Published:Updated:

விஜய் சேதுபதி செம ஜாலி அண்ணாச்சி… ‘மாஸ்டர் செஃப்’ மாக்டெய்ல் சிக்கனும், அதிர்ந்த நடுவர்களும்!

விஜய் சேதுபதி - மாஸ்டர் செஃப் தமிழ்

சனிக்கிழமை (21-08-2021) ஒளிபரப்பான மாஸ்டர் செஃப் 5-ம் எபிசோடின் விமர்சனம் இங்கே!

Published:Updated:

விஜய் சேதுபதி செம ஜாலி அண்ணாச்சி… ‘மாஸ்டர் செஃப்’ மாக்டெய்ல் சிக்கனும், அதிர்ந்த நடுவர்களும்!

சனிக்கிழமை (21-08-2021) ஒளிபரப்பான மாஸ்டர் செஃப் 5-ம் எபிசோடின் விமர்சனம் இங்கே!

விஜய் சேதுபதி - மாஸ்டர் செஃப் தமிழ்

மாஸ்டர் செஃப் தமிழ் நிகழ்ச்சி இறுக்கமாகவும், தேர்வு அறை போன்ற பதட்டத்துடனும் இருக்கிறது என்று கடந்த வார கட்டுரைகளில் சொல்லிக் கொண்டிருந்தோம். இதை சுவாரசியமாக்க வேண்டிய பொறுப்பு விஜய்சேதுபதிக்கு இருக்கிறது என்பதையும் கூடவே குறிப்பிட்டிருந்தோம். இந்தச் செய்தி அவரின் காதுகளில் சென்று விழுந்ததோ… என்னவோ... இந்த வாரம் விஜய் சேதுபதி நிகழ்ச்சியின் சுவாரசியத்தை ஏகத்துக்கும் கூட்டிவிட்டார். (குமுதா ஹேப்பி அண்ணாச்சி)

வகுப்புக்கு லேட்டாக வரும் மாணவன், கண்டிப்பான ஆசிரியரின் முகத்தை பீதியுடன் பார்ப்பது போன்ற முகபாவத்துடன் எப்போதும் இருப்பார் தேவகி என்ற போட்டியாளர். அவர் தனது உணவை எடுத்து வரும் போது “நீங்க செஞ்சதுதானா... பக்கத்து டேபிள்ல இருந்து எடுத்துட்டு வந்த மாதிரியே உங்க முகம் இருக்கு” என்று தேவகியை ஜாலியாக கலாய்த்தார் விசே.

இது மட்டுமல்லாமல், சிறுகுழந்தை போல ஆசையாக கோலி சோடாவை கேட்டு வாங்கி உடைத்து திறந்து விளையாடிக் கொண்டிருந்தார்.

முந்தைய கட்டுரைகளில் குறிப்பிட்டிருந்தபடி, இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் விசேவை பத்து மணி நேரத்திற்கு பட்டினி போட்டு விடுவார்களோ, என்னமோ... போட்டியாளர்கள் தயார் செய்யும் உணவு வகைகளை கேட்டு கேட்டு வாங்கிச் சாப்பிட்டு ‘சிறப்பு... அம்சமா இருந்தது’ என்று பாராட்டு மழையில் நனைய விடுகிறார் விசே. சிலர் தங்களது மெனுவை தயாரித்துக் கொண்டிருந்த போதே அவர்களின் மேஜையின் அருகில் சென்று ‘’வாசனை தூக்கலா இருக்கே... சாப்பிட்டுப் பார்க்கலாமா?” என்று சமையலறையில் அம்மாவை தொந்தரவு செய்யும் கடைக்குட்டி போல விசேவின் ஜாலியான ராவடிகள் தொடர்ந்து கொண்டேயிருந்தன.

“இன்னமும் உப்பு போடலை சார்” என்று போட்டியாளர்கள் சொன்னாலும் கூட ‘’பரவாயில்ல... இப்ப கொடுங்க... உப்பு போட்டப்புறம் இன்னொரு ரவுண்டு சாப்பிடறேன்’’ என்று இம்சையைக் கூட்டிக் கொண்டிருந்தார். குறிப்பாக ‘’நீங்க பேசிட்டே இருங்க... இதோ வந்துடறேன்’’ என்று காணாமல் போகாமல் நிகழ்ச்சி முழுவதும் அவர் இருந்தது சிறப்பு.

கொதிக்கும் எண்ணையில் கடுகைப் போட்டது போன்ற கறார் முகத்துடன் எப்போதும் இருக்கும் செஃப் கெளஷிக்கின் முகத்தில் கூட சனிக்கிழமை எபிசோடில் ‘புன்னகை மன்னன்’ கமல் போல வலுக்கட்டாயமான புன்னகைகள் தோன்றி மறைந்தன. இப்படியே சென்றால் நிகழ்ச்சி பிக்அப் ஆகி விடும் போலத்தான் தெரிகிறது.

ஆனால், அதேதான். சமையல் என்பது சீரியஸ் பிசினஸ் என்பது தங்களின் கறாரான கமென்ட்டுகளின் மூலம் செஃப்கள் மறுபடியும் மறுபடியும் நிரூபித்துக் கொண்டேயிருக்கிறார்கள். போட்டியாளர்கள் செய்யும் தவறுகளை நயமாகவும் கடுகடுவென்றும் நீதிபதிகள் சுட்டிக் காட்டும் போது அவற்றில் நமக்கான பாடங்களும் இருக்கின்றன.

21.08.2021 அன்று ஒளிபரப்பான ஐந்தாவது எபிஸோட் ‘கோலி சோடா’வுடன் களை கட்டியது. யாராவது விநோதமான சப்தத்துடன் சிரித்தால் ‘’சோடா உடைக்கிற மாதிரி சிரிக்கறான்’’ என்பார்கள். சரி, நிகழ்ச்சியில்தான் சிரிப்பு இல்லை, சோடாவாவது இருக்கட்டும் என்று முடிவு செய்து விட்டார்கள் போல. (எப்படி மாதவா.. இப்படில்லாம் யோசிக்கற?!).

நிகழ்ச்சியின் தொடக்கத்தில், ‘‘உங்களுக்கு சமையல் மீது ஆர்வம் வர யார் காரணம்?” என்று போட்டியாளர்களிடம் செஃப்கள் கேட்ட போது ஏறத்தாழ அனைவருமே தங்களின் அம்மாவைத்தான் குறிப்பிட்டார்கள். நவ்ஸீன் தன் அம்மாவைப் பற்றி குறிப்பிடும் போது கண்கலங்கி விட்டார்.

விஜய் சேதுபதி - மாஸ்டர் செஃப் தமிழ்
விஜய் சேதுபதி - மாஸ்டர் செஃப் தமிழ்

‘’சமையல் என்பது வயிற்றை நிரப்பும் வேலை இல்லை. அன்பு, பாசம் போன்ற உணர்வுகளும் கலந்த சமாச்சாரம்’’ என்று சென்ட்டியாக பேசி கவர்ந்தார் செஃப் கெளஷிக்.

“எங்கே நம்ம ஹீரோவைக் காணோமே?” என்று அனைவரும் விசேவை தேடிக் கொண்டிருந்த போது, மனிதர் டூரிங் டாக்கீஸ் இடைவேளையில் வருவதைப் போல ‘’சோடா... சோடா...” என்றபடி வண்டியைத் தள்ளி வந்து கொண்டிருந்தார். ஆக, அன்றைய எபிசோடில் ‘சோடா’ என்பது ஒரு முக்கியமான அயிட்டமாக இருக்கப் போகிறது என்பது போட்டியாளர்களுக்கு அப்போதே தெரிந்து விட்டது.

ஃபாஸ்ட் புட் கலாசாரத்தில் வாழும் சமகால இளைய தலைமுறையினரில் எத்தனை பேருக்கு கோலி சோடா என்கிற வஸ்து இருந்தது/ இருக்கிறது என்று தெரியும்? “அமெரிக்காவில் கூட கோலி சோடா இருக்கு” என்று பரவசமாக சொன்ன செஃப் ஆர்த்தி, அதன் விலையைச் சொன்ன போது நமக்கு அத்தனை பரவசமாக இல்லை.

கோலி சோடாவைக் கண்டுபிடித்தவர் Hiram Codd என்கிற பிரிட்டிஷ் பொறியாளர். பாட்டிலின் கழுத்துப் பகுதியில் கோலியைப் போட்டு அதன் மேல் ரப்பர் வாஷரை இட்டால் கேஸ் அழுத்தம் அப்படியே இருக்கும் என்று அவர் கண்டுபிடித்ததால் ‘கோலி சோடா’ என்பது அவரின் பெயரால் ‘Codd bottle’ என்று அழைக்கப்படுகிறது. இந்த அரிய தகவலை நமக்குச் சொன்ன செஃப் ஹரீஷ் ராவிற்கு பலத்த கரகோஷங்களை வழங்குவோம்.

“கோலியை வெச்சு இன்னிக்கு உங்களை காலி பண்ணப் போறோம்’ என்று ஜாலியான வாக்கியத்துடன் போட்டியை தொடங்கி வைத்தார் விசே. ‘நம்மள சோடா செய்ய விட்டுருவாங்களோ’ என்று சில போட்டியாளர்கள் பீதியாகிக் கொண்டிருக்கும் போது ‘’சோடாவை வைத்து மாக்டெய்ல் செய்ய வேண்டும்’’ என்கிற போட்டியை நீதிபதிகள் அறிவித்ததும்தான் அவர்களுக்கு மூச்சே வந்தது.

இதற்காக 30 நிமிடங்கள் வழங்கப்படும். இதில் நான்கு பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு பால்கனிக்கு செல்வார்கள். மீதமுள்ள ஒன்பது நபர்கள் அடுத்த சுற்று போட்டிக்கான நெருக்கடியைச் சந்திக்க வேண்டும்.

‘‘காக்டெய்லுக்கும் மாக்டெய்லுக்கும் என்ன வித்தியாசம்?” என்கிற அவசியமான கேள்வியை செஃப் ஆர்த்தியிடம் கேட்டு தெரிந்து கொண்டார் விசே. ‘‘மாக்டெய்ல் என்பது ஆல்கஹால் கலக்காத பழரசம்’’ என்று சுருக்கமாக விளக்கம் அளித்தார் ஆர்த்தி. (ஆல்கஹால் என்றால் என்ன... இது என் சந்தேகம். அவ்ள வெள்ளந்திங்க நானு).

போட்டியாளர்கள் தங்களுக்கான சமையல் அயிட்டங்களைத் தேர்வு செய்து எடுத்து வருவதற்கு 2 நிமிடங்கள் மட்டும் தரப்பட்டன. ‘எதை வைத்து மாக்டெய்ல் செய்யலாம்’ என்று மனதிற்குள் உத்தேசமாக கணக்கு போட்டு வைத்திருந்த போட்டியாளர்கள், உள்ளே சென்று ஆடித் தள்ளுபடியில் பொருட்களை அள்ளி வருவது போல் அவசரம் அவசரமாக அள்ளி வந்தார்கள்.

“ஆரஞ்சு டஜன் அம்பது ரூவா’ என்கிற அறிவிப்பைக் கேட்டது போல ஆரஞ்சுப் பழங்களை நிறைய பையில் அள்ளிய சுனிதா, யாருமே அதைச் சீண்டவில்லை என்பதைச் சுற்றி கவனித்த போது ‘தன் சாய்ஸ் தவறோ’ என்று உள்ளுக்குள் பரிதவித்தார். ஆனால் அவரின் அநாவசியமாக குழம்பி இருக்கத் தேவையில்லை என்பது நிகழ்ச்சியின் இறுதியில் தெரிந்தது.

ஆக.. ஆல்கஹால் அல்லாத இந்தப் போட்டி தள்ளாட்டத்துடன் தொடங்கியது.

மாஸ்டர் செஃப் தமிழ்
மாஸ்டர் செஃப் தமிழ்

விசேவால் பரிந்துரைக்கப்பட்டு கடைசி நேர அதிர்ஷ்டத்தைப் பெற்ற போட்டியாளரான மணிகண்டன், சிக்கன் துண்டை வைத்து இம்சை செய்து கொண்டிருக்க, அருகே வந்த நீதிபதிகள் ‘’என்னது... மாக்டெய்லுக்கு சிக்கனா?’’ என்று அதிர்ந்து போனார்கள். நமக்குமே கூட அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ‘‘அதெல்லாம் பாருங்க.. நல்லா வரும்’’ என்று நீதிபதிகளுக்கே தைரியம் சொன்னார் மணிகண்டன்.

இவரைப் பற்றிய சிறு வீடியோவும் காட்டப்பட்டது. சிறிய அளவில் டிபன் சென்டர் நடத்தி வரும் இவருக்கு ‘மாஸ்டர் செஃப்’ ஆவதுதான் வாழ்நாள் லட்சியமாம். மும்பையில் நடந்த ‘மாஸ்டர் செஃப் இந்தி’ நிகழ்ச்சியில் கூட சிலமுறை கலந்து கொண்டிருக்கிறார். ஆனால் மொழி தெரியாத காரணத்தினால் ஆரம்பக்கட்டத்திலேயே பின்னடைவு ஏற்பட்டு விட்டது.

மணிகண்டன் உணவை தயார் செய்து கொண்டு வந்திருந்த விதம் கண்களைக் கவர்வதாக இருந்தாலும் ‘மாக்டெய்ல் சிக்கனா?’ என்கிற கேள்வி மட்டும் நம் மனதை விட்டு போகவில்லை.

‘‘சிக்கன் சூப்ல தம் போட்டு உள்ளே வேக வெச்சு’’ என்று பிரியாணியைச் செய்வது போன்ற செய்முறையை நீதிபதிகளிடம் மணிகண்டன் விளக்கினார். அதைச் சாப்பிட்டுப் பார்த்த நீதிபதிகளின் முகத்தில் மகிழ்ச்சி தெரியவில்லை. ஆனால் அதையும் வாங்கி உள்ளே தள்ளிய விசே ‘’சிறப்பு மணிகண்டா. நல்லா செஞ்சிருக்கே!” என்று பாராட்ட, அப்போதுதான் மணிகண்டனின் முகத்தில் சற்றாவது சிரிப்பு வந்தது.

செஃப்கள் தங்களின் தொழிலுக்கு உரிய கறார்த்தனத்தைக் கடைப்பிடித்து கண்டிப்பான கமென்ட்டுகளைச் சொன்னாலும், அவர்கள் சோர்வடையாதவாறு காப்பாற்றுவது விசேவின் ஆறுதல் மொழிகளே.

‘அடிச்சாண்டா லக்கி பிரைஸ்’ என்பது போல் இறுதியில் மணிகண்டன் டாப் 4-ல் வந்தது ஆச்சரியம். ‘வித்தியாசமாக’ யோசித்ததற்காகவே அவர் தேர்வு செய்யப்பட்டிருக்கலாம்.

போட்டியாளர் ஆர்த்தியின் மிக்ஸி திடீரென்று பொங்கி அவருக்கு பீதியைக் கிளப்பியது. ‘’அய்யோ... நான் தயார் செய்து வைத்திருந்த ‘சிரப்பை’ யாரோ தள்ளி விட்டிருக்காங்க. போச்சு... போச்சு…’’ என்று பதறினார் வின்னி. இதற்கும் ‘சிறப்பு’ என்று விசே சொல்லியிருந்தால் ஏக கலாட்டாவாகியிருக்கும்.

“இன்னும் அஞ்சு நிமிஷம்தான் இருக்கு.. இன்னும் பத்து செகண்ட்தான் இருக்கு’’ என்று செஃப் ஆர்த்தி போட்டியாளர்களுக்கு வார்னிங் தந்து கொண்டிருந்த போதெல்லாம் விவேக் நடித்த காமெடி காட்சி ஒன்றுதான் ஞாபகத்திற்கு வந்தது. உள்ளே வெடிகுண்டை ஒளித்து வைத்திருக்கும் தற்கொலை போராளி என்பது தெரியாமல் ஒரு பெண்ணிடம் கலாட்டா செய்து கொண்டிருப்பார் விவேக்.

மாஸ்டர் செஃப் தமிழ்
மாஸ்டர் செஃப் தமிழ்

‘பேக்பென்ச் மாணவன்’ முகபாவத்துடன் எப்போதும் இருக்கும் தேவகி, வழக்கம் போல் தயங்கித் தயங்கி வந்தாலும் ‘பானகம்’ என்கிற அயிட்டத்தைச் செய்து நீதிபதிகளைக் கவர்ந்து விட்டார். ‘‘பால்கனி போறதுக்கு நிறைய வாய்ப்பு இருக்கு’’ என்று விசே முன்பே தந்திருந்த சான்றிதழ் பின்னர் உண்மையாயிற்று. தேர்வு செய்யப்பட்டாலும் கூட பீதி குறையாத முகத்துடன் இருந்தார் தேவகி.

‘பீடா சோடா ஷாட்’ என்கிற வித்தியாசமான அயிட்டத்தைக் கொண்டு வந்தார் சுமித்ரா. ஆனால் நீதிபதிகளிடம் இருந்து பாசிட்டிவ்வான கமென்ட்டுகள் வரவில்லை. ‘’வழக்கமா சென்ட்டை வெளியேதான் அடிப்போம். இது உள்ளே அடிச்ச மாதிரி இருக்கு’’ என்ற விசே, அந்த கிளாஸையும் காலி செய்யத் தவறவில்லை.

‘வானவில்’ என்கிற கவர்ச்சிகரமான தலைப்பில் கிருத்திகா செய்திருந்த பழரசத்தில் உண்மையாகவே ஏழு வண்ணங்களும் மின்னின. ‘’சிந்தனை ஓகே. ஆனா சுவை இல்லை’’ என்று செஃப் கெளஷிக் சொன்னதும் வானவில்லைப் போலவே கிருத்திகாவின் முகத்தில் மகிழ்ச்சி உடனே மறைந்தது.

மாஸ்டர் செஃப் தமிழ்
மாஸ்டர் செஃப் தமிழ்

ஷாஜியா செய்திருந்த மகா அநியாயத்தை உரத்த குரலில் சபைக்குச் சொன்னார் விசே. ‘வெற்றிலை பன்ச்’ என்கிற அயிட்டத்தை தயார் செய்திருந்த ஷாஜியா, ‘டேஸ்ட் பார்க்கிறேன் பேர்வழி’ என்று பெரும்பாலானதை தானே குடித்து தீர்த்து விட்டு நீதிபதிகளுக்கு டக்கீலா கிளாஸில் ‘கொஞ்சூண்டு’ எடுத்து வர ‘‘மாஸ்டர் செஃப் வரலாற்றிலேயே இப்படியொரு அநியாயம் நடந்திருக்காது’’ என்று ஜாலியாக விசே கலாய்க்க, அம்மணியின் முகத்தில் ஒரே சிரிப்பு. சபையும் கூடவே வெடித்து சிரித்தது. ஆனால் ஷாஜியாவின் இந்தச் செயலை நீதிபதிகள் அத்தனை ரசிக்கவில்லை.

‘பின்ன சோடாங்க’ என்கிற அயிட்டத்தை தயார் செய்திருந்தார் கிருதாஜ். ‘‘அதென்னது... நான் பேர் கேட்டப்ப ‘பின்ன சோடா டா’ என்று எனக்கு மரியாதையில்லாம சொல்லிட்டு செஃப் கிட்ட வரும் போது மட்டும் ‘ங்க’ போட்டு மரியாதையை சேர்த்திட்டீங்க” என்று விசே இவரையும் ஜாலியாக கலாய்த்தார். ‘’நல்லாயிருக்கு கிருதாஜ். ஆனா உங்க மேல இன்னமும் பெரிய நம்பிக்கை வெச்சிருக்கேன்’’ என்று மையமான கமென்ட்டைச் சொல்லி குழப்பினார் கெளஷிக்.

தனது மெனுக்களுக்கு வித்தியாசமாக பெயர் சூட்டுவதில் வல்லவரான தாரா, இம்முறை தான் செய்திருந்த பழரசத்துக்கு ‘Disappearing drink’ என்று பெயர் வைத்திருந்தார். இந்த கிளாஸையும் கணப்பொழுதில் காலி செய்த விசே, “ஆமாங்க.. பேரு வெச்சது கரெக்டுதான். டக்குன்னு வயித்துக்குள்ள காணாமப் போயிடுச்சு’’ என்றார். (விசே வீட்ல சமையல் செஞ்சு மாளாது போல).

கேரட்டையும் முள்ளங்கியையும் கலந்து சசியம்மாள் செய்த பழரசம் நீதிபதிகளை அத்தனை கவரவில்லை. எனவே உறுத்தாத வகையில் அவருக்கு அறிவுரை கூறினார்கள்.

அதிர்ஷ்டம் என்பது எப்போதுமே சுனிதாவின் பக்கத்தில் சப்பணம் போட்டு அமர்ந்திருக்கும் போல. போட்டியின் தொடக்கத்தில் இரண்டாவது சான்ஸில்தான் இவர் தேர்வானார். கடந்த வார போட்டியில் முதன்முதலாக பால்கனிக்குச் சென்றவரும் இவரேதான். இம்முறையும் அப்படியே ஆயிற்று.

சுனிதா தயார் செய்திருந்த ‘ஆரஞ்ச் கிரில் சிரப்’ என்கிற அயிட்டத்தைச் சாப்பிட்ட நீதிபதிகள் ‘‘சின்ன வயசுல ஆரஞ்ச் மிட்டாய் சாப்பிட்ட காலத்துக்கே அழைத்துச்சிட்டுப் போயிட்டீங்க’’ என்று நாக்கைச் சப்புக் கொட்ட, அப்போதே சுனிதாவின் வெற்றி பிரகாசமாகி விட்டது.

‘ஸ்மோக்கி சம்பாரம்’ என்கிற பழரசத்தை தயார் செய்து நீதிபதிகளிடமிருந்து பாசிட்டிவ் கமென்ட்டுகளை வாங்கினார் போட்டியாளர் ஆர்த்தி. அழுவதற்கு தயாராக இருப்பது போன்ற முகபாவத்துடன் எப்போதும் இருக்கும் இவரது முகத்தில் இப்போதுதான் சிரிப்பு வந்தது. ‘Best Cocktailer’ என்கிற கூடுதல் சிறப்பு அடைமொழியும் பரிசும் இவருக்கு கிடைத்தது.

ஆக... இந்த ‘மாக்டெய்ல்’ சுற்றில் கலந்து கொண்ட 13 போட்டியாளர்களில், தேவகி, சுனிதா, மணிகண்டன் மற்றும் ஆர்த்தி ஆகிய நால்வர் மட்டுமே தேர்வாகி பால்கனிக்குச் சென்றார்கள்.

மாஸ்டர் செஃப் தமிழ்
மாஸ்டர் செஃப் தமிழ்

டாப் 6-ல் வந்திருந்தாலும் நூலிழையில் வெற்றியைத் தவற விட்ட இரண்டு போட்டியாளர்களிடம் ‘’அவர்கள் செய்திருந்த தவறு என்ன?” என்பதை நீதிபதிகள் விளக்கினார்கள். குறிப்பாக ‘வின்னி’ செய்திருந்த சிறு பிழையை அவர் தவிர்த்திருந்தால் நிச்சயமாக வின்னிங் போஸ்ட்டிற்கு சென்றிருக்கலாம்.

ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பான ஆறாவது எபிசோடில் ‘Team Challenge’ என்கிற சவாலை மீதமுள்ள போட்டியாளர்கள் சந்திக்க இருக்கிறார்கள். தனித்தனியாக இருந்தாலே சமையலறை அல்லோலகல்லோலமாக இருக்கும். இதில் ‘கூட்டாக’ சேர்ந்து சமையல் என்றால்... அந்தக் கூட்டு எப்படி இருந்தது?

மாஸ்டர் செஃப் 6-வது எபிசோடின் விமர்சனம் நாளை வெளியாகும்!