Published:Updated:

Khaby Lame… லாக்டெளனால் வேலையை இழந்தவர் டிக் டாக் மூலம் கோடீஸ்வரனான கதை!

Khaby Lame
Khaby Lame

வேலையின்றி ஒருபக்கம் வறுமை பிடுங்க, நாள் முழுக்க சும்மா இருக்கிறோமே என பொழுதுபோகாமல் ஏதேச்சையாக டிக் டாக்கில் வீடியோ பதிவிட தொடங்கியவர் Khaby Lame. இன்று 10 கோடி பேர் பின்தொடரும் பக்கமாக இவரது டிக்டாக் பக்கம் மாறியிருக்கிறது.

ஒரு ஸ்மர்ட்போன் என்னவெல்லாம் செய்யும்? பலருக்கு அது ஒரு பொழுதுபோக்கு சாதனம். பொடிசுகளுக்கும் இளசுகளுக்கும் அது ஒரு கேமிங் சாதனம். ஆனால் சிலருக்கு மட்டுமே அது பணம் காய்க்கும் மரமாக இருக்கிறது. அதற்கு சமீபத்திய உதாரணம் ஜி.பி.முத்து. இவரைப் போலவே இன்று உலகம் முழுதும் ரசிகர்களை சம்பாதித்திருக்கிறார் கபானே ‘கபி’ லேம்(Khaby Lame).

நீங்கள் சோஷியல் மீடியாவை பயன்படுத்துபவராக இருந்தால் நிச்சயம் இவரது முகத்தை ஒருமுறையாவது பார்த்திருப்பீர்கள். இவர் செய்யும் அசட்டையான முக பாவனைகள்தான் மீம்ஸ் மேக்கர்களின் புதிய டெம்ப்ளேட்டாக உருவெடுத்துள்ளது.

21 வயதான Khaby Lame-க்கு சொந்த நாடு செனகல். ஆனால், சிறு வயதிலேயே இத்தாலிக்கு குடிபெயர்ந்துவிட்டார். அங்கு தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்த லேம், கொரோனா பெருந்தொற்று காரணமாக தனது வேலையை இழந்தார். வேலையின்றி ஒருபக்கம் வறுமை பிடுங்க, நாள் முழுக்க சும்மா இருக்கிறோமே என பொழுதுபோகாமல் ஏதேச்சையாக டிக் டாக்கில் வீடியோ பதிவிட தொடங்கினார் லேம். இன்று 10 கோடி பேர் பின்தொடரும் பக்கமாக இவரது டிக்டாக் பக்கம் மாறியிருக்கிறது.

டிக்டாக்கிலேயே இரண்டாவது அதிக ஃபாலோயர்ஸ் கொண்டவர் இவர்தான். முதலிடத்தில் இருப்பவர் அமெரிக்க -ஃபிலிப்பினோ பாடகி பெல்லா போர்ச்.

Khaby Lame
Khaby Lame

கேபி லேம் வீடியோக்களில் அப்படி என்னதான் விசேஷம் என்று பார்த்தால் ஆச்சர்யப்படுவீர்கள். பல வீடியோக்களில் இவர் பேசுவது கூட இல்லை; வெறும் முகபாவனைகள் மட்டுமே. அதற்கே லைக்ஸ் அள்ளுகிறது. சொல்லப்போனால் இவரது வெற்றிக்கு முக்கிய காரணமே இதுதான். இவரது வீடியோவை பார்த்து ரசிக்க மொழி ஒரு தடையல்ல.

கார் கதவிடுக்கில் மாட்டிக் கொள்ளும் சட்டையை எப்படி எடுப்பது என்ற இவரது வீடியோ மிக பிரபலம். கதவில் மாட்டிக் கொண்டிருக்கும் சட்டைப் பகுதியை மட்டும் கத்திரிக்கோலால் வெட்டி எடுத்து விட்டு, இப்படிதான் வெளியே வர வேண்டும் என பலரும் வீடியோ வெளியிட்டார்கள். இதற்கு ஏன் இவ்வுளவு கஷ்டப்பட வேண்டும்! கதவை திறந்தே சட்டையை எடுக்கலாமே என அவரது பிரத்யேக முகபாவனையை காண்பித்து வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த வீடியோ மட்டும் இதுவரை 158 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. அதன்பிறகு அவர் டிக் டாக்கில் பதிவேற்றும் வீடியோக்கள் அனைத்தும் லட்சக்கணக்கான பார்வையாளர்களை எட்டியது.

இன்னொரு வீடியோ பீஸாவை வெட்டுவது. நம் கையை வைத்தே எளிதாக வெட்டலாமே, இதற்கு ஏன் இவ்வுளவு சிரமம் என தோள்பட்டையை தூக்கி லேம் கொடுக்கும் முகபாவனையின் போது நமக்குள் ஏற்படும் மெல்லிய சிரிப்பில்தான் அவரது வெற்றி அடங்கியிருக்கிறது. இன்று எதற்கெடுத்தாலும் இவரின் முகபாவனைதான் மீம்ஸாக இணையத்தில் உலாவி வருகிறது.

இவரது பெரும்பாலான வீடியோக்கள் மற்ற பதிவர்களின் வீடியோக்களில் வெளிப்படும் அசட்டுத்தனத்தை நாசூக்காக ஏளனம் செய்வதே. சாதாரணமாக கார் கதவை திறக்கும் போது கூட அதிர்ச்சியடைவது போல் கத்துவது, நம் வாழ்க்கையில் தினசரி நிகழும் சிறு சிறு சம்பவங்களை ரசிக்கும்படி நகைச்சுவை ஆக்குவது போன்றவையே லேம் வீடியோவுக்கான ஆதார மையம்.

Khaby Lame
Khaby Lame

டிக் டாக் பிரபலம் ஆனதும் இவரைத் தேடி பல வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன. உலகின் முன்னணி நிறுவனங்கள் இவரைவைத்து விளம்பரங்கள் எடுக்கின்றன. இதன் மூலம் லேமுக்கு வருமானம் கொட்டுகிறது. தற்போது இவரது சொத்து மதிப்பு இந்திய ரூபாயில் 20 கோடி எனக் கணக்கிடப்பட்டிருக்கிறது. பணம் வந்தாலும் தான் இன்னும் வாழ்க்கையில் ‘செட்டில்’ ஆகவில்லை என குறைபட்டுக் கொள்கிறார். இத்தனை ஆண்டுகாலம் இத்தாலியில் வசித்து வந்தாலும் அவரிடம் இத்தாலி பாஸ்போர்ட் இல்லை. செனகல் நாட்டு பாஸ்போர்ட் மட்டுமே இருக்கிறது. இதனால் அவரால் அமெரிக்காவுக்கு சென்றும் வேலை பார்க்க முடியாது. தன்னுடைய அம்மாவுக்கு ஒரு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்பதே அவரது ஒரே நோக்கமாக தற்போது உள்ளது.

கால்பந்து ரசிகரான லேமுக்கு பிடித்த அணி யுவென்ட்டஸ். ஸ்மார்ட் போன் பெருக்கமும் சமூக ஊடகத்தின் வரவும் பலரை இன்ஸ்டன்ட் பிரபலமாக மாற்றியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு