Published:Updated:

“யாருக்காகவும் என்னை மாத்திக்க நினைச்சதில்ல!”

பிரியங்கா தேஷ்பாண்டே
பிரீமியம் ஸ்டோரி
News
பிரியங்கா தேஷ்பாண்டே

15 YEARS ANNIVERSARY

``ஏர்ஹோஸ்டஸ் ஆகணுங்கிறதுதான் என் ஆசை. ஆனாலும், வாழ்க்கை ஓட்டத்தில் ஆங்கரிங் என் கரியராக அமைஞ்சது. கிடைச்ச வாய்ப்பை கெட்டியாகப் பிடிச்சிட்டு பயணிக்க ஆரம்பிச்சிட்டேன். இப்ப ஆங்கரிங் துறையில் பதினைந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கப்போறேன்’’ எனக் கலகலப்பான சிரிப்புடன் பேசத் தொடங்கினார், தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே.

வெள்ளந்திச் சிரிப்பு, எமோஷனல் ஏகாம்பரம், தேவைப்படும் நேரத்தில் ஆங்கிரி பேர்டு என்கிற டிரேட் மார்க்கிற்குச் சொந்தக்காரி இவர். தன்னைச் சுற்றி இருப்பவர்களை எப்போதும் சிரிக்க வைத்து ரசிக்கும் குணம் சிலருக்குத்தான் வாய்க்கும்! அப்படியான குணம் கொண்டவர் என்பதை அவரைச் சந்தித்த அடுத்த நிமிடத்தில் புரிந்துகொண்டேன்.

அம்மாவுடன் பிரியங்கா தேஷ்பாண்டே
அம்மாவுடன் பிரியங்கா தேஷ்பாண்டே

‘‘எல்லா ஆங்கர்களுடைய கனவும் விஜய் டி.வி-யில் ஒரு ஷோ பண்ணணும் என்பதாகத்தான் இருக்கும். அப்படியான கனவு எனக்கும் இருந்துச்சு. அதுக்கு முன்னாடி எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்குதோ அங்கெல்லாம் பண்ணிட்டு இருந்தேன். எந்த இடத்திலும் பிரேக் எடுத்துக்கல. எல்லா ஷோவும் ட்ரை பண்ணினேன். ஜீ தமிழில் ஆரம்பிச்சு, சன் டி.வி-யில் வாய்ஸ் ஓவர் ஆர்ட்டிஸ்ட் ஆக என்ட்ரியாகி, அப்படியே அங்க ஆங்கரிங்கும் பண்ணினேன். ஆனாலும் இது போதும்னு எனக்குத் தோணவே இல்ல... ஏதோ மிஸ் ஆகுதேங்கிற ஃபீல்தான் இருந்துச்சு.

காலேஜ் படிக்கும்போது மிர்ச்சியில் இன்டர்ன்ஷிப் பண்ணினேன். அங்கதான் மாகாபா ஆனந்த் எனக்கு அறிமுகம். அப்ப ஆனந்தகண்ணனும், மாகாபாவும் சேர்ந்து `சினிமா காரம் Coffee' ஷோ பண்ணிட்டு இருந்தாங்க. திடீர்னு ஆனந்த கண்ணன் அந்த ஷோவிலிருந்து வெளியேறவும், மாகாபா சொன்னதால அங்கப் போய் ஆடிஷன் அட்டென்ட் பண்ணினேன். அதுல செலக்ட் ஆகி மாகாபா கூட சேர்ந்து அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினேன். அடுத்து ரெண்டு வருஷம் பிரேக் எடுத்தேன். அப்புறம்தான் தொடர்ந்து ஷோக்கள் வர ஆரம்பிச்சது’’ என்றவரிடம் `சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சி குறித்துக் கேட்டேன்.

‘‘சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை திவ்யா அக்கா, ஷில்பா மேனன், சின்மயி எல்லாம் பண்ணும்போது டி.வி-யில் பார்த்து ரசிச்சிருக்கேன். நாம ஒருநாள் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கணும்னு சும்மா விளையாட்டாச் சொல்லி ஆசைப் பட்டிருக்கேன். ஆனா, அது உண்மையில் இப்ப நடந்துட்டிருக்கு. இன்னைக்கு நான் பிரியங்காவாக இந்த உலகத்துக்குத் தெரியுறேன்னா அதுக்கு முக்கியமான காரணம் சூப்பர்சிங்கர்தான்! எதார்த்தமா ஆரம்பிச்ச சூப்பர் சிங்கர் பயணம் இன்னைக்கு வரைக்கும் சூப்பரா போயிட்டிருக்கு’’ என்றவர் தன் `பிக்பாஸ்' அனுபவங்கள் குறித்தும் வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்கிறார்.

பிரியங்கா தேஷ்பாண்டே
பிரியங்கா தேஷ்பாண்டே

‘‘எனக்குன்னு குட்டி குட்டியா நிறைய விஷயங்கள் பக்கெட் லிஸ்ட்ல இருக்கு. பெரிய ஷோ ஒண்ணு பண்ணணுங்கிறது என் பக்கெட் லிஸ்ட்ல இருந்தது. பிக்பாஸ் நான் இந்தியில் பார்த்திருக்கேன். இந்தியில் நான் பார்த்ததுக்கும் தமிழுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. அதுவும் என் பக்கெட் லிஸ்ட்ல இருந்ததால, அவங்க கேட்டதும் எந்தத் தயக்கமும் இல்லாமப் போனேன். பொதுவா லைம்லைட் இல்லாதவங்க பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கிட்டா அவங்களுக்கு லைஃப் கிடைக்கும்னு நினைக்கிறாங்க. ஆனா, உண்மையில் அது அப்படியான நிகழ்ச்சி கிடையாது. வித்தியாசமான மனுஷங்க அந்த நிகழ்ச்சியில் இருப்பாங்க... நம்முடைய சர்வைவல்தான் அந்த கேம். என்னை ஆங்கரா பார்த்த மக்களுக்கு என்னை இன்னும் பர்சனலா தெரியப்படுத்தும்போது, அவங்ககூட கனெக்‌ஷன் இன்னும் அதிகமாகும்னு தோணுச்சு. யாருக்காகவும் என்னை மாத்திக்கணும்னு நான் எப்பவும் நினைச்சதில்ல. என்னை கரெக்ட் பண்ணிக்கணும்னு தோணுச்சுன்னா, நான் செய்யறது தப்புன்னு தோணுச்சுன்னா மாத்திப்பேன். நான் இப்படித்தான் அந்த வீட்டுக்குள்ளேயும் இருந்துட்டு வந்தேன். ஒய்ட் பேப்பரில் இருக்கற சின்னக் கறுப்புப் புள்ளியை மட்டும்தான் நாம பார்க்குறோம். நான் அப்படிப் பார்க்கிறதில்ல. எனக்கும் கோபம் வரும், எனக்கும் அழுகை வரும், நானும் போட்டி போடுவேன்... எனக்கும் எல்லா எமோஷனும் இருக்கு. அது மக்களுக்குப் புரியாது. இது கேம், அங்க சர்வைவ் பண்ண இதெல்லாம் பண்ணித்தான் ஆகணும்னெல்லாம் அவங்களுக்குப் புரியாது. என்னைப் பிடிக்காதவங்க 10 பேர் இருந்தாங்கன்னா, நான் அந்த வீட்டை விட்டு வந்தப்ப 100 பேருக்குப் பிடிக்காமப்போயிருப்பேன். அது அவங்க கருத்து. எனக்குமே சிலரைப் பிடிக்கும், பிடிக்காது. வாய்ப்பு கிடைச்சா, என்னைப் பிடிக்காதவங்களுக்கும் என்னைப் பிடிக்க வைக்க முயற்சி பண்ணுறேன். அப்படி முடியலைன்னா என்னை லவ் பண்ணுற மக்கள்மேல இன்னும் அதிக கவனம் செலுத்துறேன். எமோஷனல் பேலன்ஸை இந்த நிகழ்ச்சி மூலமா கத்துக்கிட்டேன்.

பிரியங்கா தேஷ்பாண்டே
பிரியங்கா தேஷ்பாண்டே

நான் மேலே வர்றதுக்கு நிறைய ஸ்டீரியோடைப்களை உடைக்க வேண்டியிருந்தது. ‘உருட்டுக்கட்டை மாதிரி இருக்கா, இவ என்ன பண்ணிடப்போறா’ன்னு எல்லாம் பேசியிருக்காங்க. நிறைய ஏங்கியிருக்கேன், அசிங்கப்பட்டிருக்கேன்! என்னை இப்படி வளர்த்ததுக்கு என் அப்பாவுக்கு முதலில் நன்றி சொல்லி ஆகணும். அப்பா இறந்த பிறகுதான் நீளமா முடி வளர்க்கவே ஆரம்பிச்சேன். அப்பா இருந்த வரைக்கும் எனக்கும், என் தம்பிக்கும் ஒரே மாதிரிதான் ஹேர்கட் பண்ணி விடுவார். என்னையும் பையன் மாதிரிதான் அப்பா வளர்த்தார். அவர் இறந்தப்ப என் அம்மாவுக்கு 34 வயசு. நானும் என் தம்பியும்தான் அவங்க வாழ்க்கை. இப்ப நான் ஆங்கரா 15வது வருஷத்துக்குள்ள நுழையறேன். இதுவரைக்கும் என் கூட எந்த ஷூட்டுக்கும் அவங்க வந்ததில்லை. என்னை சுதந்திரமா பறக்கவிட்டு ரசிக்கிற போல்டான மனுஷி அவங்க’’ என்றவரிடம் ஸ்டார்ட் மியூசிக் குறித்துக் கேட்டேன்.

‘‘ஸ்டார்ட் மியூசிக் என்னுடைய குழந்தை. ஸ்டார்ட் மியூசிக் முதல் சீசனுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவும் பல மொழிகளில் அந்த நிகழ்ச்சியை ஆரம்பிச்சாங்க. என் மனசுக்கு நெருக்கமான நிகழ்ச்சி இது. பிக்பாஸ் வீட்டுக்குள்ள போகும்போது ‘ஸ்டார்ட் மியூசிக் யார் பண்ணப் போறாங்க’ன்னு பதற்றத்துல இருந்தேன். மாகாபா பண்ணுறான்னு கேள்விப்பட்டதும் பயங்கர ஹேப்பியாகிடுச்சு. என் பெஸ்ட் ஃப்ரெண்ட் மாகாபா. நாம ஊருக்குப் போகும்போது நாம செல்லமா வளர்க்குற நாய்க்குட்டியை எப்படி நம்ம க்ளோஸ் ஃப்ரெண்ட்கிட்ட கொடுத்துப் பார்த்துக்கச் சொல்லிட்டுப் போவோமோ, அப்படித்தான் ஸ்டார்ட் மியூசிக்கை மாகாபாகிட்ட கொடுத்துட்டுப் போனேன். இப்ப சீசன் 4 ஆரம்பிச்சிருக்கோம். குழந்தைங்க நிறைய பேர் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கறாங்க. அவங்க என்ஜாய் பண்ணுற மாதிரி சில விஷயங்கள் புதுசா அறிமுகப்படுத்தியிருக்கோம்’’ என்று தன் டிரேட் மார்க் புன்னகையுடன் சொல்லி முடிக்கிறார் பிரியங்கா.