Published:Updated:

AKS - 44 | மறைப்பும், மன்னிப்பும்… டாக்ஸிக்கான உறவு ஆழமாவது இங்கேதான்!

AKS - 44 | ஆதலினால் காதல் செய்வீர்

விகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் இணைந்து வழங்கும் 'ஆதலினால் காதல் செய்வீர்' (AKS) டிஜிட்டல் சீரிஸ் தினமும் இரவு 8.30 மணிக்கு யூடியூபில் ஒளிபரப்பாகிறது. இதில் நேற்று (21-10-2021) வெளியான 44-வது எபிசோட் எப்படி இருந்தது?!

Published:Updated:

AKS - 44 | மறைப்பும், மன்னிப்பும்… டாக்ஸிக்கான உறவு ஆழமாவது இங்கேதான்!

விகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் இணைந்து வழங்கும் 'ஆதலினால் காதல் செய்வீர்' (AKS) டிஜிட்டல் சீரிஸ் தினமும் இரவு 8.30 மணிக்கு யூடியூபில் ஒளிபரப்பாகிறது. இதில் நேற்று (21-10-2021) வெளியான 44-வது எபிசோட் எப்படி இருந்தது?!

AKS - 44 | ஆதலினால் காதல் செய்வீர்

சுந்தர் பத்து நாட்கள் சென்னையில் தங்குவதாக சொன்னதும் மேற்கொண்டு வேறு பிரச்னைகள் வரக்கூடாது என வீட்டில் உள்ள ஆண்களை வெளியில் சென்று தங்குமாறு புனிதா, காயத்ரிக்காக கேட்டுக் கொள்கிறாள். ஆண்கள் மூவரும் தங்களது பெட்டியுடன் வெளியே கிளம்பி செல்கையில் வாசலில் சுந்தர் இருக்கிறான்.

சுந்தர் காயத்ரியிடம், “சென்னை வந்ததிலிருந்து என்னிடம் வெறும் பொய் மட்டும் தான் சொல்லிக் கொண்டு இருந்திருக்கிறாய்” என்று கோபமாக கேட்கிறான். காயத்ரி எதுவும் பேசாமல் இருக்க, புனிதா சுந்தரிடம், “எல்லாவற்றுக்கும் தான் தான் காரணம்” என்று சொல்லி மன்னிப்பு கேட்கிறாள். ஆண், பெண் சேர்ந்து தங்குவதில் தவறொன்றும் இல்லை என்று சொல்லும் புனிதாவிடம் ”தவறு இல்லாத ஒரு விஷயத்தை ஏன் மறைத்தீர்கள்” என்று சுந்தர் கேட்கிறான்.

AKS - 44 | ஆதலினால் காதல் செய்வீர்
AKS - 44 | ஆதலினால் காதல் செய்வீர்

சுந்தரின் கேள்வி மிக ‘Diplomatic’ ஆக இருக்கிறது. அதாவது அவனது கேள்வி சரிதான் என்பது போல தோன்றும். ஆனால் இதை முதல் நாளே காயத்ரி சொல்லியிருந்தால் சுந்தர் புரிந்துகொண்டிருப்பானா? நிச்சயமாக காயத்ரியை அங்கு தங்குவதற்கு அனுமதித்திருக்க மாட்டான். புனிதாவை சுந்தர் கோபமாக பேசுவதை பார்த்த சிவா சுந்தரை கொஞ்சம் ’பரந்த மனதுடன்’ சிந்திக்கச் சொல்கிறான். சுந்தருக்கு கோபம் வருகிறது.

சுந்தர் சிவாவிடம், “உங்களை சிவசங்கரி என்று பொய் சொல்லி இருக்கிறார்கள். உங்களுக்கு அசிங்கமாக இல்லையா” என்று கேட்கிறான். சிவா அதற்கு மேல் பொறுமை இல்லாமல் சுந்தரை ஒருமையில் திட்டி விடுகிறான். சுந்தர் தனக்கும் காயத்ரிக்கும் நிச்சயமாகிவிட்டது என்றும் அது அவர்களுடைய வாழ்க்கை என்றும் அவர்கள் வாழ்க்கையில் மற்றவர்கள் விளையாடுவதாக குற்றம் சாட்டுகிறான்.

சுந்தருக்கு அங்கு இருக்கும் யாரையும் கேள்வி கேட்கும் உரிமை கிடையாது, புனிதா உட்பட. அப்படி இருக்கையில் சுந்தர் எல்லோரிடமும் கோபமாக சண்டையிடுகிறான். சுந்தருக்கு காயத்ரியிடம் மட்டும்தான் அவள் பொய் சொன்னதற்கான காரணத்தை கேட்க முடியும். இப்படி இன்னொருவர் வீட்டில் புகுந்து அறிமுகம் இல்லாதவர்களிடம் கோபப்படுவதும், சண்டை போடுவதும் அநாகரிகம்.

ஆனால் இதையெல்லாம் சரி என்கிற ரீதியில் சுந்தர் செய்வதற்கு காரணம் அந்த வீட்டில் ஆண்களும் பெண்களும் ஒன்றாக தங்கி இருப்பது தவறு என்று அவன் எண்ணுவது தான். மேலும் காயத்ரியின் வீட்டில் தெரிந்தால் அவர்கள் மீதுதான் குற்றம் சாட்டப்படும் என்பதை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு சுந்தர் எல்லோரிடமும் சண்டையிடுகிறான். பரத் அல்லது பாண்டியன் கோபப்பட்டு சட்டென்று சுந்தரை வீட்டை விட்டு வெளியே போகச் சொல்ல முடியும். ஆனால் காயத்ரி பாதிக்கப்படக் கூடாது என்பதால் அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள்.

AKS - 44 | ஆதலினால் காதல் செய்வீர்
AKS - 44 | ஆதலினால் காதல் செய்வீர்

மன்னிப்பு கேட்கும் காயத்ரியிடம் சுந்தர் தன்னிடம் பேச வேண்டாம் என்றும் அவனுடைய காதல், அன்பு எதையும் காயத்ரி புரிந்து கொள்ளவில்லை என்றும் கோபப்படுகிறான். அப்போது சிவா சுந்தரை ஒரு நொடி நிமிர்ந்து பார்க்கிறான். சிவாவின் அந்த ஒற்றை பார்வை ரியாக்ஷன் க்ளாஸ்!

சுந்தர் தான் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்வதாகவும், காலையில் ஊரில் இருந்து அவர்கள் வந்து முடிவு எடுப்பதாகவும் கூறுகிறான். காயத்ரி பதற்றமாகி அழுகிறாள். புனிதாவும், கவிதாவும் காயத்ரியை சமாதானம் செய்கிறார்கள். நண்பர்கள் அனைவரும் உட்கார்ந்தபடி இரவு முழுவதும் ஹாலில் தூங்குகிறார்கள்.

காயத்ரியின் வீட்டில் பேசுவதாக காலையில் புனிதா சொல்கிறாள். காயத்ரி தன் வீட்டில் யார் எது சொன்னாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று சொல்லி மேலும் அழுகிறாள். காயத்ரியின் போனுக்கு வீட்டிலிருந்து அழைப்பு வருகிறது. பயந்தபடி பேசுகிறாள். காயத்ரியின் அண்ணி இதைப் பற்றி பேசாமல் வேறு விஷயத்தை பேசிவிட்டு வைத்து விடுகிறார்.

சுந்தர் தன் வீட்டில் இங்கு நடந்தவை பற்றி சொல்லாதது அவளுக்கு ஆச்சர்யம் அளிக்கிறது. தன் அண்ணிக்கு நடந்த எதுவும் தெரியவில்லை என்பது காயத்ரிக்கு ஒரு தற்காலிக நிம்மதியை கொடுக்கிறது. அழுது கொண்டிருக்கும் காயத்ரியின் முகம் சட்டென்று ரிலீஃப் ஆகும் காட்சியில் குப்ராவின் நடிப்பு அருமை!

வீட்டில் சொல்லவில்லை என்றால் சுந்தரின் திட்டம் என்னவாக இருக்கும் என காயத்ரி பயப்படுகிறாள். சுந்தர் அங்கு வருகிறான். வழக்கம் போல பாண்டியன் மைண்ட் வாய்ஸில் பேச, அது வீட்டில் இருப்பவர்களை போலவே சுந்தருக்கும் சத்தமாக கேட்கிறது.

சுந்தர் எல்லோரிடமும் நடந்ததை மறந்து விடலாம், ரிலாக்சாக இருங்கள் என்று சொன்னதும் எல்லோரும் ஒரு நிமிடம் ஆச்சரியப்படுகிறார்கள். தான் காயத்ரியின் வீட்டில் இங்கு நடந்ததை கூறியிருந்தால் அதோடு காயத்ரியை ஊருக்கு அழைத்துச் சென்றிருப்பார்கள் என்பதால் சொல்லவில்லை என்கிறான். அதோடு தான் காயத்ரியின் கனவுகளுக்கு தடையாக இருக்க மாட்டேன் என்று அவளுக்கு வாக்கு கொடுத்திருப்பதை நினைவூட்டுகிறான்.

AKS - 44 | ஆதலினால் காதல் செய்வீர்
AKS - 44 | ஆதலினால் காதல் செய்வீர்

சுந்தர் இப்படி சொன்னதும் காயத்ரி, தான் பலமுறை காயப்படுத்தி இருப்பதாகவும் அதற்கு மன்னித்துக் கொள்ளுமாறும் கேட்கிறாள். இந்த சூழ்நிலையில் பார்க்கும்போது இதுவரை சுந்தர் செய்த எல்லாமும் மறந்து, காயத்ரி சுந்தருக்கு கடமைப்பட்டு இருக்கிறாள் என்று அவளுக்குத் தோன்றுவது போலவே நமக்கும் தோன்றுகிறது அல்லவா?

உண்மையில் ஒரு டாக்ஸிக்கான உறவு இங்கேதான் இன்னும் ஆழமாகிறது. சுந்தர் இதுபற்றி காயத்ரியின் வீட்டில் சொல்லியிருந்தால் ஒருவேளை திருமணம் நின்று இருக்கலாம், அல்லது காயத்ரியின் வீட்டில் இதை ஏற்றுக் கொண்டு சுந்தருக்கும் அவர்கள் புரியவைத்திருக்கலாம். ஆனால் சுந்தர் சாதுர்யமாக வீட்டில் சொல்ல மாட்டேன் என்று சொல்வதன் மூலம் காயத்ரி தவறு செய்தது போல அவளையே நம்பவைத்து, அதை வீட்டில் மறைத்தது இன்னும் மிகப்பெரிய தவறு என்பது போல சூழ்நிலையை ஏற்படுத்தி, நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் காயத்ரிக்கு ஆதரவாக இருக்கும் பெருந்தன்மையாளனாக காட்டிக் கொள்கிறான்.

இன்று இந்த பிரச்னையில் இருந்து தப்பித்தால் போதும் என்று காயத்ரி உணர்ச்சி பெருக்கில் சுந்தருக்கு நன்றி சொல்கிறாள். சுந்தர், தான் சொல்வதை எல்லாம் காயத்ரி கேட்கவும், தன்னிடம் எதிர்காலத்தில் எதையும் மறைக்காமல் இருக்கவும் இந்த சம்பவத்தை பயன்படுத்திக் கொள்கிறான். சுந்தர் இனி மிகச் சிறிய விஷயங்களில்கூட தன் இஷ்டப்படிதான் காயத்ரி நடக்க வேண்டும் என்று வலியுறுத்துவான்.

அதன் முதல் கட்டமாக காயத்ரியை புனிதாவின் வீட்டிலிருந்து வெளியேற்றி தான் பார்த்து வைத்திருக்கும் வேறு வீட்டில் குடி வைப்பதாக சொல்கிறான். அதைக் கேட்டு வீட்டில் எல்லோரும் அதிர்ச்சியாகிறார்கள். பரத் சுந்தரிடம், இங்கு புனிதா காயத்ரியை நன்றாக பார்த்துக் கொள்வாள் என்றும் தனியாகப் சென்றால் காயத்ரி சிரமப்படுவாள் என்றும் கூறுகிறான். வேண்டுமென்றால் சுந்தர் சென்னை வரும்போதெல்லாம் இதே வீட்டில் தங்கி கொள்ளலாம் என்று பரத் கூற, சுந்தர் தாங்கள் வளர்ந்த விதம் வேறு என்றும் தங்களுக்கு இப்படி மாறிக்கொள்ள முடியாது என்றும் சொல்கிறான்.

காயத்ரி மிகவும் பயந்து இருக்கிறாள். அதை பயன்படுத்தி சுந்தர் காயத்ரியை அழைத்துச் செல்கிறான். காயத்ரிக்கு செல்கையில் ஒருமுறை மீண்டும் நின்று சிவாவை பார்க்க, சிவா அங்கு இருக்கமுடியாமல் அவனது அறைக்கு சென்று விடுகிறான். காயத்ரி அழுதுகொண்டே செல்கிறாள்.

சுந்தர் கொடுத்த முதல் ட்விஸ்ட்டே இவ்வளவு பிரமாண்டமாக இருக்கிறது. அடுத்தடுத்த நாட்கள் சுந்தர் என்னென்ன பிரச்னைகள் வைத்திருக்கிறான் என காயத்ரியை போலவே பதற்றத்துடன் நாமும்...

காத்திருப்போம்!