Published:Updated:

AKS - 15 | மனைவி தனக்கு செய்யவேண்டிய ‘கடமை’களை செய்யவில்லை என்றால் ஆண்கள் என்ன செய்வார்கள்?

AKS - 15 | ஆதலினால் காதல் செய்வீர்
AKS - 15 | ஆதலினால் காதல் செய்வீர்

விகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் இணைந்து வழங்கும் 'ஆதலினால் காதல் செய்வீர்' (AKS) டிஜிட்டல் சீரிஸ் தினமும் இரவு 8.30 மணிக்கு யூடியூபில் ஒளிபரப்பாகிறது. இதில் நேற்று (10-09-2021) வெளியான 15-வது எபிசோட் எப்படி இருந்தது?!

சிவாவை பழிவாங்குவதற்காக திட்டம்போட்டு மின்சாரத்தை துண்டிக்க போய் முழு வீட்டையும் இருளில் தள்ளிவிட்டார்கள் காயத்ரியும், பாண்டியனும். இணைப்பை சரி செய்ய அந்த நேரத்தில் ஆள் கிடைக்காததால் வேறு வழியில்லாமல் எல்லோரும் மொட்டை மாடியில் சென்று தூங்குவது என்று முடிவெடுக்கிறார்கள். எரிச்சலடையும் சிவாவிடம் பரத் மருத்துவர் சொன்னதை நினைவூட்டி மாடிக்கு அழைத்து செல்கிறான்.

மொட்டை மாடியில் ஆறு பேரும் வரிசையாக படுத்திருக்கிறார்கள். கவிதா பாண்டியனிடம் வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களைக் காட்டி அது பாண்டியனும் அவனது குடும்பத்தினரும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாள். காயத்ரி மொபைலில் பாட்டு கேட்டுக்கிறாள். சிவா தூங்க ஆரம்பித்து விட்டான். பரத் வாட்ஸ்அப்பில் புனிதாவிடம் ”ரூமுக்கு போகலாமா” என்று கேட்கிறான். புனிதா அவனை செல்லமாக கோபித்துக் கொள்கிறாள்.

AKS - 15 | ஆதலினால் காதல் செய்வீர்
AKS - 15 | ஆதலினால் காதல் செய்வீர்

பள்ளி, கல்லூரி விடுமுறை மற்றும் திருவிழாவுக்கு ஊரில் ஒன்று கூடும்போது சம வயதுடைய பெரியம்மா, சித்தி, அத்தை, மாமா பிள்ளைகளுடன் பேசி, சிரித்து, விளையாடிக்கொண்டு மொட்டை மாடியில் ஒன்றாக தூங்குவதை நினைவுபடுத்துகிறது இந்த காட்சி. அதேசமயம் உறவினர்கள் இவ்வாறு ஒன்று கூடுவதை ரொமான்டிசைஸ் செய்து பெருமைப்பட்டுக் கொள்ளும் நம் சமூகத்தில், நண்பர்கள் இப்படி ஒன்றுகூடுவது பெரும்பாலான வீடுகளில் சாத்தியமா என்கிற கேள்வி எழுகிறது.

எபிசோடை பார்த்துக் கொண்டிருக்கும்போதே இந்த காட்சியை காணும் கலாசாரக் காவலர்கள் என்ன சொல்வார்கள் என்ற எண்ணமும் தோன்றுகிறது. ஆண்களும், பெண்களும் இரத்த உறவு மற்றும் திருமண உறவு இல்லாமல் ஒரே வீட்டில் தங்கி இருப்பது, மொட்டை மாடியில் ஒன்றாக பேசி, சிரித்து, தூங்குவது எல்லாம் நம் சிறுநகரங்கள் மற்றும் கிராமங்களில் சாதாரண விஷயங்கள் அல்ல.

ஆனால், இந்தியாவின் பெருநகரங்களில் இது நடந்து கொண்டுதான் இருக்கிறது. மக்கள் இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று சொல்லியே வெகுஜன மீடியாக்களான திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி சீரியல்கள் சாதாரணமாக நடக்கும் விஷயங்களைகூடக் காட்சிப்படுத்துவது இல்லை.

ஆண், பெண் பாலினம் கடந்து நட்பாக இருக்கும்போது தான் பெண்கள் மீதான வன்முறையும், பாலியல் குற்றங்களும் குறையும். ஆனால் நம் சமூகத்தில் பாலியல் குற்றங்கள் நடக்காமல் இருக்க ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளக் கூடாது என்பது தான் தீர்வு என்று நினைக்கின்றனர். குற்றங்கள் குறைய வேண்டுமானால் பெண் என்பவள் போகப் பொருள் இல்லை என்று ஆணும், தன்னுடைய சுயமரியாதை, மற்றும் சுதந்திரத்தை பற்றி பெண்ணும் புரிந்து இருப்பது அவசியம். அது ஆண், பெண் நட்பாக பழகும்போது மட்டும்தான் சாத்தியம்.

AKS - 15 | ஆதலினால் காதல் செய்வீர்
AKS - 15 | ஆதலினால் காதல் செய்வீர்

இரவு சரியாக தூங்காததால் காலையில் சற்று அதிக நேரம் தூங்கி விடுகிறாள் காயத்ரி. சுந்தர் அவளை நடைபயிற்சிக்கு செல்ல சொல்வதற்காக செல்போனில் அழைக்கிறான். காயத்ரி அவனிடம் தனக்கு சோர்வாக இருப்பதால் பிறகு பேசுவதாக சொல்லி இணைப்பை துண்டித்து விடுகிறாள். சுந்தருக்கு அவள் அப்படி சட்டென்று இணைப்பை துண்டித்தது பிடிக்கவில்லை. அவன் அதை அவமானமாக உணர்ந்திருக்கலாம். அதனால் கோபம் வந்திருக்கலாம். ஆனால் அதை காட்டிக்கொள்ளாமல் அவன் நேராக காயத்ரி வீட்டுக்கு செல்கிறான். காயத்ரியின் குடும்பத்தினரிடம் அவளுக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்லி அவர்களை பதறச் செய்கிறான். அவள் இரவுகூட நன்றாக பேசிவிட்டுத்தான் தூங்கச் சென்றதாக அவர்கள் சொல்லுகையில் சுந்தர் அதை மறுக்கிறான். அவள் தன்னிடம் உடல் நிலை சரியில்லை என்று முன்னமே சொல்லி இருந்ததாக சொல்கிறான்.

காயத்ரியின் மாமா, சுந்தரிடம் அவள் அசதியில் தூங்கிக் கொண்டிருப்பாள், இதற்காக வந்து இருக்கிறீர்களா என்று கேட்பார். அவரது கதாபாத்திரம் நகைச்சுவையாக சித்தரிக்கப்பட்டிருந்தாலும் எப்போதும் காயத்ரியின் பக்கம் இருக்கும் நியாயத்தையும் இன்றைய தலைமுறைக்கு ஏற்றவாறு சிந்தித்து 'சென்ஸிபிளாக' பேசக்கூடியவராகவும் அவர் இருக்கிறார்.

AKS - 15 | ஆதலினால் காதல் செய்வீர்
AKS - 15 | ஆதலினால் காதல் செய்வீர்

மேலோட்டமாக பார்த்தால் சுந்தர் அக்கறையில் தானே கேட்க வந்திருக்கிறான் என்று தோன்றும். ஆனால், அது வெறும் அக்கறை மட்டும் அல்ல. காயத்ரி அவன் பேசும்போது சட்டென்று போனை துண்டித்தது சுந்தருக்கு அவனை மதிக்காது போல் தோன்றியிருக்கலாம். அதனால் சுந்தர் அதை தீவிரமாக எடுத்துக் கொண்டு காயத்ரியின் வீட்டுக்கு சென்றிருக்கலாம். அவள் தன்னிடம் சரியாகப் பேசவில்லை என்பதை நேரடியாக சொல்ல முடியாத காரணத்தினால் சுந்தர் காயத்ரிக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்லி தொடங்கி வைக்கிறான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது போன்ற விஷயங்களை நம்மூரில் ஆண்கள் திருமணம் முடிந்த ஆரம்ப காலத்திலேயே சர்வசாதாரணமாக மனைவியின் வீட்டில் செய்வார்கள். மனைவி தனக்கு செய்ய வேண்டிய கடமைகளாக ஆண்கள் நினைத்துக் கொண்டிருப்பதை பெண்கள் சரியான நேரத்தில் செய்ய முடியாதபோது, அவர்கள் செய்ய தவறியதை மனைவியின் வீட்டில் தெரியப்படுத்துவார்கள். அதை நேரடியாகச் சொல்லாமல் தன் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை, அதனால் அவள் தனது கடைமைகளை நேரத்துக்கு செய்யவில்லை என்றும், ஆனாலும் தனக்கு மனைவியின் உடல்நலம்தான் முக்கியம் என்பதுபோல குறை சொல்வதோடு சாமர்த்தியமாக தான் பெருந்தன்மையானவன் என்பதையும் காட்டிக்கொள்வார்கள்.

ஆனால் உண்மையில் அந்த அக்கறைக்கு பின்னால் இருப்பது அவள் தன்னை மதிக்கவில்லை, தனக்கு செய்யவேண்டியதை செய்யவில்லை என்கிற எண்ணம் மட்டுமே. இது புரியாமல் மாப்பிள்ளை தங்கள் பெண்ணின்மீது எவ்வளவு அக்கறையும், அன்பும் வைத்திருக்கிறார் என்று பெண்ணின் வீட்டில் நம்ப தொடங்கிவிடுவார்கள்.

AKS - 15 | ஆதலினால் காதல் செய்வீர்
AKS - 15 | ஆதலினால் காதல் செய்வீர்

அதன் பிறகு அந்தப் பெண் தனக்கு பிரச்னை என்று வரும்போது பெரும்பாலும் பெண்ணின் குடும்பத்தினர் மாப்பிள்ளைக்கு ஆதரவாக பேசுவார்கள். நாளை காயத்ரியும்கூட இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்றோ, சுந்தரிடம் பிரச்னை இருக்கிறது என்றோ சொல்லும் சூழ்நிலை வந்தால் காயத்ரியின் குடும்பத்தினர் சுந்தர் காயத்ரியின் மேல் எவ்வளவு அன்போடும், அக்கறையோடும் இருந்தார் என்று இந்த சம்பவங்களை எல்லாம் மனதில் வைத்து பேசத் தொடங்கலாம். எவ்வளவு திரைப்படங்கள், சீரியல்கள், டிஜிட்டல் சீரிஸ்கள் வரை வந்தாலும்கூட பெண்ணை பெற்றவர்களுக்கு புரிய வைக்கவே முடியாது என்கிற ஒருசில விஷயங்களில் இதுவும் ஒன்று.

காயத்ரி, சுந்தர் மற்றும் தன் குடும்பத்தினரை எப்படி சமாளிப்பாள்? காயத்ரியின் குடும்பத்தினர் அவளுக்கு ஆதரவாகப் பேசுவார்களா?

காத்திருப்போம்!
அடுத்த கட்டுரைக்கு