Published:Updated:

AKS - 32 | சுதந்திரமான பெண்களால் சராசரி ஆண்களுடன் இணைந்திருக்க முடியாது… ஏன்?

விகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் இணைந்து வழங்கும் 'ஆதலினால் காதல் செய்வீர்' (AKS) டிஜிட்டல் சீரிஸ் தினமும் இரவு 8.30 மணிக்கு யூடியூபில் ஒளிபரப்பாகிறது. இதில் நேற்று (05-10-2021) வெளியான 32-வது எபிசோட் எப்படி இருந்தது?!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

காயத்ரி, சுந்தரை விட சிவாவை பற்றி அதிகம் பேசுவதாக புனிதா கூறியதிலிருந்து காயத்ரிக்கு குழப்பமாக இருக்கிறது. தானே சுந்தருக்கு அழைக்கிறாள். முதன்முறையாக அவள் சுந்தருக்கு கால் செய்திருப்பதை கண்டதும் அவன் அளவில்லா மகிழ்ச்சி கொள்கிறான். காயத்ரியிடம் அதிசயமாக அவளே கால் செய்திருப்பதை பற்றிக் கேட்கிறான். காயத்ரி, ‘’இனி எல்லாம் இப்படித்தான்’’ என்கிறாள். சுந்தரிடம் ’சாப்டீங்களா’ என்று கேட்கும் காயத்ரி, அவன் இல்லை என்று சொன்னதும், ‘’நேரத்துக்கு சாப்பிட வேண்டாமா’’ என்று கடிந்து கொள்கிறாள். சுந்தர் மகிழ்ச்சியில் இதுவே போதும் என்று அழைப்பைத் துண்டித்து விடுகிறான்.

காயத்ரி சுந்தரிடம் வலியச் சென்று இதெல்லாம் பேசுவதைக் கண்டு புனிதா காயத்ரியை கேலி செய்வது போல் சிரிப்புடன் பார்க்கிறாள். காயத்ரி வேண்டுமென்றே புனிதாவின் முன் சுந்தரிடம் அக்கறையாக இருப்பது போல் பேசினாலும் உண்மையில் அவள் தன்னுடைய குற்றவுணர்ச்சி களையத்தான் அவளாகவே அவனுக்கு அழைத்து பேசுகிறாள். அதில் பயமும், தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயமும் இருந்ததே தவிர நிச்சயமாக அன்பு இல்லை.

AKS - ஆதலினால் காதல் செய்வீர்
AKS - ஆதலினால் காதல் செய்வீர்

காயத்ரி தனக்கு யாருடன் நிச்சயமாகி இருக்கிறதோ அவரை பற்றி மட்டும் யோசிக்க வேண்டும், அவரைப் பற்றி மட்டுமே பேச வேண்டும் என்கிற எண்ணத்தில் இருக்கிறாள். இது பொதுவாக பெண்களுக்கு சொல்லி வளர்க்கப்படும் விஷயம். நிச்சயதார்த்தத்தை பாதி திருமணம் முடிந்து விட்டதாக சொல்வது உண்டு.

ஏற்பாட்டு திருமணங்களில் பெண்ணின் செல்போன் நம்பர் மாப்பிள்ளைக்கு கொடுத்ததும் பல பெண்கள் ஆரம்ப நாட்களில் சரியாக பேச மாட்டார்கள். அப்போது வீட்டில் இருப்பவர்கள் வலுக்கட்டாயமாக அவர்களை மாப்பிள்ளையிடம் பிரியமாக பேசும்படி சொல்வார்கள். வேறு வழியில்லாமல் அவர்களும் மாப்பிள்ளையிடம், ‘’நல்லா இருக்கீங்களா.. சாப்டீங்களா” என்று ஃபார்மாலிட்டிக்காக பேசுவார்கள். அதில் துளியும் அன்பு, அக்கறை இருக்காது. இவருடன் தான் திருமணம் ஆகும் என்று தெரிந்தபின் திருமண சடங்குகளில் ஒன்றாக மாப்பிள்ளையிடம் பேசுவதையும் பார்க்கும் பெண்களைப் போல காயத்ரி சுந்தரிடம் பேசுகிறாள்.

சிவா பற்றி அதிகம் பேசுகிறாய் என்ற புனிதா சொன்னதிலிருந்து காயத்ரி சிவாவின் அறைக்கு செல்வதை தவிர்க்க முடிவு செய்கிறாள். மறுபுறம் அதேபோல் சுந்தரை வலுக்கட்டாயமாக அழைத்துப் பேசுகிறாள்.

தான் இனி தன்னுடைய அறையிலிருந்து வேலை செய்வதாக புனிதாவிடம் காயத்ரி கூறுகிறாள். தான் சாதாரணமாகத்தான் கேட்டேன் என்று புனிதா எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் காயத்ரிக்கு அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இனி சிவாவிடம் அதிகம் பேசப் போவதில்லை எனவும், எந்த உரிமையும் எடுத்துக் கொள்ள வேண்டாம் என சிவாவிடம் சொல்லப் போவதாகவும் காயத்ரி புனிதாவிடம் சொல்லி விட்டுச் செல்கிறாள்.

AKS - ஆதலினால் காதல் செய்வீர்
AKS - ஆதலினால் காதல் செய்வீர்

மறு நிமிடம், சிவா காயத்ரியிடம் தன்னோடு மருத்துவமனைக்கு வர முடியுமா என்று கேட்கும் போது மறுக்காமல் உடனே ஒப்புக் கொள்கிறாள். காயத்ரியின் தடுமாற்றத்திற்கு காரணம் அவளுக்கு சிவாவை பிடித்திருக்கிறது. ஆனால் அவளுக்கு பிடித்திருக்கிறது என்பதை அவளது மனம் ஏற்க மறுக்கிறது. அதுபோக தனக்கு ஏற்கனவே ஒருவருடன் நிச்சயமாகி இருப்பதால் வேறு ஒரு ஆணை பிடித்திருப்பது தவறு என காயத்ரி நினைக்கிறாள்.

புனிதா பரத்துக்கு தொடர்ந்து கால் செய்கிறாள். ஆனால் அவன் அவளது அழைப்பை ஏற்கவில்லை. பரத் அவனது அம்மாவின் சிகிச்சை முடிந்து ஊருக்கு திரும்பி வருகிறான். புனிதா அவனை கண்டதும் ஓடிச் சென்று கட்டிக் கொண்டு ’மிஸ் யூ’ சொல்கிறாள். ஆனால், பரத் அவளிடம் முகம் கொடுத்து பேச மறுக்கிறான். எதையும் வெளிப்படையாக பேசும் ஸ்ட்ரெய்ட் ஃபார்வேட் பெண்ணான புனிதா, பரத் தன்னிடம் அதே போல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறாள்.

பரத் தன்னுடைய அம்மாவின் சிகிச்சையின் போது ஆறுதலுக்காக வந்து உடன் இருக்குமாறு கூறுகிறான். ஆனால் அவன் திருமணப் பேச்சை எடுப்பான் எனும் காரணத்தினால் மறுத்து விடும் புனிதாவின் மீது பரத் கோபமாக இருக்கிறான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பரத்திடம், ‘எல்லா நேரத்திலும் தன்னை சார்ந்து இருக்க வேண்டாம்’ என்று புனிதா கூறுகிறாள். பரத் தன்மீது கழிவிரக்கத்தில் பேசும் போது புனிதா அதை ரசிக்கவில்லை. அவனை தன்னம்பிக்கையுடன் இருக்கும்படி கூறுகிறாள். இங்கு பரத்தின் பிரச்னை புனிதா அங்கு வராதது அல்லது ஆறுதலாக இல்லாதது இல்லை. புனிதா சென்றிருந்தால், பரத் தன் அம்மாவிடம் திருமணத்தைப் பற்றி பேசி இருப்பான். அதற்கு புனித வாய்ப்பளிக்காததால் அவளை கோபித்துக் கொள்கிறான்.

புனிதா சூழ்நிலையை புரிந்துக் கொண்டு செயலாற்றும் தெளிவான பெண்ணாக இருக்கிறாள். அவள் பரத்துக்காகவும், அவனது குடும்பத்துக்காகவும் சேர்ந்தே யோசிக்கிறாள். அதே சமயம் தன்னுடைய சுயமரியாதை, லட்சியம் எதையும் விட்டுக் கொடுக்க தயாராக இல்லாத பெண்ணாகவும் இருக்கிறாள். பரத் தாழ்வு மனப்பான்மையில் பேசும்போது, புனிதா அதை ஆதரிக்க முடியாது என்றும், எமோஷனலாக கூடாது என்றும் பிடிவாதமாக இருப்பது பாராட்டுக்குரியது.

AKS - ஆதலினால் காதல் செய்வீர்
AKS - ஆதலினால் காதல் செய்வீர்

பெரும்பாலான பெண்கள் இந்த இடத்தில் சறுக்கி விடுவார்கள். எவ்வளவு தன்னம்பிக்கை உடையவர்களாக இருந்தாலும் பெண்கள் காதல் அல்லது திருமண உறவு என்று வரும்போது சட்டென்று விட்டுக் கொடுத்து போவதும், ஆண் எமோஷனலாக பேசும்போது அவனுடன் சேர்ந்து எமோஷனல் ஆகி தன்னைப் பற்றி யோசிக்காமல் மற்றவர்கள் சொல்வதை செய்வார்கள்.

அப்படி செய்யாமல் தன் நிலையில் பிடிவாதமாக இருக்கும் பெண்களுக்கு திமிர் பிடித்தவள், சண்டைக்கோழி பட்டங்கள் கிடைக்கும். சுதந்திரமான பெண்களால் சராசரி ஆண்களுடன் நெடுநாட்கள் இணைந்திருக்க முடியாது. மனமுதிர்ச்சி இருக்கும் சுதந்திரமான ஆண்களே சுதந்திரமான பெண்களை புரிந்து கொள்கிறார்கள்.

கவிதாவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்ட ராஜேஷ் அதை கவிதாவிடம் சொல்கிறான். கவிதா பாண்டியனின் முடிவே தன் முடிவு என்கிறாள். ராஜேஷுக்கு பரிட்சை வைத்து அதில் தேர்வானால் மட்டுமே திருமணம் செய்து கொள்ளலாம் என்று கவிதாவும் பாண்டியனும் முடிவுக்கு வருகிறார்கள்.

ராஜேஷை சந்திப்பதற்காக அவனது அலுவலகத்துக்கு பாண்டியன் செல்கிறான். கவிதா அழகாக இருப்பதால் கண்டதும் காதலா என்று கேட்கும் பாண்டியனிடம், ராஜேஷ் தனக்கு கவிதாவின் மீது இருக்கும் காதலை பற்றி விளக்குகிறான். ராஜேஷ், கவிதாவுக்கு பொருத்தமாக இருப்பான் என்று முடிவுக்கு வரும் பாண்டியன், கவிதாவிடம் திருமணத்திற்கு ‘ஓகே’ சொல்கிறான்.

AKS - ஆதலினால் காதல் செய்வீர்
AKS - ஆதலினால் காதல் செய்வீர்

பாண்டியனும், கவிதாவும் ஒரே அறையில் தங்கி இருக்கிறார்கள். ஏற்கெனவே அதை தவறாக புரிந்துக் கொண்டு பரத் பேசி இருக்கிறான். காயத்ரியும் கூட அவர்களை காதலர்களாக நினைத்திருக்கிறாள். மற்றவர்கள் நினைப்பது பற்றி கவலைப்படத் தேவையில்லை என்றாலும் இந்த எண்ணம் ராஜேஷுக்கு வந்தால் அது மூவரின் உறவையும் பாதிக்கச் செய்யும். கவிதா தன்னுடைய திருமண முடிவை பாண்டியன் தான் எடுப்பான் என்று கூறும் பொழுதே ராஜேஷுக்கு கவிதாவின் வாழ்க்கையில் பாண்டியனின் இடம் என்ன என்பது தெளிவாக புரிந்திருக்கும்.

ராஜேஷ், பாண்டியன் மற்றும் கவிதாவின் நட்பை புரிந்து கொள்வானா? பரத், புனிதாவின் லட்சியத்தையும், சுயமரியாதையும் புரிந்து கொள்வானா? காயத்ரி தனக்குள் எழும் கேள்விகளுக்கும், குழப்பங்களுக்கும் விடைக் கண்டு தன் மனதை புரிந்து கொள்வாளா? கேள்விகளுடன் அடுத்த எபிசோடுக்காக!

காத்திருப்போம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு