Published:Updated:

அடுத்த சிவகார்த்திகேயன்னு உசுப்பேத்திட்டாங்க;வேலைய விட்டேன், அதன் பிறகு..! - வினோத் பாபு ஷேரிங்க்ஸ்

ஆடிஷன்ல கலந்துகிட்டேன். ஆடிஷனுக்கு நிறைய பேர் வந்திருந்தாங்க. எல்லாரும் நல்லா கலரா இருந்தாங்க. எனக்கு கொஞ்சம் தயக்கமா இருந்துச்சு.

வினோத் பாபு
வினோத் பாபு

பாட்டு, டான்ஸ், காமெடி, ஆங்கரிங், நடிப்பு என ஆல் ரவுண்டராக வலம் வருகிறார் `சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’ சீரியல் நாயகன் வினோத் பாபு. இந்த சீரியலில் பழம்பெரும் நடிகை லதா - வினோத் காம்போவுக்கு ரசிகர்களிடமிருந்து செம ரெஸ்பான்ஸ். பொறியியல் டு சின்னத்திரை, சீரியல் அனுபவம் என பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்..

வினோத் பாபு
வினோத் பாபு

`` கெளதம் வாசுதேவ் மேனன் மாதிரி, நான் படிச்சது மெக்கானிக்கல் இன்ஜினீயரிங். ஆனா இருக்குறது நடிப்புத் துறையில். நான் மட்டும் இல்ல. இந்தத் துறையில் இருக்கும் பல இளைஞர்கள் இன்ஜினீயரிங் பட்டதாரிகள்தான். இன்ஜினீயரிங் முடிச்சதும், நல்ல காலேஜில் எம்.பி.ஏ பண்ணேன். கோகோ கோலா கம்பெனியில் டீம் லீடரா வேலைக்குச் சேர்ந்தேன். கை நிறைய சம்பளம். வாழ்க்கை நல்லா போய்கிட்டிருந்துச்சு. ஆனால், போகப் போக வேலைப் பளு கொஞ்சம் அதிகரிச்சது. அதேசமயம் திண்டுக்கல் சரவணன் மூலமா ஆதித்யா சேனல் வாய்ப்பும் தேடி வந்துச்சு. நண்பர்கள் வேறு நல்லா என்கரேஜ் பண்ணாங்க. `நல்லா டான்ஸ் ஆடுற, பாட்டு பாடுற.. சினிமாவில் உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு.. அப்படி இப்படின்னு ஏத்திவிட்டானுங்க. நீ தான் அடுத்த சிவகார்த்திகேயன் அப்படிங்குற அளவுக்கு என்னை உசுப்பேத்திவிட்டுட்டாங்க. இதெல்லாம் கேட்டுட்டு ரெண்டு மூணு நாள் தூங்கல. சினிமா கனவு கண் முன்னாடி வந்து வந்து போச்சு. வேலையை விடலாம்னு முடிவு பண்ணி வீட்ல சொன்னதும் என் அம்மா அப்பா ரொம்ப ஷாக் ஆகிட்டாங்க.

நிறைய செலவு பண்ணி படிக்க வெச்சாங்க. நடிப்பு -ன்னு வந்து நிக்கிறேன்னு அவங்களுக்கு அதிர்ச்சி. என் எதிர்காலம் பத்தி கவலைப்பட்டாங்க. ஆனால், என் விரும்பத்துக்குத் தடை போடலை. ஆதித்யா சேனலில் சில வருடம் வேலை பார்த்தேன். துறை ரொம்ப ஜாலியா இருக்கும்னு நினைச்சு வந்தேன். ஆனால், ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன். கோகோ கோலா நிறுவனத்துல கை நிறைய சம்பளம் வாங்கிட்டு இருந்த எனக்கு அந்த வேலையை விட்டதும் ஒரு மூணு மாசம் சாப்பாட்டுக்கே வழியில்லாத நிலைமைலாம் ஏற்பட்டுச்சு. ஆனால், போகப் போக செட் ஆகிடுச்சு. அதன் பிறகு கலர்ஸ் தமிழ் சேனலில் `சிவகாமி'ன்னு ஒரு சீரியலில் லீட் ரோல் பண்ணேன். அந்த சீரியல் மூலமாதான் நான் நடிப்பு கத்துக்கிட்டேன். அதற்கு அடுத்து சில தொகுப்பாளர் வாய்ப்புகள் வந்துச்சு. திரும்பவும் ஆங்கரிங் வேணாம், நடிப்பு பக்கம் போவோம்னு முடிவு பண்ணேன். அதன்பிறகு தான் `கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சியில பெர்ஃபார்ம் பண்ணி ஃபனைலிஸ்ட் ஆனேன். ஆனால், டைட்டில் ஜெயிக்கல. இருந்தாலும் அது ஒரு நல்ல அனுபவமா இருந்துச்சு. நிறைய கத்துக்கிட்டேன். காமெடி ஷோக்களில் பெர்ஃபார்ம் பண்றது அவ்வளவு சுலபம் கிடையாது. வெளியில் இருந்து பார்க்க ஈசியா தெரியும். ஆனால் ரொம்ப மெனக்கெடனும்.

வினோத் பாபு
வினோத் பாபு

`கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சியில் பெர்ஃபார்ம் பண்ணிட்டு இருக்கும்போதே `சுந்தரி நீயும் சுந்தரன் நானும்' சீரியல் வாய்ப்பு தேடி வந்துச்சு. ஆடிஷன்ல கலந்துகிட்டேன். ஆடிஷனுக்கு நிறையா பேர் வந்திருந்தாங்க. எல்லாரும் நல்லா கலரா இருந்தாங்க. எனக்கு கொஞ்சம் தயக்கமா இருந்துச்சு. ஆனாலும் என் திறமை மேல நம்பிக்கை வெச்சேன். இரண்டு நாள்ல என்னை தேர்வு பண்ணிட்டதா கால் வந்திச்சு. அப்புறம் என்ன ஒரே மகிழ்ச்சிதான்.

` 'நச்' விலையில் நான்கு புதிய மாடல்கள்'- ஸ்மார்ட் டி.வி பிரிவைப் பலப்படுத்தும் ஷியோமி!

`சுந்தரி நீயும் சுந்தரன் நானும்' சீரியல் புரோமோ வெளியானபோது நிறையா நெகடிவ் கமென்ட்ஸ். என் நிறத்தை வெச்சி சிலர் கமென்ட் பண்ணியிருந்தாங்க. அந்தக் கமென்ட்ஸ்லாம் பார்த்து எனக்கு அதிர்ச்சியா இருந்துச்சு. என்னடா இது தமிழ்நாட்ல இருக்கோம்.. ஆனால், கறுப்பா இருந்தா ஏத்துக்க மாட்றாங்களேன்னு தோணுச்சு. உள்மனசுல ஒரு நம்பிக்கை இருந்துச்சு. நாம நல்லா நடிச்சா எல்லாருக்கும் பிடிக்கும்னு. இப்போ ஓகே. சீரியல் பார்க்க பார்க்க மக்களுக்கு என்னைப் பிடிச்சிடுச்சுன்னு நினைக்குறேன். பாசிடிவ் கமென்ட்ஸ் வருது.

வினோத் பாபு
வினோத் பாபு

சிலர் நான் `பழைய ஜோக்’ தங்கதுரை தம்பி அதுனால தான் இந்த சீரியல் ஹீரோ வாய்ப்பு கொடுத்ததா சொல்றாங்க. நான் தங்கதுரை தம்பி கிடையாது. அவருக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. `நான் கலக்கப் போவது' நிகழ்ச்சியில் பெர்ஃபார்ம் பண்ணிட்டு இருக்குறதே சீரியல் ஆடிஷன்லதான் தயாரிப்பாளருக்குத் தெரிஞ்சது. எனக்கு சினிமா பின்புலம் கிடையாது. என் கடின உழைப்புக்கும் திறமைக்கும் கிடைச்ச வாய்ப்பு இது.

``என் சூழல் வயித்துல இருக்க என் குழந்தைக்குத் தெரியும்!" - நெகிழும் அறந்தாங்கி நிஷா

சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியலில் லதா அம்மாதான் எனக்கு பெரிய பலம். அவங்களை எல்லாரும் சீனியர் ஆர்டிஸ்ட்னு சொல்றாங்க. ஆனால் அவங்க சீனியர்லாம் கிடையாது. ஏன் சொல்றேன்னா.. தினமும் ஷூட்டுக்கு வருவாங்க, நாங்க எப்படி வொர்க் பண்றோமோ அப்படித்தான் அவங்களும் பண்ணுவாங்க. ஒரு டயலாக் கொடுத்தா அத நாம ஒருவாட்டி ரிகர்சல் பார்ப்போம். அவங்களும் அதையேதான் பண்ணுவாங்க. நாமா ஒரு சீனியர் ஆர்டிஸ்ட் அப்படிங்குற எண்ணம் அவங்க மனசுல கொஞ்சம்கூட இருக்காது. தினமும் புதுப்புது விஷயத்தை கத்துப்பாங்க. இன்ஸ்டா, ஃபேஸ்புக், ட்விட்டர்-ன்னு பார்த்து அப்டேட் ஆகிட்டே இருப்பாங்க. புது ஆப் எதாச்சு வந்தா அதை டவுன்லோட் பண்ணி பார்ப்பாங்க. தினமும் புதுசா எதையாச்சு கத்துக்கணும்னு ஒரு ஆர்வம் அவங்கள்ட்ட இருக்கும்.

வினோத் பாபு
வினோத் பாபு

சீரியலில் எங்க ரெண்டு பேர் காட்சி ஷூட் பண்ணும்போது ஆன் தி ஸ்பாட்ல எதாச்சு காமெடி டயலாக் பேசுவேன்.. அவங்களும் கரெக்டா டைமிங் ரியாக்‌ஷன் கொடுத்து சமாளிச்சிடுவாங்க. ஒரு 16 வயசுல ஃபீல்டுக்கு வந்தா எப்படி ஹார்ட் வொர்க் பண்ணுவாங்களோ அப்படித்தான் இன்னமும் அவங்க ஹார்ட் வொர்க் பண்றாங்க. அதுனால எங்க சீரியலில் எங்க ரெண்டு பேர் காம்போ நல்லா ரீச் ஆச்சு. ஒரு சீரியலில் ஹீரோ ஹீரோயினுக்கு காம்போ செட் ஆகுறது ஈசி. ஆனால், பாட்டி-பேரன் காம்போ செட் ஆகுறது கஷ்டம். லதா அம்மாதான் அதற்கு முக்கியக் காரணம். ஒவ்வொரு சீனுக்கும் நிறையா ரிகர்சல் பார்ப்பாங்க. அவங்க சினிமா அனுபவம் ஒப்பிடும்போது நான் ரொம்ப சின்ன பையன். ஆனா, லதா அம்மா அப்படி எதையுமே யோசிக்காம எங்களோட சகஜமா பழகுவாங்க.

சீரியல் நாயகி தேஜு அப்படியே நேரெதிர். ரொம்ப அமைதி. அவங்க சொந்த ஊர் கர்நாடகா. தமிழ் தெரியாது. ஆனால் நல்லா நடிப்பாங்க. ரொம்ப அதிகமா பேசமாட்டாங்க. நாம என்ன கலாய்த்தாலும் அவங்களுக்குப் புரியும். ஆனால் ரியாக்ட் பண்ணவே மாட்டாங்க. ஷாட் வரும்போது மட்டும்தான் பேசுவாங்க. நாலு மாசமா இந்த சீரியலில் ஒண்ணா நடிக்குறோம். இதுவரைக்கும் எண்ணி ஒரு 40 வார்த்தைதான் பேசியிருப்போம். அவங்கள மாதிரி நம்மாள இருக்க முடியாது. ஷூட்டிங் ஸ்பாட்ல எல்லார் கூடயும் பேசிகிட்டு இருப்பேன். கேமரா மேன், லைட்டிங் மேன்னு ஒருத்தரையும் விடமாட்டேன்.

வினோத் பாபு,
வினோத் பாபு,

நான் அடிப்படைல மிமிக்ரி ஆர்டிஸ்ட். அதனால சில சமயம் டயலாக் டெலிவரியின்போது சினிமா ஹீரோக்கள் பாணியில் பேசிடுவேன். விஜய் சேதுபதி மாதிரி பேசுறேன், நடிக்கிறேன்னு சிலர் சொல்லியிருக்காங்க. எனக்கு விஜய் சேதுபதி ரொம்ப ரொம்பப் பிடிக்கும். நமக்கு யாரைப் பிடிக்குமோ அவங்கள மாதிரிதானே வரும். ஆனால் நான் அப்படியிருக்கக் கூடாதுன்னு நினைக்குறேன். என்னோட ஸ்டைல்னு ஒண்ணு இல்லாமையே போய்டும்.

அதனால் முடிஞ்ச அளவுக்கு என் சொந்த ஸ்டைலில் நடிச்சிட்டு இருக்கேன். விஜய் சேதுபதியை ரொம்பப் பிடிச்சாலும் அவரோட படங்கள பார்க்கவே யோசிப்பேன். ஏன்னா அவரோட சாயலை உள்வாங்கிட கூடாதுல. அவரைப் பார்த்து ஒவ்வொரு நாளும் வியந்துட்டு இருக்கேன். மனுஷன் வெறித்தனமா நடிக்கிறாருன்னு தோணும்.

வினோத் பாபு, டிடி, தீனா
வினோத் பாபு, டிடி, தீனா

நான் சின்னத்திரைக்கு வந்ததுக்கு காரணம் சினிமாவில் நடிக்கணும்னுதான். சீக்கிரமே என் ஆசை, கனவு நிறைவேறும்னு நம்புறேன். பெரிய ஹீரோ ஆகணும். ஸ்டார் ஆகணும்னு ஆசை கிடையாது. குணசித்திர கதாபாத்திரங்கள் கிடைச்சாலே என் திறமைய முழுசா வெளிப்படுத்துவேன்’’ என்றார் நம்பிக்கையுடன்.