Published:Updated:

மாஸ்டர் செஃப் vs குக்கு வித் கோமாளி… பார்க்கத் தூண்டுகிறதா விஜய் சேதுபதியின் நிகழ்ச்சி?!

மாஸ்டர் செஃப் விஜய் சேதுபதி

மாஸ்டர் செஃப் தமிழ், அதன் ஆதார வடிவமைப்பிற்கு ஏற்ப மிக கச்சிதமாக பயணப்பட்டாலும் நிகழ்ச்சியிலுள்ள உள்ள இறுக்கம் சற்று தளரலாம் என்று தோன்றுகிறது.

Published:Updated:

மாஸ்டர் செஃப் vs குக்கு வித் கோமாளி… பார்க்கத் தூண்டுகிறதா விஜய் சேதுபதியின் நிகழ்ச்சி?!

மாஸ்டர் செஃப் தமிழ், அதன் ஆதார வடிவமைப்பிற்கு ஏற்ப மிக கச்சிதமாக பயணப்பட்டாலும் நிகழ்ச்சியிலுள்ள உள்ள இறுக்கம் சற்று தளரலாம் என்று தோன்றுகிறது.

மாஸ்டர் செஃப் விஜய் சேதுபதி
வந்திருக்கும் 24 போட்டியாளர்களில் சரிபாதி எண்ணிக்கையில், அதாவது 12 போட்டியாளர்கள் மட்டுமே முதல் தகுதிச்சுற்றுக்கு தேர்வார்கள் என்பதை முந்தைய கட்டுரையில் பார்த்தோம். எனவே இது ஆட்டத்தில் இன்னமும் பரபரப்பு ஏறியது.

சில துறைகளில் உள்ள யூனிஃபார்ம்களுக்கு தனித்த பெருமையும் பிரத்யேகமான அடையாளமும் உண்டு. உதாரணத்துக்கு காவல்துறை. அந்த யூனிஃபார்மில் ஒரு சாதாரண ஆளைப் பார்த்தால் கூட நமக்கு சற்று பயம் கலந்த மரியாதை வரும். அது போல சமையல் துறை வல்லுநர்களுக்கு 'ஏப்ரன்' என்பது பெருமைமிகு அடையாளம்.

இந்த முதல் கட்ட போட்டியில் தகுதி பெறுபவர்களுக்கு அவர்களின் பெயர் பொறித்த ஏப்ரன் அளிக்கப்படும். வெற்றி பெற்ற அவர்கள் இதை அணிந்து கொண்டு அரங்கில் உள்ள பால்கனிக்குச் சென்று பெருமையாக நின்று கொள்ளலாம். ("அப்ப தோத்தவங்களை பேஸ்மென்ட்ல நிக்க வெப்பாங்களா?" - பழைய ஜோக் தங்கதுரை இந்த நிகழ்ச்சியில் இருந்தால் இப்படி கேட்டிருப்பாரோ. என்னமோ!).

மாஸ்டர் செஃப் ஜட்ஜஸ்
மாஸ்டர் செஃப் ஜட்ஜஸ்

அது தொழில்முறை சமையல் கலைஞர்களோ அல்லது சுயஆர்வத்தில் செயல்படும் அமெச்சூர்களோ... அவர்கள் தங்களின் திறமையையும் உழைப்பையும் கொட்டி ஒரு சிறந்த உணவை உருவாக்குவது என்பது அவர்களின் பெருமையைக் காட்டிக் கொள்வதற்காக அல்ல. சாப்பிடுபவர்களின் கண்களில் தெரியும் திருப்தியையும் புன்னகையையும் காண்பதற்காக. அந்த துளி புன்னகையே அவர்களுக்கு கோடி ரூபாய் சன்மானத்திற்கு நிகரானது

இதையேதான் போட்டியாளர்களில் ஒருவரான கிருத்திகாவும் சொல்கிறார். "என்னோட சமையலின் மூலமா மத்தவங்களை சந்தோஷப்படுத்திப் பார்க்கறது எனக்கு ரொம்பவும் பிடிக்கும்".

*******

முதல் சவாலின் விதிமுறைகள் போட்டியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டன. 'தங்களுக்குப் பிடித்தமான, சிறப்பாகத் தயார் செய்யக்கூடிய உணவை போட்டியாளர்கள் சமைக்கலாம். இதற்காக 45 நிமிடங்கள் வழங்கப்படும்'.

இந்த அறிவிப்பைக் கேட்டவுடன் அடுப்பைப் போலவே போட்டியாளர்களின் உடம்பிலும் சூடு ஏறியது. அங்கும் இங்கும் பரபரப்பாக ஓடி தங்களுக்குத் தேவையான பொருட்களை சேகரித்து விறுவிறுப்பாக சமைக்கத் தொடங்கினார்கள்.

இந்தப் பரபரப்பின் இடையே, ஆதிகாலத்தில் மாஸ்டர் செஃப் ஆக இருந்த நள மகாராஜாவே அருகே வந்து ஏதாவது விசாரித்தால் கூட போட்டியாளர்களுக்கு பதில் பேசத் தோன்றாது. ‘'போய்யா அந்தாண்ட.. வேலையா இருக்கேன்னு தெரியுதுல்ல" என்றுதான் சொல்லத் தோன்றும். என்றாலும் நீதிபதிகள் மற்றும் விசே அருகில் வந்து "என்ன பண்றீங்க?" என்று போட்டியாளர்களிடம் விசாரித்த போது வலுக்கட்டாயமான புன்னகையுடன் பதில்களைச் சொன்னார்கள்.

தனது அம்மா ஒவ்வொரு வாரமும் செய்து தரும் 'நாஞ்சில் மீன் விருந்து' என்கிற அயிட்டத்தை செய்வதற்காக பரபரப்புடன் வெங்காயத்தை நறுக்க ஆரம்பித்த ஆர்த்தி என்கிற போட்டியாளர், அவசரத்தில் விரல்களில் காயத்தை ஏற்படுத்திக் கொண்டார். 'அய்யோ.. நேரம் போகிறதே' என்று கண்ணீர் மல்க நின்று கொண்டிருந்த அவரை கறார் நீதிபதியான கெளஷிக் "ஒண்ணும் பிரச்னையில்ல. ரிலாக்ஸ். உங்களால செய்ய முடியும்" என்று ஆறுதல்படுத்தியது சிறப்பு. (கல்லுக்குள் ஈரம் கெளஷிக்!).

மாஸ்டர் செஃப் போட்டியாளர்கள்
மாஸ்டர் செஃப் போட்டியாளர்கள்

அவசரத்தில் கையை காயப்படுத்திக் கொண்டாலும் ஆர்த்தி செய்த 'மீன் விருந்து' நீதிபதிகளைக் கவர்ந்து விட்டது. தான் தேர்வான சந்தோஷத்தையும் பிறகு ஒரு பாட்டம் அழுது வெளிப்படுத்தினார் ஆர்த்தி.

ஆர்த்தியைப் போலவே கை விரல்களில் காயத்தை ஏற்படுத்திக் கொண்ட இன்னொரு போட்டியாளரான வின்னியும் பிறகு தேர்வானார். இவர் செய்ததது ஒருவகை பனியாரம். ('கை விரல்ல ரத்தம் வந்தா வெற்றி உறுதி போல'ன்னு இதுவே ஒரு சென்ட்டிமென்ட் ஆகிடாம பார்த்துக்கங்க).

"பொதுவா நம்ம வீட்ல இறால் சுத்தம் செய்யும் போது தலையைத் தூக்கிப் போட்டுடுவோம். ஆனா அந்தப் பெண்மணி இறால் தலையையும் சமையலுக்குள் சேர்த்து திறமையா பயன்படுத்திக்கிட்டு இருக்காங்க" என்று சக நீதிபதிகளிடம் ஆச்சரியமாகச் சொல்லிக் கொண்டிருந்தார் ஹரீஷ் ராவ். அவர் சொல்லிக் கொண்டிருந்தது, நித்யா என்கிற போட்டியாளரைப் பற்றி. இந்த காரணமும் வெற்றியைத் தேடித் தந்ததோ என்னவோ. பிறகு தேர்வானவர்களில் ஒருவராக நித்யா இருந்தார்.

இது போன்ற சமையல் போட்டிகளில் சில சமையல் பொருட்களை வாயில் நுழையாத ஆங்கில, பிரெஞ்ச், லத்தீன் பெயர்களாக 'வழவழகொழகொழ' என்று சொல்வார்கள். நாம் பிரமிப்புடன் திகைத்து பிறகு அது என்னவென்று தேடினால் நம்மூர் இஞ்சி, கொத்தமல்லியாக இருக்கும். எனவே அவற்றிற்கெல்லாம் மிரண்டு விடக்கூடாது. மேற்கத்திய மோகத்தில் அந்த ஊர் உணவுகளை அரையும் குறையாக காப்பியடிப்பதை விடவும் நமக்கு நன்கு தெரிந்த, நம்மூர் பாரம்பரிய உணவுகளைச் செய்வதுதான் சிறப்பு.

இந்த நோக்கில், மடிசார் புடவையில் இருந்த ஜெயஸ்ரீ என்கிற பெண்மணி 'அக்கார அடிசில்' என்னும் அயிட்டத்தை செய்தது சிறப்பு. 'அக்கார அடிசில்' என்றதும் என்னவோ ஏதோ என்று பயந்து விட வேண்டாம். ஏறத்தாழ சர்க்கரைப் பொங்கல்தான். வைணவ ஆலயங்களில் இறைவனுக்கு பிரசாதமாக படைக்கப்படும் உணவு இது. கூடவே பெப்பர் வடையும் செய்தார். ஜெயஸ்ரீ தயார் செய்திருந்த உணவை நீதிபதிகளுள் ஒருவரான ஆர்த்தி முகர்ந்து, உண்டு பரிசோதித்த போது '’கோயில்ல நின்னு பிரசாதம் சாப்பிட்ட ஃபீல் வருது" என்ற போது ஜெயஸ்ரீயின் முகம் மலர்ந்தது. 'சிறப்பு...சிறப்பு!" என்று விசேவும் அவரைப் பாராட்ட உச்சி மகிழ்ந்து போனார் ஜெயஸ்ரீ. ஆனால் இவர் போட்டியில் தேர்வாகவில்லை என்பதுதான் துரதிர்ஷ்டம்

மாஸ்டர் செஃப் ஜட்ஜஸ் மற்றும் போட்டியாளர்கள்
மாஸ்டர் செஃப் ஜட்ஜஸ் மற்றும் போட்டியாளர்கள்

'அக்கார அடிசல்' ஜெயஸ்ரீ-ஐ கைவிட்டாலும் 'கும்மாயம்' என்கிற பாரம்பரிய உணவு சசி என்கிற 62 வயது பெண்மணி தேர்வாக உதவியது. கும்மாயம் என்பது செட்டிநாட்டு உணவு வகையில் அமைந்த இனிப்பு பலகாரம். "இப்படி நம்முடைய பல பாரம்பரிய உணவு வகைகள் மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருக்கின்றன" என்று செஃப் ஹரீஷ் ராவ் வருத்தப்பட்டது நிஜம். சமைக்கும் போது பயத்துடனும தயக்கத்துடனும் அடுப்படியில் போராடிக் கொண்டிருந்த சசிக்கு தன்னுடைய பாரம்பரிய செலக்ஷன் வெற்றியைத் தேடித் தந்ததில் அத்தனை மகிழ்ச்சி.

இதைப் போலவே 'திணைக்குறிஞ்சி திணை டிவிஸ்ட்' என்று சங்கப்பாடலின் வாசனையடிக்கும் பெயரை தன்னுடைய உணவுக்கு சூட்டிய கிருதாஜ்ஜூம் தேர்வானார்.

'சாக்லேட் பீடா' என்கிற அயிட்டத்தைச் செய்து நடுவர்களை குஷிப்படுத்தி எப்படியோ தேர்வாகி விட்டார் கிருத்திகா. இந்த தகுதிச் சுற்றில் முதலில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டவர் இவர்தான். "கடைசில சாப்பிடற பீடாவைச் செஞ்சு முதல்ல வின் பண்ணிட்டீங்க" என்று ரைமிங்காக பாராட்டினார் விசே.

************

மற்ற போட்டியாளர்கள் இறுதி நொடி வரைக்கும் கிச்சன் மேடையில் போராடிக் கொண்டிருக்க, 72 வயது 'யங்மேன்' -ஆன செங்குட்டுவன், அதற்குள்ளாகவே தன் சமையலை முடித்து விட்டு கூலாக நின்று கொண்டிருந்தார். "நிஜமாவே நீங்க யங்மேன்தான்" என்று பாராட்டினார் விஜய் சேதுபதி. செங்குட்டுவன் தயார் செய்திருந்த உணவு 'மாங்காய் சிறுதானிய கட்லட்'. ஆனால் 45 நிமிடங்கள் தரப்பட்டிருந்தும் இவர் செய்தது ஒரேயொரு உணவு வகை மட்டுமே என்ற நீதிபதிகள், நெகடிட்டிவ் கமென்ட் தர, புன்னகை மாறாமல் நின்று கொண்டிருந்தார் செங்குட்டுவன். மட்டுமன்றி சுவையும் நீதிபதிகள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் அவர் தேர்வாகவில்லை.

