Published:Updated:

`குக்கு வித் கோமாளி'யை `மாஸ்டர் செஃப்' நிகழ்ச்சியுடன் ஒப்பிடவே கூடாது... ஏன் தெரியுமா?!

Master Chef Tamil

போட்டி ஆரம்பித்து முதல் சுற்றுதான் நடந்து முடிந்துள்ளது. என்றாலும் போட்டியாளர்கள் அலட்சியமாகவும் அதீதமான தன்னம்பிக்கையுடனும் இருப்பதாக நீதிபதிகள் கருதினார்கள்.

Published:Updated:

`குக்கு வித் கோமாளி'யை `மாஸ்டர் செஃப்' நிகழ்ச்சியுடன் ஒப்பிடவே கூடாது... ஏன் தெரியுமா?!

போட்டி ஆரம்பித்து முதல் சுற்றுதான் நடந்து முடிந்துள்ளது. என்றாலும் போட்டியாளர்கள் அலட்சியமாகவும் அதீதமான தன்னம்பிக்கையுடனும் இருப்பதாக நீதிபதிகள் கருதினார்கள்.

Master Chef Tamil

ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிந்து விட்டது. மாஸ்டர் செஃப் தமிழ் நிகழ்ச்சியை 'குக்கு வித் கோமாளி'யுடன் ஒப்பிட முடியாது; ஒப்பிடவும் கூடாது. பின்னது ஜாலியாக நடக்கும் டுட்டோரியல் காலேஜ் என்றால் முன்னது ஸ்டிரிக்ட்டாக நடக்கும் பிஹெச்டி வகுப்பு. CWC-ல் நகைச்சுவை மிகையாக கலந்திருக்கலாம். ஆனால் MCT-ல் அறுசுவை என்கிற வலுக்கட்டாய பத்திய உணவு மட்டுமே.

மாஸ்டர் செஃப் தமிழ் என்பது இன்டர்நேஷனல் வடிவமைப்புக்கு கட்டுப்பட்டது. அதன் ஆதார விதிமுறை இலக்கணங்கள் ஏற்கெனவே தெள்ளத் தெளிவாக எழுதப்பட்டுவிட்டன. எனவே அதில் ஜாலியான கோணங்கித்தனங்களை எதிர்பார்க்க முடியாது. ஒரு நிகழ்ச்சியின் ஆதார மையம் என்னவோ அந்த அச்சிலிருந்து இம்மியும் பிசகாமல் நடக்க வேண்டுமென்கிற கட்டுப்பாட்டையும் கண்ணியத்தையும் இறுக்கமாகப் பின்பற்றுகிறது மாஸ்டர் செஃப்.

மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியின் ஆதார அச்சு இதுதான். சமையல்... சமையல்... சமையல் மட்டுமே!

'சமையல் மேடை என்பது ஜாலியான விளையாட்டு மேடை அல்ல. அது சீரியஸான சமாச்சாரம்' என்கிற தகவலை ஒவ்வொரு கட்டத்திலும் அழுத்தம் திருத்தமாக தெரிவிக்கிறது மாஸ்டர் செஃப். எனவே இதில் ஜனரஞ்சகமான அம்சங்களை அதிகம் எதிர்பார்க்க முடியாது. சமையல் ஆர்வத்தை மிகத் தீவிரமாக கற்றுக் கொள்ள விரும்புவர்களுக்கு இந்த நிகழ்ச்சி இலவசமாக கிடைக்கும் உயர்தர பாடம் எனலாம்.

செஃப் ஹரீஷ் ராவ் எப்போதுமே கூலான மனநிலையைக் கடைப்பிடிப்பவர். போட்டியாளர்களை அதிகம் மிரட்டாமல் ஜாலியாகக் கையாளக் கூடியவர். ஆனால், அவரே இந்த நான்காம் எபிசோடில் சற்று டென்ஷன் ஆகி "உங்களையெல்லாம் இன்டர்நேஷனல் அளவுக்கான சமையல் கலைஞராக மாற்றலாம் என்பதுதான் எங்கள் நோக்கம். ஆனால் நீங்கள் உங்கள் அலட்சியப் போக்கினால் எங்களை ஏமாற்றி விட்டீர்கள்" என்று வெடிக்கும் அளவுக்கு இந்த எபிசோடில் அனல் பறந்தது.

Master Chef Tamil
Master Chef Tamil
Sun Tv

ஹரீஷ் ராவ் கோபப்பட்டது மட்டுமல்லாமல் ஒரு போட்டியாளர் எலிமினேட் ஆன சம்பவமும் நடந்தது. அப்படி நிகழ்ச்சியில் என்னதான் ஆச்சு? வாங்க பார்க்கலாம்!

"விஜய்... இந்த முறை டாஸ்க்கை நீங்களே கொடுங்க" என்று செஃப் ஆர்த்தி சொன்னவுடன் "இருங்க... என் டீம் கூட டிஸ்கஸ் பண்ணிட்டு வர்றேன்" என்று கிளம்பினார் விஜய் சேதுபதி. இதற்காக பதினாறு பேர் கொண்ட குழுவெல்லாம் இல்லை. அவர் 'டீம்' என்று குறிப்பிட்டது, அவருடைய மேக்கப்மேன் உள்ளிட்டவர்களைத்தான். விசே எப்பவுமே இயல்பான மனிதர்.

ஒருவழியாக விசே ஐடியாவைப் பிடித்துக் கொண்டு அரங்கத்தில் நுழைவதுடன் நிகழ்ச்சி ஆரம்பித்தது. இரண்டு பேர் ஏற்கெனவே தகுதி பெற்று பால்கனிக்கு சென்று விட மீதமுள்ள பனிரெண்டு நபர்களில் ஒன்பது நபர்கள் மட்டுமே இந்தச் சுற்றில் தேர்வு செய்யப்படுவார்கள். மீதம் உள்ள மூன்று நபர்களுக்கு கறுப்பு ஏப்ரன் தரப்பட்டு அவர்களுக்குள் நிகழும் போட்டியில் பின்தங்குபவரை எலிமினேட் செய்வார்கள். இதுதான் நான்காவது எபிசோட் போட்டியின் விதிமுறை.

master chef tamil
master chef tamil
Sun tv

போட்டியாளர்களுக்கு தரப்பட்ட சவால் 'ஜாங்கிரி' சுற்றுவது. ஒருவன் சுற்றி வளைத்து எதையாவது எழுதினால் "என்னப்பா ஜாங்கிரி சுத்தறான்' என்று சொல்வார்கள். (நோ நோ... என்னையெல்லாம் அப்படி நினைக்கக் கூடாது!). ஆனால் உண்மையிலேயே ஜாங்கிரி சுற்றுவது அத்தனை எளிதான விஷயமல்ல. முதன்முறையில் அதை நிச்சயம் செய்து விட முடியாது. இதற்கான முன்அனுபவம் சிறிதாவது வேண்டும்.

இதற்கான மினி டெமோவை செஃப் ஆர்த்தி செய்து காட்டினார். தமிழில் மூணு சுழி, ரெண்டு சுழி எழுத்து மாதிரி ஜாங்கிரி சுற்றுவதிலும் இப்படி சுழி கணக்கு உண்டாம். முதலில் பெரிய வட்டமாக மூன்று முறை வலம் வந்து விட்டு பிறகு அந்த வட்டத்துக்குள் சிறிது சிறிதாக பதினைந்து சுழி இட வேண்டும் என்பது கணக்காம். இதை ஆர்த்தி நிகழ்த்திக் காட்டினார்.

"மேடம்... நானும் சுட்டுப் பார்க்கட்டுமா?" என்று சிறுகுழந்தையாய் விசே கேட்க ‘செய்ங்க’ என்று பர்மிஷன் கொடுத்தார் செஃப். அவரை குரு நமஸ்காரம் செய்து விட்டு விஜய் சேதுபதி சுற்றிய ஜாங்கிரி ஏறத்தாழ சரியாக வந்தவுடன், கீரிக்கும் பாம்புக்கும் சண்டை நடப்பதை வேடிக்கை பார்ப்பது போல் போட்டியாளர்கள் கை தட்டி மகிழ்ந்தார்கள்.

Master chef tamil
Master chef tamil

இப்போது போட்டியாளர்களுக்கு தரப்பட்ட சவால் என்னவெனில், செஃப் ஆர்த்தி செய்து காட்டிய ஜாங்கிரியின் அதே கச்சிதமான வட்டத்தில், தடிமனில் இரண்டு ஜாங்கிரிகளை சுட வேண்டும். இதற்கான நேரக் கட்டுப்பாடு எதுவும் கிடையாது. யார் முதலில் இரண்டு கச்சித ஜாங்கிரியைச் சுட்டு ஆர்த்தியின் ஒப்புதலைப் பெறுகிறார்களோ, அவர்கள் இந்தச் சுற்றில் தேர்வாகி பால்கனிக்குச் செல்வார்கள்.

குறிப்பிட்ட நேரம் என்று இருந்தாலாவது பரவாயில்லை, முதலில் சுடுபவருக்கு வெற்றி என்பதால் ஒவ்வொரு போட்டியாளரிடமும் 'தாமே முந்த வேண்டும்' என்கிற பரபரப்பு ஏற்பட்டது. மணிகண்டன் போன்ற போட்டியாளர்கள் இதற்கு முன் ஜாங்கிரி சுற்றியதேயில்லையாம். ஜிலேபி செய்திருக்கிறார்களாம். (இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?!).

எனவே முதன் முறையாக ஜாங்கிரி சுற்ற முயற்சி செய்தவர்கள் தடுமாறிக் கொண்டிருக்க நேரம் கடந்து கொண்டேயிருந்தது. சிலர் ஏதோ மெரீனா பீச்சில் வியாபாரம் செய்யப் போகிறவர்கள் போல ஜாங்கிரியைச் சுற்றி தட்டில் அடுக்கிக் கொண்டேயிருக்க ஒன்று கூட ஆர்த்தி எதிர்பார்த்த ஷேப்பில் வரவில்லை.

பரபரப்பாக நிகழ்ந்த இந்தச் சோதனையில் முதன் முதலில் வெற்றி பெற்றவர் நித்யா. ஜாங்கிரி சுட்டே பழக்கப்பட்டிராத மணிகண்டன் இரண்டாவதாக தேர்வு பெற்று ஆச்சரிய மூட்டினார். ஒவ்வொரு மேஜையின் அருகேயும் வந்த செஃப் ஆர்த்தி 'இது ஓகே.. இது ரிஜக்ட்டட். வேற செய்ங்க' என்று போட்டியாளர்களின் டென்ஷனை ஏற்றிக் கொண்டிருந்தார்.

'கும்மாயம்', 'மாப்பிள்ளை விருந்து' போன்ற தமிழ் பாரம்பரிய உணவுகளை அசால்ட்டாக செய்து அசத்திய சசியம்மாள், ஜாங்கிரி போட்டியை அநாயசமாக ஹேண்டில் செய்வார் என்று எதிர்பார்த்தால் மிகவும் தடுமாறிக் கொண்டிருந்தார். '’உங்களால் முடியும். செய்ங்க’' என்று அவரை உற்சாகப்படுத்தினார் ஆர்த்தி.

ஷஷி ஆனந்த்
ஷஷி ஆனந்த்

ஒவ்வொருவராக ஜாங்கிரி டெஸ்ட்டில் பாஸாகி பால்கனி ஏறிக் கொண்டிருக்க, மீதமுள்ளவர்களுக்கு ஜாங்கிரி சரியாகச் சுற்றியதோ, இல்லையோ... தலை மட்டும் நன்றாகச் சுற்றியது. ஒன்பதாவது நபராக தாரா தேர்வாகி விட மீதமுள்ள மூன்று நபர்களான சுமித்ரா, ஷஷி ஆனந்த் மற்றும் ஷாஜியா ஆகியோர்களுக்கு கறுப்பு ஏப்ரன் அணிவிக்கப்பட்டது. கறுப்பு ஏப்ரன் என்பது எச்சரிக்கை மணி.

கறுப்பு ஏப்ரன் பெற்று அபாயக்கட்டத்தில் உள்ள மூன்று போட்டியாளர்களுக்கும் இடையே ஒரு போட்டியை கெளஷிக் அறிவித்தார். விசேவிடமிருந்து ஒட்டிக் கொண்ட பழக்கமோ.. என்னமோ.. 'இதோ வந்துடறேன்' என்று கெளஷிக்கும் ஐந்து நிமிடங்களுக்கு காணாமல் போனார். "அவர் எங்களுக்கெல்லாம் சீனியர். அவர் எது செஞ்சாலும் அதில் ஒரு காரணம் இருக்கும். எங்களுக்கே சஸ்பென்ஸாத்தான் இருக்கு" என்று கெளஷிக் சென்றதற்கு பில்டப் தந்து கொண்டிருந்தார் ஹரீஷ் ராவ்.

சில நிமிடங்களில், செஃப்பிற்கான வெள்ளை கோட் அணிந்து கம்பீரமாகத் திரும்பிய கெளஷிக்கைப் பார்த்தவுடன் அனைவரும் தன்னிச்சையாக கைதட்டினர். "சார், இந்த கோட் உங்களுக்கு அம்சமா இருக்கு... அழகா இருக்கு... அட்டகாசமா இருக்கு... சிறப்பா இருக்கு' என்று அடுக்கு மொழி பாராட்டில் கெளஷிக்கை நனைத்தார் விஜய் சேதுபதி. அப்போதாவது கெளஷிக் வாயிலிருந்து ஒரு புன்னகையை பிடுங்கி விட முடியுமா என்பது விசேவின் எதிர்பார்ப்பாக இருந்திருக்கும். ம்ஹூம்... சரியாக அரை சென்டிமீட்டர் புன்னகையை மட்டுமே தந்தார் செஃப் கெளஷிக்.

Master chef Tamil
Master chef Tamil
Sun tv

எலிமினேஷனின் எல்லையில் நின்று கொண்டிருந்த மூன்று போட்டியாளர்களுக்கும் கெளஷிக் தந்தது 'Pressure Test'. கெளஷிக்கின் signature dish-ஆன கொழுக்கட்டையை அவர்கள் செய்ய வேண்டும்.

'ப்பூ கொழுக்கட்டையா..." என்று போட்டியாளர்கள் சுளுவாக எண்ணி விட முடியாது. அதில் கெளஷிக் கொண்டு வந்திருப்பது போல் அறுசுவையும் இருக்க வேண்டுமாம். மட்டுமல்லாது அவர் செய்திருக்கும் அதே வடிவம், அலங்காரம், சுவை போன்றவையெல்லாம் கச்சிதமாக வர வேண்டுமாம். இதற்காக அறுபது நிமிடங்கள் வழங்கப்பட்டது.

கொழுக்கட்டையைக் கூட ஒரு மாதிரி செய்து விடலாம். ஆனால் செஃப் கெளஷிக் செய்து வைத்திருக்கும் அதே தரத்தை, வடிவத்தை, சுவையைக் கொண்டு வருவது மிகச் சிரமம் என்பது போட்டியாளர்களுக்கு தெரிந்து விட்டது. என்றாலும் மனதை திடப்படுத்திக் கொண்டு கோதாவில் குதித்தார்கள்.

இவர்கள் தடுமாறுவதைப் பார்த்துக் கொண்டிருந்த கெளஷிக் "சமையல் குறிப்பு பற்றிய விளக்கம் உங்களுக்கு பேப்பரில் தரப்பட்டிருக்கிறது. அதை முதலில் நன்றாக வாசித்துக் கொள்ளுங்கள். பிறகு சமையலை ஆரம்பியுங்கள். தரப்பட்டிருக்கும் நேரத்தில் உங்களால் இதை நிச்சயம் செய்ய முடியும்" என்பதை சூசகமாக மறுபடியும் மறுபடியும் சொல்லிக் கொண்டேயிருந்தார்.

ஆனால், பதற்றத்தில் இருக்கும் போட்டியாளர்களால் அவரின் அறிவுரையை சரியாக பின்பற்றமுடியவில்லை. ஷாஜியா என்கிற போட்டியாளர் கண் கலங்கி "டென்ஷன்ல எனக்கு கண்ணே தெரியமாட்டேங்குது" என்று ஏறத்தாழ அழும் நிலைக்குச் செல்ல அவரிடம் தன் மூக்குக் கண்ணாடியை குறும்பாக நீட்டினார் கெளஷிக். (அடடே! உங்களுக்கு காமெடி கூட வருமா செஃப்?!).

ஷாஜியா
ஷாஜியா

ஷாஜியாவை விடவும் தடுமாறிக் கொண்டிருந்த ஷஷி ஆனந்திடம் சென்ற கெளஷிக் "நீங்க செய்யறதுல பெரிய தப்பு இருக்கு. இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போயிடல. மறுபடியும் ஆரம்பிக்கலாம். நேரம் இருக்கு" என்று மறுபடியும் ஒரு சூசகமான குறிப்பை வீசினார். இந்த ஆறுதலை மற்ற செஃப்கள் சொல்லியிருந்தால் கூட போட்டியாளர்களுக்கு ஆறுதலாக இருந்திருக்கும். ஆனால் கெளஷிக் சொல்வதாலேயே ஆறுதல் கூட எச்சரிக்கை மாதிரியே தெரிந்ததோ என்னமோ.

'அவசரத்துல அண்டால கூட கை விட முடியாது' என்கிற பழமொழி உண்மையாயிற்று. கெளஷிக் சொன்ன சூசசமான குறிப்பை போட்டியாளர்கள் சற்று நிதானத்துடன் கவனித்து கடைபிடித்திருக்கலாம். ஆனால் என்ன செய்வது? டென்ஷன்... டென்ஷன்... டென்ஷன்... கடிகாரம் அவர்களை துரத்திக் கொண்டேயிருந்தது.

Master chef tamil
Master chef tamil

இறுதியில் மூன்று போட்டியாளர்களும் கெளஷிக்கின் signature dish-ஐ ஒரு மாதிரியாக செய்து முடித்தார்கள். ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்த செஃப்கள், '’வெச்சிட்டு போங்க.. நாங்க முடிவு சொல்லி அனுப்பறோம்" என்று அனுப்ப "பிள்ளையாரப்பா. எப்படியாவது என்னை பாஸாக்கி விட்டுடு... உனக்கு கொழுக்கட்டை படையல் போடுறேன்' என்பது போன்ற முகபாவத்தோடு ஒவ்வொருவரும் பீதி நிறைந்த முகத்துடன் வெளியே வந்தார்கள்.

இதில் சுமித்ரா மற்றும் ஷாஜியா செய்திருந்த கொழுக்கட்டை, ஓரளவிற்காவது கெளஷிக் தயார் செய்திருந்த மாடலோடு ஒத்துப் போனது. தோற்றம் மற்றும் சுவை ஓரளவுக்கு ஓகே. ஆனால் ஷஷி ஆனந்த் செய்திருந்த கொழுக்கட்டை, அலங்காரத்திலும் சரி, சுவையிலும் சரி, ரொம்பவே பின்தங்கியிருந்தது. செஃப் ஆர்த்தி இது குறித்த மிகவும் அதிருப்தியான கமென்ட்டைத் தெரிவிக்க அதை ஒப்புக் கொண்டார் கெளஷிக்.

இதில் உள்ள ஒரு முக்கியமான விஷயம் என்னவெனில், தன்னால் செய்ய முடியுமோ, இல்லையோ என்று அழுது புரண்ட ஷாஜியா, ஓரளவுக்கு நன்றாகவே செய்து விட்டார். அவர் கண்கலங்கி அரைமணி நேரத்தை வீணாக்கியிருந்தாலும் மீதமுள்ள அரைமணி நேரத்தில் எப்படியோ ஒப்பேற்றி விட்டார். இதையே அவர் மனம் தளராமல் முழு நேரத்தையும் பயன்படுத்தியிருந்தால் அது சிறந்த உணவாக அமைந்திருக்கும். இதுதான் கெளஷிக் தெரிவித்த அபிப்ராயம்.

இதில் நமக்கான பாடமும் உள்ளது. 'சமையல் அறையிலிருந்து புகை வரலாமே தவிர, டென்ஷனில் நம் காதில் இருந்து புகை வரவே கூடாது'.

ஆக... ஷஷி ஆனந்த் போட்டியிலிருந்து வெளியேறுவது ஏறத்தாழ முடிவாகி விட்டது. இந்த கடினமான முடிவை விஜய் சேதுபதியும் நீதிபதிகளும் இணைந்து தெரிவிக்க, துயரத்தின் சாயல் இருந்தாலும் வலுக்கட்டாயமான புன்னகையுடன் நின்று கொண்டிருந்தார் ஆனந்த். "உங்க ஸ்மைல் எனக்குப் பிடிச்சிருக்கு. எப்பவும் சிரிச்ச முகமா இருக்கீங்க" என்று நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே ஆனந்த்தை பாராட்டியிருந்தார் விசே.

ஷஷி ஆனந்த்தின் வெளியேற்றம் இதர போட்டியாளர்களையும் கலங்கச் செய்தது. நவ்ஸூனும் ஷாஜியாவும் வாய்விட்டே கதறி விட்டார்கள். "ஏன் அழறீங்க?" என்று செஃப் ஆர்த்தி கேட்ட போது "அவர் எனக்கு நெறய உதவி செஞ்சாரு. அவரு போறது மனசுக்கு கஷ்டமா இருக்கு" என்று ஷாஜியா கலங்க, அதைக் கண்டு ஷஷி ஆனந்த்தும் ஃபீலாகி விட்டார்.

இவர்கள் இணைந்து செயல்பட்டு சில நாட்களே ஆகத் தொடங்கியிருந்தாலும் அதற்குள் இறுக்கமான நண்பர்களாக மாறி இருப்பதைக் காண நமக்கு நெகிழ்வாக இருந்தது.

Master chef tamil
Master chef tamil

"எலிமினேஷன் என்பது போட்டியின் ஒரு அங்கம். எனவே இவற்றைத் தவிர்க்க முடியாது" என்று நீதிபதிகள் சொன்னது நிதர்சனமானது. "நான் உங்க கிட்ட வந்து விசாரிச்சேன். அப்ப என் கிட்ட ஹெல்ப் கேட்டிருந்தா பண்ணியிருப்பேனே... நீங்க ஏன் அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கல?" என்று ஷஷி ஆனந்திடம் கெளஷிக் கேட்டதில் நமக்கும் ஒரு பாடம் உள்ளது.

போட்டி ஆரம்பித்து முதல் சுற்றுதான் நடந்து முடிந்துள்ளது. என்றாலும் போட்டியாளர்கள் அலட்சியமாகவும் அதீதமான தன்னம்பிக்கையுடனும் இருப்பதாக நீதிபதிகள் கருதினார்கள். இந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தையும் தீவிரத்தையும் போட்டியாளர்கள் உணர்ந்திருக்கிறார்களா, இல்லையா... என்கிற தங்களின் சந்தேகத்தை கடுமையாக வெளிப்படுத்தினார்கள்.

நீதிபதிகளின் கடுமையை சற்று ஃபில்டர் செய்து போட்டியாளர்களிடம் இதமாக தெரிவித்த விசே "அவங்க தரத்துக்கு உங்களை அழைத்துக் கொண்டு போக வேண்டும் என்று நினைக்கிறார்கள். எனவே வரும் நாட்களில் இன்னமும் கவனமாக இருங்கள்" என்று அறிவுறுத்தினார்.

மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி ஏற்கெனவே இறுக்கமாகவும் பதற்றமாகவும் கிளாஸ்ரூம் மாதிரியும் இருப்பதாக பார்வையாளர்களின் எதிர்வினைகள் வந்து கொண்டிருக்கும் போது வரும் நாட்களில் போட்டியில் இன்னமும் அனல் பறக்கும் என்று தெரிகிறது.

ஏற்கெனவே சொன்னதுதான். மாஸ்டர் செஃப் டுட்டோரியல் காலேஜ் அல்ல. பிஹெச்டி வகுப்பு. இதன் தீவிரத்தை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே இந்த நிகழ்ச்சி இனிக்கும்.