Published:Updated:

அந்த வெண்ணெய்தான் ஹீரோ… கூச்சமே படாத விஜய் சேதுபதியும், 8 ஆக குறைந்த மாஸ்டர் செஃப் போட்டியாளர்களும்!

மாஸ்டர் செஃப் - விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் மாஸ்டர் செஃப் தமிழ் நிகழ்ச்சியில் கடந்த ஞாயிறன்று (26-09-2021) ஒளிபரப்பான 16-வது எபிசோடின் விமர்சனம் இங்கே!

Published:Updated:

அந்த வெண்ணெய்தான் ஹீரோ… கூச்சமே படாத விஜய் சேதுபதியும், 8 ஆக குறைந்த மாஸ்டர் செஃப் போட்டியாளர்களும்!

நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் மாஸ்டர் செஃப் தமிழ் நிகழ்ச்சியில் கடந்த ஞாயிறன்று (26-09-2021) ஒளிபரப்பான 16-வது எபிசோடின் விமர்சனம் இங்கே!

மாஸ்டர் செஃப் - விஜய் சேதுபதி
"வாங்க... வெண்ணெய்களா..."

பொறுங்கள்... அவசரப்படாதீர்கள்! இது ஞாயிறு எபிசோடின் சவாலுக்கு விஜய் சேதுபதி சூட்டிய செல்லமான பெயர். மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் ஒரு சராசரி நபர் அறியாத பலவிதமான சமையல் பொருள்கள் மற்றும் உணவுகளின் பெயர்கள் சொல்லப்படுகின்றன. அவற்றில் சிக்கலான உச்சரிப்புகளைக் கொண்ட பெயர்கள் நம் வாயிலேயே நுழையாது போலிருக்கிறது. (பெயர்கள் மட்டும்தான்! உணவுகள் என்றால் நன்றாகவே நுழையும்!).

'இதைப் பற்றியெல்லாம் தெரியவில்லை என்று சொன்னால் நம்மை குறைவாக எடை போட்டு விடுவார்களோ' என்றெல்லாம் விஜய் சேதுபதி தயங்குவதில்லை. "அது என்னது?" என்று செஃப்களிடமும் போட்டியாளர்களிடமும் கூச்சமின்றி கேட்டுத் தெரிந்து கொள்கிறார். அதைப் போலவே சில சவால்களுக்கு ஸ்டைலாக ஆங்கிலத்தில் பெயர் சூட்டப்படும்போது அதை 'லோக்கல்' தலைப்பில் மொழிபெயர்த்து சுவாரஸ்யம் கூட்டுகிறார். இது போன்ற சமயங்களில் 'இவர் நம்மாளுய்யா' என்கிற நெருக்கமும் பிரியமும் விசேவின் மீது உண்டாகிறது.

கடந்த எபிசோடில் நடந்த போட்டியில் மணிகண்டனின் தலைமையிலான அணி வெற்றி பெற்றதைப் பார்த்தோம். எனவே தோற்ற இதர இரண்டு அணிகளில் உள்ள ஆறு நபர்களும் தனித்தனியாக இன்றைய சவாலை எதிர்கொண்டாக வேண்டும்.
மாஸ்டர் செஃப் - விஜய் சேதுபதி
மாஸ்டர் செஃப் - விஜய் சேதுபதி

"றெக்கைக் கட்டி பறக்குதய்யா... அண்ணாமலை சைக்கிள்' என்பதுபோல் சைக்கிளில் பால் கேனுடன் ஜாலியாக அரங்கத்தின் உள்ளே உலா வந்தார் விஜய் சேதுபதி. ஆனால், சைக்கிளின் முன்னால் எந்த குஷ்புவும் அமரவில்லை. இப்படியெல்லாம் இயல்பாக இருப்பதற்கு அவர் தயங்குவது இல்லை.

ஆக இன்றைய போட்டி பால் தொடர்பானது என்று முதலிலேயே புரிந்துவிட்டது. "பால் ஊத்தும் போது கொசுறு கேப்பாங்க... தெரியுமா?" என்றார் விசே. இந்த 'கொசுறு' என்கிற சமாச்சாரம் என்னவென்று இன்றைய 'ஆன்லைன் ஷாப்பிங்' தலைமுறையினருக்கு தெரியுமா என்று தெரியவில்லை. அந்தக் கொசுறுதான் 'ஆஃபர்களாக' மாறியிருக்கிறது போல.

ஒரு சிறிய சஸ்பென்ஸூக்குப் பிறகு இன்றைய சவால் எதை மையமாகக் கொண்டது என்பதை நீதிபதிகள் அறிவித்தார்கள். 'வெண்ணெய்'தான் இன்றைய போட்டியின் ஹீரோ. இன்று சமைக்கவிருக்கும் உணவு இதனை மையமாகக் கொண்டிருக்க வேண்டும். இந்தப் போட்டியில் டாப் 3-ல் வருபவர்கள் பால்கனிக்குச் செல்வார்கள். மீதமுள்ள 3 நபர்கள் எலிமினேஷன் சவாலை எதிர்கொள்ள வேண்டும்.

சமைப்பதற்கு 30 நிமிடங்கள் தரப்படும். Pantry-ல் சென்று பொருள்களை எடுக்க ஒரேயொரு நிமிடம் மட்டுமே தரப்பட்டது. போட்டியாளர்கள் பரபரப்பாக தங்களுக்குச் சாதகமான பொருள்களை அள்ளிக் கொண்டு வந்தார்கள். ஆனால், இதில் பிறகு ஒரு ட்விஸ்ட் இருக்கிறது என்பது அப்போது அவர்களுக்குத் தெரியாது.

இதற்கு முன்பாக ஒரு மினி போட்டி நடந்தது. பாலாடை, மத்து, ஆகிய பொருள்கள் தரப்பட்டிருந்தன. இதை வைத்து போட்டியாளர்கள் தரமான வெண்ணெய்யை உருவாக்க வேண்டும். மத்தை வைத்து பாலாடையை கையால் கடைய வேண்டும் என்பதுதான் இதிலுள்ள சிரமமான அம்சம். இவர்கள் உருவாக்கும் வெண்ணெய்யில் ஒவ்வொருவரின் பிரத்யேக முத்திரை இருக்க வேண்டுமாம். தரமான வெண்ணெய்யை முதலில் உருவாக்குபவருக்கு போட்டியில் ஒரு 'அட்வான்டேஜ்' இருக்கிறது.

போட்டி ஆரம்பித்தது. கையால் வேகமாகக் கடைய வேண்டும் என்பதால் வலி காரணமாக போட்டியாளர்கள் தவித்தார்கள். குறிப்பாக பெண் போட்டியாளர்களுக்கு மிக சிரமமாக இருந்தது. பாதியிலேயே நிறுத்தி விடலாமா என்று கூட சிலர் யோசித்தார்கள். வெண்ணெய் மாதிரியாக உருவாகி வந்த ஒரு வஸ்துவைப் பார்த்ததும் தேவகி அவசரப்பட்டு கைதூக்க "வெண்ணெய் தரமா இருக்கணும்" என்று கெளஷிக் கறார் குரலில் சொன்னதும் பின்பென்ச் மாணவன் மாதிரி சட்டென்று கையை இறக்கிவிட்டார்.

மாஸ்டர் செஃப்
மாஸ்டர் செஃப்

இந்த 'அட்வான்டேஜ்' போட்டியில் தரமான வெண்ணெய்யை முதல் 9 நிமிடத்திலேயே தயார் செய்து வெற்றி பெற்றவா் கிருதாஜ். அவருக்கு என்ன அட்வான்டேஜ் என்று பார்த்தால், அவர் மற்ற ஐந்து போட்டியாளர்களின் கூடைகளில் இருந்து ஏதாவது ஒரு பொருளை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதை அவர் உபயோகப்படுத்த முடியாது. ஒரு முக்கியமான பொருளை எடுப்பதன் மூலம் அவர் சக போட்டியாளர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம்.

உப்பு என்பது மிக அவசியமான பொருள் என்பதால் சிலரின் கூடைகளில் இருந்து அதை எடுத்தார் கிருதாஜ். வேறு சிலரின் கூடைகளில் இருந்து பொருளை எடுக்க அவர் தயங்கியபோது "ஃபேவரிட்டிஸம் கூடாது... இது ஒரு போட்டி என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்" என்று எச்சரித்தார் கெளஷிக். சுனிதாவிடமிருந்து பூண்டு, கிருத்திகாவிடமிருந்து வெங்காயம், நவ்சீனிடமிருந்து மீன் ஆகிய அடிப்படையான பொருள்களை எடுத்துவிட்டார் கிருதாஜ். "அது இல்லாம எப்படி சமைக்கறது?" என்று அந்தப் போட்டியாளர்கள் உள்ளூற பதற்றம் அடைந்தார்கள்.

கிருதாஜ் முக்கியமான பொருள்களை எடுத்ததும் "ஏன் சார் இந்தக் கொலைவெறி?" என்று செஃப்களிடம் விசாரித்தார் விசே. "நாங்க கிச்சன்ல சமைக்கும்போது ஏதாவது ஒரு முக்கியமான பொருள் இல்லாமப் போயிடும். இருந்தாலும் அந்தச் சூழலை சமாளித்தாக வேண்டும். அப்படியொரு சமயோசித உணர்வு போட்டியாளர்களிடம் இருக்கிறதா என்பதற்காக இந்த டெஸ்ட்" என்று விளக்கம் அளித்தார் கெளஷிக். (பல்லைப் பிடுங்கிட்டு டூத் பிரஷ் தந்த கதையால்ல இருக்கு!).

ஆக மீதமுள்ள 21 நிமிடங்களில் 'வெண்ணெய்யை' மையமாக வைத்து இவர்கள் சமைத்து முடித்தாக வேண்டும். கூட சப்ளிமென்ட்டாக இன்னொரு உணவையும் சமைக்கலாம். ஆனால் வெண்ணைய்தான் ஹீரோவாக இருக்க வேண்டும். இந்தப் போட்டி பரபரப்பாக நடந்து முடிந்தது.

பரிசோதனை மேஜைக்கு முதலில் அழைக்கப்பட்டவர் நவ்சீன். இவர் தயார் செய்திருந்த உணவு 'பட்டர் ரோஸ்டடட் ஃபென்னல்'. வெண்ணெய்யுடன் மோர் மிளகாய், ஆரஞ்ச் கலந்த இந்த விநோதமான கலவை, நீதிபதிகளால் ரசிக்கப்பட்டது. பாராட்டு கிடைத்ததும் நவ்சீன் வழக்கம் போல் அரை மில்லிமீட்டர் புன்னகைத்தார். அடுத்த வந்த கிருத்திகா, தான் தயாரித்திருந்த உணவுக்கு 'சிந்தாமணி ஃபிளேவர்டு பட்டர்' என்று ஏதோ பஸ் ஸ்டாப் மாதிரியான பெயரைச் சூட்டியிருந்தார். இதைச் சாப்பிட்ட விசே 'பிரமாதம், சிறப்பு' என்று மனமார பாராட்டினார்.

மாஸ்டர் செஃப்
மாஸ்டர் செஃப்
அவர் பாராட்டுவதில் ஆச்சரியமில்லை. ஆனால் செஃப் கெளஷிக் பாராட்டுவாரா? எதையும் சொல்லாமல் கிருத்திகாவின் உணவை எக்ஸ்ட்ராவாக எடுத்து தன் பிளேட்டில் போட்டு சுவைக்கத் தொடங்கினார் கெளஷிக். எனில் என்ன அர்த்தம்? கிருத்திகா முதல் வகுப்பில் பாஸாகி விட்டார் என்று அதற்குப் பொருள்.

'என்னுடைய வெண்ணெய்' என்று வித்தியாசமான பெயரைச் சூட்டியிருந்தார் தேவகி. "என்னதிது... உங்க டிஷ்ஷூக்கு பூ வெச்சு ஜடைல்லாம் பின்னியிருக்கீங்க?" என்று கிண்டலடித்தார் விஜய் சேதுபதி. தேவகியிடமிருந்து கிருதாஜ் உப்பைப் பறித்துக் கொண்டாலும் அது இல்லாமல் எப்படியோ சமாளித்திருந்தார் தேவகி. "பிடிச்சிருக்கு... நல்லாயிருக்கு... பூ மட்டும் கசக்குது. ஆனா உப்பு இல்லாம நீங்க சமாளிச்ச விதம் அற்புதம்" என்ற கமென்ட்டைக் கேட்டு முகம் மலர திரும்பினார் தேவகி. இவர் சந்தோஷப்பட்டால் கூட சந்தேகத்துடன் விழிப்பது மாதிரியே முகம் இருக்கிறது.

'இடிச்ச மசாலா வெண்ணெய்' என்று வின்னி கொண்டு வந்த வஸ்துவை சாப்பிட்ட நீதிபதிகளின் முகங்கள், இடிச்சபுளி செல்வராஜ் முகப்பாவனையில் சுருங்கத் துவங்கியது. "உப்பு அதிகம்" என்கிற கெட்ட கமென்ட்டை வாங்கி முகம் வாடி திரும்பினார் வின்னி.

அடுத்து வந்த சுனிதா கொண்டு வந்திருந்தது 'வெண்ணெய் பன்னீர் டோஸ்ட்'. இவருக்கும் உணவின் தலையில் சூட்டியிருந்த 'பூ'தான் பிரச்னையை ஏற்படுத்தியது. (இந்தப் பூவின் பெயர் 'சினியா'வாம்). "இதை நீங்களே சாப்பிட்டுப் பாருங்க" என்று சமைத்தவருக்கே தண்டனை கொடுத்தார் கெளஷிக். "ஆமாம்.. கசக்குது" என்று சங்கடத்துடன் சிரித்தார் சுனிதா. இந்தப் பிரச்னையைத் தவிர இவரது டிஷ் ஓகேதான்.

கடைசியாக வந்தவர் கிருதாஜ். மற்றவர்களின் பொருள்களைப் பறித்துக் கொண்ட வழிப்பறி ஆசாமி. இவர் சூட்டியிருந்த பெயரே அட்டகாசம் - 'கருவாட்டு சுவை ஊட்டிய வெண்ணெய்'. கருவாடையும் வெண்ணெய்யையும் இணைத்து யோசிப்பதற்கே ஒரு முரட்டுத்தனமான கற்பனை வேண்டும். ஆனால் கிருதாஜின் உணவு பெரும்பாலும் நெகட்டிவ் கமென்ட் வாங்கியது. 'இது வெண்ணெய் மாதிரியே இல்ல. நெய் டேஸ்ட் வருது. fresh-ஆ இல்ல" என்றெல்லாம் செஃப் ஆர்த்தி சொன்னதும் புன்னகை மாறாமல் திரும்பிச் சென்றார் கிருதாஜ்.

ஆறு நபர்களும் தயாரித்திருந்த பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் முடிவு அறிவிக்கப்படும் நேரம் வந்தது... போட்டியாளர்கள் வெண்ணெய்யாக உருகி பதற்றத்துடன் காத்துக் கொண்டிருந்தனர். டாப் 1-ல் நவ்சீனின் பெயர் அறிவிக்கப்பட்டது. சரியாக அரைமில்லி மீட்டர் சிரித்துவிட்டு மகிழ்ச்சியுடன் பால்கனிக்குச் சென்றார் அவர். டாப் 2 ஆக தேவகியின் பெயர் வந்தது. (அந்தப் பூதான் கசக்குது. மத்தபடி ஒகே!). "நான் ஜெயிச்சிட்டேனா?" என்கிற சந்தேக முழி மாறாமலேயே அவரும் பால்கனிக்கு ஓடினார்.

மாஸ்டர் செஃப்
மாஸ்டர் செஃப்

செஃப் கெளஷிக் மிச்சம் வைக்காமல் ஆசையாகச் சாப்பிட்டும் கிருத்திகாவின் பெயர் வரவில்லையே என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது அவரின் பெயர் அறிவிக்கப்பட்டது. 'எனக்குத் தெரியும்... என் பெயரை மட்டும் சொல்லாம இருந்திருந்தீங்கன்னா தெரியும் சேதி" என்கிற விரோத முகபாவத்துடன் அவரும் பால்கனிக்கு அகன்றார்.

ஆக கிருதாஜ், வின்னி மற்றும் சுனிதா ஆகிய மூவரும் கறுப்பு ஏப்ரன் அணிந்து கொண்டு 'எலிமினேஷன் சவாலை' எதிர்கொள்ள வேண்டும். (மறுபடியும் உடனே இன்னொரு சமையலா... பாவம்ப்பா!).

இதற்காக தயிர், அன்னாசிப்பழம், பனைவெல்லம் என்கிற, ரகளையான காம்பினேஷனில் இருந்த, மூன்று பொருள்கள் மேஜையில் வைக்கப்பட்டிருந்தன. குலுக்கல் முறையில் கிருதாஜிற்கு பனைவெல்லம் கிடைத்தது. ஆனால், சுனிதா மற்றும் வின்னி ஆகிய இருவருக்குமே 'தயிர்' வந்தது. எனவே சுனிதா விட்டுத் தந்தார். (விட்டுத் தந்தவங்க எப்பவுமே கெட்டுப் போகமாட்டாங்க தாயி!).

இவர்கள் சமைப்பதற்கு கூடுதலாக மூன்று திரவப்பொருள்கள் இருந்தன. நீர் மோர், பானகம் மற்றும் அன்னாசிப்பழ ரசம். இந்த சவாலின் பெயர் 'liquid to solid challenge'. இதை 'குடிக்கறத கடிக்கறதா மாத்தணும் போட்டி' என்று எளிமையாக மொழிபெயர்த்த விஜய் சேதுபதிக்கு சிறப்பு விருது ஏதேனும் தரலாம்.

போட்டி ஆரம்பித்தது. பனைவெல்லம் + பானகத்தை வைத்துக் கொண்டு 'கேவர்' என்னும் இனிப்பு வகையை முயன்று கொண்டிருந்தார் கிருதாஜ். இது ராஜஸ்தானைச் சேர்ந்த பிரபல இனிப்பு வகையாம். (உதவி: கூகுள்). இவர் தயார் செய்திருந்த கேவர் உடைந்துபோக பதறிவிட்டார். என்றாலும் கூடுதலாக ஒன்றை தயார் செய்திருந்ததால் தப்பித்தார். "ஆக்சுவலி கேவரை அப்படி வைக்கக்கூடாது..." என்று பால்கனியிலிருந்து நித்யாவிடம் கமென்ட் அடித்துக் கொண்டிருந்தார் மணிகண்டன். (ஜெயிச்சுட்டோம்ன்ற மமதையா மணிகண்டன்?!).

சமையல் நேரம் முடிந்து உணவுகள் பரிசோதனைக்கு வந்தன. முதலில் கொண்டு வந்தவர் வின்னி. தயிர் மற்றும் நீர்மோரை வைத்துக் கொண்டு இவர் செய்திருந்த உணவின் பெயர் 'நீர் மோர் நவீன காண்ட்வி'.

மாஸ்டர் செஃப்
மாஸ்டர் செஃப்

"நீங்க அடிக்கடி கறுப்பு ஏப்ரன் போட்டா நல்லாயிருக்கும்" என்று செஃப் கெளஷிக் சொன்ன சர்காஸ்டிக் கமென்ட்டைக் கேட்டு முதலில் பதறிப்போனார் வின்னி. அப்புறம்தான் தெரிந்தது அது பாராட்டு என்று. அப்போதுதான் இதுபோன்ற சுவையான உணவு கிடைக்குமாம். இதைத்தான் கெளஷிக் அப்படிச் சொல்லியிருக்கிறார். இதைப் புரிந்துகொண்டதும் வின்னியின் முகம் தண்ணீர் தெளித்ததுபோல் சந்தோஷமானது.

இரண்டாவதாக வந்தவர் சுனிதா. இவர் தயார் செய்திருந்த உணவுக்கு 'நம்ம ஊர் கறியும் ரசமும்' என மிக எளிமையாக பெயர் சூட்டியிருந்தார். தனக்கு வேண்டிய தயிரை விட்டுத் தந்திருந்தாலும் அன்னாசி பழத்தையும் அன்னாசி பழ ரசத்தையும் வைத்து சோறு + மட்டன் கீமா செய்து அழகாக அடுக்கியிருந்தார். "அருமையான ரசம் சாதத்தை கறியோட சாப்பிட்ட திருப்தியான ஃபீல் வருது" என்று பாசிட்டிவ் கமென்ட்கள் வந்ததும் சந்தோஷமானார் சுனிதா. (விட்டுக் கொடுத்ததற்கான பலன்!).

மூன்றாவதாக வந்தவர் கிருதாஜ். ஏற்கெனவே சொன்னபடி ராஜஸ்தான் இனிப்பு வகையைக் கொண்டு வந்திருந்தார். இதற்கு 'கேவர் 2.O' என்று பெயர் சூட்டியிருந்தார். இவரின் தட்டில் இருந்த உணவு பார்க்கவே அத்தனை அழகாகவும் நேர்த்தியாகவும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆனால் பாவம் ராஜஸ்தான் இவருக்கு துரோகம் செய்துவிட்டது. "இனிப்பு அதிகம்... திகட்டுகிறது" என்கிற கமென்ட்டைக் கேட்டும் கூட கிருதாஜின் புன்னகை மாறவில்லை. (எவ்ளோ அடிச்சாலும் தாங்கறவர் போலிருக்கு!).

முடிவுகள் அறிவிக்கப்படும் நேரம். இதில் சுனிதா சமைத்திருந்த 'நம்ம ஊர் ரசமும் கறியும்' வெற்றி பெற்றது. 'சிந்தனை, தோற்றம், சுவை' ஆகிய மூன்று ஏரியாக்களிலும் இவரின் டிஷ் பாஸாகியது. அடுத்த வெற்றி வின்னிக்கு கிடைத்தது. இந்த முடிவு அறிவிக்கப்படுவதற்குள் பதற்றத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார் வின்னி. தன்னுடைய பெயர் உச்சரிக்கப்பட்டதும் 'உஸ்' என்று பெருமூச்சு விட்டவருக்கு கண்கள் தன்னிச்சையாகக் கலங்கிவிட்டன.

ஆக... மீதமிருந்தவர் கிருதாஜ். இவர்தான் இந்த வாரம் வெளியேற்றப்படவிருக்கிறார். வின்னியின் உணவும் கிருதாஜின் உணவும் ஏறத்தாழ சமமான அளவில் போட்டியிட்டன. ஆனால் கிருதாஜ் செய்திருந்த உணவில் வெல்லம் அதிகமாகி இனிப்பு கூடிவிட்டதால் சற்று பின்னடைவைச் சந்தித்துவிட்டது. "இது என்னுடைய அன்பு பரிசு" என்று வெள்ளை ஏப்ரனை கிருதாஜிற்கு பரிசாகத் தந்தார் விசே. இதனால் கிருதாஜிற்கு போட்டியை வென்ற மகிழ்ச்சி ஏற்பட்டது.

வாசல் வரைக்கும் சென்றுவிட்ட கிருதாஜை அழைத்தார் விசே. ஒருவேளை 'நீங்க எலிமினேட் இல்லை' என்று ஒரு ட்விஸ்ட் தருவார்களோ என்று கூட தோன்றி விட்டது. ஆனால் 'ஐ லவ் யூ கிருதாஜ்' என்று சொல்லி அவரை இனிமையாக வழியனுப்பினார் விசே.

ஆக போட்டியாளர்களின் எண்ணிக்கை எட்டாக சுருங்கியிருக்கிறது. அடுத்த வாரத்தில் பல ட்விஸ்ட்கள் நிகழலாம்.

காத்திருந்து சுவைப்போம்.