Published:Updated:

மதுர மக்கள்: "நான் பிக்பாஸுக்குப் போகணும்னா இந்த 2 பேர் கண்டிப்பா வரணும்!"- ராமர் அட்ராசிட்டீஸ்!

விஜய் டிவி ராமர்

மதுரையின் அடையாளமே அதன் மக்கள்தான். மதுரையின் நலனுக்காகவே உழைக்கும் மக்களை அடையாளப்படுத்துவதும், அவர்களின் குரல்களை உலகிற்கு ஒலிக்கச்செய்வதுமே இந்தத் தொடரின் நோக்கம்.

Published:Updated:

மதுர மக்கள்: "நான் பிக்பாஸுக்குப் போகணும்னா இந்த 2 பேர் கண்டிப்பா வரணும்!"- ராமர் அட்ராசிட்டீஸ்!

மதுரையின் அடையாளமே அதன் மக்கள்தான். மதுரையின் நலனுக்காகவே உழைக்கும் மக்களை அடையாளப்படுத்துவதும், அவர்களின் குரல்களை உலகிற்கு ஒலிக்கச்செய்வதுமே இந்தத் தொடரின் நோக்கம்.

விஜய் டிவி ராமர்
மதுரை - மேலூர் ரோட்டில் நரசிங்கம்பட்டி விலக்கிலிருந்து நாலு கிலோமீட்டர் உள்ளே போனால் அரிட்டாபட்டி கிராமம். யூனியன் ஆபிஸ் பின்புறம் உள்ள குளத்தில் குளித்துக்கொண்டிருந்தார் விஜய் டிவி ராமர். "அட வாங்க வாங்க... நமக்கு சொந்த ஊரே இந்த அரிட்டாபட்டிதான். இப்போ வீடு மேலூருக்கு மாறிப்போயாச்சு. ஆனாலும் விவசாயம் எல்லாம் ஊருக்குள்ளதான் நடந்துட்டு இருக்கு. அதுவும் கொரோனா காலம் வேற மெட்ராசு பக்கம் போறத ரொம்பவே கம்மி பண்ணிட்டேன். இருக்க நேரத்துல அப்டியே வயக்காட்டு பக்கம் வந்துபோறது இந்த அழுத்தமான மனிநிலையிலிருந்து ரொம்பவே இதமா இருக்கு!" - தன் ஊர் நினைவுகளுடன் பேசத் துவங்குகிறார் ராமர்.
விஜய் டிவி ராமர்
விஜய் டிவி ராமர்

"இப்போ காலம் எவ்வளோ மாறிடுச்சு. நினைச்சா நினைச்ச இடத்துல இருந்து எல்லாமே அனுபவிச்சுக்க முடியுது. 96-97 காலகட்டத்துல வாய்ப்புக்காக ஓடிக்கிட்டு இருக்கோம். அப்போ நியூ பாய்ஸ் காமெடின்னு ஒரு காமெடி க்ளப் ஆரம்பிச்சு ஒவ்வொரு புரோகிராமுக்காகவும் காத்திருப்போம். அடுத்த வாரம் புரோகிராம்னா ரெண்டு நாளுக்கு முன்னாடியே லெட்டர் வந்துரும். நானும் ரோபோ சங்கரும் கறுப்பு பேண்ட் வெள்ளை சட்டை ஒரு டை வச்சுக்கிட்டு புரோகிராமுக்குக் கிளம்பிருவோம். அங்க போனா இன்னொரு புரோகிராம் இருக்கு. உடனே வாங்கன்னு சொல்லிருவாங்க. இருக்க ஒரு ட்ரெஸ்ஸ அடிபம்புல துவைச்சுட்டு ஒரு எம்-80 வண்டில ரோபோ சங்கரு பின்னாடி உட்கார்ந்து சட்டைய பிடிச்சுக்கிட்டே போனா வண்டி வேகத்துலயே சட்டை காஞ்சுரும். அதை திரும்ப தேச்சு போட்டு அடுத்த ஷோவுக்கு ரெடி ஆவோம். இப்படி ஆரம்ப காலகட்டத்துல மதுரையில நாங்க அலையாத இடம் இல்ல. போடாத வேஷம் இல்ல. இப்போ நினைச்சுப்பார்த்தாலும் மனசுக்குள்ள அவ்வளவு இதமாதான் இருக்கு.

இதோ நீங்க ஊருக்குள்ள வர்றப்போ இப்போ இருக்க மாதிரி ரோடு வசதில்லாம் அப்போ கிடையாது. நடையா நடந்துதான் போகணும். அமெரிக்கன் காலேஜ்லதான் எனக்கு 'கலக்கப்போவது யாரு' ஆடிசன் வச்சாங்க. அதுக்கு முன்ன ரெண்டு சீசன்லயும் பெருசா எதுவும் நடக்காததால மூணாவது சீசனுக்கு போறதுக்கு மனசே வரல. ஆனாலும் கூட இருந்த பசங்க கூட்டி போயிட்டாங்க. காலையில ஒன்பது மணிக்கு போனவனுக்கு ராத்திரி பத்து மணி வரைக்கும் யாரும் எதுவும் கூப்பிடல. நேரா போய், 'அய்யா... இந்த மாதிரி ரொம்ப அவுட்டர்ல இருக்க கிராமத்துல இருந்து வந்துருக்கேன். எனக்கு கடைசி பஸ் பதினோரு மணிக்கு அதையும் விட்டுட்டா நடந்தேதான் ஊருபோயி சேரணும்'னு சொல்லவும் அடுத்த பத்து நிமிஷத்துல எனக்கு ஆடிசன் நடந்துச்சு. ஆடிசன் செலக்ட்டான கையோட கடைசி பஸ்சு படிச்சு ஊரு முனைக்கு வந்துட்டேன். அங்க இருந்து ஒரே ஓட்டம் நாலு கிலோமீட்டர் உள்ள இருக்க ஊருக்குள்ல வந்துட்டேன்.

விஜய் டிவி ராமர்
விஜய் டிவி ராமர்

பள்ளிக்கூடத்துல எல்லாம் நான்தான் கிளாஸ் லீடர். கூடப்பொறந்தவங்க ஆறு பேரு... நான் மட்டும்தான் காலேஜ் டிகிரி முடிச்சேன். மன்னர் காலேஜ்ல பிபிஏ முடிச்சேன். அப்பா மூலமா ஒயிலாட்டம் அம்மா மூலமா மத்தவங்கள இமிட்டேட் பண்றதுன்னு சின்ன சின்ன கலைகளைக் கத்துக்கிட்டேன். மன்னர் காலேஜ்ல இருந்தப்போ கோரிப்பாளையம் பின்னால ஷெனாய் நகர்ல்லதான் ஹாஸ்டல். ஹாஸ்டல் வார்டன் மாதிரியே ராத்திரி நேரத்துல பேசிப்பார்ப்பேன். நிஜமான வார்டன்னு நினைச்சு பசங்க அமைதி ஆகிடுவாங்க. நிஜமாவே நமக்கு மத்தவங்க குரல் வரும்போலன்னு அதுலதான் இன்னமும் நம்பிக்கையும் தைரியமும் வந்துச்சு.

விஜய் டிவிக்கு வர்றதுக்கு முன்னாடி, மீனாட்சி மிஷன் மருத்துவமனையோட நகைச்சுவை மன்றத்துல இருந்தேன். அது பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் ஐயாவோட தலைமையில இயங்கிட்டு இருந்துச்சு. அதாவது பள்ளிக்குழந்தைகள், மருத்துவமனை நோயாளிகள் இவங்களை சிரிக்கவைக்க நிகழ்ச்சி நடத்துவாங்க. அப்போதான் நான் ரோபோ ஷங்கர், மதுரை முத்து எல்லாம் ஒரே டீமா வேலைபார்த்தோம். அப்போ இருந்தே எங்களுக்குள்ள நிறைய புரிதல்களும் கெமிஸ்ட்ரியும் இருக்கும். அதுதான் இப்போவரை ஸ்டேஜ்ல வெளிப்படுது.

இப்பொ ரெண்டு வருஷமா சித்திரை திருவிழா இல்லாதது ரொம்பவே வருத்தம்தான். எங்களோட காலகட்டத்துல எல்லாம், கெட்ட அலப்பரையா இருக்கும். ஒவ்வொரு மண்டகப்படியா போறது தண்ணிப்பந்தல் மோர்ப்பந்தல்னு ரவுசு பண்றது, தண்ணிப்பீச்சி அடிக்கிறதுன்னு மதம் இனம் எல்லாம் கடந்து மதுரக்காரன் கொண்டாடுற ஒரு திருவிழா அது. இன்னமும் அந்த நினைவுகள் எல்லாம் மனசுக்குள்ள இருக்கத்தான் செய்யுது."

விஜய் டிவி ராமர்
விஜய் டிவி ராமர்

ராமருக்கு சிலை வைக்கணும்னு சொன்னதும் உங்களோட மீம்ஸ் வைரல் ஆச்சே?

ஆமாம் அதுல ஒரு பக்கம் பயம். எங்க இவனே ஆள வச்சு செட்பண்றானானு கவர்மெண்டு நினைச்சுருமோன்னு... ஆனாலும் மக்கள் நம்மல நினைச்சுப்பார்க்குறாங்களேன்னு ஒரு கலைஞனா எப்போவும் சந்தோஷம்தான்!

எலெக்‌ஷனுக்கு வேட்பாளர் அறிவிக்கிற மாதிரி, ஒவ்வொரு தடவையும் பிக்பாஸுக்கு லிஸ்ட் வர்றப்போ எல்லாம் ராமரோட பேரு இருக்குமான்னு மக்கள் எதிர்பார்க்குறாங்களே?

இது நிஜமா மக்கள் எதிர்பார்க்குறாங்களா இல்லை நீங்களா கேட்குறீங்களா? நான் போறன்னா இல்லையான்னு தெரில. ஆனா நான் அந்த வீட்டுக்குள்ள போனா பழைய ஜோக்கு தங்கதுரையும் பிரியங்காவும் என்கூட இருக்கணும். இருந்தா வீடே ரெண்டா போற அளவுக்கு எங்களோட அழிச்சாட்டியம் இருக்கும்!

விஜய் டிவி ராமர், பாலா
விஜய் டிவி ராமர், பாலா
Screenshot grabbed from YouTube

அடுத்து அடுத்து என்ன புராஜெக்ட் போயிட்டு இருக்கு?

டிவி ஷோக்கள்ல பெண் வேஷம் போட்டு நடிச்சதால படத்துலயும் பெண் வேஷம் போட சொல்லி கேட்குறாங்க. ஆரம்பத்துல அப்படி நடிச்சேன். தொடர்ச்சியா அது மாதிரி வரவும் கொஞ்ச நாள் எதுவும் பண்ணாம இருந்தேன். பசங்களுக்கும் அதுல உடன்பாடு இல்லை. அது போக இப்போ நிறைய கேரக்டர் ரோல் பண்றேன். 'போடா முண்டம்'னு ஒரு படத்துல ஹீரோவா நடிச்சு முடிச்சுருக்கேன். நிறைய படங்கள் கொரோனாவால ரிலீஸ் தள்ளிப்போயிட்டே இருக்கு. எல்லாம் சரியாகி எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கணும். அதுவரை எல்லாரும் பாதுகாப்பா பத்திரமா இருங்கய்யா!"