கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

விகடன் TV: இவர்தான் அந்த பிக்பாஸ்!

 பிக்பாஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
பிக்பாஸ்!

‘`பிக் பாஸின் குரலாக ஒலிப்பது ‘சாஷோ’ என நட்பு வட்டாரத்தில் அறியப்படுகிற சதீஷ் சாரதி சச்சிதானந்தம் என்பவரின் குரல்.

தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் இன்றைய பேசுபொருள் பிக் பாஸ்தான். இரவு 9.30 மணி ஆனால், அந்த வீட்டுக்குள் யார் யார் என்ன செய்கிறார்கள், ஒருவரைப் பற்றி ஒருவர் என்ன புறணி பேசுகிறார்கள் என்பதை அறிய ஊரே டி.வி முன் உட்கார்ந்துவிடுகிறது.

இந்தி, தெலுங்கு, கன்னடம் முதலான மற்ற இந்திய மொழிகளில் பிக் பாஸ் முன்பே ஒளிபரப்பாகத் தொடங்கிவிட்ட நிலையில் தமிழில் இப்போது ஒளிபரப்பாகிவருவது நான்காவது சீசன். பிக் பாஸ் ரசிகர்கள் அத்தனை பேரும் ஷோ தொடர்பாக ஆரம்பத்திலிருந்தே கேட்டு வந்த ஒரு கேள்வி... ‘யாருப்பா அந்த பிக் பாஸ்’ என்பதுதான். `போட்டியாளர்கள் வீட்டுக்குள் ஆங்கிலத்துல பேசாதீங்க’, `ரியோ மைக்கை மாட்டுங்க...’ `அர்ச்சனா, கன்ஃபெஷன் ரூம்க்கு வாங்க...’ என்றெல்லாம் அந்த வீட்டுக்குள் ஆர்டர் போட்டு வருகிற அந்தக் குரல் யாருடையது?

`பிக் பாஸ்’ என அழைக்கப்படும் அந்த நபர் உண்மையிலேயே யார் எனப் பல யூகங்கள். சமூக வலைதளங்களிலும் நெட்டிசன்கள் விஜய் டிவியின் ஆஸ்தான வாய்ஸ் ஆர்ட்டிஸ்டான கோபிநாத் முதல் சீரியல் நடிகர் அமித் பார்கவ் வரை நிறைய பேரைக் குறிப்பிட்டு `இவர்தான் பிக் பாஸ்’ என விவாதித்து வந்தனர்.

விகடன் TV: இவர்தான் அந்த பிக்பாஸ்!

இந்தச் சூழலில்தான், தமிழில் முதல் சீசனிலிருந்து தற்போதைய 4வது சீசன் வரை பிக் பாஸாக வாய்ஸ் தந்து வருபவர் குறித்த விவரங்கள் சில தினங்களுக்கு முன் விகடனுக்கு எக்ஸ்க்ளூசிவாகக் கிடைத்தன. கடந்த 2.12.20 தேதியிட்ட ‘ஆனந்த விகடன்’ இதழில் `பிக் பாஸ் குரல் யாருடையது தெரியுமா’ என அதைச் செய்தியாகவும் வெளியிட்டிருந்தோம்.

‘`பிக் பாஸின் குரலாக ஒலிப்பது ‘சாஷோ’ என நட்பு வட்டாரத்தில் அறியப்படுகிற சதீஷ் சாரதி சச்சிதானந்தம் என்பவரின் குரல். பூர்வீகம் தமிழ்நாடாக இருந்தாலும், பாலிவுட் வரை பணிபுரிந்தவர் அவர்’’ எனவும் குறிப்பிட்டிருந்தோம். அப்போதுகூட அவரது புகைப்படம் கிடைக்கவில்லை.

தற்போது சாஷோவின் புகைப்படமும், அவர் குறித்து மேலும் சில சுவாரஸ்ய தகவல்களும் விகடனுக்கு எக்ஸ்க்ளூசிவாகக் கிடைத்திருக்கின்றன. தமிழ்நாட்டிலிருந்து சென்று பாலிவுட்டில் பிஸியாகப் பணிபுரிந்து வரும் சிலர் நம்மிடம் அவர் பற்றி விவரித்தனர்...

விகடன் TV: இவர்தான் அந்த பிக்பாஸ்!

‘`சாஷோவுக்குப் பூர்வீகம் தமிழ்நாடுதான். ஆனால் தற்போது அவரது குடும்பம் மும்பையில் வசிக்கிறது. அவர் வெறும் வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட் மட்டுமல்ல, பாலிவுட்டில் ஹீரோவும்கூட! அதிலும் தமிழனின் பெருமையை இங்கு உரக்கச் சொன்ன ஒரு படத்திலிருந்துதான் தன் கரியரையே தொடங்கினார்’’ என்ற அவர்கள், ‘மஞ்சுநாத்’ என்ற சாஷோ ஹீரோவாக அறிமுகமான அந்தப் படத்தின் கதையையும் விவரித்தனர்.

‘`பெங்களூரு கோலார் தங்கவயல் பகுதியில இன்னைக்கும் வசித்துவருகிற தமிழ்க் குடும்பம் முனியசாமி சண்முகத்தின் குடும்பம். சண்முகம்- பிரமிளா தம்பதிக்கு மஞ்சுநாத்னு ஒரு மகன் இருந்தார். மைசூர்ல பட்டப்படிப்பு முடிச்சுட்டு, லக்னோ ஐ.ஐ.எம்-ல படிச்சார் மஞ்சுநாத். படிப்பு முடிஞ்சதுமே இந்தியன் ஆயில் நிறுவனத்துல வேலை கிடைச்சு, உத்தரப்பிரதேசத்துலயே போஸ்டிங் போட்டாங்க.

விகடன் TV: இவர்தான் அந்த பிக்பாஸ்!

இந்தியன் ஆயில் பெட்ரோல் பம்புகள் முறையா இயங்குதான்னு கவனிக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு. உ.பி-யின் பல பெட்ரோல் பங்குகள்ல பெட்ரோலுடன் ரேஷன் மண்ணெண்ணெயைக் கலந்து வித்து மக்களை ஏமாத்திட்டு வந்த மோசடியைக் கண்டுபிடிச்சார் மஞ்சுநாத். உடனே நடவடிக்கை எடுத்து அந்த பங்குகளுக்கு சீல் வச்சார். பெட்ரோல் பங்க் உரிமையாளர்களையும் அவங்களோட தொடர்பிலிருந்த ஆயில் மாஃபியாக்களையும் மஞ்சுநாத்தின் இந்த ஆக்‌ஷன் எரிச்சலூட்ட, ஒரு ராத்திரியில அவங்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு 2005-ம் ஆண்டு தன்னுடைய 28வது வயதிலேயே இறந்துபோனார் மஞ்சுநாத்.

இந்தியா முழுக்கவே பரபரப்பா பேசப்பட்டது இந்தக் கொலை வழக்கு. மஞ்சுநாத்துடன் ஐ.ஐ.எம்-ல படிச்ச சில நண்பர்களே இந்த வழக்கை எடுத்து நடத்தினாங்க. கொலையில சம்பந்தப்பட்ட சிலர் இப்ப வரைக்கும் ஜெயில்லதான் இருக்காங்க. இந்த மஞ்சுநாத்தின் கதையைத்தான் 2014-ல் பாலிவுட்டில் ‘மஞ்சுநாத்’ங்கிற பெயரிலேயே படமா எடுத்தாங்க. அதுல புதுமுகமா அறிமுகமானவர்தான் சாஷோ’’ என்றார்கள் அவர்கள்.

சந்தீப் வர்மா இயக்கிய இந்தப் படத்தில் சீமா பிஸ்வாஸ் உள்ளிட்ட இந்தி சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் சிலரும் நடித்திருந்தனர். 2014-ம் ஆண்டு இந்தியில் வெளியான படங்களில் சிறந்த ஒரு படமாக ‘மஞ்சுநாத்’ பேசப்பட்டதுடன், சிறந்த நடிகருக்கான விருதையும் சாஷோவுக்கு வாங்கித் தந்தது.

விகடன் TV: இவர்தான் அந்த பிக்பாஸ்!

தமிழ் பிக் பாஸ் முந்தைய சீசன்களில் பணிபுரிந்த சிலரிடம், பிக் பாஸின் இந்தப் பின்னணி குறித்துக் கேட்டோம். ‘மஞ்சுநாத்’துக்குப் பிறகு 2017-ல் ’பி.ஏ. பாஸ் 2’ என்கிற படத்திலும் `ஏக்நாத்ஜி’ என்கிற டாக்குமென்டரியிலும் நடிச்சிருக்கார் சாஷோ. `ஏக்நாத்ஜி’ கன்னியாகுமரியில் விவேகானந்தா கேந்திரத்தை நிறுவிய ஏக்நாத் ரானடேயின் வாழ்க்கை வரலாறு. அது மட்டுமில்லீங்க, படங்கள், டப்பிங் ரெண்டுக்கும் நடுவே பாடவும் செய்வார் சாஷோ. பல மொழிகள்ல பாடியிருக்கார்’’ என்கிறார்கள் இவர்கள்.

எப்படிப்பட்ட மனுஷனைக் கூட்டி வந்து ஷிவானியும் பாலாவும் லவ் பண்றாங்களான்னு ராப்பகலாக் கண் முழிச்சு வாட்ச் பண்ண உட்கார வச்சிருக்காங்க பாருங்க!