Published:Updated:

``அதையெல்லாம் ரசிக்குறவங்க என் பொண்ணு பேசுறத மட்டும் ஏன் குறை சொல்றாங்க?" - வீஜே அர்ச்சனா

குடும்பத்தினருடன் அர்ச்சனா

வீஜே அர்ச்சனாவுக்கு சமீபத்தில் ஆபரேஷன் நடந்தது. தற்போது வீட்டில் ஓய்வில் இருப்பவர், விரைவில் மீடியா பணிகளுக்கும் திரும்பவுள்ளார். உடல்நிலை அப்டேட்ஸ், யூடியூப் வீடியோ விமர்சனங்கள் குறித்து அர்ச்சனாவிடம் பேசினோம்.

``அதையெல்லாம் ரசிக்குறவங்க என் பொண்ணு பேசுறத மட்டும் ஏன் குறை சொல்றாங்க?" - வீஜே அர்ச்சனா

வீஜே அர்ச்சனாவுக்கு சமீபத்தில் ஆபரேஷன் நடந்தது. தற்போது வீட்டில் ஓய்வில் இருப்பவர், விரைவில் மீடியா பணிகளுக்கும் திரும்பவுள்ளார். உடல்நிலை அப்டேட்ஸ், யூடியூப் வீடியோ விமர்சனங்கள் குறித்து அர்ச்சனாவிடம் பேசினோம்.

Published:Updated:
குடும்பத்தினருடன் அர்ச்சனா

``என் மண்டை ஓட்டில் மூளைக்கு அருகே செரிப்ரோஸ்பைனல் திரவக் கசிவு ஏற்பட்டுள்ளது. இதற்காக ஆபரேஷன் நடக்கிறது. இந்த இக்கட்டான நிலையை எதிர்த்துப் போராடி மீண்டும் வருவேன்" - இவ்வாறு கடந்த மாதம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சின்னத்திரை தொகுப்பாளர் அர்ச்சனா வெளியிட்ட தகவல் வைரலானது. ஆபரேஷன் முடிந்து வீட்டில் ஓய்வில் இருப்பவர், விரைவில் மீடியா பணிகளுக்கும் திரும்பவுள்ளார். உடல்நிலை அப்டேட்ஸ், யூடியூப் வீடியோ விமர்சனங்கள் குறித்து அர்ச்சனாவிடம் பேசினோம்.

வீஜே அர்ச்சனா
வீஜே அர்ச்சனா

``சமீபத்துலதான் பண்பலை (எஃப்.எம்) சேனல் ஒண்ணுல காலை நிகழ்ச்சியில ஆர்ஜே-வா வேலை செய்ய ஆரம்பிச்சேன். கூடவே, விஜய் டிவியில `மிஸ்டர் அண்டு மிஸஸ் சின்னத்திரை' நிகழ்ச்சியின் தொகுப்பாளராவும் இருந்தேன். இந்த வழக்கமான வேலைகள் போயிட்டிருந்த நிலையில, திடீர்னு ஒருநாள் எனக்குக் காய்ச்சல் ஏற்பட்டதுடன், மூக்கிலிருந்து நீர் மாதிரி வடிஞ்சது. கோவிட் காலமா இருக்குறதால, உடனே மருத்துவரைச் சந்திச்சேன். மூளைக்காய்ச்சலா இருக்கலாம்னு சொல்லி சில டெஸ்ட் எடுத்தாங்க. `மனிதர்களின் மூளை ஒருவித திரவத்தால சூழப்பட்டிருக்கும். அந்தத் திரவம் மூக்கு வழியா உங்களுக்கு வெளியேற ஆரம்பிச்சிருக்கு'ன்னு அதிர்ச்சியூட்டும் தகவலைச் சொன்னாங்க.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பிறப்பிலிருந்தே என் மண்டை ஓட்டுல துளை இருந்திருக்கு. அப்போ சி.டி ஸ்கேன் எடுத்தப்போதான் அதுவும் தெரியவந்துச்சு. இளமைக்காலத்துல இருந்தே எனக்கு அவ்வப்போது ஏதாவதொரு உடல்நலப் பிரச்னைக்காக ஆபரேஷன், சிகிச்சைகள் நடந்திருக்கு. அதனால, எனக்கு ஆபரேஷன் செய்யணும்னு டாக்டர் சொன்னதும் நான் பெரிசா அதிர்ச்சியாகல. என் உடல்நல பாதிப்பு பத்தி கூகுள் பண்ணிப் பார்த்தப்போ அதுல குறிப்பிட்டிருந்த விஷயங்கள், இது பெரிய சிக்கல்னு உணர்த்துச்சு. அதனால, என் குடும்பத்தினர்தான் அதிர்ச்சியானாங்க. `மீடியா வேலைகளை முடிச்சுக் கொடுக்கணும். ரெண்டு வாரங்கள் கழிச்சு ஆபரேஷன் வெச்சுக்கலாம்'னு சொன்னேன். `உடனடியா ஆபரேஷன் செய்யுறதுதான் நல்லது'னு டாக்டர்கள் சொன்னாங்க.

வீஜே அர்ச்சனா
வீஜே அர்ச்சனா

இந்தத் தகவலை உடனடியா விஜய் டிவி, பண்பலை சேனல் தரப்பினர்கிட்ட சொன்னேன். `உங்களோட உடல்நிலைதான் எங்களுக்கு முக்கியம். உங்களுக்காக அலுவலக கதவுகள் திறந்திருக்கும். ஆரோக்கியமா திரும்பி வாங்க'ன்னு நம்பிக்கை கொடுத்தாங்க. எதைப் பத்தியுமே யோசிக்க நேரமில்லாத நிலையில, `பிக்பாஸ்' நண்பர்கள் சிலருக்கு மட்டும் தகவல் சொன்னேன். விரைவா ஆஸ்பத்திரிக்கு வந்தவங்க, எனக்கு நம்பிக்கையூட்டினாங்க. மகள், அம்மா, கணவர் உட்பட குடும்பத்தினர் பலரும் கொடுத்த நம்பிக்கையில பயமில்லாம ஆபரேஷன் தியேட்டருக்குப் போனேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆபரேஷன் பல மணி நேரம் நடந்துச்சு. ஒரு வார காலம் ஆஸ்பத்திரியில சிகிச்சையில இருந்த நிலையில, அதன் பிறகுதான் எழுந்து நடக்க ஆரம்பிச்சேன். உடல் எடையும் கொஞ்சம் குறைஞ்சிருக்கு. மூக்கு வழியே ஆபரேஷன் நடந்ததால, குரலும் பழைய நிலைக்கு வரல. இந்த சிகிச்சைக்கான காரணத்தால, சில வாரங்கள் எனக்கு ஓய்வு தேவைப்படும். வேலை செஞ்சுகிட்டிருந்த நிகழ்ச்சிகள்ல திடீர்னு நான் வராட்டி ஏதேதோ காரணம் சொல்ல ஆரம்பிச்சுடுவாங்க. என் உடல்நிலை பத்தி சமூக வலைதளங்கள்ல வதந்திகளும் உலவ ஆரம்பிக்கும். அதையெல்லாம் தவிர்க்கவே, ஆபரேஷனுக்கு சில மணி நேரத்துக்கு முன்பா இந்தத் தகவலை நானே பதிவிட்டேன். ஆபரேஷன் முடிஞ்சது, டிஸ்சார்ஜ் ஆனது, வீட்டுல ஓய்வுல இருக்குறதுனு என் உடல்நிலை பத்தின எல்லாத் தகவல்களையும் தொடர்ந்து வீடியோவா வெளியிடுறேன்.

மகளுடன் அர்ச்சனா
மகளுடன் அர்ச்சனா

என் எல்லாத் தேவைகளுக்கும் குடும்பத்தினர் சப்போர்டிவ்வா இருக்காங்க. இதுபோல மாசக்கணக்குல வீட்டுக்குள்ளேயே நான் முடங்கினதில்ல. ரீ-என்ட்ரியில இப்படியொரு பிரேக் கிடைக்கும்னு எதிர்பார்க்கல. இன்னும் ஓரிரு வாரங்கள் ஓய்வில் இருக்கணும். அதன் பிறகு வழக்கமான மீடியா வேலைகளுக்குத் திரும்பிடுவேன். ஆபரேஷன் நடக்குறதுக்கு முன்பு வெளியிட்ட பதிவுலயே, பிரபலங்கள் உட்பட எக்கச்சக்கமானோர் எனக்காக பாசிட்டிவ்வான வார்த்தைகளைச் சொல்லியிருந்தாங்க. எல்லோருக்கும் அளவுகடந்த நன்றிகள்" என்று நெகிழ்ச்சியாகக் கூறுபவர், சமீபகாலத்தில் பேசுபொருளாக இருக்கும் தன் மீதான யூடியூப் சேனல் கன்டென்ட் விமர்சனங்கள் குறித்தும் மனம் திறந்தார்.

