Published:Updated:

AKS - 21 | பேஸ்புக் புளூ டிக்கும், சிவாவின் மனநிலையும்... பதற்ற பாண்டியனும், கூல் கவிதாவும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
AKS - 21 | ஆதலினால் காதல் செய்வீர்
AKS - 21 | ஆதலினால் காதல் செய்வீர்

விகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் இணைந்து வழங்கும் 'ஆதலினால் காதல் செய்வீர்' (AKS) டிஜிட்டல் சீரிஸ் தினமும் இரவு 8.30 மணிக்கு யூடியூபில் ஒளிபரப்பாகிறது. இதில் நேற்று (20-09-2021) வெளியான 21-வது எபிசோட் எப்படி இருந்தது?!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சிவாவும், பரத்தும் தங்களது இன்னொரு பள்ளி நண்பனை சந்திக்கிறார்கள். மற்ற இருவரில் யாருக்கு சிவா நெருங்கிய நண்பன் என்று அவர்கள் விவாதிக்கிறார்கள். அதற்கு வெறும் புன்னகையை பதிலாக தரும் சிவாவை அவனது நண்பன், “என்னடா இவன் பேஸ்புக்ல புளூ லைக் போடுற மாதிரி ரியாக்ட் பண்ணிட்டு இருக்கான்” என்று கேலி செய்கிறான்.

புகைப்படங்கள் மற்றும் பதிவுகளுக்கு அன்பு, ஆறுதல், சோகம், கோபம், ஆச்சரியம் என பலவகையான உணர்வுகளை வெளிப்படுத்தும் பட்டன்களை பேஸ்புக் கொடுத்திருந்தாலும் பலரும் ’புளூ லைக்’ மட்டும் போடுவார்கள். அவர்கள் அந்த குறிப்பிட்ட பதிவை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று யாருக்கும் புரியாது. உணர்ச்சிகளற்ற உணர்வாக பேஸ்புக் Blue Like மாறிவிட்டது. சிவாவும் அப்படி எல்லா உணர்வுகளையும் ஒரே மாதிரி வெளிப்படுத்துகிறான். பேஸ்புக் புளூ லைக்கினால் ஏற்பட்ட பாதிப்பு நாடி, நரம்பு, ரத்தம் எல்லாம் ஊறிப்போன ஒருவரால்தான் இப்படி ஒரு வசனத்தை எழுதியிருக்க முடியும். சீரிஸின் வசனகர்த்தா பாரி அய்யாசாமி அவர்களுக்கு ஆறுதலும், பாராட்டுக்களும்.

கவிதா நாளிதழில் விளம்பரம் பார்த்து வேலைக்கான நேர்முகத் தேர்வு ஒன்றுக்கு செல்கிறாள். மாதம் 12,000 ரூபாய் சம்பளத்தில் டேட்டா என்ட்ரி வேலை என்றதும் அது தனக்கு சவாலான வேலையாக இருக்காது என்று சொல்லி, வேலையை வேண்டாம் என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வருகிறாள். வேலையை வேண்டாம் என்று சொல்லியதற்காக பாண்டியன் அவளிடம் கோபப்படுகிறான். ”நாம் நினைத்த வேலை கிடைக்கவில்லை என்றால் கிடைத்த வேலையை முதலில் பிடித்துக் கொள்ள வேண்டும்” என்கிறான். “கிடைத்த வேலையை பிடித்துக் கொண்டால் நினைத்த வேலைக்குப் போகவே முடியாது” என்கிறாள் கவிதா.

AKS - 21 | ஆதலினால் காதல் செய்வீர்
AKS - 21 | ஆதலினால் காதல் செய்வீர்

இந்தியாவின் முக்கிய பிரச்னைகளில் ஒன்றாக எப்போதும் இருப்பது வேலையில்லா திண்டாட்டம். அதனாலேயே உடனடியாக வருமானம் கிடைக்கும் கல்வி கற்க வேண்டும், அதேபோல் கிடைத்த வேலையை பற்றிக்கொண்டு இறுதிவரை அது நிரந்தரமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது இந்தியர்களின் மரபணுவிலேயே ஊறிப்போன ஒன்றாகிவிட்டது. அதைத்தான் பாண்டியனும் கவிதாவிடம் சொல்கிறான். பிடித்த வேலையை செய்வது என்பது வெகு சிலருக்கே சாத்தியமாகின்றது. பிடித்திருப்பதை பற்றியெல்லாம் ஆராய்ச்சி செய்யாமல் வருமானத்துக்காக வேலைக்கு செல்பவர்கள்தான் நம்மில் பெரும்பாலானவர்கள்.

பள்ளியில் படிக்கும் காலகட்டத்தில் இருந்து படித்து முடித்ததும் இந்த வேலைக்கு செல்ல வேண்டும் என்று எல்லோருக்கும் ஒரு கனவு இருக்கும். பனிரெண்டாம் வகுப்பில் பாடப்பிரிவு தேர்வு செய்யும் போதே நாம் என்ன வேலைக்கு செல்ல முடியும் என்பதை கணித்துவிட முடியும். ஆனால் கடந்த பதினைந்து ஆண்டுகளாக ’எந்த வேலைக்கு செல்வதாக இருந்தாலும் முதலில் பொறியியல் படி, அதன்பிறகு அந்த வேலைக்கு தேவையான படிப்பை படி’ என்பது தமிழ்நாட்டில் எழுதப்படாத விதியாகிவிட்டது. அதனால் இன்று பல பொறியாளர்களும் வங்கித் தேர்வு எழுதி வங்கி மற்றும் அரசு பணிகளில் இருப்பதை காணலாம். மருத்துவர் ஆக ஆசைப்பட்டு அந்த வாய்ப்பு கிடைக்காததால் பொறியாளர் ஆகி பின்பு வங்கியில் பணிபுரியும் ஒருவருக்கு வாழ்நாள் முழுவதும் தங்களது ஆசையை நிறைவேற்றிக்கொள்ள முடியாத வருத்தம் உறுத்திக்கொண்டே இருக்காதா?

இன்னமும் நம்மூரில் வருமானம்தான் ஒருவர் என்ன வேலை செய்யவேண்டும் என்பதை தீர்மானிக்கிறதே தவிர, மனிதர்களின் கனவுகள் அல்ல. வெகு சிலர் தான் தங்களுக்கு பிடித்ததை செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக நின்று அதன் வழி செல்பவர்கள். அதிலும் பெரும்பாலும் கலை மற்றும் விளையாட்டுத்துறை போன்றவற்றை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். பொருளாதார ரீதியாக பெற்றோர்களின் ஆதரவு இருந்தால் ஓரளவு நினைத்ததை செய்து பார்க்கும் வாய்ப்பு இருக்கும். பிள்ளைகளின் பிடித்த வேலையை செய்யும் சுதந்திரத்தை மதிப்பதோடு, பொருளாதார ரீதியாக அவர்களுக்கு உதவும் பெற்றோர்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்திருக்கின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கவிதா பாண்டியனிடம், “தன்னுடைய நாட்களை திரும்பிப் பார்க்கும்போது ஒவ்வொரு நாளும் மனதில் நிறுத்திக் கொள்ளும் வகையில் வாழ்ந்திருக்க வேண்டும்” என்கிறாள். ஒரே மாதிரியான வேலையை தினந்தோறும் செய்யும் செக்குமாட்டு வாழ்க்கையில் தனக்கு விருப்பமில்லை என்கிறாள்.

AKS - 21 | ஆதலினால் காதல் செய்வீர்
AKS - 21 | ஆதலினால் காதல் செய்வீர்

அதை கேட்கும் சிவாவுக்கு, தனது நண்பன் திருமண தகவல் மைய அலுவலகத்தில் தினமும் பல்வேறு வகையான மக்களை சந்திக்கும் பணிக்கு சோர்வடையாமல், கலகலப்பாகப் பேசும் ஒரு பெண் இருந்தால் பரிந்துரைக்கச் சொல்லிக் கேட்டது நினைவுக்கு வருகிறது. சிவா, கவிதாவிடம் தனது நண்பனின் திருமண தகவல் மைய வேலையைப் பற்றி சொல்கிறான். கவிதாவுக்கு ஏற்ற சவாலான வேலையாக இருக்கும் என்றும், கவிதாவால் அதை திறம்பட செய்ய முடியும் என்றும் சிவா சொல்கிறான். கவிதா மகிழ்ச்சியாக அதற்கு சம்மதம் தெரிவிக்கிறாள்.

இந்த வாழ்க்கை சின்னஞ்சிறியது, ஒருமுறைதான் பிறக்கிறோம் அதனால் நமக்கு பிடித்த வேலையை செய்வது முக்கியம் என்கிற எண்ணம் இன்றைய தலைமுறைக்கு அதிகம் இருக்கிறது. வருமானத்துக்காக ஒரு வேலையை தேடிக் கொண்டாலும் மற்ற நேரங்களில் தங்களுக்கு பிடித்த வேலையையும் பலர் செய்கிறார்கள்.

பிடித்த வேலையை செய்யும்போதுதான் நான் தொடர்ந்து ஆர்வத்துடன் செய்வோம். அதுவே நிரந்தர வருமானத்தை ஈட்டித்தரும் பெரும் தொழிலாக மாறும். பிடிக்காத வேலையில் நீண்ட நாட்கள் இருக்க முடியாது. உதாரணமாக விருப்பமில்லாமல், வருமானத்துக்காக மட்டும் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்யும் பலரும் 40 வயதில் ஓய்வு பெறும் உணர்வுக்கு வந்துவிட்டதாக புலம்புவதை இப்போது அதிகம் பார்க்கலாம்.

AKS - 21 | ஆதலினால் காதல் செய்வீர்
AKS - 21 | ஆதலினால் காதல் செய்வீர்

பாண்டியனும், கவிதாவும் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அங்கு வரும் சிவா தனக்கு காபி ஆர்டர் செய்து தரும்படி கேட்கிறான். ஏற்கெனவே சிவாவுக்கு செலவழித்த பணத்தை அவன் திருப்பி தராததால் பாண்டியன் சிவாவிடம் தனது செல்போன் வேலை செய்யவில்லை என்கிறான். சிவா தன்னுடைய செல்போனை கொடுத்து அப்படியே பாண்டியனுக்கும் கவிதாவுக்கும் தேவையானதை கூட ஆர்டர் செய்து கொள்ளும்படி சொல்கிறான். அவ்வளவையும் ஆர்டர் செய்துவிட்டு பணம் செலுத்த சிவாவிடம் திரும்பத் தருகிறான் பாண்டியன்.

சிறிது நேரத்தில் ஆர்டர் செய்திருந்த உணவு வந்ததும் அதை வாங்க சிவா அங்கு இல்லாததால் பாண்டியன் செல்கிறான். சிவா ஆர்டரை cash on delivery அதாவது உணவை டெலிவரி கொடுக்கும்போது பணம் செலுத்தும் முறையில் ஆர்டர் செய்திருப்பதால் பணம் கொடுக்கும்படி டெலிவரி கொடுக்க வந்தவர் கேட்கிறார். தான் மீண்டும் மாட்டிக் கொண்டதாக பாண்டியன் முழித்துக் கொண்டு நிற்கும்போது சிவா வருகிறான்.

பாண்டியனைப் போல தன்னிடம் பணம் இருந்தாலும் மற்றவர்களுக்கு செலவு செய்ய யோசிப்பவர்களை நமது தினசரி வாழ்க்கையில் பார்க்கலாம். இவர்கள் யாரோடு உறவாக இருந்தாலும் பணம் செலவாகி விடும் என்கிற எண்ணத்தில் எப்போதும் விழிப்புணர்வுடன் இருப்பார்கள். அதனாலேயே நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் ஒன்று கூடுவதை தவிர்க்க பார்ப்பார்கள். அப்படியே நடந்தாலும் ஒன்றுகூடுதலினால் கிடைக்கும் மகிழ்ச்சியைகூட முழுவதுமாக அனுபவிக்க மாட்டார்கள்.

பணம் இல்லாதவர்கள் அப்படி இருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் பணம் இருந்தும் ஒரே வீட்டில் வசிப்பவர்களிடையே காபி வாங்கித் தருவது போன்ற சிறிய செலவுகள் கூட செய்ய மனமில்லாமல் கணக்குப் பார்த்துக் கொண்டே இருப்பவர்கள் வாழ்க்கையில் மனிதர்களுடன் சேர்ந்திருப்பதால் கிடைக்கும் மகிழ்ச்சியான தருணங்களை இழக்கிறார்கள். எதில் மகிழ்ச்சி என்பது மனிதருக்கு மனிதர் நிச்சயமாக வேறுபடும். ஆனால் எப்போதும் பணம் பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பது மொத்த வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் செய்துவிடும்.

கவிதாவின் புது வேலை அவளுக்கு சவாலானதாக இருக்குமா? பாண்டியன் பணத்தை பற்றிய கவலைகளை விட்டுவிட்டு நிம்மதியாக வாழ்வானா?

காத்திருப்போம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு