Published:Updated:

AKS - 29 | லிவிங் டு கெதர் உறவுமுறையின் அடுத்தக்கட்டம் திருமணம்தானா?!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
AKS - 29 | ஆதலினால் காதல் செய்வீர்
AKS - 29 | ஆதலினால் காதல் செய்வீர்

விகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் இணைந்து வழங்கும் 'ஆதலினால் காதல் செய்வீர்' (AKS) டிஜிட்டல் சீரிஸ் தினமும் இரவு 8.30 மணிக்கு யூடியூபில் ஒளிபரப்பாகிறது. இதில் நேற்று (30-09-2021) வெளியான 29-வது எபிசோட் எப்படி இருந்தது?!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும் பாண்டியனும், கவிதாவும் சாலையோர தள்ளுவண்டி கடையில் இரவு உணவு சாப்பிடுகின்றனர். கவிதா தன் அலுவலகத்தில் ஆதரவில்லாத இளம்பெண்ணுக்கு ராஜேஷ் தங்கள் அலுவலகத்தின் சார்பில் திருமணம் செய்து வைப்பதாக கூறியது பற்றி பாண்டியனிடம் சொல்கிறாள். பாண்டியன் ராஜேஷின் வியாபாரத் திறமையை கண்டு வியந்து பேசுகிறான்.

கடைக்கு சாப்பிட வந்திருக்கும் இருவர் கவிதாவை உற்று பார்த்தபடியே நிற்கிறார்கள். அவளைப் பற்றி தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள். அவர்கள் மேல் பாண்டியன் கோபப்படுகிறான். கவிதா அவர்கள் ’சைட்’ அடித்தால் பரவாயில்லை, விடு என்கிறாள். ஆனால் பாண்டியனுக்கு கோபம் வருகிறது.

பெண்களை பொது இடங்களில் சுதந்திரமாக இருக்க விடாத அளவுக்கு உற்றுப் பார்ப்பது, கேலி செய்வது, வேண்டுமென்றே காதில் விழுவது போல் தவறான அர்த்தத்தில் பேசுவது போன்ற அத்துமீறல்கள் நம்மூரில் இன்றும் சகஜமாக நடக்கிறது.

முன்பு இந்த காரணங்களுக்காக பெண்களை வீட்டை விட்டு வெளியே அனுப்ப மாட்டார்கள். இப்படி மற்றவர்கள் பெண்களுக்கு தொந்தரவு கொடுப்பதனால் இளம் வயது பெண்களுக்கு தீவிரமான கட்டுப்பாடுகளை முன்பு பெற்றோர்கள் விதித்தனர். இதே காரணத்திற்காக பெண்களை பெண்கள் மட்டும் பயிலும் பள்ளி, கல்லூரிகளில் சேர்ப்பதோடு, வேலைக்கு அனுப்பவும் மாட்டார்கள்.

AKS - 29 | ஆதலினால் காதல் செய்வீர்
AKS - 29 | ஆதலினால் காதல் செய்வீர்

இன்றைய பெற்றோர்கள் ஓரளவு மாறி வருகின்றனர். மற்றவர்களை பற்றி கவலைப்படாமல் தங்கள் பெண் பிள்ளைகளை வெளியில் செல்ல அனுமதிக்கின்றனர். அதே போல் இப்படி பார்ப்பவர்களையும், கேலி செய்பவர்களையும் கண்டு கொள்ளாமல், தங்கள் வேலை அல்லது படிப்பு பாதிக்காமல் அவர்களை கடந்து செல்ல இன்றைய பெண்கள் பழகி வருகின்றனர். ஒருவகையில் அது மகிழ்ச்சியாக இருந்தாலும் கிராமங்களில் இன்னமும் பெண்களுக்கு அதே கட்டுப்பாடுகளும், சிரமங்களும் இருக்கின்றன.

