Published:Updated:

AKS - 30 | கவிதாவின் அழகும், சிவாவின் குழந்தைத்தனமும், புனிதா- பரத்தின் சண்டையும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
AKS - 30 | ஆதலினால் காதல் செய்வீர்
AKS - 30 | ஆதலினால் காதல் செய்வீர்

விகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் இணைந்து வழங்கும் 'ஆதலினால் காதல் செய்வீர்' (AKS) டிஜிட்டல் சீரிஸ் தினமும் இரவு 8.30 மணிக்கு யூடியூபில் ஒளிபரப்பாகிறது. இதில் நேற்று (01-10-2021) வெளியான 30-வது எபிசோட் எப்படி இருந்தது?!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கவிதா தனது அலுவலகத்தில் ஒரு விழாவுக்கு முதன் முறையாக சேலை அணிந்திருக்கிறாள். பாண்டியன், “இன்றுதான் நீ பெண் போல இருக்கிறாய்” என்று கவிதாவை பார்த்து கேலி செய்கிறான். கவிதா பாண்டியனுக்கு தன் மீது பொறாமை என்று சொல்லி விட்டு கிளம்பிச் செல்கிறாள். கவிதாவை சேலையில் பார்க்கும் காயத்ரி, அவள் மிக அழகாக இருப்பதாகவும், நாளெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்றும் சொல்கிறாள். கவிதாவுடன் சேர்ந்து காயத்ரி செல்ஃபி எடுத்துக் கொள்கிறாள்.

பாண்டியன் கவிதாவை கலாய்ப்பது நகைச்சுவை என்று எடுத்துக் கொள்ளலாம். அது பாண்டியனின் வழக்கமும் கூட. பாண்டியனுக்கு கவிதாவின் மேல் அன்பு இருக்கிறது என்பது கவிதாவுக்கும் தெரிந்த விஷயம்தான். சக வயதுடைய ஒரு பெண்ணை இன்னொரு பெண் ரசிப்பதும், அவள் அழகை புகழ்ந்து சொல்வதும் சகஜம். பெண்களிடம் இந்த பொறாமை இல்லாத அன்பு தோழிகளுக்கு இடையில் மட்டுமல்லாது குடும்பத்திலும் இருக்கிறது. ஆனால் ஏற்கெனவே திரைப்படங்கள் மற்றும் சீரியல்கள் பெண்கள் ஒருவருக்கொருவர் பொறாமையுடன் இருப்பார்கள் என்றும் குறிப்பாக புறத்தோற்றத்தில் மற்றவர்களை பாராட்ட மாட்டார்கள் என்றும் காட்டிப் பழக்கப்படுத்தி வைத்திருக்கின்றன. காயத்ரி கவிதாவின் அழகை பற்றி பேசும் இந்தக் காட்சி யதார்த்தத்தை பிரதிபலிக்கிறது.

சிவா அவசரமாக முடித்துக் கொடுக்க வேண்டிய ப்ராஜெக்ட் ஒன்றை வீட்டிலிருந்தே செய்யுமாறு அலுவலகத்தில் இருந்து அவனது ப்ராஜக்ட் மேனேஜர் கூறுகிறார். அவனுக்கு உதவியாக காயத்ரியை வீட்டிலிருந்தே வேலை செய்ய சொல்கிறார். சிவாவின் அறையில் வேலை செய்ய வரும் காயத்ரியிடம் சிவா ப்ராஜக்ட் பற்றிய தகவல்களை சொல்லும் போது முதல் நாள் அவள் செய்த தவறை சுட்டிக் காட்டி அது போல் செய்யக் கூடாது எனச் சொல்கிறான்.

முகம் வாடிப்போகும் காயத்ரியிடம் உடனே நன்றாக பேசி தான் உதவுவதாக சொல்கிறான் சிவா. அவனது அறை அசுத்தமாக இருப்பதால் அவளுக்கு அங்கு உட்கார்ந்து வேலை செய்ய சங்கடமாக இருக்கின்றது. அதனால் அறையைச் சுத்தம் செய்யவா என்று சிவாவிடம் கேட்கிறாள். சிவா முதலில் தயங்கினாலும் பின் காயத்ரியை அறையை சுத்தம் செய்ய அனுமதிக்கிறான். காயத்ரி சிவா படிக்கும் புத்தகங்களை அடுக்கி வைக்கும்போது அவனது விருப்ப புத்தகங்களைப் பார்த்து தனக்குள் சிரித்துக் கொள்கிறாள். சிவா குழந்தைகள் படிக்கும் புத்தகங்கள் முதற்கொண்டு எல்லா வகையான புத்தகங்களும் வைத்திருக்கின்றான்.

AKS - 30 | ஆதலினால் காதல் செய்வீர்
AKS - 30 | ஆதலினால் காதல் செய்வீர்

சிவாவின் இந்த ’சிடு மூஞ்சிக்கு’ பின்னால் ஒரு குழந்தைத்தனம் இருப்பதைக் கண்டு காயத்ரிக்கு வியப்பாக இருக்கிறது. சிவாவின் தனிமை அவனை முரடனாக ஆக்கியிருந்தாலும், ஒரு தனி மனிதனாக அவன் மிக நல்லவனாக இருக்கிறான். உள்ளுக்குள் அன்புக்கு ஏங்கும் ஒரு குழந்தையாக இருக்கிறான். அதுபோக தன்னுடைய குழந்தைப் பருவத்திலிருந்து அவனது ரசனைகள் மாறவில்லை என்பதற்கு உதாரணமாக அவன் குழந்தைகள் படிக்கும் காமிக்ஸ் புத்தகங்களும், சக்திமான் ஸ்டிக்கர்களும் வைத்திருக்கிறான்.

சிவாவின் அறையில் இருக்கும் கித்தாரை பார்த்து காயத்ரி, “இதெல்லாம் வாசிக்கத் தெரியுமா” என்று கேட்கிறாள். சிவா அவளுக்காக ஒரு பாடல் பாடிக் காட்டுகிறான். அந்தப் பாடலில் கூட சிவா தன் தனிமையை பற்றியே பாடுகிறான். நிதிஷின் பாடல் வரிகளும் சந்தோஷின் இசையும் சிவாவின் வாழ்க்கை, அவனது தனிமைத் துயர் எல்லாவற்றையும் மிக அழகாக சொல்லுகின்றன.

முதலில் சோகமாக பாடும் சிவா பிறகு சிரித்துக் கொண்டே பாடி முடிக்கிறான். ஆனால் காய்த்ரிக்கு அவனது பாடலில் இருந்த சோகமும் தனிமையும் புரிந்ததாகத் தெரியவில்லை. அவள் சிரித்தபடி தலையாட்டி ரசித்துக் கேட்கிறாள். ஒருவேளை காயத்ரிக்கு பாடல் புரிந்தால் சிவாவை இன்னும் நன்றாக புரிந்து கொள்ள உதவும். சிவா முதன் முறையாக காயத்ரியிடம் சிரித்துப் பேசுகிறான். சிவாவின் கதாபாத்திரம் நிஜ வாழ்க்கையில் இது போல் தனிமையில் இருப்பவர்களை புரிந்து கொள்ளவும், ஏற்றுக் கொள்ளவும் ஒரு தொடக்கமாக இருக்கின்றது.

AKS - 30 | ஆதலினால் காதல் செய்வீர்
AKS - 30 | ஆதலினால் காதல் செய்வீர்

சிவா நன்றாக பாடியதும் காயத்ரி சிவாவிடம், “இந்த காட்டுமிராண்டிக்குள் இப்படிப்பட்ட ஒரு கலைஞனா” என்று கூறுகிறாள். அதைக் கேட்ட சிவா முறைக்கும்போதுதான் காயத்ரி தான் பேசியது தவறு என்று உணர்கிறாள். காயத்ரி சிவாவிடம் மன்னிப்பு கேட்கிறாள். ஆனால் சிவா சிரித்துக் கொண்டே அதை கண்டு கொள்ளாமல் விடுகிறான். காயத்ரி மற்றும் சிவாவுக்கு இடையில் இருந்த கசப்புகள் நீங்கி ஒரு நல்ல நட்பு உருவாக ஆரம்பித்திருக்கிறது.

மேட்ரிமோனி அலுவலகத்தில் எல்லோரும் ஆயுத பூஜை கொண்டாடுகிறார்கள். சேலை கட்டிக்கொண்டு வந்திருக்கும் கவிதாவை ராஜேஷ் ரசித்துப் பார்க்கிறான். காயத்ரி சொன்னது போல கவிதா ஒரு கவிதையைப் போல் இருக்கிறாள். ராஜேஷ் அவள் எங்கு சென்றாலும் அவளையே கவனித்துக் கொண்டிருக்கிறான். அங்கே விழா கொண்டாட வரும் ராஜேஷின் அம்மா, கவிதாவிடம், தன் மகன் தான் பார்க்கும் பெண்ணை எல்லாம் வேண்டாம் என்று சொல்வதாகவும், முடிந்தால் இந்த மேட்ரிமோனியல் அலுவலகத்திலேயே தங்கள் மகனுக்கு ஒரு நல்ல பெண் பார்த்து கொடுக்குமாறும் கேட்கிறார்.

AKS - 30 | ஆதலினால் காதல் செய்வீர்
AKS - 30 | ஆதலினால் காதல் செய்வீர்

கவிதா அவரிடம் ராஜேஷின் திருமணத்துக்கு பெண் பார்த்து தந்து உதவுவதாக கூறுகிறாள். திடீரென ராஜேஷின் அம்மா கவிதாவிடம், “என் மகனை திருமணம் செய்து கொள்கிறாயா” என்று கேட்டு விடுகிறார். ராஜேஷ், கவிதா இருவருக்கும் அதிர்ச்சியாக, கவிதாவிடம் ராஜேஷ் தன் அம்மா பேசியதை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று சொல்கிறான். அதோடு தன் அம்மாவை அங்கிருந்து அழைத்துச் செல்கிறான். ராஜேஷ் அம்மாவை அழைத்து சென்றாலும், அவனுக்கும் கவிதாவை திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இருக்கின்றதாக அவனது நடவடிக்கைகள் சொல்கின்றன.

புனிதா அலுவலகத்தில் இருந்து பரத்துக்கு செல்போனில் அழைக்கிறாள். மருத்துவமனையில் தன் அம்மாவுடன் இருக்கும் பரத், புனிதா ஊருக்கு வரவில்லை என்கிற கோபத்தில் இருக்கிறான். அதனால் அவளது அழைப்பை துண்டித்துக் கொண்டே இருக்கிறான். மிக அன்புடையவர்களாக, ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டவர்களாக இருக்கும் பரத், புனிதாவின் இடையில் உருவாகி இருக்கும் இந்த சிறு சண்டை எல்லா உறவுகளிலும் சூழ்நிலை காரணமாக ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் உருவாவதுதான். விரைவில் முடிவுக்கு வந்து இருவரும் பழையபடி சேர்வார்கள் என நம்புவோம்.

ராஜேஷுக்கு கவிதாவின் மீது ஏற்பட்டிருக்கும் ஈர்ப்பு, சீரிஸில் இன்னொரு புதிய உறவின் திறப்பாக இருக்குமா?

காத்திருப்போம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு