Published:Updated:

முத்தமிட்ட விஜய் சேதுபதி, வறுத்தெடுத்த நடுவர்கள்! - `மாஸ்டர் செஃப்'-ல் நடந்து என்ன?

விஜய் சேதுபதி - மாஸ்டர் செஃப் தமிழ்

கடந்த ஞாயிற்றுக்கிழமை (22-08-2021) ஒளிபரப்பான மாஸ்டர் செஃப் தமிழ் 6-வது எபிசோடின் விமர்சனம் இங்கே!

Published:Updated:

முத்தமிட்ட விஜய் சேதுபதி, வறுத்தெடுத்த நடுவர்கள்! - `மாஸ்டர் செஃப்'-ல் நடந்து என்ன?

கடந்த ஞாயிற்றுக்கிழமை (22-08-2021) ஒளிபரப்பான மாஸ்டர் செஃப் தமிழ் 6-வது எபிசோடின் விமர்சனம் இங்கே!

விஜய் சேதுபதி - மாஸ்டர் செஃப் தமிழ்
இது வரை தனித்தனியாக போட்டியை எதிர்கொண்ட போட்டியாளர்கள் ஆறாவது எபிசோடில் அணியாக இணையப் போகிறார்கள். ஆம், Team Challenge-தான் நிகழ்ச்சியின் சிறப்பு அம்சம்.

குழுவாகச் செயல்படுவதில் எப்படி சில அனுகூலங்கள் இருக்கிறதோ, அப்படியே சில பாதகங்களும் உண்டு. குழுவின் தலைவர் தலைமைத்துவம் கொண்டவராகவும் தனது அணியை பொறுப்புடன் வழிநடத்திச் செல்பவராகவும் இருக்க வேண்டும். தனது அணி தோற்றால் மற்றவர்களுக்கான தோல்விக்கும் பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இதைப் போலவே அணித்தலைவரானவர் சுயமாக முடிவுகளை எடுக்க வேண்டும். அடுத்தவர் ஆலோசனையைக் கேட்டு அழிந்து விடக்கூடாது.

இந்த நோக்கில் சில சறுக்கல்களை இந்த டீம் சேலஞ்சில் பார்க்க முடிந்தது. அவை சமையல் பாடம் மட்டுமல்ல. நம் வாழ்க்கையிலும் பொருத்திப் பார்க்க வேண்டிய பாடங்கள்.

என்ன நடந்தது? வாருங்கள் விரிவாகப் பார்க்கலாம்.

ஒன்பது போட்டியாளர்கள், மூன்று நபர்கள் கொண்ட மூன்று அணிகளாகப் பிரிக்கப்பட்டு சிவப்பு, மஞ்சள், நீலம் என்று தனித்தனியான அடையாள நிறங்கள் வழங்கப்பட்டன. முதலில் அணி கேப்டனை நடுவர்கள் தேர்ந்தெடுத்தார்கள். கேப்டன் தனக்கு தோதானவர்களை தேர்ந்தெடுத்து அணியில் சேர்த்துக் கொள்ளலாம்.

மாஸ்டர் செஃப் தமிழ்
மாஸ்டர் செஃப் தமிழ்

சிவப்பு அணியின் கேப்டன் கிருதாஜ், கிருத்திகா மற்றும் தாராவை தனது அணியில் இணைத்தார். மஞ்சள் அணியின் கேப்டனான வின்னி, நவ்ஸீனையும் சசியம்மாளையும் சேர்த்துக் கொண்டார். நீல நிற அணியின் தலைவரான நித்யா, சுமித்ரா மற்றும் ஷாஜியாவை டீம் மேட்களாக இணைத்துக் கொண்டார்.

வின்னியின் அணியில் இணைந்தால் நன்றாக இருக்குமே என்கிற நவ்ஸீனின் எதிர்பார்ப்பு பூர்த்தி அடைந்தது. தாராவுக்கும் வின்னியின் அணியில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று உள்ளூற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் என்ன செய்ய? அவருக்கு கிருதாஜின் அணிதான் கிடைத்தது.

தனக்கு அவ்வளவு இணக்கமில்லாத அணியில் சேர வேண்டியிருந்தாலும் தன்னுடைய தனிப்பட்ட சிறப்பான பங்களிப்பை அங்கு தரவேண்டியதுதான் நேர்மறையான பண்பு.