தன்னை பற்றி பேசிக் கொள்பவர்களை கவிதா எளிதாக எடுத்துக் கொண்டு அவளுடைய வேலையை பார்ப்பது நல்ல விஷயம். அதே சமயம் இப்படி பார்க்கும், கேலி பேசும் எல்லோரும் சாதாரணமாக பார்க்கிறார்கள் என்று எளிதாக கடந்து போகவும் கூடாது. ஆபத்து எங்கு இருந்தும் வரலாம் என்கிற எச்சரிக்கை உணர்வு அவசியம். எல்லாவற்றையும் விட பெண்களுக்கு தற்காப்பு கலை தெரிந்திருப்பது இன்று அத்தியாவசியம். அந்த இடத்தில் பாண்டியன் இல்லை என்றாலும் கூட கவிதா தனியாக சென்று சாப்பிடும் அளவு தைரியமும், தன்னை பாதுகாத்து கொள்ளும் திறனும் இருக்க வேண்டும்.

சாலையோர கடையில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது கவிதாவை காணவில்லை என்று பாண்டியன் பதறிப் போகிறான். கவிதா கழிப்பறைக்கு சென்று திரும்புகிறாள். அவளைக் கண்டதும் கவிதா சொல்லாமல் சென்றதற்காக பாண்டியன் அவளை திட்டுகிறான்.

கவிதா கழிப்பறைக்குச் செல்லும்போது பாண்டியனிடம் சொல்லி விட்டு சென்றிருக்க வேண்டும். புது இடத்தில் சொல்லாமல் செல்வது உடன் இருப்பவர்களுக்கு தேவையில்லாத பதட்டத்தையும், பயத்தையும் உண்டாக்கும். ஒருவேளை அந்த நேரத்தில் பாண்டியன் கவிதாவை தேடி வீட்டுக்கு சென்றிருந்தாலோ, வேறு சாலையில் அவளை தேடிச் சென்றிருந்தாலோ இருவருக்கும் அது தேவையில்லாத குழப்பம் மற்றும் அலைச்சலை உண்டாக்கி இருக்கும்.

AKS - 29 | ஆதலினால் காதல் செய்வீர்
AKS - 29 | ஆதலினால் காதல் செய்வீர்

அலுவலகம் செல்லும் முன்பு சிவாவுக்கு உணவு வாங்கித் தருமாறு புனிதா பாண்டியனிடம் கூறுகிறாள். அங்கு வந்ததிலிருந்து தானே எல்லா வேலையும் செய்வதாக பாண்டியன் சலித்துக் கொள்கிறான். சிவாவிடம் உணவு வாங்கி வரவா என்று கேட்கிறான் பாண்டியன். சிவா தனக்கு இதுவரை பாண்டியன் நிறைய செலவு செய்துள்ளதாகவும் அதற்குரிய பணத்தை தந்து விடுவதாகவும் கூறுகிறான்.

பாண்டியனின் மனது சிவா கொடுக்க வேண்டிய பணத்தை பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டு இருந்தாலும் கூட அவனுடைய வாய் மனதுக்கு ஒத்துழைக்க மறுத்து விடுகிறது. ஒவ்வொரு முறையும் பணம் தருவதாக சொல்லி அழைக்கும் சிவாவிடம் பாண்டியன் இப்படியெல்லாம் பணத்தை பற்றி பேசுவது தனக்கு மன வருத்தத்தை உண்டாக்குகிறது என்று பொய்யாக அழுகிறான். பாண்டியனின் அன்பில் உருகி இனி எப்போதும் பணம் தருகிறேன் என்று பேசமாட்டேன் என்று சிவா சத்தியம் செய்கிறான். பாண்டியன் மனம் நொந்து சிவாவின் அறையை விட்டுப் போகிறான்.

அப்போது காயத்ரி பாண்டியனிடம் தனக்கும் உணவு வாங்கி வருமாறு சொல்லி பணம் கொடுக்கிறாள். முதலில் அவளிடமும் அவசரப்பட்டு பணமெல்லாம் வேண்டாம் என்று சொல்லும் பாண்டியனின் வாயை, இம்முறை அவனது மனம் இழுத்து கட்டி வைக்கிறது. காயத்ரி கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொள்கிறான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பாண்டியனை போல் கஞ்சமாக... மன்னிக்கவும், சிக்கனமாக யாருக்கும், எதுவும் செலவழிக்காமல் வாழ நினைப்பவர்கள் மற்றவர்களிடம் நல்ல பெயரையும் எதிர்பார்க்கக் கூடாது. நல்ல பெயர் மற்றும் மற்றவர்களின் உறவு வேண்டும் ஆனால் பணமும் செலவழிக்கக் கூடாது என்று சுயநலமாக இருந்தால் பாண்டியனை போல் நிம்மதி இல்லாமல் புலம்பிக் கொண்டே இருக்க வேண்டும்.

AKS - 29 | ஆதலினால் காதல் செய்வீர்
AKS - 29 | ஆதலினால் காதல் செய்வீர்

தன் அம்மாவின் சிகிச்சைக்காக ஊருக்கு சென்றிருக்கும் பரத், மருத்துவமனையிலிருந்து புனிதாவிடம் போனில் பேசுகிறான். தனக்கு அந்த சூழ்நிலையில் பதற்றமாகவும், பயமாகவும் இருப்பதால் புனிதா அவனுடன் இருந்தால் அவனுக்கு தைரியமாக இருக்கும் என்று அவளை ஊருக்கு வரும்படி அழைக்கிறான். ஆனால் புனிதா, தான் அங்கு சென்றால் அவனுடைய அம்மாவுக்கு இந்த நேரத்தில் தேவையில்லாத மன அழுத்தமாகும் என்று சொல்லி மறுத்துவிடுகிறாள். ஆனால் பரத் அதை புரிந்து கொள்ளாமல் புனிதாவுக்கு தன் மீது அக்கறை இல்லை என்று நினைக்கிறான்.

புனிதா வந்தால், தன் அம்மாவிடம் அவள், தான் திருமணம் செய்து கொள்ள இருக்கும் பெண் என்று சொல்லலாம் என்று நினைக்கிறான். ஆனால், புனிதா தனது லட்சியத்தை அடையும் வரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று முன்பே பரத்திடம் கூறியிருக்கிறாள். அதை மீண்டும் நினைவுப்படுத்துகிறாள். பரத் அவளிடம் கோபித்துக் கொள்கிறான்.

தங்களுடைய உறவுமுறையில் எவை சாத்தியம் என்பதை பற்றி ஏற்கெனவே பரத்திடம் புனிதா கூறியிருந்தும், கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் பரத் புனிதாவை திருமணத்துக்கு சம்மதிக்க வைப்பதில் குறியாக இருக்கிறான். இம்முறை தன்னுடைய அம்மாவின் உடல்நிலை சரியில்லாத சூழ்நிலையை பயன்படுத்தி புனிதாவிடம் திருமணம் பற்றிய பேச்சை எடுக்கிறான்.

பெரியவர்களுக்கு லிவ்-இன் உறவு முறை தவறாக தெரிகிறது என்றால், இந்த தலைமுறையை சேர்ந்தவர்களுக்கு இதில் சரியான புரிதல் இல்லை. ஏதோ ஒரு கட்டத்தில் இந்த உறவை திருமணம் நோக்கி நகர்த்தி விடலாம் என்கிற நம்பிக்கையில் பலரும் இருக்கிறார்கள். பார்ட்னரில் ஒருவருக்கு திருமணத்தில் விருப்பமில்லை என்றாலும் இன்னொருவர் அவரை தொடர்ந்து கட்டாயப்படுத்துவது தவறு. அதுவும் புனிதாவை போல் ஆரம்பத்திலேயே தெளிவாக பேசி இருந்தும் பரத் தன்னுடைய மனதுக்குள் ஒரு நம்பிக்கையை வைத்துக் கொண்டு அதை புனிதாவின் மீது செலுத்தும் பொழுது அங்கு இருவருக்கும் தேவையில்லாத சண்டையும் அதனால் மன வருத்தமும் ஏற்படுகிறது.

பரத் புனிதாவை புரிந்து கொண்டு அவளின் லட்சியத்துக்கு மதிப்பளிப்பானா? பரத்துக்கு ஆறுதல் சொல்ல புனிதா ஒரு முறை நேரில் செல்வாளா?

காத்திருப்போம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு