Published:Updated:

AKS - 12|ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ட்விஸ்ட்டா இருக்கே… ஆதலினால் காதல் செய்யப்போவது யார் யாரோ?!

AKS - 12| ஆதலினால் காதல் செய்வீர்
AKS - 12| ஆதலினால் காதல் செய்வீர்

விகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் இணைந்து வழங்கும் 'ஆதலினால் காதல் செய்வீர்' (AKS) டிஜிட்டல் சீரிஸ் தினமும் இரவு 8.30 மணிக்கு யூடியூபில் ஒளிபரப்பாகிறது. இதில் நேற்று (07-09-2021) வெளியான 12-வது எபிசோட் எப்படி இருந்தது?!

எப்போதும் மகிழ்ச்சியும், சிரிப்புமாக இருக்கும் பாண்டியன் மற்றும் கவிதாவை பரத்தின் வார்த்தைகள் புண்படுத்துகிறது. பாண்டியன் மற்றும் கவிதாவை காதலர்களாக நினைத்துக்கொண்டு பரத் பேசியது தவறு என பாண்டியனிடம் மன்னிப்பு கேட்கச் சொல்கிறாள் புனிதா. பரத் மன்னிப்பு கேட்டும் பாண்டியனால் எளிதாக சமாதானமாக முடியவில்லை. அதே சமயம் பரத்துக்காக பாண்டியனை கீழே தள்ளிவிட்ட சிவா தன் தவறுக்கு வருந்தாமல் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறான்.

கவிதா, ”பரவாயில்ல, இத நம்ம ஊரிலேயே ஏற்கனவே நிறைய பார்த்துட்டோம் விடு” என்று பாண்டியனிடம் வருத்தத்துடன் சொல்கிறாள். பிறகு எல்லோரிடமும் தாங்கள் இருவரும் சிறுவயதிலிருந்து நண்பர்கள், தங்களுக்குள் ஆண் - பெண் பாகுபாடு தெரியாமலேயே பழகிவிட்டோம் என்றும், இதற்கு பிறகு தன்னால் விளக்கம் கொடுக்க முடியாது என்றும் எல்லோரிடமும் தெளிவாக கூறுகிறாள்.

தன்னிடம் ’சாரி’ கேட்கும் பரத்தை ’சில் ப்ரோ’ என்று சொல்லி சிரிக்கிறாள் கவிதா. இவை எல்லாவற்றையும் கொஞ்சம் ஆச்சரியமாக லேசான புன்னகையுடன் ஓரமாக நின்று பார்க்கிறான் சிவா. அவன் அப்படி கவிதாவை பார்த்து புன்னகைக்கும்பொழுது நேற்றுவரை சிவாவுக்கும், காயத்ரிக்கும் காதல் ஏற்படுமா என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்த மனது சட்டென ’சிவாவின் காதலி இடத்தில் காயத்ரியை டிஸ்சார்ஜ் செய்துவிட்டு கவிதாவை அட்மிட் செய்’ என்கிறது.

AKS - 12| ஆதலினால் காதல் செய்வீர்
AKS - 12| ஆதலினால் காதல் செய்வீர்

சிவாவைப் போல் எல்லாவற்றுக்கும் உடனே மூக்கின் மேல் கோபம் வரும் நபருக்கு கவிதாவைப் போல் பொறுமையாக, எல்லாவற்றையும் எளிதாக எடுத்துக்கொண்டு கடந்துசெல்லும் பெண் பொருத்தமாக இருப்பாள். சிவாவின் மனநல மருத்துவ சிகிச்சைக்கு கூட இப்படியான நபர்களுடன் தங்கியிருப்பது உதவியாக இருக்க முடியும் என்று தோன்றுகிறது. அந்த சிறு புன்னகைக்கே இவ்வளவு யோசிக்க முடிவதெல்லாம் இத்தனை ஆண்டுகால தமிழ் சினிமாவின் பாதிப்பு அன்றி வேறென்ன?!

புனிதா எப்போதும் மன முதிர்ச்சியுடன் நடந்து கொள்ளக் கூடியவள். எல்லோரிடமும் அக்கறையாக, பொறுப்பாக பேசக்கூடியவள். ஆனால், புனிதாவே கவிதாவின் மனமுதிர்ச்சியை கண்டு பிரமித்து, ரசித்து அருகில் சென்று, ‘க்யூட் கவிதா’ என்று கொஞ்சுகிறாள்.

எப்போதும் சிரித்துக் கொண்டே இருந்தாலும், எல்லாவற்றையும் ஈஸியாக எடுத்துக் கொண்டாலும் அனைவரும் சமாதானமாகி சென்ற பிறகு கவிதா மனவருத்தத்துடன் யோசனையாக உட்கார்ந்திருக்கிறாள். காயத்ரி, கவிதாவிடம் வந்து மன்னிப்பு கேட்கிறாள். தானும் அவர்கள் இருவரையும் காதலர்களாக நினைத்திருந்ததாக கூறுகிறாள். கவிதா அதை பற்றி இனிமேல் பேச வேண்டாம் என்று சொல்லிப் பேச்சை மாற்றும் கவிதா, காயத்ரியிடம், “நாம் இருவரும் ஒரே வயதுதானே, போடி வாடி என்று பேசிக் கொள்ளலாமா?” என்று கேட்கிறாள். அவளும் சரி என்று சொன்னவுடன் இருவரும் மகிழ்ச்சியாக சிரிக்கிறார்கள்.

இரண்டு பெண்கள் சேர்ந்து ஓரே இடத்தில் இருக்க மாட்டார்கள், எப்போதும் பெண்களுக்கு பெண்கள்தான் எதிரி, பெண்கள் மற்ற பெண்கள்மீது பொறாமை உணர்வு கொண்டவர்கள் என்று திரைப்படங்கள் முதல் சோஷியல் மீடியா வரை பலரும், பல இடங்களில் சொல்ல கேட்டிருக்கலாம்.

AKS - 12| ஆதலினால் காதல் செய்வீர்
AKS - 12| ஆதலினால் காதல் செய்வீர்

ஆனால், அனுபவத்தில் பெண்களுடன்தான் மிக எளிதில் நட்புடன் பழக முடிந்திருக்கிறது. புது ஊரில் மொழியே தெரியவில்லை என்றாலும்கூட இரண்டு பெண்கள் எளிதாக நண்பர்களாகிக் கொள்ளமுடியும். ஒரு சில பெண்களுடனான நட்பில் பிரச்னை இருக்கிறதுதான் என்றாலும், பேச ஆரம்பித்ததும் எந்த முன்முடிவும் இல்லாமல் சட்டென நன்றாக பழகக் கூடியவர்கள் பெண்கள்தான். இன்னமும் இந்திய சூழலில் ஒரு ஆணுடன் அவ்வளவு எளிதாக முதல் சந்திப்பிலேயே பெண் என்ற அடையாளத்தை கடந்து நண்பர்களாக பேசிவிட முடிவதில்லை. பாலின பாகுபாடு கடந்து பழகக்கூடியவர்கள் இருக்கிறார்கள் என்றாலும் எல்லா ஆண்களுடனும் அது சாத்தியமில்லை.

சல்வார்-கமிஸ் அணிந்து துப்பட்டாவை இரண்டு பக்கமும் பின்செய்து, நெற்றியில் திருநீறு, சந்தனம் வைத்து முதல் நாள் அலுவலகம் செல்ல கிளம்பியிருக்கும் காயத்ரியை பார்த்து அதிர்ச்சியாகி சிரிக்கிறாள் புனிதா. காயத்ரியை அலுவலகத்துக்கு உடன் அழைத்துச் செல்லுமாறு பாண்டியனிடம் புனிதா சொல்கிறாள். வழியில் கோயிலுக்கு செல்லலாம் என்று பூ வாங்குகிறாள் காயத்ரி. தன்னிடம் சில்லறை இல்லை என்று பாண்டியனிடம் 50 ரூபாய் வாங்கிக் கொடுக்கிறாள். ஏற்கெனவே சிவாவுக்கு பாஸ்தா வாங்கிக் கொடுத்த 150 ரூபாயுடன், காயத்ரிக்கு பூ வாங்கிய 50 ரூபாயை சேர்த்து 200 என செல்போனில் பதிவு செய்து வைக்கிறான் பாண்டியன். சில்லறை இல்லாததால் காயத்ரியை பூ வாங்கிக் கொள்ளும்படி கடைக்காரர் சொல்கிறார். அதேபோல் பேருந்திலும் காயத்ரி பாண்டியனை பயணச்சீட்டு வாங்க சொல்கிறாள். பாண்டியன் ஒவ்வொன்றாக கணக்கில் சேர்த்துக்கொண்டே வருகிறான். இப்படி செலவாகும் பணம் திரும்பி வருமா என்று அவன் மனவருத்தத்துடன் இருக்கிறான். ஏற்கெனவே சொன்னதுபோல பண விஷயத்தில் தன் தந்தையின் வளர்ப்பில் இருந்து வெளிவர முடியாத பாண்டியன் சென்னையில் நண்பர்களுடன் ஒரே வீட்டில் தங்கும் நடைமுறைக்கு பழகுவானா என்பது கேள்விக்குறிதான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சாலையை கடக்க பயப்படும் காயத்ரியை தன்னுடைய கையை பிடித்துக்கொண்டு வருமாறு பாண்டியன் அழைக்கிறான். காயத்ரி கையை பிடிக்க மறுத்துவிடுகிறாள். கிராமத்தை விட்டு தஞ்சாவூர் வரைகூட சென்றதில்லையா என்று அவளை கேலி செய்கிறான். பிறகு அவனே காயத்ரியின் கையைப்பிடித்து சாலையைக் கடந்து விடுகிறான். காயத்ரி மறுத்ததை பற்றி கவலைப்படாமல் அவள் கையை பிடித்து சாலையைக் கடக்கையில் பாண்டியனின் வெகுளித்தனம் வெளிப்படுகிறது.

AKS - 12| ஆதலினால் காதல் செய்வீர்
AKS - 12| ஆதலினால் காதல் செய்வீர்

அலுவலகத்துக்குள் நுழையும்போது அலுவலகத்தை பார்த்து பிரமித்து பேசும் காயத்ரியிடம், இப்படி வேடிக்கை பார்ப்பதை வெளியில் காட்டிக்கொள்ளக் கூடாது என்று அறிவுரை சொல்கிறான். இல்லையென்றால் தங்களை போல வெளியூரில் இருந்து, குறிப்பாக கிராமம் அல்லது சிறு நகரத்தில் இருந்து வருபவர்களை மற்றவர்கள் கேலி செய்வார்கள் என்கிறான்.

வீடியோ காலில் காயத்ரியை அழைக்கும் சுந்தர், அவளை பார்த்ததும், ”சென்னைக்கு போனாலும் ஜிமிக்கி போட்டு, பூ வச்சு, நம்ம ஊரு ’ட்ரெடிஷன்’ மாறாமல் இருக்கிற பாரு.. அதான் அழகு” என்று மகிழ்ச்சியாகிறான். ’அழகாக இருக்கிறாய்’ என்று சுந்தர் சொல்வதைக் கேட்டு மகிழும் காயத்ரியிடம் அடுத்த நொடியே, அலுவலகத்தில் அவளிடம் பேசுவதற்கு அணுகும் ஆண்களிடம் தனக்கு ஏற்கெனவே ஆள் இருப்பதாக சொல்லச் சொல்கிறான். அவன் பேச்சை ரசிக்காமல், அலுவலகத்துக்கு நேரமாகிவிட்டதாகச் சொல்லி சமாளித்து அழைப்பை கட் செய்கிறாள் காயத்ரி. ஒவ்வொரு முறையும் சுந்தர் இதுபோல் ஏதாவது சொல்லும்போதெல்லாம் காயத்ரி அந்த தருணத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளவே விழைகிறாள்.

சுந்தர், ”அழகாக இருக்கிறாய்” என்று சொல்லும்போது வெட்கப்படுகிறாள் காயத்ரி. அதுவே அவளைப் பிடித்திருக்கிறது, காதலிக்கிறேன் என்று சொல்லும்போது அந்த பேச்சை தவிர்க்கப் பார்க்கிறாள். முதன் முதலாக ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் அழகாக இருக்கிறாய் என்று சொல்லும்போது ஏற்படும் வெட்கம் மற்றும் ஈர்ப்பு மட்டுமே காயத்ரியிடம் இருக்கிறது. மேற்கொண்டு அது காதலாக இன்னும் மாறவில்லை. காயத்ரி சுந்தருடனான திருமண உறவுக்கு மனதளவில் தயாராகவில்லை என்பதை அவள் ஒவ்வொரு முறையும் அவனது பேச்சை தவிர்ப்பதை வைத்து புரிந்துகொள்ள முடிகிறது.

பாண்டியனும் கவிதாவும் நண்பர்களாக இருந்து ஒருவேளை காதலர்களாக மாறலாம் என்றெல்லாம் யோசித்து வைத்திருந்த நிலையில் இன்றைய எபிசோட் பாண்டியனும், காயத்ரியும் காதலர்கள் ஆவார்களா என்று யோசிக்க வைக்கிறது. தினம் தினம் புதிதாக ஒரு ட்விஸ்ட்டுடன் ஒவ்வொரு எபிசோடும் நம்மை ஆர்வம் குறையாமல் வைத்திருக்கிறது… ஆதலினால் காதல் செய்வீர்!

காத்திருப்போம்!
அடுத்த கட்டுரைக்கு