Published:Updated:

`பாண்டியன் ஸ்டோர்ஸ்' முல்லை கேரக்டரில் அடுத்து யார்? - வதந்தியும் விளக்கமும்

நடிகை சித்ரா
நடிகை சித்ரா

சித்ராவுடன் தான் எடுத்துக்கொண்ட வீடியோக்களைத் தொடர்ந்து சமூகவலைதளங்களில் பதிவேற்றி வந்தார் சரண்யா.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குடும்ப கதைக்களம் என்பதால் மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றது. இந்தத் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த வி.ஜே சித்ரா, கடந்த வாரம் தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் இனி முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது யார் என்ற கேள்வி மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியது.

`பாண்டியன் ஸ்டோர்ஸ்’  சித்ரா
`பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சித்ரா

சித்ரா தற்கொலைக்கு முன்பாக நடித்த எபிசோடுகள் இன்னும் சில நாள்களுக்கு ஒளிபரப்பாகும் என்ற சூழலில் சித்ராவுக்கு மாற்றாக முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க, வேறு நடிகையைத் தேர்வு செய்ய வேண்டிய நெருக்கடி தயாரிப்புக் குழுவுக்கு இருந்து வருகிறது.

'டான்ஸ் ஜோடி டான்ஸ்' புகழ் ஆனந்தி முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக ஆனந்தியைத் தொடர்பு கொண்டு பேசினோம். ''அப்படிச் சில செய்திகள் சமூக வலைதளங்கள்ல வேகமா பரவிட்டிருக்கு. ஆனா, இப்போ வரை நான் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கல. அப்படி ஏதும் அப்டேட் இருந்தா நானே கண்டிப்பா சொல்றேன்" என்று கூறினார்.

நடிகை ஆனந்தி - அஜய்
நடிகை ஆனந்தி - அஜய்

இதைத் தொடர்ந்து 'நெஞ்சம் மறப்பதில்லை' தொடரில் நடித்த சரண்யாவும் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக சமூகவலைதளங்களில் செய்திகள் வெளியாகின. சரண்யா, சித்ராவுக்கு நெருக்கமான தோழி. சித்ரா தற்கொலை செய்து கொள்வதற்கு முன் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சரண்யாவுடன் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்களையே கடைசியாகப் பகிர்ந்திருந்தார். சித்ராவின் மரணத்துக்குப் பின்பும் கூட சித்ராவுடன் தான் எடுத்துக்கொண்ட வீடியோக்களை தொடர்ந்து சமூகவலைதளங்களில் பதிவேற்றி வந்தார் சரண்யா.

கடந்த வாரம் சரண்யா வெளியிட்டிருந்த பதிவு ஒன்றில், "நான் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக வதந்திகள் பரவி வருகின்றன. சித்ரா தன்னுடைய நடிப்புத் திறமையால் முல்லை கதாபாத்திரத்துக்கு முழு உருவம் கொடுத்துள்ளார். முல்லை கதாபாத்திரத்தில் சித்ராவின் இடத்தை யாராலும் முழுமையாக நிரப்ப முடியாது" எனப் பதிவிட்டிருந்தார் என்பதால் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் தொடர்ந்து வருகிறது.

சரண்யா
சரண்யா

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் ஹேமாவிடம் இது குறித்துப் பேசினோம், "எந்தத் தகவலும் உறுதியாகலை. ரொம்ப நாள் கழிச்சு நான் இப்போதான் சீரியலில் நடிக்க வந்திருக்கிறதால எனக்கு முழுமையான தகவல் எதுவும் தெரியல. எங்களால் இன்னும் சித்ராவின் இழப்பில் இருந்தே மீள முடியல. இன்னும் சில நாள்கள்ல சீரியல் தொடர்பான எல்லா அப்டேட்களும் தெரிய வரும்" என்று பதிலளித்தார்.

அடுத்த கட்டுரைக்கு