Published:Updated:

AKS - 47 | புனிதா கிஷோரின் அறைக்கு செல்வது ஏன், பரத் பக்கம் நியாயம் இருக்கிறதா?

AKS - 47 - ஆதலினால் காதல் செய்வீர்

விகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் இணைந்து வழங்கும் 'ஆதலினால் காதல் செய்வீர்' (AKS) டிஜிட்டல் சீரிஸ் தினமும் இரவு 8.30 மணிக்கு யூடியூபில் ஒளிபரப்பாகிறது. இதில் நேற்று (26-10-2021) வெளியான 47-வது எபிசோட் எப்படி இருந்தது?!

AKS - 47 | புனிதா கிஷோரின் அறைக்கு செல்வது ஏன், பரத் பக்கம் நியாயம் இருக்கிறதா?

விகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் இணைந்து வழங்கும் 'ஆதலினால் காதல் செய்வீர்' (AKS) டிஜிட்டல் சீரிஸ் தினமும் இரவு 8.30 மணிக்கு யூடியூபில் ஒளிபரப்பாகிறது. இதில் நேற்று (26-10-2021) வெளியான 47-வது எபிசோட் எப்படி இருந்தது?!

Published:Updated:
AKS - 47 - ஆதலினால் காதல் செய்வீர்

சிவா காயத்ரியை அதிகம் மிஸ் பண்ணுவதாக பாண்டியன் அவளிடம் சொல்கிறான். சிவா மற்றவர்களைப் போல வெளிப்படையாக பேசும் குணம் இல்லாதவன் என்பதை சுட்டிக் காட்டி பாண்டியன் பேசும்போது, காயத்ரி சிவாவை பார்த்துக் கொண்டிருக்கிறாள். என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் சட்டென்று அவர்களிடம் விடை பெற்றுக்கொண்டு சிவா எழுந்து போகிறான். கதவருகில் போய் நின்று சிவா திரும்பி பார்க்க, காயத்ரியும் பாண்டியனும்கூட அவன் போவதையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சிவா புன்னகை செய்துவிட்டு கிளம்பிச் செல்கிறான். வெகுநேரம் அங்கே உட்கார்ந்து காயத்ரி சிவாவை நினைத்துக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு நடந்தவை எல்லாம் மகிழ்ச்சியாகவும், ஒருவித குழப்பமாகவும் இருக்கின்றது.

சிவாவுக்கும், காயத்ரிக்கும் இடையில் ஏதோ ஒரு நெருக்கம் அல்லது உறவு இருக்கிறது என்பது பாண்டியனுக்கு புரிகிறது. பல சமயங்களில் விளையாட்டுத்தனமாக இருந்தாலும் இது போன்ற விஷயங்களை மிக நாகரிகமாக பாண்டியன் கையாள்கிறான். சிவா மற்றும் காயத்ரியை பற்றி எந்த முடிவுக்கும் அவன் வரவில்லை. அதே போல் அவனது எண்ணம், சந்தேகங்களை அவர்களிடம் கேட்கவில்லை. பாண்டியன் எல்லாம் அறிந்திருந்தும் கண்டும் காணாததும் போல் நாகரீகமாக நடந்து கொள்கிறான்.

AKS - 47 - ஆதலினால் காதல் செய்வீர்
AKS - 47 - ஆதலினால் காதல் செய்வீர்

பொதுவாக கல்லூரி அல்லது அலுவலகங்களில் இருவருக்குள் ஈர்ப்பு ஏற்படும்போது சுற்றி இருக்கும் நண்பர்கள் அவர்களுடைய அனுமானங்களை பேசிப்பேசி சாதாரண ஈர்ப்பு அல்லது நட்பை காதல் ஆக்காமல் விட மாட்டார்கள். சில சமயங்களில் பேசியே கலைத்தும் விடுவார்கள். நம்மை சுற்றி இருக்கும் நண்பர்களில் யாராவது காதலித்தால் அதை அவர்களே வெளிப்படையாக சொல்லாத வரையில் அதைப் பற்றி பேசுவது தேவை இல்லாதது. ஒன்று சேர்வது அல்லது பிரிவது என அவர்கள் பொறுமையாக முடிவெடுக்கும் முன்னே நாமாக ஒன்றை பேசுவது குழப்பத்தை ஏற்படுத்தும். அது அவர்களை சரியாக முடிவெடுக்க விடாமல் தடுக்கும்.

பாண்டியன், காயத்ரி மற்றும் சிவாவுடன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது பொற்கொடி அங்கு வருகிறாள். பாண்டியனை சாப்பிட அழைக்கிறாள். பாண்டியன் வரவில்லை என மறுத்துவிடுகிறான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

புனிதா தனது டீமில் இருப்பவர்களுக்கு விருதுகளை வழங்குகிறாள். ‘Best Team Player’ எனும் விருது வாடிக்கையாளர்களால் பரிந்துரைக்கப்பட்டு பாண்டியனுக்கு கிடைக்கிறது. அதை சொல்லும்போது பாண்டியன் கவனிக்காமல் இருக்கிறான். பொற்கொடி அவனை ‘உசுப்பி’ விருதை வாங்கச் சொல்கிறாள். பாண்டியன் விருது வாங்கியதும் பொற்கொடி அவனிடம் ட்ரீட் கேட்கிறாள். பாண்டியன் காசைப் பற்றி யோசிக்கும் மைண்ட் வாய்ஸ் வழக்கம் போல அருகில் இருக்கும் பொற்கொடிக்கு கேட்கிறது.

AKS - 47 - ஆதலினால் காதல் செய்வீர்
AKS - 47 - ஆதலினால் காதல் செய்வீர்

பாண்டியன் நன்றாக வேலை செய்திருப்பதும், அதற்காக விருது வாங்குவதும் மகிழ்ச்சியான கொண்டாட்டத்திற்குரிய விஷயம். ஆனால் பாண்டியன் காசை பற்றி யோசித்துக் கொண்டு கொண்டாட்டங்களை தவிர்க்கிறான். கொண்டாட்டம் என்பது அவரவர் விருப்பப்படி மகிழ்ச்சியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது. ஒருவர் இப்படித்தான் கொண்டாட வேண்டும் என்று யாரும் நிர்ணயிக்க முடியாது. என்றாலும் கூட பாண்டியனை பொறுத்தவரையில் பணம் செலவாகாமல் இருப்பதே பெரும் கொண்டாட்டமாக இருக்கிறது.

ஒவ்வொருவராக கலைந்து சென்ற பின் பாண்டியன் விருதை பார்த்து கொண்டிருக்கிறான். பாண்டியனைப் போல ஊரிலிருந்து கார்ப்பரேட் கம்பெனிகளில் வேலைக்கு வருபவர்களுக்கு ஆரம்ப காலத்திலேயே இது போன்ற விருதுகள் பெரும் மகிழ்ச்சியையும் அங்கீகாரத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும். முதல் மாத சம்பளத்தையும் விருது வாங்கியது போலவே பாண்டியன் மகிழ்ச்சி அடைந்தான்.

பாண்டியன் தான் விருது வாங்கிய விஷயத்தை சொல்ல கவிதாவுக்கு போன் செய்கிறான். பாண்டியன் பேசுவதற்குள் கவிதா வேண்டுமென்றே தான் ராஜேஷுடன் வெளியே செல்ல இருப்பதாகவும், பிறகு பேசுவதாகவும் சொல்லி அழைப்பை துண்டிக்கிறாள். பாண்டியன் முகம் வாடி போகிறான். ஆனாலும் சோர்ந்து போகவில்லை.

கவிதா ராஜேஷுடன் வெளியே செல்லும்போது தான் உடன் வருவதை தவிர்ப்பதற்கான காரணத்தை ஏற்கெனவே பாண்டியன் கவிதாவுக்கு விளக்கி இருக்கிறான். கவிதாவும் புரிந்து கொண்டதை போல் தோன்றினாலும் பாண்டியன் அவளை விட்டு விலகுவதாக அவன் மீது கவிதா கோபமாக இருக்கிறாள். அதற்கு பழி வாங்குவதற்காக அவனை தவிர்க்கிறாள்.

