Published:Updated:

AKS - 42 | வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுவதா அன்பு?! சில சுந்தர்களின் கதை!

AKS - 42 | ஆதலினால் காதல் செய்வீர்

விகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் இணைந்து வழங்கும் 'ஆதலினால் காதல் செய்வீர்' (AKS) டிஜிட்டல் சீரிஸ் தினமும் இரவு 8.30 மணிக்கு யூடியூபில் ஒளிபரப்பாகிறது. இதில் நேற்று (19-10-2021) வெளியான 42-வது எபிசோட் எப்படி இருந்தது?!

Published:Updated:

AKS - 42 | வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுவதா அன்பு?! சில சுந்தர்களின் கதை!

விகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் இணைந்து வழங்கும் 'ஆதலினால் காதல் செய்வீர்' (AKS) டிஜிட்டல் சீரிஸ் தினமும் இரவு 8.30 மணிக்கு யூடியூபில் ஒளிபரப்பாகிறது. இதில் நேற்று (19-10-2021) வெளியான 42-வது எபிசோட் எப்படி இருந்தது?!

AKS - 42 | ஆதலினால் காதல் செய்வீர்

ஜாக்கிங் முடித்து காயத்ரியை வீட்டில் விடுவதற்காக சுந்தர் வருகிறான். சுந்தர் வேலை முடித்து தன் அறைக்கு திரும்புவது பற்றி சொல்லிக் கொண்டிருக்க, அவன் ஊருக்கு திரும்புவதை பற்றி சொல்வதாக நினைத்து காயத்ரி மனதுக்குள் சந்தோஷப்படுகிறாள். அது காயத்ரியின் முகத்திலும் பிரதிபலிக்கிறது. அதை கவனித்த சுந்தர், ”நான் ஊருக்குச் செல்வது உனக்கு அவ்வளவு ஆனந்தமா” என்று கேட்கிறான். எவ்வளவு சமாளித்தாலும் காயத்ரியின் முக பாவனைகள் பல சமயங்களில் சுந்தரை பிடிக்கவில்லை என்பதை அவனுக்கு காட்டிக் கொடுத்து விடுகிறது.

ஆனால் அது பற்றியெல்லாம் கண்டு கொள்ளாமல் சுந்தர் தன்னுடைய அன்பை வலுக்கட்டாயமாக காயத்ரியின் மீது திணிக்கிறான். ஒவ்வொரு முறையும் சுந்தர் காயத்ரியை தேடி வருவது, அவளுடன் பேச முயற்சி செய்வது, வலுக்கட்டாயமாக வெளியில் எங்காவது அழைத்துச் செல்வது இவற்றை காணும் போது, சந்தையில் மாடு வாங்குவது ஞாபகம் வருகிறது. சில மாடுகள் அதுவரை பழகியிருந்த உரிமையாளரை விட்டு புதிதாக வாங்குபவருடன் செல்ல விரும்பாமல் முகத்தை திருப்பி பழைய உரிமையாளரை பார்த்துக் கொண்டே செல்லும். அப்பொழுது வாங்கியவர்கள் மூக்கணாங்கயிறு போட்டு வலுக்கட்டாயமாக மாட்டை இழுத்துக் கொண்டு போவார்கள். கிட்டதட்ட காயத்ரியை சுந்தர் அப்படித்தான் நடத்துகிறான்.

AKS - 42 | ஆதலினால் காதல் செய்வீர்
AKS - 42 | ஆதலினால் காதல் செய்வீர்

காயத்ரிக்கு உரிய ஸ்பேஸ் கொடுத்து பேசிப் புரிந்து கொள்ள முயற்சி செய்யாமல் தன்னுடைய தேவையை அவளிடம் சொல்லி, அவள் அதுபடி நடந்தால் போதும் என்கிற எண்ணம் மட்டுமே சுந்தருக்கு இருக்கிறது. செல்போனுக்கு சுந்தரின் அழைப்பு வந்தாலோ, சுந்தர் நேரில் வந்தாலோ காயத்ரிக்கு எரிச்சலாக இருக்கிறது. ஆரம்பத்திலிருந்து ஒவ்வொரு முறையும் அவனை தவிர்க்கவே பார்க்கிறாள்.

காயத்ரி விருப்பம் இல்லாமல்தான் பேசவும், வெளியே செல்லவும் செய்கிறாள். நம் ஊர்களில் பொதுவாக இது போன்ற சந்தர்ப்பங்களில் ”முதலில் அப்படித்தான் இருக்கும் போகப்போக பெண்கள் பழகிக் கொள்வார்கள்” என்பார்கள். அப்போதும் போகப் போக பெண்கள்தான் அந்த சூழ்நிலைக்கும், புதிய ஆணுக்கும் பழக வேண்டுமே தவிர பெண்களின் மனதில் என்ன இருக்கிறது என்பதை பற்றி மற்றவர்கள் புரிந்து கொள்ள இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் தேவைப்படுமோ!

