Published:Updated:

AKS - 17 | ஈகோவை சீண்டிப்பார்க்கும் ஆட்டிட்யூட்…பாராட்டை எதிர்பார்ப்பது தவறா?!

AKS - 17 | ஆதலினால்

விகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் இணைந்து வழங்கும் 'ஆதலினால் காதல் செய்வீர்' (AKS) டிஜிட்டல் சீரிஸ் தினமும் இரவு 8.30 மணிக்கு யூடியூபில் ஒளிபரப்பாகிறது. இதில் நேற்று (14-09-2021) வெளியான 17-வது எபிசோட் எப்படி இருந்தது?!

Published:Updated:

AKS - 17 | ஈகோவை சீண்டிப்பார்க்கும் ஆட்டிட்யூட்…பாராட்டை எதிர்பார்ப்பது தவறா?!

விகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் இணைந்து வழங்கும் 'ஆதலினால் காதல் செய்வீர்' (AKS) டிஜிட்டல் சீரிஸ் தினமும் இரவு 8.30 மணிக்கு யூடியூபில் ஒளிபரப்பாகிறது. இதில் நேற்று (14-09-2021) வெளியான 17-வது எபிசோட் எப்படி இருந்தது?!

AKS - 17 | ஆதலினால்

காயத்ரி வேலை நேரத்தில் தனது மேஜையில் படுத்து தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்து சிவா அவளை எழுப்புகிறான். அவள் எழுந்திருக்கவில்லை என்றதும் அருகில் இருப்பவரிடம் காயத்ரியை ஓய்வு அறைக்கு சென்று உறங்கி விட்டு பின் வந்து பணியை தொடர சொல்லுமாறு சொல்லிச் செல்கிறான். அவனுக்குத் தான் குறட்டைவிட்ட ஞாபகம் வருகிறது. தன்னால்தான் காயத்ரி தூங்கவில்லை போல என்று நினைத்துக்கொண்டு எதுவும் சொல்லாமல் போகிறான்.

காலையில் பாசிட்டிவ் விஷயங்களில் தொடங்கினால் அந்த நாள் முழுவதும் பாசிட்டிவ்வான எண்ணம் இருக்கும் என்று சொல்வார்கள். கவிதா சிவாவின் குறட்டையை பற்றி பேசி சிரிக்க வைத்தது ஒருவகையில் சிவாவை நேர்மறையாக பாதித்திருக்கலாம். அதன் வெளிப்பாடாக சிவா பொறுமையாக யோசித்து தன்னால் மற்றவர்கள் தூங்கவில்லை போல என்று நினைத்து காயத்ரியை கடிந்துகொள்ளாமல் இருந்திருக்கலாம். சிவாவை போன்று சிறுவயதிலிருந்து தனிமையில் இருந்ததால் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கவிதாவை போல பொறுமையாக, எப்போதும் பாசிட்டிவாக பேசுபவர்கள் உடன் இருந்தால் மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

AKS - 17 | ஆதலினால் காதல் செய்வீர்
AKS - 17 | ஆதலினால் காதல் செய்வீர்

சிவாவை போன்று எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்பட்டு கோபப்படுபவர்கள் எளிதில் மற்றவர்களின் ஈகோவையும் ட்ரிகர் செய்கிறார்கள். பொதுவாக நம்மை சுற்றி இருக்கும் ஷார்ட் டெம்பர் ஆட்களிடம் நாமும் எளிதில் கோபப்பட்டுவிடுவோம். அவர்களது அத்தகைய செயல்களுக்கு பின்னால் இருக்கும் காரணங்களை நாம் யோசிக்க மாட்டோம். காயத்ரிக்கும் சிவாவினால் ஒவ்வொரு முறையும் அப்படித்தான் ஈகோவும், கோபமும் வருகிறது.

இரண்டாம் நாளே வீட்டில் தனியாக இருக்கும் கவிதாவுக்கு சலிப்பாக இருக்கிறது. தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை மாற்றி மாற்றி பார்க்கிறாள். வீட்டை சுற்றி வருகிறாள். பின்பு அதுவும் போரடிக்கவே ஆன்லைனில் பொருட்கள் ஆர்டர் செய்கிறாள்.

இந்த பழக்கத்தை மிகப்பெரிய ஸ்ட்ரெஸ் பஸ்டராக பயன்படுத்தி வந்த நண்பர் ஒருவர் வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருட்களைக் கூட அருகில் இருக்கும் கடையில் வாங்காமல் அமேசானில் வாங்குவார். அவர் ஒரு போதைப் பழக்கத்தைப் போல ஆன்லைனில் வாங்கும் பழக்கத்துக்கு அடிமையாகி இருந்தார். தினமும் அலுவலகத்துக்கு அவர் பெயரில் ஒரு கூரியர் வந்து கொண்டே இருக்க வேண்டும். அப்படி பழகியதால் பல் துலக்கும் பேஸ்ட், சோப்பு முதலிய பொருட்கள்கூட ஒவ்வொன்றாக ஆன்லைனில் ஆர்டர் செய்து கொண்டிருப்பார்.

இந்த பழக்கம் ஆண், பெண் பாகுபாடு இல்லாமல் பலருக்கும் இருக்கிறது. சமூக வலைதளங்கள் மற்றும் செல்போனில் கேம் விளையாடுவது போல ஆன்லைனில் ஷாப்பிங் செய்வதற்கும் மக்கள் அடிமையாகிக் கொண்டிருக்கிறார்கள்.

AKS - 17 | ஆதலினால் காதல் செய்வீர்
AKS - 17 | ஆதலினால் காதல் செய்வீர்

கவிதா பொருட்களை ஆர்டர் செய்யும்போது ஒவ்வொரு முறையும் பாண்டியனுக்கு வங்கிக் கணக்கில் பணம் குறையும் நோட்டிஃபிகேஷன் எஸ்எம்எஸ் செல்கிறது. பாண்டியன் அதனால் அலுவலகத்தில் கவனம் செலுத்த முடியாமல் போனை பார்த்துக்கொண்டு கோபமாக உட்கார்ந்திருக்கிறான். வீட்டுக்கு வந்ததும் அதே கோபத்துடன் கவிதாவிடம் விவாதம் செய்கிறான். கவிதா பதிலுக்கு பணத்தை தன் தந்தையிடமிருந்து வாங்கி கொடுத்து விடுவதாக சொல்கிறாள். அதற்கு பாண்டியன் யாருடைய பணமாக இருந்தாலும் அது தேவையில்லாத செலவு தானே என்று கவிதாவுக்குப் புரிய வைக்க முயற்சி செய்கிறான்.

கவிதா தான் வீட்டில் வேலை இல்லாமல் இருப்பதால் தான் இதுபோல் நடக்கிறது என்றும் தானும் வேலைக்கு சென்று சம்பாதிக்க வேண்டும் என்று புனிதாவிடம் சொல்கிறாள். புனிதா கவிதாவுக்கு வேலை கிடைக்க உதவி செய்வதாக கூறுகிறாள்.

ஓய்வு அறையில் ஓய்வு எடுத்துக்கொண்டு தன் இருக்கைக்கு திரும்புகிறாள் காயத்ரி. வேலையை சீக்கிரம் முடித்துவிட்டு சிவாவுக்கு மெயில் அனுப்பி அவனது பதிலுக்காக காத்திருக்கிறாள். வெகுநேரம் பதில் வராமல் போகவே அவன் அறைக்குச் சென்று மெயில் பார்த்தீர்களா என்று கேட்கிறாள். பார்த்து விட்டதாகவும், சரியாக இருந்ததாகவும் சொல்லும் சிவாவிடம், காயத்ரி, பிறகு ஏன் தன்னை பாராட்டவில்லை என்று கேட்கிறாள். சிவா அவளை கேலி செய்து அனுப்பிவிடுகிறான். வேலைக்குச் சேரும் புதிதில் பலருக்கும் இருக்கும் பிரச்னை இது. முதல்முறை வேலையை முடிக்கும்போது அதற்கு ஒரு சிறு பாராட்டை எதிர்பார்ப்பதும், அதேசமயம் முதல் நாளே திட்டு வாங்கிவிட்டால் அதற்காக மிகவும் மனம் உடைந்து போவதும் மனித இயல்பு.

காயத்ரியின் கேள்வியும் எதிர்பார்ப்பும் சரிதான். முதல்நாள் வேலையை சரியாக செய்யவில்லை என்று சத்தம் போடும் சிவா, காயத்ரி அதை சரியாக செய்து முடித்த இரண்டாம் நாள் பாராட்டி இருக்க வேண்டியதும் அவசியம்தான். ஒவ்வொரு முறையும் காயத்ரியின் ஈகோவை சிவாவின் ஆட்டிட்யூட் கிளறி விடுகிறது.

இரவு வீட்டில் எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து தொலைக்காட்சியில் நகைச்சுவை நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சிவாவுக்கு அந்த நிகழ்ச்சி பிடிக்கவில்லை. அதுபோக எல்லோரும் அதை என்ஜாய் செய்து சிரித்து, மகிழ்ந்து, பார்ப்பது சிவாவுக்கு எரிச்சலை உண்டாக்குகிறது. ’இதற்கெல்லாம் எப்படி சிரிக்கிறார்கள்’ என்று எல்லோரையும் ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருக்கும் சிவா ஒரு கட்டத்தில் எழுந்து தன்னுடைய அறைக்குச் சென்று விடுகிறான்.

AKS - 17 | ஆதலினால் காதல் செய்வீர்
AKS - 17 | ஆதலினால் காதல் செய்வீர்

பரத்துக்கு சிவா எழுந்து செல்வது கவலையளிக்கிறது. மருத்துவர் சிவாவை தனியாக விட வேண்டாம் என்று சொன்னதால் அவனிடம் பேச அவனது அறைக்கு செல்கிறான். சிவாவிடம் மருத்துவர் சொன்னதை நினைவூட்டி எல்லோருடனும் வந்து இருக்கச் சொல்கிறான். மருத்துவரின் பேச்சை கேட்டதால்தான் அங்கு கோபத்தைக் காட்டாமல் எழுந்து வந்ததாக சொல்கிறான் சிவா.

நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்தில் ஒன்றாக உட்கார்ந்து தொலைக்காட்சி பார்ப்பதே இன்று அரிதாகிவிட்டது. ஒவ்வொருவரின் தனிப்பட்ட ரசனைகள், சுதந்திரம் ஒருவர் தன் நேரத்தை மற்றவர்களுக்காக செலவழிக்க விரும்பாதது முதலிய காரணங்களுக்காக ஒரே வீட்டில் இன்று இரண்டு, மூன்று தொலைக்காட்சிப் பெட்டிகள் கூட நடுத்தர குடும்பங்களில் சர்வ சாதாரணமாக சாத்தியமாகி இருக்கின்றன. அப்படி இருக்க புதிதாக பார்க்கும் நண்பர்கள் ஒன்றாக இருந்து ஒரே நிகழ்ச்சியை பார்ப்பது நடைமுறைக்கு ஒத்துவராத அளவுக்கு இன்று மனிதர்களுக்குள் இடைவெளி உருவாகியிருக்கிறது.

தன் அறையில் இருக்கும் சிவாவுக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் சத்தமும், எல்லோரின் சிரிப்பு சத்தமும் கேட்க எரிச்சலாக இருக்கிறது. எழுந்து வந்து எல்லோரையும் கோபமாகப் பார்க்கிறான். சிவா சண்டையிடுவனா அல்லது காலையில் நடந்ததை போல் மனம் மாறி கனிவுடன் நடந்துகொள்வானா?

காத்திருப்போம்!