Published:Updated:

AKS - 4 | சிவாவின் கோபமும், சில பெற்றோர்கள் ஏற்படுத்தும் மன உளைச்சலும்!

ஆதலினால் காதல் செய்வீர் AKS - 4

விகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் இணைந்து வழங்கும் 'ஆதலினால் காதல் செய்வீர்' டிஜிட்டல் சீரிஸ் தினமும் இரவு 8.30 மணிக்கு யூடியூபில் ஒளிபரப்பாகிறது. இதில் நேற்று வெளியான நான்காவது எபிசோட் எப்படி இருந்தது… ஒரு விறுவிறு விமர்சனம்!

AKS - 4 | சிவாவின் கோபமும், சில பெற்றோர்கள் ஏற்படுத்தும் மன உளைச்சலும்!

விகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் இணைந்து வழங்கும் 'ஆதலினால் காதல் செய்வீர்' டிஜிட்டல் சீரிஸ் தினமும் இரவு 8.30 மணிக்கு யூடியூபில் ஒளிபரப்பாகிறது. இதில் நேற்று வெளியான நான்காவது எபிசோட் எப்படி இருந்தது… ஒரு விறுவிறு விமர்சனம்!

Published:Updated:
ஆதலினால் காதல் செய்வீர் AKS - 4

இந்தத் தலைமுறை இளைஞர்களை கோபம் எங்குகொண்டுபோய் நிறுத்துகிறது என்பதோடு தொடங்குகிறது ‘ஆதலினால் காதல் செய்வீர்' டிஜிட்டல் சீரிஸின் 4-வது எபிசோட்.

கோபத்தில் பக்கத்து வீட்டுக்காரரின் மூக்கை உடைத்து விடும் சிவாவை வீட்டை காலி செய்வதாக பக்கத்து வீட்டுக்காரரிடம் சமரசம் பேசி காவல் நிலையத்தில் இருந்து அழைத்து வருகிறான் சென்னையில் இருந்து வந்திருக்கும் அவனது நண்பன் பரத். பின்பு சிவாவை மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறான். சிவாவின் பிரச்னைகளை பற்றி மருத்துவர் பேசும்போது சிவா அவர் மீதும் கோபம் கொள்கிறான். அவன் மருத்துவரையும் தாக்கி விடக்கூடும் என்று அஞ்சி பரத் சிவாவின் கைகளைப் பற்றிக்கொண்டு பொறுமையாக இருக்கும்படி கிட்டத்தட்ட கெஞ்சுகிறான்.

சிறு வயதில் ஏற்பட்ட சம்பவம் ஏதாவது சிவாவின் கோபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர் சொல்கிறார். சிவாவின் பெற்றோர்கள் பிரிந்து தனித்தனியாக போனதால் சிறுவயதிலிருந்து அவன் தனது பாட்டி வீடு மற்றும் விடுதிகளில் வளர்ந்தான் என்கிறான் பரத். இதுவும் காரணமாக இருக்கலாம் எனும் மருத்துவர், கோபத்தை குறைக்க சில பயிற்சிகளை சொல்லித் தருகிறார்.

ஆதலினால் காதல் செய்வீர் AKS - 4
ஆதலினால் காதல் செய்வீர் AKS - 4

”எப்போதும் நம்முடைய கோபம் தான் உலகத்திலேயே காஸ்ட்லியான விஷயம் என்று நாம் நம்பவேண்டும்” என மருத்துவர் சொல்லும் வசனம் நம் எல்லோருக்கும் பொருந்தும்.

ஒத்துவராத, பிரச்னைக்குரிய உறவுகளில் இருந்து வெளியேறி சுதந்திரமாக வாழ எல்லோருக்கும் உரிமை உண்டு. குறிப்பாக பெண்கள் அத்தகைய முடிவுகளை சுதந்திரமாக எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து பேசுகிறோம். அதில் மாற்றுக் கருத்தில்லை. அதேசமயம் இதுபோன்ற ஒத்துவராத உறவுகளில் இருந்து பிரியும்போது பெற்றோர்கள் குழந்தைகளின் மனநலனையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

பெரும்பாலான விவாகரத்துகள் சாதாரண ஈகோ பிரச்னைக்கு கூட நடக்கின்றன. சிறிதளவுகூட ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்க முடியாதது, சுயநலம், தேவையில்லாமல் ஒருவரின் மீது இன்னொருவர் சந்தேகம் கொள்வது, அடுத்தவரின் தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவது போன்ற பிரச்னைகளில் பேசி புரிதல் ஏற்படுத்தலாம். தேவைப்பட்டால் மருத்துவர் உதவியுடன் கவுன்சிலிங் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் பலரும் இதற்கு விவாகரத்து வரை செல்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பெற்றோர்கள் பிரியும்போது குழந்தைகள் பெற்றோரில் ஒருவருடனோ அல்லது விடுதியில் தங்கியோ வளர வேண்டியிருக்கிறது. அந்தத் தனிமை அவர்களை மற்றவர்களிடம் அனுசரித்து செல்ல முடியாத ஒரு இடைவெளியை உருவாக்குகிறது. மற்ற குழந்தைகளுடன் தங்கள் நிலையை ஒப்புமைப்படுத்தி குழந்தைகள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். தங்களது ஆசைகளையும், ஏக்கங்களையும் உள்ளுக்குள்ளே வைத்து ஒரு கட்டத்தில் அது பாரபட்சமின்றி பெற்றோர்கள் அல்லது ஒட்டு மொத்த சமூகத்தின்மீதே கோபமும், வெறுப்புமாக வெளிப்படுகிறது.

ஆதலினால் காதல் செய்வீர் AKS - 4
ஆதலினால் காதல் செய்வீர் AKS - 4

அவர்களுக்கு மற்றவர்கள் அறிவுரை சொல்லும்போது எரிச்சலாக இருக்கிறது. மற்றவர்களுடன் சேர்ந்து வாழ வேண்டிய சூழ்நிலையிலும் யாருக்காகவும் எதையும் தன்னால் மாற்றிக்கொள்ள முடியாது என்கிற நிலைக்கு செல்கிறார்கள்.

சிவாவை மருத்துவர் தனியாக இருக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியதால் பரத், தன்னோடு சென்னைக்கு அழைத்துச் செல்ல முடிவெடுக்கிறான். பரத்தின் கதாபாத்திரம் போன்று நண்பர்களுக்கு பிரச்னை என்றதும் உடனே 350 கிமீ கிளம்பி வந்து உடன் நிற்பவர்கள், எதையும் செய்யக்கூடியவர்கள் நம்மிடையே இருக்கிறார்கள். குறிப்பாக டிப்ரஷனால் பாதிக்கப்படும்போது, குடும்பத்தினர்கூட எரிச்சலடைந்து கைவிட்டு விடும் சூழ்நிலைகளில் பலருக்கும் நண்பர்கள் துணை நிற்கிறார்கள்.

நிச்சயதார்த்தம் முடிந்து சாப்பிட்டு தனியாக கைகழுவ செல்லும் காயத்ரியிடம் சுந்தர் பேச வருகிறான். சட்டென்று சபையில் தனது பெரியப்பா திருமணத்தை தள்ளி வைக்க முடியாது என்று சொல்லும்போது தன்னால் எல்லோரின் முன்னிலையிலும் மறுத்துப் பேச இயலாததால் அமைதியாக இருந்து விட்டதாக சொல்கிறான். காயத்ரி அவனை கோபமாக பார்க்கிறாள். பின்பு, ‘’இந்த நாளுக்காகத்தான் நான் காத்திருந்தேன், இந்த புடவையில் நீ ரொம்ப அழகா இருக்க’’ என்று சொல்லும்போது காயத்ரி கோபத்தை மறந்து வெட்கப்பட தொடங்குகிறாள். ”வா போன்னு சொல்லலாமா” என்று சுந்தர் கேட்பான். வாங்க போங்கன்னு சொல்வது ஏதோ தூரம் இருப்பதுபோல் தோன்றுவதாக சொல்வான். காயத்ரி, ”அதெல்லாம் ஒன்னும் இல்ல நீங்க வா போன்னே சொல்லுங்க” என்பாள்.

ஆதலினால் காதல் செய்வீர் AKS - 4
ஆதலினால் காதல் செய்வீர் AKS - 4

சுந்தரை அவசரமாக இடைமறித்து, “தம்பி.. தம்பி.. நீங்க 2K கிட் தானே, நீயும் என்னை வா.. போன்னே பேசலாம்னு அந்த பொண்ணுகிட்ட சொல்ல வேண்டியது தான” என்று சொல்லத் தோன்றியபோதே காயத்ரி அவனை வெட்கமும் காதலும் கலந்து பார்த்துக் கொண்டிருந்தாள். மறுநாள் சென்னை கிளம்ப இருக்கும் காயத்ரியை வழியனுப்ப வரவா என சுந்தர் கேட்பான். ”அப்பா இதற்கு அனுமதிக்க மாட்டார், ஊரில் உள்ளவர்கள் எதாவது சொல்வார்கள்” என மறுத்துவிடுவாள், சுந்தருக்கு ‘ஏற்ற’ லிட்டில் பிரின்சஸ் காயத்ரி.

காயத்ரிக்கு சுந்தர் சபையில் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தது கோபத்தை உண்டாக்குகிறது. ஆனால் ‘’நீ அழகாக இருக்கிறாய், உன்னை இப்போதே கூட்டிக்கொண்டு போகமுடியாதா’’ என்று சொன்னவுடன் அந்த கோபம் எல்லாம் காணாமல் போய் அவளுக்கு காதல் வந்துவிடுகிறது. தனக்கு வேண்டியதை பற்றிக்கொண்டு நிலையாக இல்லாமல் இரண்டு உணர்வுகளுக்கும் நடுவில் மாறிமாறி பயணிக்கும் முதிர்ச்சியின்மை திருமண வாழ்க்கைக்கு ஏற்றது அல்ல.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பெண்களுக்கான திருமண வயது 18 என்றிருந்தாலும் பெரும்பாலான பெண்களுக்கு 21 வயதிலும்கூட சரி தவறுகளை அலசி ஆராயும் மனமுதிர்ச்சி வருவது இல்லை. தன்னுடைய குடும்பத்தினர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென குறைந்தபட்சம் ஆறு மாதங்களாவது வேலைக்கு செல்ல இவ்வளவு நாட்களாக ஆசைப்பட்ட காயத்ரி, திருமணநாளை அருகில் வைத்ததற்கு வருத்தம் இருந்தாலும் அதை மிக எளிதாக ஏற்றுக் கொள்கிறாள்.

ஆதலினால் காதல் செய்வீர் AKS - 4
ஆதலினால் காதல் செய்வீர் AKS - 4

தான் வேலைக்குச் செல்வதிலும் ஆறு மாதங்கள் கழித்து திருமணம் என்பதிலும் காயத்ரி உறுதியாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு குடும்பத்தை எதிர்க்க வேண்டியிருப்பதால் காயத்ரி அதை விரும்பாதவளாக இருக்கலாம். பிராக்டிகலாக நம் குடும்பங்களில் நடப்பதும் இதுதான். பெற்றோரின் பாசத்துக்கு கட்டுப்பட்டு பல பெண்களும் தங்கள் விருப்பங்களை சொல்லாமல் பெற்றோர்களின் போக்கில் வாழ்க்கையின் முக்கியமான முடிவுகளை விட்டு விடுகிறார்கள்.

மூன்றாவது கதாநாயகன் தேனி பாண்டியனின் அறிமுகமே அமர்க்களமாக இருக்கிறது. பொதுவாக கதாநாயகர்கள் பெற்றோர்களுக்கு தெரியாமல்தான் வீட்டிலிருந்து சுவர் ஏறிக்குதித்து தப்பித்து ஓடுவார்கள். ஆனால் பாண்டியன் அம்மா, அப்பா உதவியுடன் சுவர் ஏறிக்குதித்து பெட்டிகளுடன் ஊரைவிட்டு கிளம்புகிறான். யாருக்காகவோ பயந்து ஒளிந்து இருவரும் பேருந்து நிலையம் வந்து சேர்வார்கள். பாண்டியனும் அவனது தந்தைக்கும் இடையில் இருக்கும் உறவு மிக அழகாக நண்பர்களைப் போல இருக்கிறது. பேருந்துநிலையத்தில் அவர்கள் இருக்கைக்கு அருகில் ஒரு பெண் அமர்ந்திருக்கிறாள். அவளை கண்டதும் பாண்டியன் அதிர்ச்சியில் கத்தி விடுகிறான். பாண்டியனின் அப்பா, ‘’கவிதா நீயா’’ என்கிறார். கவிதா கதையின் மூன்றாவது நாயகி.

வீட்டில் இருப்பவர்களின் பேச்சை மறுத்து பேசாத சுந்தர், பெற்றோர்களுடன் வளராத சிவா, அப்பாவை நண்பனாக பாவித்து எல்லாவற்றையும் பேச ஸ்பேஸ் இருக்கும் பாண்டியன். இம்மூவரில் முதல்நாளே பாண்டியனும், அவரது தந்தையும் தங்கள் நகைச்சுவையாளும், அவர்களுக்கிடையே இருக்கும் உறவின் காரணமாகவும் மனதை ஈர்க்கிறார்கள்.

காட்சிகளின் வேகம் 20 நிமிடங்களில் போரடிக்காமல் கொண்டு செல்கிறது. வசனங்கள் இன்றைய தலைமுறையை பற்றிய புரிதலுடன் மிக அருமையாக இருக்கின்றன. ஒவ்வொரு நாளுமே நாளை எபிசோடுக்காக ஆர்வமுடன் காத்திருக்க செய்கிறது ஆதலினால் காதல் செய்வீர்!

காத்திருப்போம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism