சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

விகடன் TV: ஷூட்டிங் நடத்தலாமா... வேண்டாமா?

ஷூட்டிங்
பிரீமியம் ஸ்டோரி
News
ஷூட்டிங்

ஜனங்க வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிற நாள்கள்ல சீரியல்கள் கொஞ்சம் ரிலாக்ஸ் தரும்தான்.

உங்கள் அபிமான சீரியல்கள் பலவற்றிலும், இப்போது ஆள் மாற்றங்களைப் பார்த்துக் கொண்டிருப்பீர்கள். சென்ற வாரம் வரை கொரோனா பாதிக்கப்பட்டு க்வாரன்டீனிலிருந்த த்திகா, புதிய சீரியல் ஒன்றில் கமிட் ஆகி, ஷூட்டிங் வந்துவிட்டார். `ஊரடங்கில் ஷூட்டிங் வர வேண்டுமா' எனக் கேட்ப‌வர்களும் உயிருக்கு பயந்து ஷூட்டிங் வர மறுப்ப‌வர்களுமே தூக்கியடிக்கப்படுகிறார்கள். இந்த இதழை நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் ஊரடங்கின் மூன்றாவது வாரத்தில்கூட `சீரியல் ஷூட்டிங் நடத்தலாம்' என அரசு சொல்லவில்லை. ஆனால் ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கிறது. கேட்டால், `ஷூட்டிங் நடத்தக் கூடாது என்றும் சொல்லவில்லையே' என்கிறார்கள். ஏன் இந்தக் குழப்பம்?

``கொரோனா முதல் அலையின் போதே சீனியர் நடிகைகள் சிலர் ஷூட்டிங் வர மறுத்தாங்க. `மறுத்தா சீரியல்ல தொடர முடியாது'ங்கிற சூழல் வந்தப்ப, துணிச்சலா அவங்களாகவே சீரியலை விட்டு வெளியேறிட்டாங்க. சீனியர் ஆர்ட்டிஸ்டுகள் பொருளாதார ரீதியா பலமா இருக்கறதால இந்த முடிவை எடுக்கலாம். ஆனா சீரியலை மட்டுமே நம்பி இருக்கிறவங்க நிலைமை? அவங்கதான் இன்னைக்கு பெரிய பாதிப்பைச் சந்திச்சிட்டிருக்காங்க. ஒருபுறம், சீரியல்தான் பிழைப்புங்கிறப்ப அனுமதி வாங்கியோ, வாங்காமலோ ஷூட்டிங் நடந்தா நல்லதுன்னு நினைக்க வேண்டியிருக்கு. இன்னொரு பக்கம், அப்படி நடக்கற ஷூட்டிங்கிற்குப் போகவும் பயமா இருக்கு. நம்மைவிட நம்ம வீட்டுல இருக்கிறவங்க அதிகமா பயப்படுறாங்க. உயிருக்கு பயந்து ஷூட்டிங் போகலைன்னா, கொரோனா முடியறப்ப சீரியல்ல நாம இருக்க மாட்டோம்கிறது இன்னொரு கொடுமை. இப்படி நாலா பக்கமும் இருந்து எங்களுக்கு அடி'' என்கிறார், பெயர் குறிப்பிட விரும்பாத அந்த நடிகர்.

ரேகா சுரேஷ்
ரேகா சுரேஷ்
அன்வர்
அன்வர்
சாந்தினி
சாந்தினி

``சீரியல் நடிகர்களின் இந்தப் பிரச்னை தீரணும்னா, அரசு தெளிவா ஒரு நடவடிக்கை எடுக்கணும்' என்கிறார் நடிகை சாந்தினி. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு சில சீரியல்களின் ஷூட்டிங் நடந்தபோது, அதைக் கண்டித்த இவரிடம் பேசினேன்.

``இப்பவும், நடிகர் நடிகைகள், டெக்னீஷியன்கள் என இந்த ஃபீல்டில் இருக்கும் எல்லாரையும் கவனத்தில் கொண்டு அரசே தெளிவான ஒரு முடிவை எடுத்து அறிவிச்சா பிரச்னை இருக்காது. ஜனங்க வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிற நாள்கள்ல சீரியல்கள் கொஞ்சம் ரிலாக்ஸ் தரும்தான். அதேபோல, அலட்சியமில்ல, `பாதுகாப்புடன் எடுக்கலாம்'னு ஒரு நம்பிக்கையில்தான் ஷூட்டிங் நடத்தப்படறதாகவும் சொல்றாங்க. அதேநேரம் ஊரடங்கு விதிகளை மீறி ஷூட்டிங் நடக்குதான்னா, அதுபத்தி எங்கிட்ட இப்ப எந்தக் கருத்தும் இல்ல. ஏன்னா பெப்சியே ஷூட்டிங்ல கலந்துக்கிடறது அவங்கவங்க இஷ்டம்னு சொல்லிடுச்சே'' என்கிறார் சாந்தினி.

சீனியர் நடிகை ரேகா சுரேஷிடம் பேசினேன்.

``கவலை தரக்கூடிய விஷயம் தான் இது. ஆர்ட்டிஸ்டுகள் அவங்கவங்க விரும்பிய முடிவை எடுத்துக்க வேண்டியதுதான். நான் இப்ப ஒரு சீரியல்ல நடிச்சிட்டிருக்கேன். அதுக்கு குறைஞ்சது ஒரு வாரமாச்சும் ஷூட்டிங் இருக்கும். இன்னைக்கு நிலைமைக்கு இது போதும்னு முடிவெடுத்துட்டேன். அதனால, இன்னொரு சீரியல் வாய்ப்பு வந்தும் அதை வேண்டாம்னு மறுத்துட்டேன்’' என்கிறார் இவர்.

``தினக்கூலி வேலை செய்றவங்க எவ்வளவோ பேர் வேலை இல்லாம இருக்காங்க. இந்த நிலையில சீரியல் ஷூட்டிங் அவசியமான்னு சிலர் கேக்கறாங்க. அதுவும் சரிதான்.என்னைப் பொறுத்தவரை இன்றைய தேதிக்கு உயிர் வாழறதுதான் ரொம்ப முக்கியம்னு நினைக்கிறேன். அதனால சேனல், சீரியல் தயாரிப்பாளர்கள், அரசு எல்லாரும் சேர்ந்து ஒரு நல்லதொரு முடிவை எடுத்தா மட்டுமே சின்னத்திரைக் கலைஞர்கள் வாழ்க்கையில விடியல் வரும்'’ என்கிறார் நடிகர் சாய்சக்தி.

இதற்கிடையில், `எதற்குப் பிரச்னை' என சென்னையிலிருந்து சில சீரியல்களின் ஷூட்டிங்குகள் தற்காலிகமாக ஆந்திராவுக்கு மாற்றப்பட்டிருக்கின்றன. ஹைதராபாத் நாகேஸ்வர ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகின்றன இந்த ஷூட்டிங்குகள்.

அங்கு நடைபெற்றுவரும் ஷூட்டிங் குறித்து தற்போது ஹைதராபாத்தில் வசித்து வரும் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அன்வரிடம் பேசினேன்.

``இங்கேயுமே தமிழ்நாட்டு நிலைமைதான். அதாவது உண்டுன்னும் சொல்லலை. இல்லைன்னும் சொல்லலை. ஆனா நாகேஸ்வர ராவ் பிலிம் சிட்டிங்கிறது எல்லா வசதிகளும், ஷூட்டிங்கிற்குத் தேவைப்படும் எல்லா வசதிகளையும் உள்ளடக்கிய ஒரு இடம்கிறதால அங்க ஷூட்டிங் நடந்திட்டிருக்கு. காலையில உள்ளே போயிட்டா ஷூட் முடியற வரைக்கும் வெளியில் வரத் தேவையே இருக்காது. அதனால, தெலுங்கு மட்டுமல்ல, இந்தி, கன்னடம், தமிழ் சீரியல்களின் ஷூட்டிங்கும் அமோகமா நடந்திட்டிருக்கு'' என்கிறார் அன்வர்.

விகடன் TV: ஷூட்டிங் நடத்தலாமா... வேண்டாமா?

ஹைதராபாத்தில் நடக்கும் ஷூட்டிங்கைப் பொறுத்தவரை ஷூட்டிங் நடத்துபவர்கள் அரசின் ஒரு உத்தரவைக் கண்டிப்பாக மதிக்கிறார்களாம். அதாவது தளர்வு நேரம் காலை 7 முதல் மாலை 5 மணிவரை என்றால் அந்த நேரத்திற்குள் ஷூட்டிங்கை முடித்துக்கொள்கிறார்களாம்.

அனுமதி இல்லாமல் ரகசியமாக நடத்தப்படும் ஷூட்டிங்குகள், ஷூட்டிங் வராத நட்சத்திரங்கள் தூக்கியடிக்கப்படுதல், சேதாரமடைந்திருக்கும் சின்னத்திரைக் கலைஞர்களின் வாழ்வாதாரம் என நீளும் இந்த விவகாரத்தில், சரியான தீர்வு கிடைக்க வேண்டுமெனில் அரசு முதலில் தெளிவான ஒரு முடிவை அறிவிக்க வேண்டும். கூடவே சேனல்களும் சின்னத்திரைக் கலைஞர்கள்மீது கருணை காட்ட வேண்டும்.