நடுவர்கள் Treasure box-ஐ கொண்டு வந்தார்கள். அதிலிருக்கும் விஷயத்தை வைத்துதான் போட்டியாளர்கள் இன்று சமைக்க வேண்டும். ஒவ்வொன்றையும் மெலிதான சஸ்பென்ஸூடன் திறந்து காட்டினார் விஜய் சேதுபதி. இன்றைய தலைமுறையினருக்கு என்னவென்றே தெரியாத, கடந்த தலைமுறையினர் ஏறத்தாழ மறந்து போயிருந்த பாரம்பரியமான சமையல் உபகரணங்கள் அதில் இருந்தன.

அருவாமனை, ஆட்டுக்கல், சேவை நாழி என்கிற, சமையலுக்கு உதவும் மூன்று பாரம்பரியமான கருவிகள் அவை. இதில் சேவை நாழி என்கிற சமாச்சாரத்தை நான் இப்போதுதான் பார்க்கிறேன். ஆட்டுக்கல்லை பார்க்கும் போது சட்டென்று மினி சைஸ் சிவலிங்கம்தான் நினைவுக்கு வந்தது.

(சம்பந்தமில்லாமல் இங்கு ஒரு இடைச்செருகல்: அருணாச்சலம் திரைப்படத்தில் ‘அதாண்டா இதாண்டா’ பாடலில் காட்டப்படுவது சிவலிங்கம் அல்ல. அவசரத்துக்கு சமையல் அண்டாவிற்கு பெயின்ட் அடித்து சிவலிங்கமாக்கி விட்டார்கள். என்றாலும் அம்சமாக அமைந்து விட்டது).

கடந்த எபிசோடில் ‘Best Cocktailer’ விருதைப் பெற்ற ஆர்த்தியை அழைத்து, ‘எந்த அணிக்கு எந்த உபகரணத்தைத் தரலாம்?’ என்று முடிவு செய்து தரச் சொன்னார்கள்.

மாஸ்டர் செஃப் தமிழ்
மாஸ்டர் செஃப் தமிழ்

இதன்படி நீல அணிக்கு அருவாமனையும், மஞ்சள் அணிக்கு ஆட்டுக்கல்லும், சிவப்பு அணிக்கு சேவை நாழியும் கிடைத்தது. போட்டியாளர்கள் தயார் செய்யப்போகும் உணவில் இந்தக் கருவிகளை பிரதானமாக பயன்படுத்தியிருக்க வேண்டும் என்பது முக்கியமான விதிமுறை. காரமும் இனிப்பும் செய்ய வேண்டும். பொருட்களை வீணடிக்கக்கூடாது. அதற்கான நேரம் 60 நிமிடங்கள்.

சமையலுக்கான பொருட்களை எடுத்து வருவதற்கு ஐந்து நிமிடங்கள் தரப்பட்டது. இதில் கிருதாஜ் அணி மிக அவசியமான சில பொருட்களை எடுத்து வர முடியாததால் சற்று திகைத்தாலும் பிறகு ‘சமாளித்துக் கொள்ளலாம்’ என்று களத்தில் இறங்கினார்கள்.

சமையலில் ஆர்வமுள்ளவர்களுக்கு அவசியமாக தேவைப்படுகிற ஒரு முக்கியமான பண்பு இது. அவசரத்தில் சமைக்க நேரும் போது, தேவையான ஒரு பொருள் இல்லையென்றால் எதை வைத்து அதை சமன் செய்யலாம் என்கிற சமயோசித அறிவும் டைமிங்கும் நிச்சயம் வேண்டும்.

போட்டியாளர்கள் பரபரப்பாக இயங்கத் தொடங்கினார்கள். இதில் கிருதாஜ் அணியில் அவர் கேப்டனாக இருந்தாலும், கிருத்திகாதான் முன்னணியில் நின்று செயல்பட்டார். சமையல் மேடையின் அருகே வந்த நடுவர்கள் இந்த விஷயத்தை ஆட்சேபித்தார்கள். ‘’இல்லை சார். ஒரு டீமா சேர்ந்து வேலை செய்யலாம்னு’’ என்று கிருதாஜ் சமாளிக்க முயன்றார். ஆனால் நடுவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. ‘’உங்களைத்தானே கேப்டனா போட்டோம். நீங்கதானே உங்க டீமை லீட் பண்ணணும்?!” என்றார்கள்.

ஓர் அணிக்கு தலைமை தாங்குபவருக்கு தலைமைத்துவ பண்பு எத்தனை அவசியம் என்கிற செய்தி இதன் மூலம் புலப்பட்டது. இதைப் போலவே, ஒருவர் எத்தனை திறமைசாலியாக இருந்தாலும், அணித் தலைவரின் உத்தரவை ஏற்றுக் கொள்ளும் அடக்கமும் பணிவும் அவசியமான விஷயம்.

இதைப் போலவே கிருதாஜ் அணிக்கு இன்னொரு சோதனையும் ஏற்பட்டது. அவர் நூடுல்ஸுக்கான மாவை தயார் செய்து கொண்டிருந்தபோது, பால்கனியில் நின்று கொண்டிருந்த ஆர்த்தி, ‘’இன்னும் கொஞ்சம் மாவு போடுங்க’’ என்று சொல்ல, அவசரத்தில் அதை அப்படியே கண்மூடித்தனமாக பின்பற்றினார் கிருதாஜ்.

நடுவர்கள் உணவு பரிசோதனை செய்த போது இந்த விஷயம் கிருதாஜிற்கு எதிராக அமைந்து விட்டது. இடியாப்ப மாவை தயார் செய்யும் டெக்னிக்கை விளக்கிய செஃப் கெளஷிக், உணவில் இருந்த பிழையைச் சுட்டிக் காட்டி “என்னம்மா ஆர்த்தி... அவங்களை வெச்சு செஞ்சிட்டிங்க போல’ என்று சீரியஸ் முகத்துடன் கிண்டலடிக்க ‘அய்யோ அப்படில்லாம் இல்லை சார்’ என்று பதறினார் ஆர்த்தி.

“உலகம் ஆயிரம் ஆலோசனை சொல்லும். நம்ம நல்லதுக்குத்தான் சொல்லியிருப்பாங்க. என்றாலும் முடிவை நாமதான் எடுக்கணும்” என்று அப்போது விஜய் சேதுபதி சொன்னது திருவாக்கியம்.

தலைமைத்துவ பண்பு இல்லாதது, அடுத்தவர் பேச்சைக் கேட்டது போன்ற விஷயங்கள் கிருதாஜுக்கு எதிராக அமைந்து விட்டன. இதில் நமக்கான பாடமும் உள்ளது.

மாஸ்டர் செஃப் தமிழ்
மாஸ்டர் செஃப் தமிழ்

பரபரப்பான இந்த போட்டி முடிந்து முதலில் மஞ்சள் அணி தங்களின் உணவை பரிசோதனை மேடையின் மீது கொண்டு வந்தது. ‘இடிச்ச மசாலா கிரில்ஸ்’ என்பது அதன் திருப்பெயர். ஆட்டுக்கல்லை சிறப்பாகவும் அனுபவத்துடனும் பயன்படுத்திய சசியம்மாளை நடுவர்கள் பாராட்ட, ஆட்டுக்கல் டான்ஸ் ஆடி தனது மகிழ்ச்சியை அவர் வெளிப்படுத்தினார்.

மஞ்சள் அணியின் கேப்டனான வின்னிக்கு, கறார் நடுவர் கெளஷிக் பாசிட்டிவ் கமென்ட்டுகளை வழங்க, ஜன்னி வந்தது போல் உச்சி குளிர்ந்து போனார் வின்னி. வசிஷ்டர் வாயால் ஆசீர்வாதம். ஆனால் சில பிழைகளைச் சுட்டிக் காட்டி அந்த மகிழ்ச்சியில் வெந்நீர் ஊற்றினார் செஃப் ஆர்த்தி. இப்படி கலவையான எதிர்வினைகள் வந்தாலும் தங்கள் அணியின் செயல்பாடு பாராட்டப்பட்டதில் வின்னி ஹாப்பி அண்ணாச்சி..

அடுத்ததாக சிவப்பு அணி. இவர்கள் செய்து வந்தது ‘கருவேப்பிலை நூடுல்ஸ்’. முன்னரே விவரித்திருந்தபடி, அணித்தலைவர் கிருதாஜ் செய்த பிழைகளைச் சுட்டிக் காட்டிய நடுவர்கள் அவரை வறுத்து எடுத்தார்கள்.

‘லஸ்கா டிக்கா வித் பிரான்ஸ்’ – இதுதான் நீல நிற அணி செய்திருந்த டிஷ்ஷின் பெயர். “தோனி மாதிரி காமா.. கூலா.. இருந்து டீமை லீட் பண்ணீங்க” என்று நித்யாவை மனந்திறந்து செஃப் ஹரீஷ் பாராட்ட ‘வேர்ல்ட் கப்’ ஜெயித்த மகிழ்ச்சியை அவர் வெளிப்படுத்தினார். ‘அருவாமனையை வெச்சு இவங்க நூடுல்ஸை அப்படி ஈஸியா கட் பண்றாங்க. பார்த்து மிரண்டுட்டேன்” என்று ஹரீஷ் பரவசப்பட, அதை இதர நடுவர்களும் மகிழ்ச்சியுடன் வழிமொழிந்தார்கள்.

நீல நிற அணி செய்திருந்த உணவு வகைதான், இந்த சீசனின் பெஸ்ட் என்று செஃப்கள் பாராட்ட, மகிழ்ச்சியில் திக்குமுக்காடினார் நித்யா.

மாஸ்டர் செஃப் தமிழ்
மாஸ்டர் செஃப் தமிழ்

ஆக களத்தில் இறங்கிய மூன்று அணிகளில் நீல அணியின் வெற்றியின் உத்தரவாதத்தை அப்போதே கணிக்க முடிந்தது. பிறகு அது உண்மையும் ஆயிற்று. அடுத்ததாக ‘எந்த அணி வெற்றி பெறும்?’ என்பதில் சின்ன சஸ்பென்ஸ் இருந்தாலும் சந்தேகமில்லாமல் வின்னியின் ‘மஞ்சள்’தான் வெற்றி பெறும் என்று தோன்றியது. அதுவும் உண்மையாயிற்று.

மீதமிருக்கும் சிவப்பு அணியின் கேப்டன் கிருதாஜ் மீது ஏற்கெனவே குறைகள் சொல்லப்பட்டதால் அவர் சங்கடத்துடன் நின்று கொண்டிருந்தார். கேப்டனை மீறி ‘முந்திரிக்கொட்டை’யாக செயல்பட்டு விட்டோமோ என்கிற குற்றவுணர்வுடன் தலையைக் குனிந்து கொண்டிருந்தார் கிருத்திகா.

ஆக... இந்த வார நிகழ்ச்சியில் பின்னடைவை சந்தித்தது சிவப்பு அணி. இப்போது சிவப்பு அணி கலைக்கப்பட்டு அதிலுள்ள மூன்று நபர்களுக்கு இடையே போட்டி நடைபெறும். இதில் இருவர் பால்கனிக்குச் செல்ல, ஒருவர் மட்டும் எலிமினேட் ஆகி வீட்டுக்குச் செல்வார்.

இந்த மூவரும் தயார் செய்ய வேண்டிய உணவு வகையை ஹரீஷ் ராவ் அறிவித்தார். அது திருநெல்வேலியின் ஸ்பெஷல் டிஷ்களுள் ஒன்றான ‘தக்கடி’. இந்த உணவை தோராயமாக வர்ணித்தால் அரிசி கொழுக்கட்டையை மட்டன் கிரேவியில் போட்டு விடுவார்கள் போலிருக்கிறது. திருநெல்வேலியில் ஒரு பாட்டி தயார் செய்து ஹரீஷுக்கு கொடுத்தார்களாம். இது பிரேக் ஃபாஸ்ட் உணவாம். கூட தந்திருந்த பருப்புத் துவையல் அத்தனை டேஸ்ட்டாக இருந்ததாம்.

‘’நான் தந்திருக்கும் உணவு வகையின் தோற்றம் மற்றும் சிந்தனையை உங்களின் பொறுப்புக்கு விட்டு விடுகிறேன். ஆனால் சுவை… நான் தந்திருக்கும் சாம்பிளின் படி நிச்சயம் வந்திருக்க வேண்டும்’’ என்று போட்டியாளர்களுக்கான விதிமுறையை கறாராக அறிவித்தார் ஹரீஷ். இதற்கு தரப்பட்டிருந்த நேரம் 60 நிமிடங்கள்.

மாஸ்டர் செஃப் தமிழ்
மாஸ்டர் செஃப் தமிழ்

எப்படியாவது பால்கனிக்குச் சென்று இதர போட்டியாளர்களுடன் இணைய வேண்டும் என்கிற வெறியுடன் மூவரும் களத்தில் இறங்கினார்கள். உணவு தயார் ஆனதும் தனியறையில் அமர்ந்திருந்த நடுவர்களின் மேஜையில் சென்று இவர்கள் சமர்ப்பணம் செய்ய ‘சாப்பிட்டுட்டு லெட்டர் போடறேன். போயிட்டு வாங்க’ என்று செஃப்கள் வழியனுப்பி வைத்தார்கள்.

இதில் கிருதாஜ் செய்திருந்த ‘தக்கடி டம்பிளிங்ஸ்’ நடுவர்களைக் கவர்ந்து விட்டது. அணியாகச் செயல்பட்ட போது ஏகப்பட்ட சொதப்பல்களைச் செய்த கிருதாஜ், ‘என் வழி. தனி வழி’யில் கலக்கி நடுவர்களின் பாசிட்டிவான கமென்ட்டுகளை வாங்கி விட்டார்.

தான் தயார் செய்யும் உணவுகளுக்கு எப்போதும் விநோதமான பெயர்களைச் சூட்டுவது தாராவின் வழக்கம். ஆனால் இந்த முறை எலிமினேஷன் தடுமாற்றத்தில் இருந்தாரோ என்னவோ, ‘கோலா தக்கடி’ என்று சிம்பிளாக பெயர் வைத்து விட்டார். இவரது டிஷ் அத்தனை வரவேற்பைப் பெறவில்லை என்பது செஃப்களின் முகபாவங்களில் இருந்தே தெரிந்து விட்டது.

‘அணித்தலைவரை மீறி செயல்பட்டார்’ என்கிற அவப்பெயரை சுமந்திருந்த கிருத்திகா, சங்கடத்துடன் தன்னுடைய டிஷ்ஷை கொண்டு வந்தார். ‘தக்கடி பீட்ஸா’ என்பது அதன் பெயர். ‘தென்னிந்திய உணவு வகையை இத்தாலிய வடிவத்தில் கற்பனை செய்த கிருத்திகாவின் சிந்தனையை’ செஃப் ஆர்த்தி மனமார பாராட்டினார்.

தனியறையில் நடுவர்களின் உரையாடலைக் கவனித்த போதே தெரிந்து விட்டது. கிருதாஜூம், கிருத்திகாவும் ‘தக்கடி’ டெஸ்ட்டில் பாஸாகி விட்டார்கள். ஆனால் தாரா இன்று எலிமினேட் ஆக வேண்டியிருந்தது. இதை அவர் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டார். ‘’வாங்க... என்னை ஹக் பண்ணுங்க’’ என்று விரும்பிக் கேட்டுக் கொண்டு தாராவை அரவணைத்து, கைகளில் முத்தமிட்டு நெகிழ்ச்சியுடன் வழியனுப்பினார் விஜய் சேதுபதி.

அந்த செட்டில் ஆணி அடிப்பவர் வீட்டுக்கு கிளம்பினால் கூட பிரிவுத் துயரம் தாங்காமல் ஷாஜியா கண்கலங்கி விடுவார் போலிருக்கிறது. அப்படி ஒவ்வொரு வாரமும் அழுது விடுகிறார். அத்தனை இளகிய மனது போல. இன்று புன்னகையுடன் தாரா கிளம்பிய போது இவரால் அழாமல் இருக்க முடியவில்லை.

மஞ்சள், நீலம், சிவப்பு அணிகளில் யார் யாரைச் சேர்க்கலாம் என்கிற ஆலோசனை நடந்து கொண்டிருந்த போது, சிவப்பு அணியைத் தவிர்க்க விரும்பினார் தாரா. காரணம், அது டேஞ்சரான கலராம். இது மூடநம்பிக்கைதான் என்றாலும் அவரது சென்டிமென்ட் பிறகு பலித்தது, துரதிர்ஷ்டமானதொன்று.

ஆக... அடுத்த வாரத்தில் மீதமுள்ள 12 போட்டியாளர்கள் மோதப் போகிறார்கள். புதிய உணவு வகைகள். புதிய கறாரான விதிமுறைகள் என்று அடுத்த வாரமும் களை கட்டப் போகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.