Published:Updated:

AKS 14 | அலுவலகத்துக்கு பொட்டு, பூ, ஜிமிக்கி எல்லாம் அணிந்துகொண்டு ஒரு பெண் போகக்கூடாதா?

AKS 14 | ஆதலினால் காதல் செய்வீர்
AKS 14 | ஆதலினால் காதல் செய்வீர்

விகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் இணைந்து வழங்கும் 'ஆதலினால் காதல் செய்வீர்' (AKS) டிஜிட்டல் சீரிஸ் தினமும் இரவு 8.30 மணிக்கு யூடியூபில் ஒளிபரப்பாகிறது. இதில் நேற்று (09-09-2021) வெளியான 14-வது எபிசோட் எப்படி இருந்தது?!

முதல் நாளே தனக்கு ப்ராஜெக்ட் ஒதுக்கப்பட்டிருப்பது குறித்து பெருமிதமும் மகிழ்ச்சியும் அடைந்த காயத்ரிக்கு அது சிவாவின் டீம் என்றதும் வருத்தமாகிறது.

தன்னை சிவாவின் டீமில் சேர்த்தது பிடிக்கவில்லை என காயத்ரி புனிதாவிடம் சொல்லிக் கொண்டிருக்கிறாள். சிவா தன்னை அவமானப்படுத்தும் நோக்கில் மிக எளிதான வேலையை ஒதுக்கி இருப்பதாக காயத்ரி புனிதாவிடம் சொல்கிறாள். அது போக காயத்ரியிடம் சிவா, “ஜாவா தெரியுமா” என்று நக்கலாக கேட்டதாக சொல்லி புலம்புகிறாள். தன்னை புனிதாவின் டீமில் சேர்த்துக்கொள்ள கேட்கிறாள். புனிதாவின் டீமில் காயத்ரியை சேர்த்துக்கொள்ள வாய்ப்பில்லை என்று சொன்னதும் காயத்ரி முகம் வாடி போகிறாள்.

ஒருவருடன் நமக்கிருக்கும் தனிப்பட்ட பிரச்னை மற்றும் கருத்து வேறுபாடுகளின் அடிப்படையில் அலுவகத்தில் நடந்துகொண்டால் அது நமது வேலையின் முன்னேற்றத்தை பாதிக்கும்.

AKS 14 | ஆதலினால் காதல் செய்வீர்
AKS 14 | ஆதலினால் காதல் செய்வீர்

முதன்முதலில் வேலை பார்த்த அலுவலகத்தில் மேலதிகாரி எப்போதும் எல்லோரையும் கத்திக்கொண்டே இருப்பார். அலுவலக நேரம் முழுவதும் இருக்கையிலேயே இருக்க வேண்டும். தேநீர் இடைவேளையில் மட்டுமே சிறுநீர் கழிக்க செல்லவேண்டும். மற்ற நேரங்களில் சென்றால் எல்லோர் முன்னிலையிலும் எங்கே செல்கிறீர்கள் என்றும், ஒருநாளைக்கு எத்தனை முறை செல்வீர்கள் என்றும் கேட்பார். இதற்கு கூச்சப்பட்டு பெண்கள் போக மாட்டார்கள். மேலும் அனுமதியும் கிடைக்காது. இது ‘Harassment’-ல் வரும் என்றுகூட அப்போது யாருக்கும் தெரியாது. அவருக்கும் மேலிருக்கும் அதிகாரியிடமோ, HR டிபார்ட்மென்ட்டிலோ புகார் அளிக்கலாம் என்று ஒரு வசதி இருந்தது என்றுகூட அப்போது தெரியாது.

காயத்ரி சிவாவை பழி வாங்க, அவன் தன்னை துன்புறுத்தியதாக பொய் புகார் அளிக்கலாம் என்று புனிதாவிடம் கேட்டது தவறு என்றாலும் இன்றைய பெண்களுக்கு பணி இடத்தில் ஏற்படும் மறைமுக துன்புறுத்தல்களை பற்றி புகார் அளிக்கலாம் என்கிற விழிப்புணர்வு இருப்பது மகிழ்ச்சி.

சிவா காயத்ரியை இன்டர்காமில் அழைத்து அவன் அறைக்கு வரச் சொல்கிறான். அவள் வந்ததும் ஃபைலை மேஜை மீது தூக்கி எறிந்து, ‘’உன்னால் இந்த சிறிய வேலையைக்கூட சரியாக செய்ய முடியாதா’’ என்று சத்தம் போட்டு திட்டுகிறான். வீட்டில் அதுவரை யாரிடமும் திட்டு வாங்காத காயத்ரிக்கு முதன்முறையாக தன்னை புதிதாக ஒருவர் கடிந்து கொள்ளும்போது அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் கோபமும், அழுகையும் வருகிறது. காயத்ரி அழுது கொண்டே அவள் இடத்துக்கு செல்கிறாள். ஒரு மணி நேரத்தில் முடிக்க வேண்டும் என்று சிவா கொடுத்த வேலையை முடித்துக் கொடுத்துவிட்டு புனிதாவை சந்தித்து நடந்ததைச் சொல்கிறாள் காயத்ரி.

AKS 14 | ஆதலினால் காதல் செய்வீர்
AKS 14 | ஆதலினால் காதல் செய்வீர்

தனக்கு அதை முடித்துக் கொடுக்கும்வரை மன அழுத்தமாக இருந்ததாக காயத்ரி குறிப்பிடுகிறாள். புனிதா அவளிடம் ஏன் இப்படி எளிதில் உடைந்து போகிறாய் என்று கேட்கிறாள். மேலும், சிவா திட்டுவதை கண்டுகொள்ளாமல் வேலையில் உள்ள தவறை சரி செய்துகொண்டால் மட்டுமே கற்றுக்கொள்ள முடியும் என்றும் அதுவே அடுத்த நிலைக்கு உயர்த்தும் என்றும் புனிதா சொல்கிறாள். காயத்ரி புன்னகையுடன் சரி என்கிறாள்.

பெண்கள் திருமணம் அல்லது மகப்பேறு விடுப்பு எடுப்பது, பெண்களுக்கு உடல் வலிமை போதாது, அதிக நேரம் வேலை செய்ய மாட்டார்கள், பெண்கள் வேலையில் தவறு செய்யும்போது கோபத்தை காட்ட முடியாது, அப்படி காட்டினால் அவர்கள் அழுது விடுவார்கள் போன்ற காரணங்களை தனியார் நிறுவனங்கள் பெண்களை தவிர்ப்பதற்கான காரணங்களாக முன்பு சொல்லப்பட்டவை.

ஐடி துறை வந்த பிறகு பெண்களுக்கும் சமமாக வேலை கிடைக்க ஆரம்பித்தது. வேலை நேரத்தில் பெரும்பாலும் பெண்கள் சிறப்பு சலுகைகள் எடுக்காமல் ஷிஃப்ட் முறையில் எந்த நேரமும் வேலை பார்க்கத் தொடங்கிவிட்டனர். புதிதாக வேலைக்கு வரும் பெண்களை ஆரம்பத்திலேயே திட்டுவது பெரும்பாலான பெண்களுக்கு நடக்கிறது என்றாலும் அதற்காக பெண்கள் எளிதில் உடைந்து போகக் கூடியவர்கள் என்று பொதுமைப்படுத்துவது தவறு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இன்றைய பெண்களிடத்தில் மிகப்பெரும் அளவில் மாற்றம் இருக்கிறது. அலுவலகத்தில் உயர் அதிகாரி திட்டுவதற்கு எளிதில் உடைந்து போகக் கூடியவர்களாக இல்லை. புனிதா சொன்னதுபோல அலுவலகங்களில் எப்போதும் நம்முடைய வேலையில் இருக்கும் தவறை ஒருவர் சுட்டிக்காட்டும்போது, தவறை சுட்டிக்காட்டியவரை கோபித்துக் கொள்ளாமல், தவறை சரி செய்து கொள்வதும், கற்றுக்கொள்வதுமே நம்மை அடுத்த நிலைக்கு உயர்த்தும். ஆண்களுக்கும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறது என்றாலும், ஆண் இதையெல்லாம் எளிதாக எடுத்துக்கொண்டு கடந்துவிடுகிறான்.

கேன்டீனில் எல்லோரும் காயத்ரியை பார்த்து தங்களுக்குள் சிரித்துக் கொள்கிறார்கள். காயத்ரி புனிதாவிடம்தான் அவ்வளவு அழகாக இருப்பதால்தான் எல்லோரும் தன்னையே பார்க்கிறார்கள் என்று சொல்கிறாள். புனிதா ஒருமுறை திரும்பிப் பார்க்கிறாள். எல்லோரும் காயத்ரியின் உடையை கேலி செய்கிறார்கள் என்று புனிதாவுக்குப் புரிகிறது. தான் அழகாக இருப்பதால் செக்யூரிட்டியிலிருந்து ப்ராஜெக்ட் மேனேஜர் வரை எல்லோருமே தன்னையே பார்க்கிறார்கள் என்று காயத்ரி புனிதாவிடம் பெருமை பேசுகிறாள்.

AKS 14 | ஆதலினால் காதல் செய்வீர்
AKS 14 | ஆதலினால் காதல் செய்வீர்

இதைக் கேட்டுக்கொண்டிருக்கும் சிவா காயத்ரியிடம், ‘’மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க கதாநாயகனாக இருக்க வேண்டிய அவசியமில்லை கோமாளியாககூட இருக்கலாம்’’ என்று சொல்கிறான். பொட்டு, பூ, ஜிமிக்கி எல்லாம் போட்டு பெண் பார்க்க வரும் நிகழ்ச்சிக்கு தயாரானது போல தன்னை அலங்கரித்திருக்கிறாள் என சொல்கிறான்.

உடை விஷயம் அவரவர் தனிப்பட்ட சுதந்திரம் என்றாலும் மற்றவர்கள் தன்னை எதற்காக பார்க்கிறார்கள் என்று கூடவா புரிந்து கொள்ள முடியவில்லை என்று காயத்ரி மற்றும் புனிதாவை பார்த்து சிவா கேட்கிறான். புனிதா, சிவாவை கடிந்து கொள்கிறாள். அவன் சென்ற பிறகு புனிதா காயத்ரியிடம், இடத்திற்கு தகுந்தாற்போல் மாறிக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி சொல்கிறாள்.

இணையம் மற்றும் சமூக வலைதளங்களின் வளர்ச்சியால் இன்று எங்கு எப்படி செல்லவேண்டும், லேட்டஸ்ட் ஃபேஷன் என்ன போன்ற விஷயங்களில் கிராமங்களில் இருக்கும் பெண்கள்கூட அப்டேட்டடாக இருக்கிறார்கள். காயத்ரிக்கு இத்தனை நாட்களாக இணையம் பயன்படுத்தும் வசதி இல்லாமல் இருக்கலாம். இனி புனிதாவின் பேச்சை கேட்டு மாறிவிடுவாளா? அப்படி மாறினால் அதை சுந்தர் எப்படி எடுத்துக்கொள்வான் என்றெல்லாம் எபிசோடை பார்த்துக் கொண்டிருக்கும்போதே கேள்விக் குதிரைகள் ஓட ஆரம்பித்துவிட்டது.

AKS 14 | ஆதலினால் காதல் செய்வீர்
AKS 14 | ஆதலினால் காதல் செய்வீர்

புனிதா எவ்வளவு சொல்லியும் காயத்ரிக்கு மனம் ஆறவில்லை. இரவு வீட்டில் சிவாவை பழிவாங்க வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறாள். பாண்டியனிடமும் ஐடியா கேட்கிறாள். இருவரும் சேர்ந்து ஒரு வழியாக சிவாவின் அறையில் மட்டும் இன்றிரவு மின்சாரத்தை துண்டிப்பது என்று முடிவு செய்து கடைசியில் அது மொத்த வீட்டிலும் மின்சாரத்தை துண்டிப்பதாக போய் முடிகிறது.

பாண்டியனும் காயத்ரியும் சிவாவை பழிவாங்குவதற்காக செய்யும் காரியங்கள் நகைச்சுவையாக இருக்கின்றன. ஆனாலும் காயத்ரி அலுவலகத்தில் அழுதது, அதைத் தொடர்ந்து புனிதாவிடம் பேசிய பிறகும் மனவருத்தத்துடன் இருப்பது, சிவாவை பழிவாங்க வேண்டும் என்றும் யோசித்துக் கொண்டிருப்பது தேவையில்லாத மன உளைச்சலை மட்டுமே ஏற்படுத்தும். பொதுவாக அலுவலகத்தில் நடக்கும் பிரச்னைகளை அங்கேயே விட்டுவிட்டு வீட்டுக்கு வர வேண்டும் என்று சொல்வார்கள். அதேபோல் அலுவலகத்தில் ஏற்படும் மனக் கசப்புகளையும், வருத்தங்களையும் வீட்டுக்கு கொண்டு வர ஆரம்பித்தால் நமக்கு பர்சனல் ஸ்பேஸ் என்ற ஒன்றே இல்லாமல் ஆகிவிடும். வீட்டுக்குள் நிம்மதியின்றி போய்விடும்.

மின்சாரம் துண்டிக்கப்பட்டபோது பரத்தும், புனிதாவும் ஒரே அறையில் இருக்கிறார்கள். மற்ற வீடுகளில் மின்சாரம் இருக்கிறது தன்னுடைய அறையில் மட்டும் இல்லை என்று சிவா யோசிக்கிறான். ஏற்கெனவே பாண்டியனைத் தேடிக் கொண்டிருந்த கவிதா விளக்குகள் அணைந்ததும் பயத்தில் ஹாலில் அப்படியே நிற்கிறாள்.

பரத்தும், புனிதாவும் மற்றவர்களிடம் மாட்டிக் கொள்வார்களா? மின்சாரம் துண்டிக்கப்பட்டதன் பின்னணியில் காயத்ரியும், பாண்டியனும் இருப்பதை வீட்டில் உள்ளவர்கள் கண்டுபிடிப்பார்களா?

காத்திருப்போம்!
அடுத்த கட்டுரைக்கு