Published:Updated:

AKS - 18 | எல்லா உறவுக்கும் ஏன் அவசரமாக ஒரு லேபிள் ஒட்டப் பார்க்கிறோம்?

AKS - 18 | ஆதலினால் காதல் செய்வீர்

விகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் இணைந்து வழங்கும் 'ஆதலினால் காதல் செய்வீர்' (AKS) டிஜிட்டல் சீரிஸ் தினமும் இரவு 8.30 மணிக்கு யூடியூபில் ஒளிபரப்பாகிறது. இதில் நேற்று (15-09-2021) வெளியான 18-வது எபிசோட் எப்படி இருந்தது?!

Published:Updated:

AKS - 18 | எல்லா உறவுக்கும் ஏன் அவசரமாக ஒரு லேபிள் ஒட்டப் பார்க்கிறோம்?

விகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் இணைந்து வழங்கும் 'ஆதலினால் காதல் செய்வீர்' (AKS) டிஜிட்டல் சீரிஸ் தினமும் இரவு 8.30 மணிக்கு யூடியூபில் ஒளிபரப்பாகிறது. இதில் நேற்று (15-09-2021) வெளியான 18-வது எபிசோட் எப்படி இருந்தது?!

AKS - 18 | ஆதலினால் காதல் செய்வீர்

வீட்டில் உள்ள எல்லோரும் தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்த்து சிரித்துக் கொண்டிருப்பதை கண்டு கடுப்பாகி தனது அறைக்குச் சென்று விடுகிறான் சிவா. மற்றவர்களின் சிரிப்பு சத்தமும், தொலைக்காட்சியின் சத்தமும் அறையில் இருக்கும் சிவாவுக்கு மேலும் கோபமூட்ட எழுந்து ஹாலுக்கு வருகிறான். தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்து கவிதா, “வெள்ளிக்கிழமை அதுவுமா வெட்டுறேன், குத்துறேன்னு சொல்றாங்க” என்று அலுத்துக்கொள்கிறாள். ”என்னடி இப்படி ஆயிட்ட?” என்று கேட்கும் பாண்டியனைப் போலவே நமக்கும்கூட கவிதா பேசியதை கேட்டு ஜெர்க் ஆகிறது. கவிதா தனது அம்மா சீரியல் பார்க்கும்போது இப்படித்தான் லைவ் கமென்ட்ரி கொடுப்பார்கள் என்று தெளிவுப்படுத்துகிறாள்.

சீரியலின் பின்னணி இசைக்கு ஏற்றவாறு அவளது அம்மா சாப்பிடுவதை கவிதா நடித்து காண்பிக்கிறாள். இதை அறையிலிருந்து வந்து மறைந்து நின்று பார்க்கும் சிவா சத்தமாக சிரித்து விடுகிறான். எல்லோரும் ஆச்சர்யமாக பார்க்க, சிவா தான் தொலைக்காட்சி நிகழ்ச்சியை பார்த்து சிரிக்கவில்லை என்றும் கவிதாவை பார்த்து சிரித்தேன் என்றும் சொல்கிறான். ‘’சிவா தனக்கு ஃபேன் ஆகி விட்டதாக’’ கவிதா பெருமையாகச் சொல்கிறாள்.

AKS - 18 | ஆதலினால் காதல் செய்வீர்
AKS - 18 | ஆதலினால் காதல் செய்வீர்

கவிதாவுக்கு எல்லோரின் மீதும் ஒன்றுபோல அன்பு இருக்கிறது. அவள் தான் இருக்கும் இடத்தை பாசிட்டிவாக, சிரிப்புடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறாள். அப்படி நடந்தும் கொள்கிறாள். அந்த பாசிட்டிவிட்டி சிவாவுக்கும் பரவி அவனிடம் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

சிவா எல்லோரும் இருக்கும் இடத்துக்கு வருவது, சகஜமாக பேசுவது கவிதாவினால் நடக்கிறது. வேறு இடைஞ்சல்கள் வராமல் இது தொடர்ந்தால் சிவா வெகு சீக்கிரமே தன்னுடைய கோபங்களை விட்டு வெளியேறி கொஞ்சம் கொஞ்சமாக மற்றவர்களுடன் இணைந்து வாழ பழகிக்கொள்வான். ஆனால், இந்த மாற்றங்கள் காயத்ரியினால் ஏற்படும் என்று சீரிஸின் தொடக்கத்தில் நினைத்துக் கொண்டிருந்த நமக்கு கவிதாவின் மூலமாக நடப்பதும் ஒரு டிவிஸ்ட்தான்.

கவிதாவுடன் சிவாவுக்கு காதல் மலருமா என்ற யோசிக்கும் அதேவேளையில் ஏன் அது காதலாகத்தான் இருக்கவேண்டும், நல்ல நட்பாக இருக்கமுடியாதா? என்கிற மறுகேள்வியும் எழுகிறது. உடனடியாக காதல், நட்பு என்று ஏன் ஒரு உறவை நிறுவவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம் என்று கூடவே துணைக் கேள்வியும் வருகிறது. ஏனெனில் நாம் அப்படித்தான் வளர்ந்திருக்கிறோம். எல்லா உறவுக்கும் அவசரமாக ஒரு லேபிள் கொடுக்க முயற்சி செய்கிறோம். சகோதரர்கள், காதலர்கள் அல்லது நண்பர்கள் என்று ஏதேனும் பெயர் வைத்தால் மட்டுமே நிம்மதியடையும்படி டிசைன் செய்யப்பட்டிருக்கிறோம்.

AKS - 18 | ஆதலினால் காதல் செய்வீர்
AKS - 18 | ஆதலினால் காதல் செய்வீர்

காயத்ரி இரவு உணவை சமைக்கிறாள். மற்றவர்கள் உதவி செய்கிறார்கள். எல்லோரும் காயத்ரியின் உணவை வெகுவாக பாராட்டும்போது சிவா மட்டும் அமைதியாக சாப்பிடுகிறான். காயத்ரி அவன் எதுவும் சொல்லாதது கண்டு அவனை முறைக்கிறாள். அதை கவனித்த புனிதா, சிவாவிடம் உணவு எப்படி இருந்தது என்று கேட்கிறாள். சிவா உணவு மிக நன்றாக இருந்தது என்றும் தான் கொஞ்சம் அதிகமாகவே சாப்பிட்டதையும் சொல்கிறான். காயத்ரிக்கு மற்ற எல்லோரும் சொல்லும்போது இருந்ததை விட சிவா சொல்லும்போது மகிழ்ச்சி அதிகமாக இருக்கிறது.

நம்மை எப்போதும் புகழ்ந்து பேசுபவர்களைவிட நம்மை குறைசொல்லி விமர்சனம் செய்பவர்களிடம் பாராட்டு வாங்குவது நமக்கு மிக முக்கியமாக இருக்கும். ஒருவரிடம் இருந்து குறைகளை தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கும் யாருக்கும் ஈகோ கனன்று கொண்டே இருக்கும். அதை குறைக்க அதே நபரிடமிருந்து பாராட்டுக்கு மனம் ஏங்குவது மனித இயல்பு. காயத்ரிக்கு சிவாவின் பாராட்டு அப்படித்தான் இருக்கின்றது.

இரவு சுந்தர் காயத்ரிக்கு செல்போனில் அழைக்கிறான். காலையில் சுந்தர் செய்த காரியத்துக்காக காயத்ரி அவன்மீது கோபமாக இருக்கிறாளா என்று கேட்கிறான். காயத்ரி அவன் மீது கோபமாக இருப்பதோடு அதை காட்டவும் செய்கிறாள். சுந்தர் செய்த குழப்பத்தினால் காயத்ரியின் வீட்டில் இருப்பவர்கள் அவளுக்கு காலையிலிருந்து பலமுறை தொலைபேசியில் அழைத்து ஊருக்கு வருவது பற்றி விசாரித்துக் கொண்டே இருந்தார்கள் என்றும் அவர்களை பதட்டப்பட வைத்ததற்காக சுந்தரிடம் காயத்ரி கடிந்து கொள்கிறாள். சுந்தர் வருத்தம் தெரிவிக்கிறான். பிறகு காயத்ரியிடம் தன்னை மாமா என்று ஒருமுறை அழைக்கச் சொல்லி கேட்கிறான். காயத்ரி அப்படி சொல்வதில் விருப்பமில்லை. லாகவமாக மறுத்துவிடுகிறாள்.

சுந்தர் தன் காதலை வெளிப்படுத்தும் ஒவ்வொரு முறையும் காயத்ரிக்கு அது மிகுந்த எரிச்சலை உண்டாக்குகிறது. காயத்ரியின் பாட்டி கூறியதை மனதில் வைத்து சுந்தர் காயத்ரியிடம், “நான் உன் மேல் வைத்திருக்கும் அன்பு உன் பாட்டி வரைக்கும் புரிகிறது... உனக்குத்தான் புரியவில்லை” என்கிறான். சுந்தர் டாக்ஸிக்கின் அடுத்த நிலைக்கு சென்று விட்டான்.

நாம் ஒருவரை விரும்பும்போது அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று நினைப்பது சரி. ஆனால் எந்த நேரமும் தன்னுடைய காதல்தான் பெரிது என்றும், தானே சிறந்த துணை என்றும் நினைத்துக்கொள்வது முட்டாள்தனம். அது காதல் இல்லை.

AKS - 18 | ஆதலினால் காதல் செய்வீர்
AKS - 18 | ஆதலினால் காதல் செய்வீர்

உடைமை எண்ணம் இல்லாத காதலில் ஒவ்வொரு நாளும்தான் எவ்வளவு காதலிக்கிறேன் என்று சொல்லிக் கொண்டேயிருக்க தேவையில்லை. பெயருக்கு இது காதல் திருமணம் என்றாலும் சுந்தர் காயத்ரிக்கு உறவில் சமமான உரிமையும், மரியாதையும் கொடுக்கவில்லை. தான் சொல்வதை கேட்கும் ஒரு படித்த அடிமையாக காயத்ரி இருந்தால் போதும் என்பதுதான் சுந்தரின் காதலாக இருக்கின்றது.

சுந்தருக்கு தன்னைப் பற்றிய உயர்ந்த அபிப்ராயம் இருக்கிறது. அதேபோல் அவன் இந்த உறவில் தனக்கு எது தேவை என்பதை மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறான். காயத்ரிக்கு நல்லது செய்வது போல சில விஷயங்களை அவன் கூறினாலும் அதுவும் சுற்றிவளைத்து தனக்கு சாதகமாகத்தான் முடிகிறது.

தூங்கச் செல்லும் முன் காயத்ரிக்கு புனிதா வாட்ஸ்அப்பில் சில ஆண் மாடல்களின் படங்களை அனுப்புகிறாள். அதை பார்த்ததும் காயத்ரி கோபப்பட்டு புனிதாவை திட்டுகிறாள். புனிதா கெட்டுப் போய்விட்டதாக கூறுகிறாள். ”இதெல்லாம் வீட்டுக்கு தெரிந்தால் பிரச்னை ஆகும், ஊரில் இருப்பவர்கள் காறித் துப்புவார்கள்” என்கிறாள் காயத்ரி. புனிதா, “ஊரில் இருப்பவர்களுக்காக என்னால் வாழ முடியாது” என்று சொல்லும்போது காயத்ரி புனிதாவிடம், ”நம்முடைய மனது கெட்டுப் போய்விடாதா” என்று கேட்கிறாள்.

AKS - 18 | ஆதலினால் காதல் செய்வீர்
AKS - 18 | ஆதலினால் காதல் செய்வீர்

காயத்ரி போல பெரும்பாலான பெண்கள் இருக்கிறார்கள். ஊரை காரணம் காட்டி கட்டுப்பாட்டில் வளர்ந்தவர்களுக்கு அதிலிருந்து வெளியே வருவது எளிதானது அல்ல. எவ்வளவு முற்போக்காக மாறினாலும் மனதளவில் சில விஷயங்களை நாம் வாழ்நாள் முழுவதும்கூட மாற்றிக் கொள்ள இயலாது. அடுத்தவர்கள் விசயத்தில் ஜட்ஜ்மென்ட்டலாக இல்லாதவர்கள்கூட தனக்கென்று வரும்போது சில காரியங்களை செய்ய துணிய மாட்டார்கள். ஆனால் காயத்ரி புனிதாவை ’தவறான பெண்’ என்கிற ரீதியில் நேரடியாகவே பேசுகிறாள். ஒருவருடைய வாழ்க்கையில் மூக்கை நுழைத்து அவர்களை ஒழுக்கமானவர், ஒழுக்கம் கெட்டவர் என்று தீர்மானிக்கும் உரிமை இங்கே யாருக்குமே கிடையாது.

கல்லூரி, வேலைக்கு செல்ல ஆரம்பிக்கும் சமயத்தில் பெண்கள் சிறிதளவு முற்போக்காக, மாடர்னாக மாறும்போது தங்களுடைய உடன்பிறந்தவர்கள் அல்லது நெருங்கிய உறவுப் பெண்களால் விலக்கி வைக்கப்படுவதும் நடக்கிறது. மற்ற பெண்களின் சுதந்திரத்தை பார்த்து ஆனந்தப்படுபவர்கள் வெகுசிலர்தான். பெரும்பாலான பெண்கள் தாங்கள் மாடர்னாக இருக்கும் பெண்களைவிட ஒழுக்கமானவர்கள் என்று காட்டிக்கொள்ளவே விரும்புகிறார்கள். மாடர்னாக உடுத்தும், ஆண் நண்பர்களுடன் பேசும், தனியாக வெளியே செல்லும், வெளியூருக்கு வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு காயத்ரி புனிதாவுக்கு கொடுப்பது போன்ற அறிவுரைகள் எளிதாக வந்தடைகின்றன.

இவ்வளவு நாளும் பொறுமையாக இருந்த புனிதாவுக்கு முதன்முறையாக கோபம் வருகிறது. காயத்ரி தன்னை பற்றி தவறாக சித்தரித்து புரிந்துகொண்டதை புனிதா எப்படி கையாளுவாள்?

காத்திருப்போம்!