தொழில்முறைக் கலைஞர்களான நீதிபதிகள், உணவு வகைகளைச் சாப்பிட்டு விட்டு தங்களின் ரிசல்ட்டுகளை கறாராக சொல்லிக் கொண்டிருந்தார்கள். இதில் செஃப் கெளஷிக் வழக்கம் போல் டெரராக இருந்தார். அவர்களின் நிலையில், பொறுப்பில் அப்படித்தான் செயல்பட முடியும்.

ஆனால், விசேவை நன்கு பட்டினி போட்டு அழைத்து வந்து விட்டார்களோ, என்னமோ. அது எந்த உணவாக இருந்தாலும், கண்ணை மூடிச் சாப்பிட்டு விட்டு 'பிரமாதம்.... அம்சமாக இருந்தது.. சிறப்பு... மிகச் சிறப்பு' என்று பாராட்டு மழையில் போட்டியாளர்களைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தார். நீதிபதிகளின் நெகட்டிவ் கமென்ட்ளைக் கேட்டு அச்சமும் வருத்தமும் அடையும் போட்டியாளர்கள் கூட விசேவின் பாராட்டுக்களை கேட்டு மனம் மகிழ்ந்தார்கள். விசேவின் நோக்கமும் அதுதான் போல.

டிபன் சென்டர் வைத்திருக்கும் மணிகண்டன் என்கிற இளைஞர் செய்திருந்த 'மட்டன் கேனன்' என்கிற உணவுக்கு நீதிபதிகள் அதிருப்தியாக கமென்ட்டுகளைத் தர அவர் சட்டென்று கண்கலங்கினார். ஆனால் அதைச் சாப்பிட்ட விசே தன் வழக்கமான பாணியில் 'சிறப்பு... நல்லா இருந்தது. நம்பிக்கையா இருங்க" என்று மணிகண்டனைத் தேற்றினார். ஆனால், தான் தேர்வாகவில்லை என்கிற தகவலை அறிந்த மணிகண்டன், சட்டென்று உடைந்து போய் "என் பத்து வருஷ கனவு சார். இது கைவிட்டுப் போறதை என்னால் தாங்க முடியலை" என்று கண்கலங்கத் துவங்க விசே அவரைத் தேற்றிய விதம் சிறப்பு. (ஆனால் இந்த விஷயத்தில் ஒரு சஸ்பென்ஸ் பின்னால் வந்தது).

மாஸ்டர் செஃப்
மாஸ்டர் செஃப்

இஸ்லாமியச் சமூகத்தைச் சேர்ந்த 'நவ்சீன்', 'பொங்கல் சீஸ் கேக்' என்னும் புதுமையான அயிட்டத்தைக் கொண்டு வந்து பரிசோதனை மேடையில் வைக்க 'இந்த மாதிரி பொங்கலைச் சாப்பிட்டதேயில்லை' என்று மனம் உவந்து விசே பாராட்டியதும் மகிழ்ச்சியில் பூரிப்படைந்தார் நவ்சீன்.

'கோழி மர்மம்' என்கிற விநோதமான டிஷ்ஷை தயார் செய்திருந்தார் தாரா. "அது என்னங்க மர்மம்?" என்று விசே விசாரித்தும் கூட அம்மணி பதில் சொல்லாமல் மையமாக புன்னகைத்தார். ('காக்கா பிரியாணியா இருக்குமோ?'). விசித்திரமான பெயரைச் சூட்டி இருந்தாலும் தேர்வில் வெற்றி பெற்றார் இந்த மர்ம ராணி.

வயதில் இளைய போட்டியாளரான சக்திவேல் 'கோழி பொரிச்சது' என்கிற டிஷ்ஷை செய்திருந்தாலும் அது நடுவர்களைக் கவரவில்லை. எனவே கண்கலங்கிய படி வெளியேறிய சக்திவேலை கதவு வரைக்கும் வழியனுப்பி வைத்து ஆறுதல் கூறினார் ஹரீஷ் ராவ். (அடுத்த முறை கலக்கிடலாம்... சக்திவேல்!)

***********

இப்படியாக 24 போட்டியாளர்களையும் நால்வர், நால்வராக நிற்க வைத்து அவர்களில் இரண்டு பேருக்கு மட்டும் 'ஏப்ரன்' தந்து பால்கனி பிரமோஷனுக்கு அனுப்பும் சடங்கு சற்று விறுவிறுப்பாக நகர்ந்தது. "நீங்க தேர்வாகலைன்னு போட்டியாளர்கள் கிட்ட சொல்றதுக்கு எனக்கு கஷ்டமா இருக்கு. நான் இந்தப் பாவத்தை நீதிபதிகள் கிட்ட கொடுத்துடறேன்" என்ற விசே, சிறிது நேரத்திற்கு காணாமல் போய் பிறகு திரும்பி வந்தார்.

ஆக தேர்வானவர்கள் பன்னிரெண்டு நபர்கள் என்று நாம் நினைத்துக் கொண்டிருந்த போது ஒரு சிறிய டிவிஸ்ட் தந்தார்கள். நிராகரிக்கப்பட்டு வெளியே அனுப்பப்பட்டவர்களில் ஆறு நபர்களுக்கு மட்டும் இரண்டாம் சான்ஸ் தரப்பட்டது. அந்த ஆறு பேர் யார் என்பதை நீதிபதிகள் முடிவு செய்தார்கள்.

'போன மச்சான் திரும்பி வந்தான்' கதையாக, 'சரி.. நமக்கு வாய்ச்சது அவ்வளவுதான்' என்று வீட்டிற்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த இந்த ஆறு நபர்களும் சந்தோஷமாக மீண்டும் அரங்கிற்குள் வந்தார்கள்.

இவர்களுக்கு ஒரு டாஸ்க் தரப்பட்டது. சிக்கன், இறால், கோதுமை, வெங்காயம் போன்ற பொருட்கள் தரப்பட்டன. இதை வைத்துக் கொண்டு இவர்கள் ஒரு உணவை தயார் செய்ய வேண்டும். "60 நிமிடங்கள் தரலாமா?" என்று விசே கருணையோடு கேட்க "நோ.. நோ... பதினைந்தே நிமிடங்கள்தான்" என்றார் கறார் மாஸ்டர் கெளஷிக்.

மாஸ்டர் செஃப் விஜய் சேதுபதி
மாஸ்டர் செஃப் விஜய் சேதுபதி

"என்னப்பா இது. பதினைந்து நிமிஷத்துல எப்படி சமைக்க முடியும்?" என்று போட்டியாளர்கள் விழிக்க, அதிலும் ஒரு டிவிஸ்ட். சமைக்க வேண்டாமாம். இறால், சிக்கன், வெங்காயம், கோதுமை ஆகியவற்றை அவர்கள் தந்திருக்கும் மாதிரியின் படி கச்சிதமாக தயார் செய்து காட்ட வேண்டுமாம்.

இங்கு ஒரு இடைச்செருகல். ஒரு செஃப்பின் அனுபவங்கள் அடங்கிய நூலில் வாசித்த ஒரு சம்பவம் நினைவிற்கு வருகிறது. அவர் உணவு சம்பந்தமான உயர்கல்வியை முடித்து விட்டு ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு முதல் நாள் பணிக்குச் சென்றாராம். அங்கிருந்த தலைமை செஃப், இவர் முன்பாக அரை மூட்டை வெங்காயத்தைப் போட்டு "எல்லா வெங்காயத்தையும் சரியான அளவில் கட் பண்ணு" என்றாராம். இவருக்கோ அதிர்ச்சி. நாம் இத்தனை உயர்ந்த படிப்பு படித்திருக்கிறோம்… கேவலம் வெங்காயம் வெட்டச் சொல்கிறாரே என்று.

ஆனால் பிறகுதான் அவருக்குப் புரிந்தது. பள்ளிப்படிப்பு வேறு. நடைமுறைக் கல்வி வேறு. வெங்காயம் வெட்டுவதில் எத்தனை நுணுக்கங்கள், கச்சிதங்கள் தேவை என்கிற பாடத்தை ஆறு மாத வெங்காயம் நறுக்கும் அனுபவத்தில் கற்றுக் கொண்டாராம். ஆக... ஒரு செஃப் ஆவது என்பது அத்தனை எளிதான சமாச்சாரமில்லை. இவ்வாறு பல கட்ட சோதனைகளைக் கடந்து வர வேண்டும்.

மீண்டும் நிகழ்ச்சிக்குத் திரும்புவோம்.

அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைத்த இந்த ஆறு போட்டியாளர்களும் தரப்பட்டிருக்கும் பொருட்களை, சமையலுக்கு தயார் செய்வது போன்ற வகையில் பரபரப்பாக செயலாற்றத் துவங்கினார்கள். இதன் இறுதியில் 'செல்வ சுனிதா' என்கிற போட்டியாளர் தயார் செய்தது மட்டுமே கச்சிதமாக அமைந்திருந்தது. 'செட்டி நாடு எண்ணைய் கத்தரிக்காய்' என்கிற டிஷ்ஷை முன்பு செய்து தோற்றுப் போன சுனிதாவிற்கு இப்படி ஓர் அதிர்ஷ்டம் பிறகு அடித்தது.

ஏற்கெனவே தேர்வான 12 போட்டியாளர்களோடு 13-வது நபராக சென்று இணைந்து கொண்டார் செல்வ சுனிதா. மீதமிருக்கும் ஐந்து நபர்களையும் மன வருத்தத்தோடு வெளியேறத் தயாரானார்கள். ஆனால் மணிகண்டன் என்கிற இளைஞரால் மட்டும் அங்கிருந்து நகரவே முடியவில்லை. '’என் பத்து வருஷ கனவுங்க இது" என்று முன்பு கதறினார் அல்லவா? அதே இளைஞர்தான். தன்னுடைய இரண்டாவது சான்ஸையும் கோட்டை விட்டு விட்டோமே என்கிற வருத்தமும் துயரமும் அவரது முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.

இந்த இடத்தில் விசே குறுக்கே வந்து ஓர் அற்புத காரியம் செய்தார். "நீதிபதிகளே... உங்களுடைய தேர்வில் மற்றவர்களை செலக்ட் செய்தீர்கள் அல்லவா? எனக்கு ஒரே ஒரு சாய்ஸ் கொடுங்கள். என்னுடைய தரப்பில் இருந்து ஒருவரை தேர்வு செய்ய விரும்புகிறேன்" என்று அறிவித்த விசே, மணிகண்டனை தேர்வாக்கி அவருக்கு இன்ப அதிர்ச்சி தந்தார். துயரம் ஆனந்தமாக மாறியதில் ஏற்பட்ட கண்ணீரை சந்தோஷத்துடன் துடைத்துக் கொண்டு தேர்வானவர்களின் வரிசையில் இணைந்தார் மணிகண்டன்.

குக்கு வித் கோமாளி
குக்கு வித் கோமாளி

"உணவின் தரம் மட்டுமே முக்கியமில்லை. ஒருவரின் உணர்வும் முக்கியம்" என்கிற நெகிழ்வான செய்தியைத்தான் விசேவின் இந்தச் செய்கை நமக்கு உணர்த்தியது. மிகவும் இறுக்கமாக இல்லாமல், மனித நேய அடிப்படையிலும் சில முடிவுகளை எடுத்தாக வேண்டும் என்கிற நெகிழ்ச்சி பார்வையாளர்களுக்கு நிச்சயம் ஏற்பட்டிருக்கும்.

ஆக.. முதல் கட்டத் தேர்வில் 14 நபர்கள் தேர்வாகி உள்ளார்கள். இவர்களுக்கு இடையேயான போட்டிகளும் பரபரப்புகளும் சுவாரசியங்களும் அடுத்த வார நிகழ்ச்சியில் இன்னமும் களை கட்டும் என்று எதிர்பார்க்கலாம். ஆரம்பக் கட்டத்திலேயே 'இப்படி கண்ணைக் கட்டும் போது’ இனி வரவிருக்கும் போட்டிகளின் விதிமுறைகள் மிக டெரராக இருக்கும் போலிருக்கிறது.

*************

மாஸ்டர் செஃப் தமிழ், அதன் ஆதார வடிவமைப்பிற்கு ஏற்ப மிக கச்சிதமாக பயணப்பட்டாலும் நிகழ்ச்சியிலுள்ள உள்ள இறுக்கம் சற்று தளரலாம் என்று தோன்றுகிறது. இதற்கான பொறுப்பை விசே அவ்வப்போது எடுத்துக் கொண்டாலும் ஏதோ எக்ஸாம் ஹாலில் அமர்ந்திருக்கும் பதற்றமே பார்வையாளர்களுக்கு ஏற்படுகிறது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் அளவுக்கு ஜனரஞ்சகத்தை இணைக்கத் தேவையில்லை என்றாலும் நிகழ்ச்சியில் சற்று ஜாலியாக பயணித்தால் நன்று.

மாஸ்டர் செஃப் தமிழ், குக் வித் கோமாளி ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளையும் பார்த்திருக்கும் நீங்கள் இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? கமென்ட் பாக்ஸில் உங்கள் 'சுவையான' கருத்துக்களை சமைத்துத் தள்ளுங்கள்.