Published:Updated:

AKS - 38|காதலில், மகிழ்ச்சியாக இருக்கும் நாட்களை விட சண்டை வராமல் பார்த்துக்கொள்ளும் நாட்கள் அதிகமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
AKS - 38 | ஆதலினால் காதல் செய்வீர்
AKS - 38 | ஆதலினால் காதல் செய்வீர்

விகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் இணைந்து வழங்கும் 'ஆதலினால் காதல் செய்வீர்' (AKS) டிஜிட்டல் சீரிஸ் தினமும் இரவு 8.30 மணிக்கு யூடியூபில் ஒளிபரப்பாகிறது. இதில் நேற்று (13-10-2021) வெளியான 38-வது எபிசோட் எப்படி இருந்தது?!

புனிதா, கவிதா மற்றும் சிவா மூவரும் ஒன்றாக உட்கார்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அங்கு வரும் பாண்டியன் சிவாவுக்கு சாக்லேட் கொடுக்கிறான். தனது முதல் மாத சம்பளத்தில் வாங்கியது என்று சொல்லும் பாண்டியனிடம் இது போதாது என்று ட்ரீட் கேட்கிறாள் புனிதா.

ஒரு பேச்சுக்காக ட்ரீட் தருவதாக சொல்லும் பாண்டியனிடம், சிவா விடாப்பிடியாக எப்போது என்று கேட்கிறான். சிவா கேட்டதும் பாண்டியன் எப்போதும் போல் தன்னுடைய மைண்ட் வாய்ஸில் பேசிக் கொள்கிறான். அதை கவனித்த சிவா பாண்டியனிடம், “எப்போது கேள்வி கேட்டாலும் முதலில் ஃப்ரீஸ் ஆகிவிட்டு சிறிது நேரம் கழித்து பதில் சொல்கிறாயே, என்ன மைண்ட் வாய்ஸா” என்று கேட்கிறான்.

பாண்டியனின் ட்ரீட்டுக்கான செலவு தன்னுடையது என்று சொல்கிறான் சிவா. பாண்டியன் மறுக்கிறான். சிவா தான் பாண்டியனுக்கு கொடுக்க வேண்டிய பாக்கியை செலவழிப்பதாக கூறுகிறான்.

AKS - 38 | ஆதலினால் காதல் செய்வீர்
AKS - 38 | ஆதலினால் காதல் செய்வீர்

பாண்டியன் தன்னை மற்றவர்கள் கண்டுபிடிக்க முடியாது என்று நினைத்து செய்யும் இது போன்ற காரியங்கள் எல்லாவற்றையும் சிவாவும் மற்றவர்களும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தான் மற்றவர்களின் பணத்தை சரியாக திருப்பிக் கொடுத்து விடுவேன் என்று பாண்டியன் முன்பு சொன்னதை எல்லாம் சிவா ஞாபகம் வைத்து பேசுகிறான்.

இந்த காட்சியை பார்த்து ரசிப்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும் பாண்டியன் எல்லாவற்றிலும் பணத்தை முன்னிறுத்தி தனக்கும் மற்றவர்களுக்கும் இடையிலான ஒரு திரை போட்டிருக்கிறான். பெரும்பாலும் காசு விஷயத்தில் தான் சரியாக இருப்பேன் என்று மற்றவர்கள் கேட்காமலேயே முந்திக் கொண்டு சொல்பவர்கள் யாரும் அடுத்தவருக்கு பத்து ரூபாய்க்கு டீ வாங்கி தர மாட்டார்கள் என்பது தான் நிதர்சனம்.

சிவா அலுவலகத்தில் வேலை பார்க்கும்போது அலுவல் சம்பந்தமாக காயத்ரியிடம் ஒரு சந்தேகம் கேட்க வேண்டிய சூழ்நிலை வருகிறது. சிவா காயத்ரிக்கு போனில் அழைக்க தயங்குகிறான். சிவா, காயத்ரியின் மேலதிகாரி. தாராளமாக காயத்ரிக்கு அழைக்கலாம் அல்லது அவளுக்கு மெசேஜ் அனுப்பி கேட்கவும் அவனுக்கு உரிமை உண்டு. ஆனால் காயத்ரிக்கு போன் செய்வதற்கு சிவா தயங்குவதற்கான காரணம் புதிதாக காயத்ரியின் மீது சிவாவிற்கு ஏற்பட்டிருக்கும் ஈர்ப்பாக இருக்கலாம்.

AKS - 38 | ஆதலினால் காதல் செய்வீர்
AKS - 38 | ஆதலினால் காதல் செய்வீர்

சிவா தயக்கத்தோடு காயத்ரிக்கு போன் செய்கிறான். காயத்ரி திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருக்கிறாள். சிவாவின் அழைப்பைப் பார்த்ததும் வெளியில் வந்து பேசுகிறாள். சிவா அலுவலகம் சம்பந்தமா பேசி முடித்ததும் மேற்கொண்டு என்ன பேசுவது என்று தெரியாமல் அதேசமயம் இருவரும் அழைப்பைத் துண்டிக்காமல் ஒருவருக்கு ஒருவர் மற்றவர் பேசட்டும் என காத்திருக்கின்றனர்.

சிவா தயங்கி, பின், “காயத்ரி” என அழைக்கிறான். இருவரும் தயக்கத்தினால் சில விநாடிகள் எதுவும் பேசாமல் இருந்தது, பேச துடித்தது, பிறகு சிவா காயத்ரியிடம், “ஏன் சொல்லாமல் ஊருக்கு போனாய்” என்று கேட்டது எல்லாம் மிக சாதாரணமான காட்சி என்றாலும், காட்சி படமாக்கப்பட்ட விதமும் காயத்ரி, சிவாவின் நடிப்பும் அந்த தவிப்பை நமக்கும் கடத்துவது போல் இருந்தது.

சுந்தரும், காயத்ரியும் திரையரங்கிற்கு படம் பார்க்கச் செல்கின்றனர். அவளுக்கு சாப்பிட தேவையான பண்டங்கள் வாங்கி வந்து கொடுக்கிறான். சுந்தர் திரைப்படத்தை ரசித்து, சிரித்து, கைதட்டி, விசிலடித்து பார்க்கிறான். காயத்ரிக்கு அது பிடிக்கவில்லை. சுந்தர் செய்யக்கூடாத காரியங்கள் செய்வதை போன்று காயத்ரி முகம் எரிச்சல் காட்டுகிறது. காயத்ரிக்கு சுந்தர் மேல் ஈர்ப்பு ஏற்படவில்லை என்பது வேறு. அதற்காக ஒருவருடைய ரசனையை குறைத்து மதிப்பிடுவது, இளக்காரமாக பார்ப்பது அநாகரிகம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சுந்தரும் காயத்ரியும் திரைப்படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது காயத்ரிக்கு சிவாவின் அழைப்பு வருகிறது. காயத்ரி சிவாவிடம் எப்படி பேசுவது என்று எண்ணிக் கொண்டிருக்கையில், சுந்தர் காயத்ரியிடம், “நாம் இருவரும் ஒரே நிறத்தில் உடை அணிந்து இருக்கிறோம்.. அப்படி என்றால் நாம் இருவரும் Made for each other.. இது காதல் தானே” என்று கேட்கிறான். உண்மையில் முதன் முதலாக சுந்தரை பார்க்க பாவமாக இருக்கிறது.

AKS - 38 | ஆதலினால் காதல் செய்வீர்
AKS - 38 | ஆதலினால் காதல் செய்வீர்

சிவா காயத்ரியிடம் பேசிக்கொண்டிருக்கும்போது திரையரங்கின் சத்தம் கேட்டு சிவா வெளியில் இருக்கிறாயா என்று கேட்கிறான். காயத்ரி தான் சுந்தருடன் திரைப்படம் பார்க்க வந்திருப்பதை சொல்கிறாள். சிவா காயத்ரிக்கு போன் செய்தது தவறு என நினைத்து தன்னைத் தானே கோபித்துக் கொள்கிறான். காயத்ரிக்கு மீண்டும் உள்ளே சென்று திரைப்படம் பார்க்க விருப்பமில்லை. அவள் அங்கே நின்ற இடத்திலேயே நின்று சிவாவை பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறாள்.