AKS - 47 - ஆதலினால் காதல் செய்வீர்
AKS - 47 - ஆதலினால் காதல் செய்வீர்

புனிதா கிஷோரின் வீட்டுக்கு வருகிறாள். படுக்கையில் இருக்கும் கிஷோருக்கு உட்கார உதவி செய்கிறாள். வீட்டில் இருந்து அவனுக்கு கஞ்சியும், மாத்திரைகளும் கொண்டு வந்திருக்கிறாள். அவனது அறையை சுத்தம் செய்துவிட்டு அவன் தூங்கி எழும் வரை காத்திருக்கிறாள். கிஷோருக்கு புனிதா தன்னை பார்த்துக் கொள்வது அவனது அம்மா பார்த்துக் கொள்வதைப் போல் இருக்கிறது என்று சொல்கிறான்.

பொதுவாக அலுவலகத்தில் வேலை செய்யும், புதிதாக அறிமுகமாகியிருக்கும் ஒரு ஆணுக்கு உடல்நலம் சரியில்லை என்றதும் பெண்கள் அவ்வளவு எளிதாக அவர்களைப் பார்த்துக் கொள்ள வீட்டிற்கு செல்ல மாட்டார்கள். புனிதா முற்போக்காக, தன்மீது அதிக நம்பிக்கை உடைய பெண்ணாகவும் இருக்கிறாள். ஆண், பெண் பாலினம் கடந்து அவளால் பழக முடிகிறது. அதுவே அவளால் மிக எளிதாக கிஷோரை கவனித்துக் கொள்ள அவனது வீட்டிற்கு செல்ல முடிகிறது.

அலுவலம் கடந்து ஆண்-பெண் நட்பு நம் சமூகத்தில் இன்னும் தவறாகத்தான் பார்க்கப்படுகிறது. ஆணும் பெண்ணும் பேசினாலே பெண்களுக்கு பிரச்சினை ஏற்படும் என்று யோசிக்கும் ஆட்களும் இன்னும் இருக்கிறார்கள். ஒரு பெண்ணுக்கு ஆணின் மீது நம்பிக்கை இருப்பதை விட தன்னை பற்றிய நம்பிக்கையும், தைரியமும் வேண்டும். அதுவே பெண்களுக்கு சுதந்திரம் மற்றும் முன்னேற்றத்தை கொடுக்கும். செல்லும் இடங்களில் எல்லாம் ஆண்களுடன் சாதாரணமாக பேசுவதற்கே பெண்கள் சமூகத்தை நினைத்து பயந்து கொண்டு இருந்தால், தங்களுடைய கரியரில் முன்னேறும் வாய்ப்பை இழக்க நேரிடும்.

புனிதா கிஷோருக்கு சில உடற்பயிற்சிகளை சொல்லிக் கொடுக்கிறாள். இருவரும் கிஷோரின் வீட்டு பால்கனியில் நின்று பேசிக் கொண்டிருக்கையில், அந்தப் பக்கமாக வரும் பரத் அவர்களை பார்த்து விடுகிறான். கோபமாக அங்கிருந்து செல்கிறான்.

வெளியில் வர முடியாத அளவு வேலை இருப்பதாக சொல்லிய புனிதாவை கிஷோரின் அறையில் பார்க்கும்போது ஒரு சராசரி ஆணுக்கு உடனடியாக கோபம் வரத்தான் செய்யும். ஏற்கனவே தன்னுடைய தாழ்வு மனப்பான்மையால் புனிதாவின் மீது சந்தேகப்பட்டு பிரச்னைகளை உருவாக்கிக் கொண்டிருக்கும் பரத்துக்கு இப்போது நேரடியான இந்த காட்சி மேலும் மன அழுத்தத்தைக் கொடுக்கும். அது அவனது கோபத்தை தூண்டி உறவில் குழப்பத்தை அதிகமாக்கும்.

புனிதா சொல்லப்போகும் விளக்கத்தை பரத் புரிந்து கொள்வானா, சிவா-காயத்ரியின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும்?

காத்திருப்போம்!