சுந்த்ர காயத்ரியை விட்டுவிட்டு கிளம்புகையில் காயத்ரி அவனை வீட்டின் உள்ளே வருமாறு அழைக்கிறாள். சுந்தர் மறுத்தும் காயத்ரி பரவாயில்லை வாருங்கள் என்று மீண்டும் அழைக்கிறாள். உள்ளே சிவா, பரத், மற்றும் பாண்டியன் இருக்கிறார்கள். சுந்தர் ஒருவேளை விருப்பப்பட்டு உள்ளே வந்திருந்தால் அது தேவையில்லாமல் மீண்டும் எல்லோருக்கும் பிரச்னையை ஏற்படுத்தும். பல நேரங்களில் காயத்ரி இப்படி ஆர்வக்கோளாறாக உளறி தான் சிக்கிக் கொள்வதோடு மற்றவர்களையும் இழுத்து விடுகிறாள். அந்த வீட்டில் காயத்ரிக்கு நண்பர்களாக இருப்பது கன்னிவெடியில் கால் வைப்பதை போன்றதாக இருக்கிறது.

புனிதா, சிவா, காயத்ரி மற்றும் பாண்டியன் அலுவலகத்தில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த நேரம் சுந்தர் அங்கு வருகிறான். சுந்தரை பார்த்து அதிர்ச்சியாகி காயத்ரியும், புனிதாவும் பேசுகிறார்கள். சிவாவுக்கு அது யாரென்று தெரியாததால் அமைதியாக இருக்கிறான். பிறகு சுந்தரை புனிதா சிவாவுக்கு அறிமுகம் செய்து வைக்கிறாள். சிவா அதிர்ச்சியாகிறான். காயத்ரியை பார்க்கிறான்.

AKS - 42 | ஆதலினால் காதல் செய்வீர்
AKS - 42 | ஆதலினால் காதல் செய்வீர்

பிறகு பாண்டியனைப் பார்க்கும் சுந்தருக்கு ஏற்கெனவே பார்த்தது போல் இருக்கிறதே என்ற சந்தேகம் வருகிறது. அதை சமாளிக்கும் விதமாக பாண்டியனை அலுவலக எலக்ட்ரீஷியன் போல் பாவித்து சிவா பேசி சமாளிக்கிறான். அப்போது சுந்தருக்கும் சிவாவுக்கும் சிறு கருத்து வேறுபாடு வருகிறது. சுந்தர் சிவாவை முறைத்துப் பார்க்கிறான். சிவா எதையும் கண்டு கொள்ளவில்லை. சுந்தருடன் கிளம்பிச் செல்கையில் காயத்ரி இரு நொடிகள் நின்று சிவாவை பார்த்து விட்டு செல்கிறாள். அந்த நொடியில் நடிகை குப்ரா, காயத்ரியின் பதற்றம், தயக்கம், விருப்பமின்மை எல்லாவற்றையும் நமக்கும் கடத்தி நன்றாக நடித்திருக்கிறார்.

காயத்ரி டீ குடிப்பதை பார்த்த சுந்தர், “டீ காபி எல்லாம் குடிக்கக் கூடாது என்று சொல்லி இருந்தேனே, என் பேச்சை கேட்கவில்லை” என காயத்ரியிடம் கேட்கிறான். அது காயத்ரிக்கும் சிவாவுக்கும் சங்கடமாக இருக்கிறது. புனிதா என்ன செய்வது என்று தெரியாமல் பேந்த பேந்த முழிக்கிறாள். ஐம்பது, அறுபது வயதில் இருக்கும் கணவர்கள் பலர் பொது இடங்களில் புது ஆட்கள் முன்னால் கூச்சமே இல்லாமல் தன் மனைவியை விட்டுக்கொடுத்து பேசுவார்கள். மற்றவர்கள் முன்னால் தன் மனைவியை கன்ட்ரோலில் வைத்திருப்பதாக காட்டிக் கொள்ள இதுபோன்ற விஷயங்களைப் பேசுவார்கள்.

அது நாகரீகம் இல்லை என்றும், மனைவிக்கும் சுயமரியாதை உண்டு என்பதெல்லாம் எவ்வளவு படித்திருந்தாலும் பலருக்கும் புரிவதில்லை. உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் பலரும் தன் மனைவி உடற்பயிற்சிகள் செய்வது இல்லை என்பதை எப்போதும் ஒரு குறையாக காண்பவர்களிடம் சொல்லிக் கொண்டிருப்பார்கள். இதை செய்வது அநாகரீகம் என்று பேசினால் ”ஃபெமினிஸம் பேசுகிறாயா” என்று கோபப்படுவார்கள். இன்றைய தலைமுறை ஆண்களிடம் பெருவாரியாக இந்த செயல் மாறியிருக்கிறது என்றாலும் சுந்தரை போன்றவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

AKS - 42 | ஆதலினால் காதல் செய்வீர்
AKS - 42 | ஆதலினால் காதல் செய்வீர்

பாண்டியனிடம் ராஜேஷ், தங்கள் இருவருக்கும் பிரைவசி வேண்டும் என்று சொன்னதினால் கவிதா ராஜேஷ் மீது கோபமாக இருக்கிறாள். அந்த கோபத்தை கவிதா அலுவலக கம்ப்யூட்டர் மீது காட்டுகிறாள். ராஜேஷ் கவிதாவை தன் அறைக்கு அழைத்து தான் பாண்டியனிடம் மன்னிப்பு கேட்பதாக சொல்கிறான். அதற்கு முன்பு கவிதா தன்னைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் சொல்கிறான். கவிதா, பாண்டியன், ராஜேஷ் மூவரும் மீண்டும் அன்று மாலை சினிமாவிற்கு போகலாம் என்று ராஜேஷ் முடிவு செய்து டிக்கெட்டும் பதிவு செய்வதாக கவிதாவிடம் சொல்கிறான். கவிதா மகிழ்ச்சியடைகிறாள்.

அதை அப்போதே பாண்டியன் இடமும் தெரிவிக்கிறார்கள். பிறகு ராஜேஷ் பாண்டியனின் அலுவலகத்துக்கு சென்று பாண்டியனிடம் சினிமாவிற்கு வரவேண்டாம் என்று சொல்கிறான். முதல் முறையாக நடிகர் பிரபாகரன்(பாண்டியன்) நகைச்சுவையில் இருந்து குணச்சித்திர வேடத்திற்கு தாவி இருக்கிறார். பாண்டியன் சீரியஸாக பேசுவதை கண்டு நமக்கும் மன வருத்தமாக இருக்குமளவு நடிப்பு அவ்வளவு இயல்பாக இருக்கிறது.

ராஜேஷ் மற்றும் கவிதாவின் இடையில் தான் எப்பொழுதும் வரவே மாட்டேன் என்று பாண்டியன் உறுதி அளிக்கிறான். ராஜேஷ் அதற்கு வருத்தப்படாமல் அதை எதிர்பார்த்து காத்திருந்தது போல் பாண்டியனுக்கு நன்றி சொல்கிறான். அதை எதிர்பார்த்திருந்தது சரிதான் என்றாலும் மன்னிப்பு கேட்கும்போதும், தான் இனிமேல் தொந்தரவு செய்யமாட்டேன் என்று சொல்லும் பொழுதும் பாண்டியனின் முகம் வாடிப் போகிறது.

அதைக் கண்டும் ராஜேஷுக்கு எந்த மனமாற்றமும் ஏற்படவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது. பாண்டியனும் கவிதாவும் சிறுவயதிலிருந்து ஒன்றாக இருந்தவர்கள். திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கை வேறு விதமாக இருக்கும் என்பது இருவருக்கும் புரியாமல் இல்லை. ஆனாலும் அதை புதிதாக பழகிக் கொள்ள இருவருக்குமே சில நாட்கள் தேவை.

ராஜேஷ் கவிதாவை சந்தித்த முதல் வாரத்திலேயே காதல் சொல்லி மறுநாளே திருமணம் பற்றி பேசி அடுத்தடுத்த நாட்கள் வெளியில் செல்லத் துவங்கி அதிலும் பாண்டியன் வரக்கூடாது என்றெல்லாம் பேசும் பொழுது இந்த வேகம் கவிதாவுக்கு மட்டுமல்ல நமக்கும் கூட ஒரு பதற்றத்தை தருகிறது.

சிவாவுக்கும் சுந்தருக்கும் அறிமுகமே முட்டிக்கொண்டது இனி அடுத்தடுத்து அது தொடருமா? பாண்டியன் திரைப்படம் பார்க்க வரவில்லை என்பதை பாண்டியனும் ராஜேஷும் எப்படி கவிதாவிடம் சமாளிப்பார்கள்?

காத்திருப்போம்!