Published:Updated:

விகடன் TV: “சீக்கிரமே குட்நியூஸ் சொல்றேன்!”

பிரியங்கா
பிரீமியம் ஸ்டோரி
News
பிரியங்கா

எனக்கு சினிமாவில் ஹீரோயினாக நடிக்கிறதுல உடன்பாடில்லை. சிஸ்டர் ரோல்னா தயங்காம ஓகே சொல்லிடுவேன்.

`இவங்க சின்னத்திரை ஹன்சிகா... இல்ல இல்ல இவங்க சின்னத்திரை குஷ்பு...’ என இவரின் ரசிகர்கள் இன்றளவும் சமூக வலைதளப் பக்கங்களில் இருவேறு விதமாக கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். அவரேதான்... `ரோஜா’ தொடரின் மூலம் ரோஜாவாக மக்கள் மனதில் இடம் பிடித்த பிரியங்கா, தற்போது ஜீ தமிழ் டி.வி-யில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் `சீதா ராமன்’ தொடர் மூலம் சீதாவாக கம்பேக் கொடுத்திருக்கிறார். ஷூட்டிங் இடைவேளையில் அவரைச் சந்தித்துப் பேசினோம்.

“ஹைதராபாத்ல இருந்து மொழி தெரியாம இங்க வந்து இன்னைக்குத் தமிழ் மக்கள் மனசுல இடம் பிடிச்சிருக்கேங்கிறது பெருமையா இருக்கு. நான் லாரன்ஸ் மாஸ்டருடைய பெரிய ரசிகை. அவங்க மூலமா தமிழில் `காஞ்சனா 3’ படத்துல என்ட்ரியானேன். ‘சின்ன கேரக்டராக இருந்தாலும் பரவாயில்லை, தமிழில் கண்டிப்பா பண்ணணும்’னு மாஸ்டர்கிட்ட சொல்லித்தான் அந்தப் படத்துல நடிச்சேன். அதுக்கப்புறம் `ரோஜா’ சீரியல் வாய்ப்பு கிடைச்சது.

அந்த சீரியல் எனக்கு நிறைய அனுபவங்கள் கொடுத்துச்சு. அங்கதான் தமிழ் பேசக் கத்துக்கிட்டேன். இந்த இடத்துல என் பெற்றோருக்கு நன்றி சொல்லியே ஆகணும். என் கூடவே அம்மா ஷூட்டிங்குக்கு வருவாங்க. அந்த சீரியல் மூலமா இவ்வளவு ரசிகர்கள் கிடைப்பாங்கன்னு கொஞ்சமும் எதிர்பார்க்கல. நான்கூட தூங்குவேன்... என் ஃபேன்ஸ் தூங்காம எனக்காக மெனக்கெட்டு தொடர்ந்து போஸ்ட் போட்டுட்டு இருப்பாங்க. என்னை செல்லமா `க்யூட் அக்கா’ன்னு சொல்லுவாங்க. அவங்களுக்கு என் ஸ்மைல் ரொம்பப் பிடிக்கும். அதே ஸ்மைலுடன் தொடர்ந்து ஓடிட்டே இருக்கேன்” என்றவரிடம் `சீதா ராமன்’ குறித்துக் கேட்டோம்.

‘‘ரோஜா முடிச்சிட்டு மூணு மாசம் ஃபேமிலி கூட நேரம் செலவழிக்கலாம்னு நினைச்சேன். அதனால வந்த எல்லா வாய்ப்புகளையும் தவிர்த்தேன். ஆனா, ஒரு மாசத்துக்கு மேல என்னால வீட்ல சும்மா இருக்க முடியல. அந்த சமயம் கரெக்டா இந்த வாய்ப்பு வந்துச்சு.

இந்த சீரியல் புரொமோவில் நான் சொன்ன மாதிரி `அழகுங்கிறது முகத்துல இல்ல... மனசுல இருக்கு’ங்கிறதுதான் இதுக்கு அடிப்படை. பாடி ஷேமிங் பண்ணுறவங்களுக்கு, பண்ணணும்னு நினைக்கிறவங்களுக்கு மிகப்பெரிய பாடத்தை இது கொடுக்கும். பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்காங்க. என்மேல நம்பிக்கை வச்சு இந்த வாய்ப்பைக் கொடுத்திருக்காங்க. அதைக் காப்பாத்தணும்!

பிரியங்கா
பிரியங்கா

இந்த சீரியலுக்காக நான் ரொம்பவே மெனக்கெட்டிருக்கேன். எல்லாரும் சாதாரணமா நான் க்ளிப் போட்டிருக்கேன்னு நினைக்கிறாங்க.. அந்த க்ளிப் போடுறதுக்காக பல் டாக்டர் வந்து பல சிட்டிங்கிற்குப் பிறகுதான் பண்ணியிருக்கோம். க்ளிப் போட்ட பிறகு பல் ரொம்ப சென்சிட்டிவ் ஆகிடும். எதுவும் சாப்பிட முடியாது... ரொம்ப வலிக்கும். என் முகத்துக்கு எந்தக் கண்ணாடி செட் ஆகாதோ அதைத்தான் செலக்ட் பண்ணினேன். கண்ணாடி போட்டுப் பழக்கமில்லைங்கிறதால தலைவலியும் இருக்கு. ஆனாலும், சீரியலுக்காக இதையெல்லாம் செய்யறேன். கஷ்டப்பட்டுப் பண்ணினா மட்டும்தான் நமக்கு ரசிகர்கள் கிடைப்பாங்க, அவார்டெல்லாம் கிடைக்கும். அப்படித்தான் ரோஜாவில் எனக்குக் கிடைச்சது.

இந்த சீரியல் பண்ணப்போறேன்னு சொன்னப்ப என் அம்மாவே, ‘வேண்டாம்... நீ கண்ணாடி, க்ளிப் எல்லாம் போட்டா நல்லா இருக்க மாட்டே’ன்னு தடுத்தாங்க. ‘இல்லம்மா, இதுதான் இந்தக் கேரக்டருடைய சக்சஸ்’னு சொன்னேன்’’ என்றவரிடம் சினிமா குறித்துக் கேட்டால், சிரிக்கிறார்.

“எனக்கு சினிமாவில் ஹீரோயினாக நடிக்கிறதுல உடன்பாடில்லை. சிஸ்டர் ரோல்னா தயங்காம ஓகே சொல்லிடுவேன். ‘தங்கச்சி கேரக்டர்னாலே பிரியங்காதான்பா’ன்னு சொல்லணும்... அதுதான் என் ஆசை! ரோஜா பண்ணும்போதே பிக்பாஸ் ஆஃபர் வந்துச்சு. எனக்கு ஒரு புராஜெக்ட் பண்ணும்போது அதைப் பாதியிலேயே விட்டுட்டு வர்றதுல உடன்பாடில்லைங்கிறதனாலதான் பிக்பாஸுக்கு நோ சொன்னேன்’’ என்றவரிடம் ‘காதல், கல்யாணம்’ என்று கேட்டால், வெட்கப்படுகிறார்.

‘‘உண்மையைச் சொல்லணும்னா நானும் என் கல்யாணத்துக்குத்தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன். என் ரசிகர்களுக்கு சீக்கிரமே குட் நியூஸ் சொல்றேன்!” என்கிற சஸ்பென்ஸுடன் நம்மிடமிருந்து விடைபெற்றார்.