‘ஆதலினால் காதல் செய்வீர்’ 41வது எபிசோடை, ”பலே பாண்டியா! எபிசோட்” என்று சொல்லுமளவு மிக நகைச்சுவையாகவும் அதே சமயம் பதற்றமாகவும் இருந்தது. பரத், சிவா, புனிதா, கவிதா மற்றும் பாண்டியன் ஹாலில் ஒன்றாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். பாண்டியன் சமயோசிதமாக யோசித்து எலக்ட்ரீஷியன் போல் நடித்து சிவாவின் செருப்பை மறைத்ததை புனிதாவும் மற்றவர்களும் பாராட்டுகின்றனர். அது தன்னுடைய ஐடியா என்று கவிதா சொல்கிறாள். பையில் காஸ்மெட்டிக் பொருட்களை போட்டு எலக்ட்ரீஷியன் டூல் கிட் போல கொடுத்தனுப்பிய கவிதாவையும் பாராட்டுகிறார்கள். எல்லோரும் நடந்த பிரச்னையை சமாளித்து அதைப்பற்றி மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
”தன்னுடைய ஊரின் ஸ்பெஷல்” என்று சொல்லி காயத்ரி எல்லோருக்கும் முறுக்கு கொண்டு வந்து கொடுக்கிறாள். எல்லோரும் சாப்பிடும்போது சிவா மட்டும் அதை எடுக்காமல் அமைதியாக இருக்கிறான். காயத்ரியை பார்த்து அவனுக்கு முகம் மாறுகிறது. பரத், சிவாவை முறுக்கு எடுத்துக்கொள்ள சொல்லும்போது, தனக்கு எண்ணெய் திண்பண்டங்கள் ஒத்துக்கொள்ளாது என்று சொல்லிவிட்டு தூங்கச் செல்வதாக தனது அறைக்கு செல்கிறான். பரத்துக்கு அவன் அப்படி சொல்வது புதிதாக இருக்கிறது. அமைதியாக, தயங்கித் தயங்கி சிவா பேசுவது நமக்கும் கூட புதிதாக இருக்கிறது.

சிவாவுக்கு காயத்ரியின் மேல் ஈர்ப்பு வந்ததும், அதை விட காயத்ரி நிச்சயமான பெண் என்பதும் குழப்பத்தை உண்டாக்கி இருக்கிறது. சிவா காயத்ரியை பார்க்கும்போது தன்னியல்பில் இல்லாமல் இருக்கிறான். காயத்ரிக்கு சிவாவை பிடித்து இருக்கிறது. அதே சமயம் அவனை பார்க்கும்போது பதற்றமாகவும் இருக்கிறது. இருவருக்கும் இடையில் ஒரு மௌன போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
அதிகாலையிலேயே சுந்தர் காயத்ரியின் வீட்டுக்கு வருகிறான். காலிங்பெல் அடிக்கும் சத்தம் கேட்டு பரத் வாசல் கதவை திறக்க செல்கிறான். ”காயத்ரி” என்று சுந்தர் அழைக்க, பரத் பதற்றத்துடன் பின் வாங்குகிறான். தன் அறைக்கு ஓடி வந்து புனிதாவை எழுப்புகிறான். புனிதா காயத்ரிக்கு செல்போனில் அழைத்து சுந்தர் வந்திருக்கும் விஷயத்தை சொல்கிறாள். புனிதா சென்று கதவை திறந்து சுந்தரை உள்ளே வரவழைத்து பேசிக் கொண்டிருக்கிறாள். இதற்கிடையில் பாண்டியன் தன் அறையில் கழிப்பறையில் தண்ணீர் வரவில்லை என ஹாலில் இருக்கும் வேறு ஒரு கழிப்பறைக்கு வருகிறான். சுந்தர் பொது கழிப்பறையை பயன்படுத்த புனிதாவிடம் அனுமதி கேட்கிறான். பாண்டியன் கழிப்பறையில் இருக்கும்போது சுந்தர் வெளியிலிருந்து கதவைத் திறக்க முயற்சி செய்யும் காட்சியில் பாண்டியனின் (பிரபாகரன்) நடிப்பு அட்டகாசம்!
”காலையில் வயிறுதான் கலங்குதடி” என்ற பாடலிலிருந்து ’காற்று வெளியிடை’ வரை பாரி அய்யாசாமியின் வசனமும் பாண்டியனின் நடிப்பும் செம டைமிங்கில் இருந்தன. சுந்தர் புனிதாவிடம் இங்கு யாருக்கும் அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கம் இல்லையா என்று கேட்கிறான். ஒருவர் எத்தனை மணிக்கு எழுந்திருக்க வேண்டும், தூங்க செல்ல வேண்டும் என்று இன்று அவரவர் வீட்டில் பெற்றோர்கள் அல்லது மாமனார், மாமியார் பேசினாலே அது தனிப்பட்ட விஷயத்தில் தலையிடுவதை போன்ற அநாகரீக செயலாக பார்க்கப்படுகிறது. சுந்தர் போகிற போக்கில் முன் அறிமுகம் இல்லாதவர்களை கூட அவர்கள் தூங்கும் மற்றும் எழுந்திருக்கும் நேரத்தை பற்றி பேசுகிறான்.

இன்று வேலை செய்யும் நேரங்கள் மாறி இருக்கின்றன. அதுவும் தகவல் தொழில்நுட்பத் துறையில் இரவு ஷிஃப்ட் முடித்து அதிகாலையில் வீடு வருபவர்களும் உண்டு. காலையில் தாமதமாக எழுந்திருப்பது அவரவர் வேலை, சூழ்நிலை மற்றும் உடல்நிலையை பொறுத்தது. கிராமத்தில், திண்ணையில் உட்கார்ந்து கொண்டு போகிற, வருபவர்களை பற்றி ஊர்க்கதை பேசும் பெரியவர்கள் போல சுந்தர் பேசிக் கொண்டிருக்கிறான்.
சுந்தர் வந்திருப்பதை அறிந்து அவசரமாக மாடியிலிருந்து இறங்கி வரும் காயத்ரியை பார்த்து தினமும் இப்படித்தான் தாமதமாக எழுந்திருக்கிறாயா என்று சுந்தர் கேட்கிறான். முதல் நாள் ஊரில் இருந்து வந்ததால் பயண அசதியில் தூங்கி விட்டேன் என்று காயத்ரி சொல்கிறாள். ”நானும் உன்னுடன் தானே வந்தேன்... இவ்வளவுக்கும் வண்டி ஓட்டிக் கொண்டு வந்தேனே” என்று சுந்தர் திருப்பி கேட்டதும் காயத்ரி முகம் வாடிப் போகிறது.
இதுபோன்ற அபத்தமான கேள்விகளை பெரும்பாலானோர் மிக விளையாட்டாக கேட்பதாக நினைத்து எளிதாக மற்றவர்களிடம் கேட்டு விடுகின்றனர். உடல்நிலை என்பது எல்லோருக்கும் ஒன்று போல இருக்காது. சிலருக்கு பயணங்கள் ஒத்துக் கொள்ளாது. சுந்தர் ஆரம்பத்திலிருந்தே தன்னைப் போலவே மற்றவர்களும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறான். குறிப்பாக காயத்ரி அவன் சொல்வது எல்லாம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறான். காயத்ரி என்ன சாப்பிட வேண்டும், எப்போது தூங்க வேண்டும், எப்போது எழுந்திருக்க வேண்டும், வாக்கிங் அல்லது ஜாக்கிங் செல்ல வேண்டும் என்பது முதற்கொண்டு சுந்தரின் ’டைம் டேபிள்’ படி தான் நடக்க வேண்டும் என்று உறுதியாக இருக்கிறான்.
அதோடு சுந்தர் வாட்ஸ்அப்பில் வரும் ஃபார்வேர்ட் மெசேஜ்களை படித்துவிட்டு காலை முதல் இரவு வரை அதை அப்படியே ஃபாலோ செய்யும் 50’s மற்றும் 60’s கிட்ஸை போல் இருக்கிறான். சமயங்களில் தான் தன்னுடைய வயதொத்தவர்களிடம் இருந்து விலகி இருப்பதை உணர்ந்து, அவர்கள் குழுவில் இணைய முயற்சி செய்து, இறுதியில் ஆறடி உயர காமெடியாக நிற்கிறான்!

சுந்தர் காயத்ரியை அழைத்துக் கொண்டு ஜாக்கிங் செல்கிறான். காயத்ரியிடம் வாசலில் நிற்கும் பைக் பற்றி கேட்கிறான். காயத்ரி அது சிவாவுடையது என்று சொல்கிறாள். சுந்தர் சிவா என்று காயத்ரி சொல்லுபோது சிவசங்கரி எனும் பெண்ணை நினைத்துக் கொள்கிறான். பிறகு காயத்ரியிடம், “நீ என்னிடம் ஏதாவது மறைக்கிறாயா” என்று கேட்கிறான். காயத்ரி என்ன சொல்வதென்று தெரியாமல் முழிக்கும்போது, சுந்தர் அவளிடம், நீ இங்கு பத்திரமாக இருக்க வேண்டும், உன்னுடைய பாதுகாப்பு கருதிதான் கேட்கிறேன் என்கிறான்.
சுந்தருக்கு காயத்ரியின் மீது எல்லா நேரங்களிலும் சந்தேகம் இருக்கிறது. ஆனால், அவள் அதைப் பற்றி பேசும்போதெல்லாம் அவன்தான் காயத்ரியின் பாதுகாப்பை முன்னிறுத்தி பேச்சை மாற்றி விடுகிறான். காயத்ரி, புனிதா, பாண்டியன் மற்றும் வீட்டில் உள்ள எல்லோரும் சுந்தரினால் படும் அவஸ்தைகளை பார்க்கும்போது சுந்தர் சர்ப்ரைஸாக காயத்ரியுடன் சென்னைக்கு வருகிறேன் என்று சொன்னபோதே காயத்ரி ஜீப்பில் இருந்து எஸ்கேப் ஆகியிருந்தால் எல்லோருக்கும் நல்லது என்று தோன்றுகிறது.
சுந்தரின் அடுத்த கட்ட ஆப்(பு)ரேஷன் என்னவாக இருக்கும் என காயத்ரியை போலவே நம்மையும் நகம் கடித்து பதற்றத்துடன் காத்திருக்க வைக்கிறது இவ்வாரத்தின் முதல் எபிசோட்!
காத்திருப்போம்!