய சம்பவங்களும் உண்டு.

இதுமட்டுமல்லாமல் பிரபலங்கள் மட்டும் பங்கேற்கும் விதமாக செலிபிரிட்டி மாஸ்டர் செஃப் ( Celebrity Master Chef) என்ற போட்டியும், இதற்கு முன் போட்டியில் பங்கேற்றவர்களை வைத்து மாஸ்டர் ஆஃப் ஆல் ஸ்டார்ஸ் (Master chef all stars) என்ற போட்டியும், தொழில்முறை சமையல்காரர்களுக்கான மாஸ்டர் செஃப் த புரோபஷனல்ஸ் (Master Chef : The professionals) என்ற பெயரில் மற்றொரு போட்டியும், 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்காக ஜூனியர் மாஸ்டர் செஃப் (Junior Master chef) என்றொரு போட்டியுமாக இந்த ஒரே ரியாலிட்டி ஷோ கமல்ஹாசனைவிடவும் பல அவதாரங்கள் எடுத்திருக்கின்றன.

ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு நாட்டிலும் போட்டி நடக்கும் விதத்தில் மாறுதல்கள் உண்டு. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, தொடங்கி பிரேசில், பெரு, பராகுவே, பாகிஸ்தான், செக் குடியரசு போன்ற உலக வரைபடத்தில இருக்கும் பல்வேறு நாடுகளிலும் இந்நிகழ்ச்சி ஊடுருவியுள்ளது. பல கண்டங்களைக் கடந்து பெரும் வரவேற்பை பெற்ற இந்நிகழ்ச்சி 'மாஸ்டர் செஃப் இந்தியா' என்ற பெயரில் 2010-ம் ஆண்டு இந்தியின் மூலம் இந்தியாவிற்குள்ளும் நுழைந்து வெற்றிகரமாக ஆறு சீசன்களைக் கடந்திருக்கிறது. அதிலும் முதல் சீசனில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய பிரபலம் நடிகர் அக்ஷய் குமார்!

இங்கு எப்படி செஃப் தாமு, வெங்கடேஷ் பட் ஆகியோர் நட்சத்திர சமையல் நிகழ்ச்சியில் சமையலை ருசி பார்த்து, கருத்து சொல்லி தொகுத்து வழங்கினார்களோ, அதேபல அங்கே உலக அளவில் மிகப் பிரபலமாக இருக்கும் இந்தியாவின் பெஸ்ட் செஃப் சஞ்சீவ் கபூர், குணால் கபூர் மற்றும் விகாஸ் கண்ணா போன்ற பலரும் நடுவர்களாக இருந்துள்ளனர். இந்தி வெர்ஷனில் மாஸ்டர் செஃப் பட்டத்தை வெல்பவருக்கு 10 கோடி ரூபாய் ரொக்கப் பணமும், அவர்களின் ரெசிப்பிகளை புத்தகமாகவும் வெளியிட்டனர்.

பங்கஜ் பதுரியா... 16 வருடங்களாக தான் பார்த்து வந்த ஆசிரியர் பணியை துறந்து 'மாஸ்டர் செஃப் இந்தியா' சீசன் ஒன்றில் பங்கேற்று வெற்றி வாகை சூடியவர். தற்போது 'பங்கஜ் பதூரியா சமையல் அகாடமி' என்ற பெயரில் சொந்தமாக ஒரு தொழிற்பயிற்சி மையம் நடத்தி வருகிறார்.

இந்தியா முழுவதும் இருக்கும் சமையலில் ஆர்வமுள்ள அமெச்சூர் சமையற்காரர்கள் பலரும் கலந்து கொண்டதால் பெரிய ஹிட்டடித்த இந்நிகழ்ச்சி, தெற்கில் முதல் முறையாக சன் டிவியின் மூலமாக தமிழ்நாட்டிற்குள் அடியெடுத்து வைக்கிறது. யூ-ட்யூபில் புகுந்து புறப்பட்டிருக்கும் தமிழ்நாட்டின் அனைத்து மாஸ்டர் குக்குகளும் இனி இந்த நிகழ்ச்சிக்குள் அடியெடுத்துவைப்பார்கள் என எதிர்பார்க்கலாம்

“போட்டியின் விதிமுறைகள் என்ன?”

“போட்டியாளர்கள் யார்?”

“நடுவர்கள் யார் யார்?”

“இது பிரபலங்கள் மட்டும் பங்கேற்கப்போகும் நிகழ்ச்சியா, அல்லது உலகம் முழுக்க பரவியிருக்கும் தமிழர்களின் திறமைக்கான சவாலா?''

“பரிசுத் தொகை எவ்வளவு?''

“தொகுத்து வழங்கப் போகும் பிரபலம் யார்?” போன்ற பல கேள்விகள் அணிவகுத்து நிற்கின்றன.

மாஸ்டர் செஃப்
மாஸ்டர் செஃப்

தமிழில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப் போவது விஜய் சேதுபதி என்கிற உறுதியானத் தகவல் மட்டும் வெளியாக ஆரம்பித்திருக்கிறது.

ஆண்-பெண் வித்தியாசங்களைக் கடந்து அனைவரையும் கவர்ந்திழுத்து டி.ஆர்.பி-யில் தனக்கென பிரத்யேக இடத்தைப் பிடித்திருக்கும் 'குக்கு வித் கோமாளி' நிகழ்ச்சிக்கு இந்த 'மாஸ்டர் செஃப்' எப்படிப்பட்ட போட்டியாக இருக்கும், விஜய் சேதுபதி என்னவெல்லாம் செய்யப்போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு