Published:Updated:

"ஷோவுல நான் ஆதிக்கம் செலுத்தற மாதிரி காட்டினாங்க, ஆனா உண்மை என்னன்னா..." - `நீயா நானா' வைரல் தம்பதி

'நீயா நானா' வைரல் தம்பதி

"முன்னாடியெல்லாம் சும்மா எதார்த்தமா எதையாவது கிண்டலா இவர்கிட்ட பேசுவேன். இப்ப பார்த்துப் பார்த்துதான் பேச தோணுது. இப்ப அவர்மீது எனக்கே அதிக மரியாதை வந்துடுச்சு!" என்று பாரதி சொன்னதும் புன்னகைக்கிறார் சீனிராஜா.

Published:Updated:

"ஷோவுல நான் ஆதிக்கம் செலுத்தற மாதிரி காட்டினாங்க, ஆனா உண்மை என்னன்னா..." - `நீயா நானா' வைரல் தம்பதி

"முன்னாடியெல்லாம் சும்மா எதார்த்தமா எதையாவது கிண்டலா இவர்கிட்ட பேசுவேன். இப்ப பார்த்துப் பார்த்துதான் பேச தோணுது. இப்ப அவர்மீது எனக்கே அதிக மரியாதை வந்துடுச்சு!" என்று பாரதி சொன்னதும் புன்னகைக்கிறார் சீனிராஜா.

'நீயா நானா' வைரல் தம்பதி
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பான `நீயா நானா' நிகழ்ச்சியில் பேசிய தம்பதி குறித்த விவாதங்கள் சமூக வலைதள பக்கங்களை ஆக்கிரமித்திருக்கின்றன. அப்பா - மகள் உறவைப் பலரும் கொண்டாடினாலும் சிலர் அவருடைய மனைவி அவரது கணவரை மதிக்கவில்லை, பொதுவெளியில் கணவரை விட்டுக்கொடுத்து ஏளனம் செய்துவிட்டார் என்பது போலவும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் பேசியதை வைத்து நிச்சயம் அவர்களுடைய வாழ்க்கையை யாராலும் தீர்மானித்திட முடியாது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. அந்த நிகழ்ச்சியில் பேசி வைரலான சீனிராஜாவையும், அவரது மனைவி பாரதியையும், அவர்களது மகள் குணாஷினியையும் சந்தித்துப் பேசினோம்.

'நீயா நானா' வைரல் தம்பதி
'நீயா நானா' வைரல் தம்பதி

"சினிமாவில் நடிக்காமலேயே செலிபரிட்டி ஆகிட்டோம்னு தோணுது. ரெண்டு நாளா பரபரப்பா பேட்டி கொடுப்போம்னுலாம் நினைச்சுக் கூட பார்க்கல. இது வரம் மாதிரி தெரியுது!" என கடகடவென வெள்ளந்தியாய் பேச ஆரம்பித்தார், சீனிராஜன்.

"என் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் புங்கவர்நத்தம். இப்ப சென்னையில் செட்டில் ஆகிட்டோம். என் பொண்ணு 4-ம் வகுப்பு படிக்கிறாங்க. மனைவி தனியார் கம்பெனியில் வேலைக்குப் போயிட்டு இருக்காங்க. மூணு வருஷத்துக்கு முன்னாடி 'நீயா நானா'வில் பேச விருப்பம்னு அவங்க கொடுத்த போன் நம்பரைத் தொடர்பு கொண்டு பேசியிருந்தேன். இந்த முறை அவங்களே இந்த டாபிக் குறித்து பேசறீங்களான்னு கேட்டாங்க. சரின்னுதான் அதுல கலந்துக்கிட்டேன்" என்றதும் அவரது மனைவி பாரதி தொடர்ந்தார்.

'நீயா நானா' வைரல் தம்பதி
'நீயா நானா' வைரல் தம்பதி

"யாராவது எதார்த்தமா என்னைப் பார்த்தா கூட நாம பேசினதைப் பார்த்திருப்பாங்களோன்னு தோணுது. சும்மா ரோட்டுல போயிட்டு இருந்தா கூட கையப் புடிச்சு இழுத்துப் பேசுறாங்க. அதெல்லாம் புதுசா இருக்கு. நான் டீச்சர் டிரெயினிங் முடிச்சிட்டு ஸ்கூலில் ஒர்க் பண்ணிட்டு இருந்தேன். இவருடைய உடல்நிலை பிரச்னை காரணமாகத்தான் அந்த வேலையை விட்டுட்டு தனியார் நிறுவனத்திற்கு வேலைக்குப் போக ஆரம்பிச்சேன்.

அந்த நிகழ்ச்சியில் கலந்துக்கிட்ட அன்னைக்கு எங்களுடைய கல்யாண நாள். அன்னைக்கு வழக்கம்போல குலதெய்வம் கோயிலுக்குப் போயிட்டு வரலாம்னுதான் பிளான் பண்ணியிருந்தோம். இவர் மிகப்பெரிய 'நீயா நானா' ஃபேன். எப்பப் பார்த்தாலும் எங்க வீட்ல இந்த நிகழ்ச்சிதான் ஓடிட்டு இருக்கோம். இதுக்கு முன்னாடி ரெண்டு தடவை அந்த நிகழ்ச்சிக்கு போயிருக்கோம். அப்படித்தான் அன்னைக்கு கூப்பிட்டப்பவும் சரி கல்யாண நாளை இங்கேயே கொண்டாடிப்போம்... காசாச்சும் மிச்சமாகும்னு அங்க கிளம்பி போனோம்!" என்றதும் சீனிராஜா தொடர்ந்தார்.

'நீயா நானா' வைரல் தம்பதி
'நீயா நானா' வைரல் தம்பதி

"நாங்க எந்த முன் தயாரிப்பும் இல்லாமதான் அந்த நிகழ்ச்சியில் கலந்துக்கிட்டோம். மனசுல பட்ட விஷயத்தை பேசினோம். ஒரு நிமிஷம், ரெண்டு நிமிஷம் டிவியில் நம்மளைக் காட்டுவாங்க என்கிற எதிர்பார்ப்போடுதான் போனோம். டிவியில் வரணும்னு ஆசை இருந்ததால அவங்கக் கூப்பிட்டதும் போயிட்டோம். என் மனசுல ரொம்ப நாளா இருந்த மனக்குமுறல். அதனால, அவங்க கேட்டதும் படபடன்னு மனசுல இருந்து பேசிட்டேன்" என்றவரைப் பார்த்து புன்னகைத்துவிட்டு பாரதி பேச ஆரம்பித்தார். 

"ஃபர்ஸ்ட் டைம் பார்க்கும்போது அழுகையாகத்தான் வந்தது. சாயங்காலம் 5 மணிக்கு மேலதான் மொபைலைப் பார்த்தேன். நீ உன் கணவனுக்கு மரியாதை கொடுக்கணும்னுலாம் மெசேஜ் வந்துச்சு. யூடியூப் ஓப்பன் பண்ணினா வரிசையா விமர்சனம் வந்துட்டே இருந்துச்சு. ஃபோனை எடுக்கவே பயமாகிடுச்சு. கையெல்லாம் நடுங்க ஆரம்பிச்சிடுச்சு. இந்த ஷோவுக்கே நான் வர மாட்டேன்னு சொன்னேன். நீங்கதான் கேட்காம கூட்டிட்டு போனீங்கன்னு சொல்லி அழுதுட்டேன். வீட்டுல எப்பவும் அமைதியாகத்தான் இருப்பார். ஏன்பா இந்த ஷோவில் இப்படிப் பேசினீங்கன்னு நாங்களே ஆச்சரியமாகத்தான் பார்த்தோம்" என்றதும் அவர்களது மகள் குணாஷினி தொடர்ந்தார்.

'நீயா நானா' வைரல் தம்பதி
'நீயா நானா' வைரல் தம்பதி

"அழுது, அழுது அம்மாவுக்குத் தலைவலியே வந்துடுச்சு. ஒருபக்கம் அப்பாவை எல்லாரும் பாராட்டும்போது சந்தோஷமா இருந்துச்சு. இன்னொரு பக்கம் அம்மாவை எல்லாரும் திட்டும்போது கோபமா வந்துச்சு. இது வெறும் ரெண்டு நாள்தான் போகும்... அடுத்து நார்மலாகிடும். இதுக்கு ஏன்மா டென்ஷன் ஆகுறீங்கன்னு சொன்னேன்! எனக்கு என் அப்பா கண்ணில் ஈரம் தெரிஞ்சது. அதனால என் அப்பா தோற்கலைன்னு அந்த மேடையில் சொன்னேன்!" என்றதும் புன்னகைத்தவாறு சீனிராஜா தொடர்ந்தார்.

"என் பொண்ணுதான் என் தெய்வம். நான் அவளை நீ இதுவாகணும், அதுவாகணும்னுலாம் சொல்லலை. அவளாவே டாக்டர் ஆகணும்னு சொன்னா. அதுக்காக நான் நிச்சயம் உழைக்கணும். என் பொண்ணு ஆசையை நிறைவேற்றியே ஆகணும். என்னையும் என் மனைவியையும் பார்த்தா அரேஞ்சிடு மேரேஜ் மாதிரி தெரியாது..." என்றவுடன் அவரது மனைவி பாரதி இடைமறித்தார்.

"நாங்க வீட்ல எப்பவும் ஒருத்தரையொருத்தர் ஓட்டிட்டு கிண்டல் பண்ணிகிட்டு ஜாலியா இருப்போம். அப்படி வீட்ல எப்படி கேஷூவலா பேசுவோமோ அப்படியே ஷோவுலயும் பேசிட்டேன். நான் ஷோவுல அந்த ஏபிசிடி படிப்பாருன்னு சொன்னதெல்லாம் வராது, காட்ட மாட்டாங்கன்னு நினைச்சேன். ஆனா, அதுதான் வைரலாகும்னு நாங்க எதிர்பார்க்கலை. இவர்கூட நீ அந்த வார்த்தையை சொல்லியிருக்கக் கூடாதோன்னு சொன்னார். அந்த அளவுக்கு அந்த வார்த்தை வைரலாகிடுச்சு.

'நீயா நானா' வைரல் தம்பதி
'நீயா நானா' வைரல் தம்பதி

ஷோவில் என்னமோ நான்தான் வீட்டில் ஆதிக்கம் காட்டுன மாதிரி காட்டினாங்க. ஆனா, வீட்டில் நான்தான் பயந்து பயந்து இருப்பேன். ஏதாவது அவர்கிட்ட கேட்கணும்னாலும் பயந்துதான் கேட்பேன்" என்றவுடன், "அப்படியெல்லாம் இல்லைங்க..." என்ற சீனிராஜா தொடர்ந்து பேசினார்.

"ஒரு வருஷமா கிட்னி பிரச்னை. சின்ன வயசிலேயே மளிகைக் கடைக்கு வேலைக்கு வந்துட்டேன். டெலிவரிக்கு அலையுறதனால நேரத்துக்குச் சாப்பிட முடியாது, தண்ணீர் குடிக்க முடியாது, யூரின் போக முடியாது. அப்படி இருந்து, இருந்து கிட்னி சுருங்கி போயிடுச்சுன்னு சொல்லிட்டாங்க. ஒரு வருஷமா காப்பீட்டுத்திட்டம் பயன்படுத்தி அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் பண்ணிட்டு இருக்கேன். பாப்பா படிப்பு செலவு, போக்குவரத்து செலவுக்குத்தான் கொஞ்சம் சிரமமா இருக்கு.

பாப்பா டாக்டர் ஆகணும்னு ஆசைன்னு சொன்னா. என்னால படிக்க முடியல. அந்தப் படிப்பை பாப்பாவுக்குக் கொடுக்கணும்னு நினைச்சேன். அதனாலதான் கஷ்டப்பட்டு வேலைக்குப் போயிட்டு இருக்கேன். எனக்கு உடல்நிலை சரியில்லைன்னு என் மனைவிக்குத் தெரியும். நீங்க வேலைக்குப் போயே ஆகணும்னுலாம் அவங்க சொன்னதேயில்லை. உங்களால முடியலைன்னா விடுங்க... நான் பார்த்துக்கிறேன்னுதான் சொல்லுவாங்க. இப்ப ரெண்டு பேருக்குள்ளேயும் காதல் அதிகமாகியிருக்கு.

எனக்கு அவங்களை வேலைக்கு அனுப்பணும்னுலாம் ஆசையில்லை. இப்ப ரெண்டு, மூணு வருஷமாகத்தான் வேலைக்குப் போறாங்க. எனக்கு உடம்பு சரியில்லாததாலதான் அவங்க வேலைக்குப் போறாங்க. எங்க அப்பா, என் அத்தை பையன் கனி எனக்கு உதவி பண்றாங்க. அந்த உதவியால கொஞ்சம் சமாளிக்க முடியுது. என் அப்பா சின்ன வயசில இருந்து வேலைக்குப் போய் கஷ்டப்பட்டாங்க. இன்னமும் அவங்க எனக்கு உதவி பண்றாங்கன்னு ரொம்ப வருத்தமா இருக்கு. நமக்காக ஓடிட்டு இருக்காங்கன்னு கஷ்டமா இருக்கு. அப்பா, அம்மாவை உட்கார வச்சு பார்க்க முடியாம அவங்களை இன்னமும் எனக்காக ஓட வைக்கிறேன்னு வருத்தம் அதிகமா இருக்கு. பாப்பாவுக்கு படிப்புச் செலவுக்கு யாராவது உதவினாங்கன்னா அது போதும் எனக்கு!" என நெகிழ்ந்தவரைத் தொடர்ந்து அவரது மனைவி பாரதி பேசினார்.

'நீயா நானா' வைரல் தம்பதி
'நீயா நானா' வைரல் தம்பதி

"எனக்கு இப்ப அவரைப் பார்த்தா கும்பிடணும்போல இருக்கு. நீங்க நல்ல கணவராக இருக்கீங்களோ இல்லையோ நல்ல அப்பாவாக இருக்கீங்கன்னு அடிக்கடி சொல்லுவேன்.  முன்னாடியெல்லாம் சும்மா எதார்த்தமா எதையாவது கிண்டலா இவர்கிட்ட பேசுவேன். இப்ப பார்த்துப் பார்த்துதான் பேச தோணுது. இப்ப அவர்மீது எனக்கே அதிக மரியாதை வந்துடுச்சு!" என்று பாரதி முடித்ததும் புன்னகைக்கிறார் சீனிராஜா. 

இன்னும் பல விஷயங்கள் குறித்து சீனிராஜாவும், அவரது மனைவி பாரதியும் நம்மிடையே பகிர்ந்து கொண்டனர். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!