Published:Updated:

"முதல் சீஸனில் காதல் கல்யாணமே நடந்தது... ஆனால், இரண்டாவது சீஸன்?!" - மலையாள 'பிக்பாஸ்' அப்டேட்ஸ்!

BiggBoss Malayalam
BiggBoss Malayalam

`பிக்பாஸ்' மலையாளத்தில் இரண்டாவது சீஸன் இன்னும் தொடங்காதது குறித்து `பிக்பாஸ்' தயாரிப்பாளர்களின் விளக்கம்.

இந்தியில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தென்னிந்தியா பக்கம் வந்த `பிக் பாஸ்' நிகழ்ச்சிக்குத் தமிழில் இது மூன்றாவது சீஸன். தெலுங்கிலும் தற்போது ஒளிபரப்பாவது மூன்றாவது சீஸனே! கன்னடத்தில் ஆறு சீஸன்கள் முடிவடைந்து, ஏழாவது சீஸன் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கிறது.

ஆனால், மலையாளத்தில்?! கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் சீஸன் தொடங்கியது. இரண்டாவது சீஸன் இந்த ஜூனில் தொடங்குமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னும் ஆரம்பிக்கவில்லை.

BiggBoss Malayalam First Season
BiggBoss Malayalam First Season

இந்த நிலையில், "மலையாளத்தைப் பொறுத்தவரை `பிக்பாஸ்' நிகழ்ச்சி அவ்ளோதான்; அடுத்தடுத்த சீஸனுக்கெல்லாம் வாய்ப்பில்லை. எங்க ஊர்ல இந்த மாதிரி ஷோலாம் எடுபடாது" எனக் கேரள தேசத்தில் குரல்கள் கேட்பதாகக் கேள்விப்படவே, விசாரித்தேன்.

"பொதுவாகவே சினிமா நடிகர், நடிகைகளைக் கொண்டாடாத ஊரில்லையா இது. அதனால, மக்கள் ரொம்ப ஆர்வம் காட்டி பார்க்கலைனு நினைக்கிறேன். தவிர, இன்னும் கொஞ்சம்பேருக்கு இந்த நிகழ்ச்சியின் ஃபார்மேட்... அதாவது, நிகழ்ச்சியே பிடிக்கல. இந்த குரூப் மக்கள்தான் எதிர்ப்பு தெரிவிச்சது. அறிமுகமில்லாத ஆணும், பெண்ணும் ஒரே வீட்டுக்குள்ளே கம்யூனிகேஷன் எதுவும் இல்லாம இருக்கிற சூழல்ல, அங்கே நடக்கிறதையெல்லாம் ஊரு உலகமே பார்க்கிறதுங்கிறதை ஒரு நெகட்டிவ் விஷயமாகவே நினைக்கிறாங்க, மக்கள். அதனால, முதல் சீஸனுக்கு எதிர்ப்பு வந்தது நிஜம்தான்.

அதேநேரம், அந்த 100 நாள்ல லவ் பண்ணின ஶ்ரீநிஷ்-பியர்லி ஜோடி சில மாசங்களுக்கு முன்னாடிதான் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. அந்தக் காதல் உண்மையானதா இருந்ததாலதான் கல்யாணம் வரைக்கும் வந்திருக்கு. அதனால, இந்த நிகழ்ச்சி `ஸ்கிரிப்டட்'னு சொல்லப்படுறதை நான் ஏத்துக்கமாட்டேன். மத்தபடி, எனக்கு இந்த நிகழ்ச்சி நல்லதொரு அனுபவமாவே இருந்தது'' என்கிறார், மலையாள `பிக்பாஸி'ல் கடந்தாண்டு 91-வது நாளில் வெளியேறிய அர்ச்சனா.

இரண்டாவது சீஸன் ஒளிபரப்பாக வாய்ப்புள்ளதா என்கிற கேள்விக்கு அவரது பதில், `தெரியாது!' என்பதே.

Rajani
Rajani

"எதிர்ப்பு இருக்கும்னு நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களுக்கு நல்லாவே தெரியும். அதனாலதான், கேரள மக்களுக்கு ரொம்பவே பிடிச்ச லாலேட்டனை (மோகன் லால்) ஆங்கரா கொண்டு வந்தாங்க. ஆனாலும்கூட வணிகரீதியா இந்த நிகழ்ச்சி வெற்றிபெற்ற மாதிரி தெரியல. ஹிட் ஆகியிருந்தா, எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாம ரெண்டாவது சீஸனைத் தொடங்கியிருப்பாங்களே!'' என்கிறார், மலையாள ரியாலிட்டி ஷோ ஒன்றில் பணிபுரியும் சீனியர் டெக்னீஷியன் ஒருவர்.

கேரள தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி ஷோ நடுவர், ஆங்கர் எனப் பல முகங்கள் காட்டி வரும் நடிகை `முதல் மரியாதை' ரஞ்சனியிடம் பேசியபோது, "நான்கூட அந்த நிகழ்ச்சியைப் பார்க்கல. ஆனா, எங்க வீட்டுல என் மாமியார் ஆரம்பத்துல இருந்து பார்த்தாங்க. ஒருகட்டத்துல, `அங்கே எல்லோரும் ரியலாவே அப்படித்தான் இருக்காங்களா அல்லது அவங்க நடிக்கிறாங்களா'ன்னு கேட்கத் தொடங்கிட்டாங்க. என்னோட கருத்து என்னன்னா, சீரியல், சினிமா மாதிரிதான்... மத்த எந்த மாநிலத்திலும் அவ்வளவு பரபரப்பை உண்டாக்கிய நிகழ்ச்சியா இது இருந்தாலும், கேரளாவுல `ஜஸ்ட் லைக் தட்'னு மக்கள் கடந்துபோயிடுவாங்க. இது மலையாள மக்களோட இயல்பு.'' என்றார்.

"எதிர்ப்பு, வரவேற்பில்லாதது அதன் தொடர்ச்சியாக கமர்ஷியலாக லாபம் கிடைக்காதது போன்ற காரணங்களாலேயே மலையாளத்தில் `பிக்பாஸ்' இரண்டாவது சீஸன் தொடங்கவில்லையா?'' என பிக்பாஸ் தயாரிப்பாளர்களான `எண்டமால்' தரப்பிலேயே கேட்டோம்.

Endemolshine India
Endemolshine India

"நிகழ்ச்சியின் பட்ஜெட், பிசினஸ்னு எல்லாத்தையும் டீட்டெயிலா பேசமுடியாது. அதேநேரம், மலையாளத்தில் `பிக்பாஸ் சீஸன் 2' சீக்கிரத்திலேயே தொடங்கும்னு உறுதியா சொல்லமுடியும். அநேகமா, ஜனவரி மாதத்தில் தொடங்கும். ஒளிபரப்பாகிற சேனல்ல ஜனவரி முதல் டிசம்பர் வரையான காலத்தையே நிதியாண்டா கணக்கிடுறாங்க. அதனாலதான் இந்தத் தாமதம்'' என்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு