Published:Updated:

மாஸ்டர் செஃப் : ஜானுவை பார்த்த ராம் மோடில் விஜய் சேதுபதி… கறார் காட்டும் நடுவர்கள்!

விஜய் சேதுபதி

கடந்த சனிக்கிழமை (14-08-2021) ஒளிபரப்பான மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியின் மூன்றாவது எபிசோட் எப்படியிருந்தது?!

Published:Updated:

மாஸ்டர் செஃப் : ஜானுவை பார்த்த ராம் மோடில் விஜய் சேதுபதி… கறார் காட்டும் நடுவர்கள்!

கடந்த சனிக்கிழமை (14-08-2021) ஒளிபரப்பான மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியின் மூன்றாவது எபிசோட் எப்படியிருந்தது?!

விஜய் சேதுபதி

மாஸ்டர் செஃப் தமிழ் நிகழ்ச்சியில் நீதிபதிகள், போட்டியாளர்கள் என்று எவரும் பெரிய பிரபலங்கள் அல்ல. எவர் முகமும் நமக்கு பரிச்சயமும் அல்ல. எனவே ‘பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும்’ என்கிற தத்துவத்தின் படி சில பல எபிசோடுகளைக் கடந்தால்தான் இந்த நிகழ்ச்சியுடன் நம்மால் எமோஷனலாக கனெக்ட் ஆக முடியும் என்று தோன்றுகிறது.

இந்த நிகழ்ச்சியில் நமக்கு மிக பரிச்சயமான முகம் என்றால் அது விஜய்சேதுபதி மட்டும்தான். அவரால் மட்டும்தான் இந்த தொடக்ககட்ட தயக்கத்தை தனது சுவாரசியமான பேச்சால் உடைக்க முடியும். ஆனால் அவரும் கூட ஜானுவைப் பார்த்த ராம் மாதிரி பம்மிப் பதுங்கித்தான் நடமாடுகிறார். மட்டுமல்லாமல், ‘’நீங்க பேசிட்டு இருங்க.. இதோ வந்துடுறேன்’’ என்று அவ்வப்போது கிளம்பி காணாமல் வேறு போய் விடுகிறார்.

சரி, நீதிபதிகளாவது சற்று ஜோவியலாக இருப்பார்களா என்று பார்த்தால், ரகுவரனையும் பிரகாஷ்ராஜையும் பிசைந்து வைத்தது மாதிரி கண்டிப்பான முகத்துடன் மிரட்டுகிறார் செஃப் கெளஷிக். ‘’டேய் கபாலி’’ என்கிற நம்பியார் குரலில் இவர் போட்டியாளர்களை அழைக்கும் போது நமக்கே அடிவயிற்றைப் பிசைகிறது. ஆனால், நல்ல உணவைப் பார்த்து விட்டால் மனிதரின் கண்களில் பிரியமும் பட்டாம்பூச்சியும் பறக்கிறது. கறாராக இருந்தாலும் திறமையைக் கண்டால் பாராட்ட இவர் தயங்குவதில்லை.

இதர நீதிபதிகளான ஆர்த்தி சம்பத்தும் ஹரீஷ் ராவும் தங்களின் விமர்சனங்களை இதமான குரலில் சொல்கிறார்கள். மாஸ்டர் செஃபின் மூன்றாவது எபிசோடில் ‘பிளாக் ஜாமூன் சிக்கன்’ என்கிற உணவைச் சிறப்பாக தயார் செய்திருந்த நவ்ஸீனை ‘’இங்க வாங்க... பின்னிட்டிங்க’’ என்று அழைத்து கைகொடுத்து ஹரீஷ் பாராட்டியது கண்கொள்ளாக் காட்சி. முகத்தில் பெரிதாக உணர்ச்சியே வராத நவ்ஸீன் உற்சாகத்தின் எல்லைக்கே சென்று விட்டார்.

விஜய் சேதுபதி மாஸ்டர் செஃப்
விஜய் சேதுபதி மாஸ்டர் செஃப்

மாஸ்டர் செஃபின் மூன்றாவது எபிசோட் சனிக்கிழமை ஒளிபரப்பானது. கடந்த வாரம் நடந்த தகுதிச் சுற்றில் 12 நபர்கள் முதலில் தேர்வானார்கள். இரண்டாவது சான்ஸ் கிடைத்த போது சுனிதா தேர்வானார். விஜய் சேதுபதியின் பரிந்துரையின் பேரில் மணிகண்டன் தகுதிக்கு உள்ளானார். ஆக மொத்தம் 14 போட்டியாளர்கள் இன்று களத்தில் இறங்கினார்கள்.

இந்தப் போட்டியில் வெல்லப் போகும் போட்டியாளர்கள் பெறப் போகும் பரிசுகள் காட்டப்பட்டன. மாஸ்டர் செஃப் என்கிற பட்டத்தோடு செஃப் அணியும் வெள்ளை கோட்டும், டிராஃபியும் காட்டப்பட்டன. இது தவிர பரிசுத் தொகை 25 லட்சமாம்.

ஒரு செஃப் ஆவது என்பது அத்தனை எளிதல்ல. தாங்கள் கடந்து வந்த பாதையின் கடினத்தை நீதிபதிகள் சுருக்கமாகச் சொன்னது நெகிழ்ச்சி. ஹரீஷ் ராவ் தங்கப் பதக்கம் வென்றவராம். ஆர்த்தி பெற்ற முதல் பரிசுத் தொகை 800 ரூபாயாம். “நீயெல்லாம் எங்க ஜெயிக்கப் போற” என்ற குருவின் ஆசிர்வாதத்தோடு ஒரு போட்டியில் வென்றவராம் கெளஷிக்.

மாஸ்டர் செஃப் நடுவர் கெளஷிக்
மாஸ்டர் செஃப் நடுவர் கெளஷிக்

‘’சென்ற வாரம் நடந்தது தகுதிச் சுற்றுதான். இதில் உங்களுக்குப் பிடித்த, சமைப்பதற்கு செளகரியமான உணவை தயார் செய்யலாம் என்று சுலபமான விதிமுறை வைக்கப்பட்டது. ஆனால் இந்த வாரம்தான் அசலான போட்டி தொடங்கப்போகிறது. எனவே போட்டி கடுமையா இருக்கும்’’ என்று தொடக்கத்திலேயே எச்சரித்தார் கெளஷிக். (இவர் சாதாரணமா பேசினாலே எச்சரிக்கை மாதிரிதான் நமக்கு கேட்குது!).

‘மிஸ்டரி பாக்ஸ் சேலஞ்ச்’ என்கிற முதல் போட்டி ஆரம்பித்தது. மூடப்பட்டிருக்கும் பெட்டியில் என்னென்ன சமையல் பொருட்கள் இருக்குமோ… அவை நமக்கு சாதகமாக இருக்குமா, இருக்காதா என்றெல்லாம் போட்டியாளர்களின் ஒவ்வொருவர் கண்களிலும் ஆர்வமும் பயமும் பதற்றமும் தெரிந்தன.

சிக்கன், நாவல்பழம், பஜ்ஜி மிளகாய், நார்த்தங்காய், திணை, பனைவெல்லம், மாப்பிள்ளை சம்பா அரிசி, பூசிக்காய் என்று ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாத எட்டு பொருட்கள் மர்ம பெட்டிக்குள் இருந்தன. இவற்றில் நான்கை பிரதானமாக உபயோகித்து ‘தமிழ் சுவையில்’ சமைக்க வேண்டும் என்பதுதான் போட்டியின் விதிமுறை. அது இனிப்பாக, காரமாக எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். இதற்காக 60 நிமிடங்கள் தரப்பட்டன.

‘’சமைக்கவிருக்கும் 14 போட்டியாளர்களில் இருவர் மட்டுமே தேர்வு பெற்று பால்கனிக்குச் செல்ல முடியும்’’ என்கிற அறிவிப்பை முதலிலேயே தந்து போட்டியாளர்களின் வயிற்றில் புளியைக் கரைத்தார்கள்.

“கடந்த வாரம் செஞ்ச மாதிரி ரத்த சரித்திரம் எதையும் படைக்கக்கூடாது. அதாவது அவரசத்தில் விரலை வெட்டி வெண்டைக்காயாக பயன்படுத்தக்கூடாது. காயத்தால் ரத்தம் பட்ட உணவை நாங்கள் சுவைக்க மாட்டோம்” என்று கறாராக அறிவித்தார் கெளஷிக். போட்டியாளர்கள் பதற்றத்தில் காயத்தை ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது என்கிற கரிசனம்தான் காரணமாக இருந்திருக்க வேண்டும். மட்டுமல்லாமல் பொதுவாகவே சமையல் துறையில் இது ஆதாரமான விதியாம்.

‘ஒன்... டூ... த்ரீ’ சொன்னவுடன் போட்டியாளர்கள் பரபரப்பாக இயங்கத் தொடங்கினார்கள். கடந்த வாரத்தில் ‘கும்மாயம்’ என்கிற செட்டி நாட்டு உணவு வகையைச் செய்து நீதிபதிகளைக் கவர்ந்த சசியம்மாள், சமைக்கத் தொடங்கிய ஆரம்ப நிமிடத்தில் அடுப்பின் மீது கோலம் போட்டு வணங்கிய போது ‘அய்யோ... நேரம் போகுதேம்மா’ என்று நமக்குத்தான் பதற்றமாக இருந்தது. ஆனால் ‘மாப்பிள்ளை விருந்து’ என்கிற உணவு வகையைச் செய்து பிறகு செஃப்களைக் கவர்ந்து விட்டார். என்றாலும் டாப் 4-ல் மட்டுமே வந்து இவரால் திருப்தியடைய முடிந்தது.

மாஸ்டர் செஃப்
மாஸ்டர் செஃப்

ஷஷி ஆனந்த் ஶ்ரீதரன் ஒரு பல்கலைக்கழகத்தில் துணைத்தலைவராக பணிபுரிகிறவர். வெளிநாட்டில் தங்கிப் படிக்கும் போது வேறு வழியில்லாமல் சுயமாக சமையலைக் கற்றுக் கொள்ளத்தொடங்கி பிறகு அதில் மிகுந்த ஆர்வம் கொண்டு விட்டார். இவர் ‘பம்கின் ரிஸோஸிட்டா’ என்கிற வாயில் நுழையாத பெயரைக் கொண்ட உணவை தயார் செய்து பரிசோதனை மேடையின் மீது ஆர்வத்துடன் வைத்தார். ஆனால் பாவம், செஃப் கெளஷிக்கின் கண்டிப்பான எதிர்வினையை இவர் சந்திக்க வேண்டியிருந்தது.

“நீங்க இதைச் சாப்பிட்டுப் பார்த்தீங்களா?” என்று கரகர தகரக்குரலில் அர்ஜூன்தாஸ் போல செஃப் கெளஷிக் கறாராகக் கேட்க, பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவரான ஷஷி ஆனந்த், பிட் அடித்து மாட்டிக் கொண்ட பின்பென்ச் மாணவனைப் போல ‘சாப்பிட்டேன்... ஆனா!” என்று குழப்பமாகச் சொல்லி மாட்டிக் கொண்டார். உணவில் உப்பு மிகக் குறைவு என்பதை ஷஷியின் வாயாலேயே சொல்ல வைத்து விட்டார் கெளஷிக்.

விஜய்சேதுபதியால் காப்பாற்றப்பட்ட போட்டியாளரான மணிகண்டன் ‘எடி ஹார்ட்டி பார்ட்டி பிளேட்’ என்கிற உணவை தயார் செய்து அதற்கு ‘’எட்டும் எட்டும் கூட்டினா பதினாறு... எதிர்க்க கதவு பார்த்தீங்களா பதினாறு’’ என்று ஜாங்கிரி விளக்கம் தந்தாலும் அவரால் நீதிபதிகளைக் கவர முடியவில்லை. “தனித்தனியா சாப்பிட்டா நல்லாருக்கு. ஆனா மொத்தமா சாப்பிட்டா நல்லால்லை’’ என்கிற காரணம் சொல்லப்பட்டதும் ‘புஸ்’ என்று ஆர்வமிழந்தார் மணிகண்டன்.

மாஸ்டர் செஃப்
மாஸ்டர் செஃப்

இரண்டாம் சான்ஸில் அதிர்ஷ்டகரமாக உள்ளே வந்த ‘செல்வ சுனிதா’ செய்திருந்த உணவு வகை ‘பம்கின் நூடுல்ஸ் கிரில்டு சிக்கன்’. ‘லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன்’ என்கிற மாதிரி இவர் செய்திருந்த உணவு, நீதிபதிகளைக் கவர்ந்தது மட்டுமின்றி, இரண்டு பேர்கள் மட்டுமே தகுதி பெறக்கூடிய இந்தச் சுற்றில் முதலில் தேர்வாகி ஆச்சரியமூட்டினார் செல்வ சுனிதா.

கடந்த வாரத்தில் கத்தியால் காயம் ஏற்படுத்திக் கொண்ட ‘கட்டிங் மாஸ்டரான’ ஆர்த்தி ‘ஃபுட்டிங் இந்தியா’ என்று ஏதோ சுற்றுலாத் தளத்திற்கான பெயரைப் போல் தன் உணவிற்கு பெயரைச் சூட்டினார். ‘தோற்றம் சிறப்பு’ என்று கறார் நீதிபதி கெளஷிக் முதலில் பாராட்டினாலும் ‘’எல்லாமே இனிப்பா இருக்கு” என்று ஆர்த்தியின் ஆர்வத்தில் பிறகு தண்ணீரைக் கொட்டி அணைத்தார் செஃப் ஆர்த்தி.

''தேவகி” என்று ஹெட்மாஸ்டர் குரலில் செஃப் கெளஷிக் அழைத்ததும், தாமதமாக வகுப்புக்குள் நுழையும் மாணவனைப் போல முகத்தை பயத்துடனும் அப்பாவித்தனமாகவும் வைத்துக் கொண்டு வந்தார் தேவகி. எப்போதுமே இவரின் முகபாவம் இப்படித்தான் இருக்கிறது.

‘பிர்னி கோஸ் ஃபாரின்’ என்று இவர் செய்திருந்த உணவைச் சாப்பிட்ட கெளஷிக், ‘’சின்ன வயசுல ஓவல்டின் சாப்பிட்டிருக்கீங்களா?” என்று எல்லோரையும் பூடகமாகக் கேட்க இன்னமும் அப்பாவித்தனமாக விழித்தார் தேவகி. “நான் எந்த கமென்ட்டும் சொல்லப் போறதில்லை. நீங்க சாப்பிட்டு சொல்லுங்க” என்று பந்தை சக செஃப்பான ஆர்த்தியிடம் கெளஷிக் தள்ளி விட தேவகியின் முகத்தில் மேலும் பீதி பரவ ஆரம்பித்தது.

“என்னை அப்படியே சின்ன வயசுக்கு கூட்டிட்டு போயிட்டீங்க. சின்ன வயசுல மில்க் பவுடரை அப்படியே சாப்பிட்டிருக்கேன். அப்படியொரு சுவையை இதில் கொண்டு வந்திருக்கீங்க. வட இந்திய உணவு வகையை தமிழ் உணவுப் பொருட்களை வைத்துக் கொண்டு வந்தது சிறப்பு” என்று நாஸ்டால்ஜியா மொமன்ட்டில் மிதந்தபடியே பரவசத்தில் ஆர்த்தி சொல்லும் போது தேவகியின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பின் வெளிச்சம் வந்தது. “ஏய்... இந்த பூனையும் பால் குடிக்குமா’ மாதிரி இருந்துட்டு ஜட்ஜஸ் கிட்ட நல்ல பேர் வாங்கிட்டல” என்று சக போட்டியாளர்கள் தேவகியை மெலிதாக கிண்டலடித்தார்கள்.

“பேரு வெச்சியே… சோறு வெச்சியா” என்கிற நாகேஷின் காமெடி மாதிரி தாரா ரைன் என்கிற போட்டியாளர் தான் தயாரிக்கும் உணவு வகைகளுக்கு பெயர் வைப்பதே அத்தனை சுவாரசியமாக இருக்கிறது. கடந்த வாரத்தில் ‘கோழி மர்மம்’ என்று பெயர் சூட்டிய தாரா, இந்த வாரத்திலோ ‘அலைமோதிய கோழி காரம்’ என்று பின்நவீனத்துவ நாவலின் தலைப்பு மாதிரி ரகளையான பெயரைச் சூட்டியிருந்தார். ஆனால் அதைச் சாப்பிட்ட நீதிபதிகளோ ‘அய்யோ யம்மா.... செம காரம்’ என்று தண்ணீருக்காக அலைமோத வேண்டியிருந்தது.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

‘நம்ம ஊரு சூஷி’ என்கிற உணவைத் தயார் செய்திருந்த கிருதாஜ், நீதிபதிகளிடமிருந்து பாசிட்டிவ் கமென்ட்டுகளை வாங்கினாலும் “பஜ்ஜி மிளகாய் தோல் வாயில வருது” என்கிற கமென்ட்டினால் முகம் மாறினார்.

மீதமிருந்த போட்டியாளர்களுக்கு ஒரு மாதிரியாக கலவையான கமென்ட்டுகளே வந்தன. 14 போட்டியாளர்களும் செய்த உணவுகளை பலி பீடத்தில் வைத்து ‘பரிசோதனை’ சடங்கை வெற்றிகரமாக முடித்தவுடன் தேர்வான இரண்டு வெற்றியாளர்களை அறிவிக்கும் சமயம் வந்தது. இந்தச் சமயத்தில் நிகழ்ச்சிக்குள் வந்து இணைந்த விசே, நீதிபதிகளுடன் கலந்துரையாடிய பிறகு அந்த இரண்டு திறமைசாலிகளை அறிவித்தார்.

சுனிதா மற்றும் தேவகி ஆகிய இருவர்தான் அந்த வெற்றியாளர்கள். இருவரும் பெருமிதத்துடன் பால்கனிக்கு சென்றார்கள். மீதமிருக்கும் பன்னிரெண்டு போட்டியாளர்களுக்குள் அடுத்த சுற்று போட்டி நடைபெறும். இதில் சரியாகச் செயல்படாத மூன்று நபர்களுக்கு கறுப்பு நிற ஏப்ரன் வழங்கப்படும். இதுவொரு எச்சரிக்கை மணி. இறுதியில் இந்த மூன்று பேரில் ஒருவர் எலிமினேட் செய்யப்படுவார்.

“விஜய்... இதுவரை நாங்கதான் போட்டிகளை உருவாக்கி சொல்லிட்டு இருந்தோம். ஒரு மாற்றத்திற்கு நீங்க சொல்லுங்களேன்” என்று செஃப் ஆர்த்தி கேட்க ‘’ஹே ஹே... எனக்கு சாப்பிடத்தான் தெரியும்’ என்ற விசே, “சரி.. என் டீம் கிட்ட கலந்து பேசிட்டு அஞ்சு நிமிஷத்துல வர்றேன். ஆனா போட்டியாளர்களை அதிகம் கஷ்டப்படுத்த மாட்டேன்” என்று மீண்டும் கிளம்பி விட்டார்.

விசே சொன்னது என்ன, போட்டியாளர்கள் சமைத்தது என்ன? ஞாயிற்றுக்கிழமை (15-08-2021) ஒளிபரப்பான எபிசோடின் விறுவிறு விமர்சனம் விரைவில்!