``சில வருஷங்களுக்கு முன்னாடி, `உங்க பொண்ணு என்ன பண்றா? அவகூட சேர்ந்து ஏதாச்சும் ஃபன் வீடியோ பண்ணுங்க'ன்னு பலரும் அடிக்கடி கேட்பாங்க. இப்போ, `வயசுக்கு மீறின விஷயங்களை உங்க பொண்ணு பேசுறா. இதை நீங்களே என்கரேஜ் பண்றது சரியா?'னு பலரும் பலவிதமா என்கிட்ட கேட்குறாங்க. எங்க விருப்பத்துல எதைச் செஞ்சாலும் அதுல ஏதாச்சும் ஒரு குற்றங்குறைக் கண்டுபிடிக்குறதையே குறிக்கோளா வெச்சிருந்தா, அதுக்கு நாங்க என்ன பண்ண முடியும்? சினிமாவுல குழந்தை நட்சத்திரமா தேசிய விருது வாங்குறவங்களையும், டான்ஸ் மற்றும் சிங்கிங் ரியாலிட்டி நிகழ்ச்சிகள்ல திறமையை வெளிப்படுத்துற குழந்தைகளையும் பாராட்டுவாங்க. ஆனா, தனக்குப் பிடிச்ச விஷயங்களை என் மக, சுய விருப்பத்துடன் செய்யுறா. இதுல என்ன தப்பு இருக்கு?

vj archana with her daughter
vj archana with her daughter

எந்த விதத்துல என் மகளை சோஷியல் மீடியாவுல நான் அதிகமா முன்னிலைப்படுத்திட்டேன்? யூடியூப்ல அதிகளவுல சம்பாதிக்குற, அதிக சப்ஸ்கிரைபர்களைக் கொண்டிருக்குற சேனல்கள் பலவற்றிலும் சின்ன குழந்தைகளும் அங்கம் வகிக்குறாங்க. அதையெல்லாம் பார்த்து ரசிக்குறவங்க, என் சேனல்ல பொண்ணு பேசுறதைக் குறையா சொல்லுறது எப்படி நியாயமாகும்? என் சேனல்லயே ஆர்ட் அண்டு கிராஃப்ட் விஷயங்கள் பத்தின பயனுள்ள வீடியோக்களையும் என் மக ஸாரா வெளியிட்டிருக்கா. அதுக்கெல்லாம் விமர்சனம் செய்யாதவங்க, பொண்ணோட மத்த விஷயங்களை உள்நோக்கத்துடன் குறை சொல்றதை நான் ஏத்துக்க மாட்டேன். இதுபோன்ற விமர்சனங்களுக்கு நானாச்சும் கொஞ்சம் கவலைப்படுவேன். ஆனா, ஸாரா என்னைவிட ரொம்பவே முதிர்ச்சியோடும் தெளிவோடும் இருக்கா. எதிர்மறை விமர்சனங்கள் எதையுமே அவ கண்டுக்குறதில்ல. அந்தத் தெளிவு இப்போதான் எனக்கு வந்திருக்கு.

சமீபத்துல நான் வெளியிட்ட பாத்ரூம் டூர் வீடியோவுக்கு எதிர் விமர்சனங்கள் அதிகம் வந்துச்சு. ஹோம் டூர், பாத்ரூம் டூர்னு பர்சனல் விஷயங்களை யூடியூப்ல காட்டுறது வெளிநாடுகள்ல பல வருஷங்களுக்கு முன்பே பிரபலமாகிடுச்சு. இதெல்லாம் இப்பதான் நம்ம நாட்டுல கவனம் பெற்றிருக்கு. என்னுடையது லைஃப் ஸ்டைல் சேனல். அதுல எங்களுக்குப் பிடிச்ச, என் தனிப்பட்ட அனுபவங்கள் சார்ந்த விஷயங்களை வெளியிடுறேன். நம்ம வீட்டுக்கு வர்ற உறவினர்களுக்கு வீட்டைச் சுத்திக் காட்டுற மாதிரிதான், என்னுடைய பர்சனல் விஷயங்களைத் தெரிஞ்சுக்க ஆசைப்படுறவங்களுக்கு என் வீடியோ பிடிக்கும். அந்த பாத்ரூம் வீடியோவுலயும் பராமரிப்பு அனுபவங்களைப் பத்திதானே பேசியிருந்தோம். மத்தவங்களைத் தவறா வழி நடத்துற மாதிரியோ, புண்படுத்துற மாதிரியோ என் வீடியோக்கள்ல எதையும் நாங்க வெளிப்படுத்தல.

விஜய் டிவி நிகழ்ச்சியில்...
விஜய் டிவி நிகழ்ச்சியில்...

பர்சனல் லைஃப்ல நடக்குற, பிடிச்ச விஷயங்களை யூடியூப்ல வெளிப்படுத்துறது என் விருப்பம். அதைப் பார்க்குறதும் பார்க்காததும் அவங்கவங்க விருப்பம். அதேபோல என் மகளை எப்படி வளர்க்கணும்னு எனக்குத் தெரியும். அவ நல்லா படிக்குறா. ஓய்வு நேரத்துல பிடிச்ச விஷயங்களைச் செய்றா. அவளோட பேச்சுத் திறமைக்குக் கடிவாளம் போட நான் தயாரில்ல. என் மகளோட செயல்பாடுகள் பத்தி தேவையில்லாம விமர்சனம் செஞ்சு, யாரும் தங்களோட நேரத்தை வீணடிக்க வேண்டாம். யூடியூப் மூலமா வருமானம் சம்பாதிச்சுத்தான் வாழணும்னு எனக்கு அவசியமும் இல்ல. என் சம்பாத்தியத்திலிருந்து மன நிறைவுக்காக எத்தனை குடும்பங்களுக்கு உதவுறேன்னு என் குடும்பத்தினருக்கு மட்டும்தான் தெரியும். அதை யார்கிட்டயும் பகிரவும் எனக்கு விருப்பமில்ல" என்று அழுத்தமாகக் கூறும் அர்ச்சனா, சிறிய அமைதிக்குப் பிறகு, மீண்டும் தொடர்ந்தார்.

`` `பிக்பாஸ்' நிகழ்ச்சிக்குப் பிறகு, நான் எதிர்கொண்ட சமூக வலைதளத் தாக்குதல் ரொம்பவே அதிகம். அதனால ஏற்பட்ட மன உளைச்சலும்கூட, இப்போ ஏற்பட்ட மூளை சார்ந்த சிக்கலுக்கு முக்கிய காரணமா இருந்திருக்கலாம்னு டாக்டர்கள் சொன்னாங்க. இனியும் என்னைப் பத்தி எதிர் விமர்சனங்கள் வரக்கூடும். ஆனா, இனி எதுக்காகவும் கவலைப்படுறதா இல்ல. ஆரோக்கியமான விமர்சனங்களை முன்வைக்கும் சிலரின் கருத்துகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப் போறேன்.

'பிக்பாஸ்' நண்பர்களுடன்...
'பிக்பாஸ்' நண்பர்களுடன்...

`மிஸ்டர் அண்டு மிஸஸ் சின்னத்திரை' நிகழ்ச்சியின் புரோமோவுல, `அர்ச்சனா முகத்தைப் பார்க்கப் பிடிக்கல. வேற ஆங்கரை ரீப்ளேஸ் பண்ணுங்க'ன்னு பலரும் கமென்ட் பண்ணுவாங்க. இப்போ ஓய்வில் இருக்கும் காலகட்டத்துல, `அர்ச்சனாவை மறுபடியும் ஆங்க்கரா பார்க்க ஆசைப்படுறோம். சீக்கிரமே வாங்க'ன்னு பலரும் பதிவிடுறதையும் பார்க்கிறேன். மக்களின் அன்பைத் தக்க வெச்சுக்குறது பெரிய சவாலானது. இந்த ஆபரேஷனுக்குப் பிறகு பலருக்கும் என்மீது பழையபடி அன்பு ஏற்பட்டிருக்கு. திடீர்னு உடல்நிலை சரியில்லாம போனதுகூட நல்லதுக்குத்தான்னு நினைக்கிறேன். என்மீது எதிர் விமர்சனம் கொண்டவங்களும் என்னைப் புரிஞ்சுப்பாங்கன்னு நம்புறேன்" என்று புன்னகையுடன் முடித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism