Published:Updated:

நம்பிக்கையில்லாத் தீர்மானம்.. அலுவலகத்துக்கு வரத் தடை!- உச்சக்கட்ட மோதலில் சின்னத்திரை நடிகர் சங்கம்

`நேரடியாக ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்த பொதுக்குழு உறுப்பினர்களால் மட்டுமே தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர முடியும்.'

ravi varma
ravi varma

மலேஷியாவில் நடந்த நட்சத்திரக் கலை நிகழ்ச்சியானது, சின்னத்திரை நடிகர் சங்கத்தில் பிளவை உண்டாக்கியுள்ளது எனக் கூறப்படுகிறது. `கலை நிகழ்ச்சி நடத்தியதற்காக சங்கத் தலைவர் ரவி வர்மாவுக்குத் தனிப்பட்ட முறையில் ரூ.5 லட்சம் கமிஷன் கைமாறியுள்ளது' எனக் கடிதம் ஒன்று வெளியாகி பரபரப்பைக் கிளப்பிய நிலையில், தற்போது ரவி வர்மா மீது செயலாளர் ‘ஆடுகளம்’ நரேன் உள்ளிட்ட மற்ற சங்க நிர்வாகிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். (நரேன் கடந்த தேர்தலில் ரவி வர்மா அணியில் போட்டியிட்டவரே)

Aadukalam Naren
Aadukalam Naren

இது தொடர்பாக சங்க உறுப்பினர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் நரேன் தரப்பிலிருந்து அனுப்பப்பட்டிருக்கும் செய்தியில், ``13/10/19 அன்று சங்க செயற்குழுக் கூட்டம் நடந்தது. அதில் தலைவர் ரவி வர்மா மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதற்கு பெரும்பான்மையான கமிட்டி உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதற்கான சிறப்பு பொதுக்குழு விரைவில் நடைபெறும். தேதியும் இடமும் பின்னர் அறிவிக்கப்படும்'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நரேன் தரப்பின் இந்த அதிரடிக்கு பதிலளித்து உடனடியாக ரவி வர்மாவும் சின்னத்திரை உறுப்பினர்களுக்கு ஒரு கடிதத்தை எழுதியிருக்கிறார். அதில், ‘கலைநிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான ‘டிவைன் மீடியா’ தரப்பிடமிருந்து நான் பெற்றதாகக் கூறப்படும் ஐந்து லட்ச ரூபாய், ‘ஷோ டைரக்டர்’ என்ற முறையில் ஆரம்பத்தில் இந்தக் கலைநிகழ்ச்சி நடத்த முயற்சி எடுத்த ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ சீரியலின் இயக்குநர் ஆர்.தேவேந்திரனுக்குத் தரப்பட்ட தொகை. நிகழ்ச்சி தொடர்பான பணிகளிலிருந்து பிறகு அவர் ஒதுங்கிய சமயத்தில் அந்தத் தொகைக்கு நான் பொறுப்பேற்பதாகக் கையொப்பமிட்டேன். அந்தக் கடிதத்தையே நான் கமிஷன் வாங்கியதற்கான ஆதாரம் என இட்டுக்கட்டி தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளது. அந்தத் தொகை தேவேந்திரன் மூலமே டிவைன் மீடியாவுக்குச் செலுத்தப்பட்டு விட்டது என்பதே உண்மை.

naren
naren

உண்மை இப்படி இருக்க, சங்க நிர்வாகிகள் என் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். சங்க விதிகளின்படி, நேரடியாக ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்த பொதுக்குழு உறுப்பினர்களால் மட்டுமே தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர முடியும். வேறு எவருக்கும் அந்த அதிகாரமில்லை’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

நிதி திரட்டுவதற்கான நிகழ்ச்சி என்றார்கள். சங்கத்தின் ஒற்றுமை காலியானதுதான் மிச்சம்.