சுந்தர் காயத்ரிக்கு தின்பண்டங்கள் வாங்கி வருவது, பின்பு அவள் தலைவலி என்று சொல்லும்பொழுது சூடாக ஏதாவது குடிக்கலாம் என்று சொல்வது, எல்லாம் காயத்ரி மீது இருக்கும் அக்கறையினால் என்று புரிந்து கொள்கிறோம். இந்த அக்கறை காதலிக்கும் பொழுதும், திருமணம் முடிவானதும் எல்லா ஆண்களுக்கும் இருப்பது. சுந்தர் போல் இருக்கும் பல ஆண்கள் திருமணத்துக்கு பின்பும் கூட இதே அக்கறையுடன் இருப்பார்கள். ஆனால் இவர்களிடம் உள்ள பிரச்னை அன்போ, அக்கறையோ அல்ல. அதை தாண்டி தங்கள் மனைவிக்கு சுதந்திரம், கரியர் பற்றிய கனவுகள் இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பார்கள்.

இந்த இடத்தில் பெண்கள் பெரும்பாலும் அக்கறையும் அன்பும் போதாதா என்று நினைக்கிறார்கள். சுதந்திரமில்லாத அன்பும் அக்கறையும் வைத்துக்கொண்டு வாழ்க்கையில் பல காலம் நிம்மதியாக இருக்க முடியாது. வாழ்க்கை விரைவில் மூச்சை அடைப்பது போல் ஆகிவிடும். பிறகு எல்லாவற்றையும் உடைத்துக் கொண்டு மொத்தமாக வெளியேற வேண்டும் என்கிற எண்ணம் உண்டாகும்.

பரத்தும், புனிதாவும் தாங்கள் புதிதாக ஆரம்பிக்க இருக்கும் டான்ஸ் ஸ்டுடியோ பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று பேச்சு வரும்பொழுது, “ஏற்கெனவே அந்த இடத்திலிருந்த டான்ஸ் ஸ்டுடியோவின் பெயரையே வைத்துக் கொள்ளலாமா” என்று பரத் கேட்கிறான். புனிதாவுக்கு அது அதிர்ச்சியாக இருக்கிறது. ஏற்கனவே அங்கு ஒரு டான்ஸ் ஸ்டுடியோ இருந்திருந்தால் அவர்கள் காலி செய்ததற்கான காரணம் என்ன என்று கேட்கிறாள்.

AKS - 38 | ஆதலினால் காதல் செய்வீர்
AKS - 38 | ஆதலினால் காதல் செய்வீர்

ஒரு தொழிலைத் தொடங்குவதற்கு முன்பு ஏற்கனவே அவ்விடத்தில் அதே தொழில் நடந்து மூடப்பட்டிருந்தால் அதற்கான காரணத்தை தெரிந்து கொள்வது மிக அவசியம். பணம் மற்றும் நேரத்தை முதலீடு செய்யும்போது இவற்றையெல்லாம் கணக்கில் கொள்வது முக்கியம். புனிதா இதை பேசும்போது பரத்திற்கு மீண்டும் தன்னுடைய தாழ்வு மனப்பான்மை தலைக்கு ஏறுகிறது.

”நான் செய்யும் எல்லாவற்றையும் நீ குறை சொல்கிறாய்” என்று புனிதாவை பார்த்து கோபித்துக் கொள்கிறான். எது பேசினாலும் பிரச்னை என்று அந்த இடத்தில் அமைதியாக இருக்கிறாள் புனிதா. பரத் பேசியது தவறு என்பது புரிகிறது. ஆனால், பரத் அழுகிறான் அவன் அழுவதை கண்டு புனிதாவுக்கு மனம் வருத்தப்படுகிறது. அவனுக்கு ஆறுதல் சொல்ல கட்டியணைக்கிறாள். தொடர்ந்து இதுவே மீண்டும் மீண்டும் நடக்கிறது.

ஒவ்வொரு முறையும் புனிதா பரத்தை தாழ்வு மனப்பான்மையில் இருந்து மீட்கவும், சண்டை வராமல் பார்த்துக் கொள்ளவும் அல்லது சண்டை ஏற்படும்போது அதைத்தானே சென்று சமாதானம் செய்வதுமாக இந்த காதல் கதை நீள்கிறது. புனிதா மகிழ்ச்சியாக இருக்கும் நாட்களை விட சண்டை வராமல் பார்த்துக் கொள்ள யோசிக்கும் நாட்கள் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன. இதுதான் பரத் மற்றும் புனிதாவின் காதல் டாக்ஸிக்காக ஆரம்பித்ததன் முதல் நிலை.

சிவா மற்றும் காயத்ரி இடையே ஏற்பட்டிருக்கும் மிக இயல்பான அந்த ஈர்ப்பு அழகான ஒரு காதலாக மலருமா?

காத்திருப்போம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு