Published:Updated:

மேடம் ஷகிலா - 18 : `வல்லமை தாராயோ’ Youtube சீரிஸும், `ஒரு வித்யாவின் கதையும்'!

வல்லமை தாராயோ

என் தங்கை ''நம்ம வீட்ல நடக்குற மாதிரியே இருக்கு... இந்த யூ-ட்யூப் லிங்க் பாரு'' என்றாள். அவள் சொல்லித்தான் 'வல்லமை தாராயோ' எனும் யூ-ட்யூப் சீரிஸைப் பார்க்க நேர்ந்தது. ஒன்றிரண்டு எபிசோடுகளைப் பார்க்க ஆரம்பித்து அப்படியே மூன்று நாட்களுக்குள் 80 எபிசோடுகளையும் பார்த்து முடித்தேன்.

Published:Updated:

மேடம் ஷகிலா - 18 : `வல்லமை தாராயோ’ Youtube சீரிஸும், `ஒரு வித்யாவின் கதையும்'!

என் தங்கை ''நம்ம வீட்ல நடக்குற மாதிரியே இருக்கு... இந்த யூ-ட்யூப் லிங்க் பாரு'' என்றாள். அவள் சொல்லித்தான் 'வல்லமை தாராயோ' எனும் யூ-ட்யூப் சீரிஸைப் பார்க்க நேர்ந்தது. ஒன்றிரண்டு எபிசோடுகளைப் பார்க்க ஆரம்பித்து அப்படியே மூன்று நாட்களுக்குள் 80 எபிசோடுகளையும் பார்த்து முடித்தேன்.

வல்லமை தாராயோ

”மாப்ள தங்கமானவர்… நீதான் பார்த்து அனுசரிச்சு நடந்துக்கணும்’’, ‘’தேவையான எல்லாம் வீடு தேடி வருது… உன்னை ராணி மாதிரி வச்சிருக்காரு!’’, ‘’ஆபீஸ் முடிஞ்சா வீட்ல இருக்கார்… நீ குடுத்து வச்சவ!’’, ‘’உன் புருஷன் கை நிறைய சம்பாதிக்கிறார்… நீ ஏன் வேலைக்கு போய் ஏன் கஷ்டப்படணும்? குழந்தைகளை பார்த்துகிட்டு வீட்ல பேசமா இரு!”

பெரும்பாலான 80’ஸ் மற்றும் 90’ஸ் கிட்ஸ் பெண்களுக்கு அவர்களின் பெற்றோர்கள் தவறாமல் சொல்லும் கனிவான ஆலோசனைகள் இவை!

மது மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்கள், நண்பர்களுடன் வெளியில் சுற்றும் பழக்கம் இல்லாதவர்கள், குடும்பத்துடன் மட்டுமே நேரம் செலவழிப்பவர்கள், தனது பெற்றோர்கள் மற்றும் உடன்பிறந்தவர்களின் பேச்சைக் கேட்டு நடக்கும் ஆண்கள் எல்லோரும் நல்லவர்கள் எனும் கோட்பாட்டை நம் சமூகம் உருவாக்கி வைத்திருக்கிறது. இந்த சட்டத்திற்குள் பொருந்துபவர்களில் நல்ல படிப்பு, நிரந்தர வருமானமும் சேர்ந்துவிட்டால் அந்த ஆணை அவரது மனைவியும், பிள்ளைகளும் கடவுளைப் போல எண்ணி பூஜிக்க வேண்டும் என்று பெண்ணின் பெற்றோர்களே சொல்கிறார்கள்.

சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் பெண் பிள்ளைகள் குறைந்தபட்சம் இளங்கலை பட்டம்வரை படிக்க வைக்கும் சூழ்நிலை உருவாகி பத்து, பதினைந்து வருடங்கள் ஆகின்றன. தங்கள் மகள்களை படிக்க வைத்து வேலைக்கு அனுப்பி ஆனந்தப்படும் பெற்றோர்கள் திருமணத்திற்கு பிறகு அவள் வேலைக்கு செல்வது அவள் கணவனின் விருப்பம் என்கிறார்கள்.

பெண்கள் தங்களது திறமை, கனவுகளுக்கு முக்கியத்துவம் தருவது, சுயமாக வருமானம் ஈட்டுவது போன்றவற்றை முழு மனத்துடன் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு தமிழ்ச் சமூகம் இன்னும் வளர்ந்துவிடவில்லை. 'கணவன் நல்ல வருமானம் சம்பாதிக்கும்போது மனைவி வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. குழந்தைகளையும், வீட்டையும் பார்த்துக் கொண்டு நிம்மதியாக இருப்பது நல்ல விஷயம்தானே' என்று பெண்களே சொல்கிறார்கள். இப்படிப்பட்ட ஆண் மைய சமூகத்தின் வேர் முப்பதுகளில் இருக்கும் படித்த பெண்களிடத்தில்கூட அவ்வளவு ஆழமாக கிளை பரப்பியிருக்கிறது.

வல்லமை தாராயோ
வல்லமை தாராயோ

தொடர்ந்து இவற்றை பேசிக்கொண்டிருப்பது க்ளிஷேவாகத் தெரியலாம். ஆனால் எல்லாம் சரியாக இருப்பதுபோல் வெளிப்பார்வைக்கு தெரியும் பல குடும்பங்களில் பெண்கள் தங்கள் சுயத்தை விட்டுக்கொடுத்து நிம்மதியும், மகிழ்ச்சியும் இல்லாமல் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.

இந்த லாக்டெளன் நாட்களில் என் தங்கை ''நம்ம வீட்ல நடக்குற மாதிரியே இருக்கு... இந்த Youtube பாரு'' என்றாள். அவள் சொல்லித்தான் 'வல்லமை தாராயோ' எனும் விகடனின் சீரிஸைப் பார்க்க நேர்ந்தது. ஒன்றிரண்டு எபிசோடுகளைப் பார்க்க ஆரம்பித்து அப்படியே மூன்று நாட்களுக்குள் 80 எபிசோடுகளையும் பார்த்து முடித்தேன்.

ஒரு பெண் பிறந்ததிலிருந்து குடும்ப அமைப்பு, பாசம், கௌரவம் எனும் பெயரால் ஒடுக்கப்படுவது, கணவன் மனைவி இடையே அடிப்படை உரையாடலின்மை, கணவனின் உடன்பிறந்தவர்கள் மற்றும் பெற்றோர்கள் உரிமையின் பேரில் தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதால் உண்டாகும் மனக் கசப்புகள், ஆண்-பெண் நட்பு பற்றிய புரிதலின்மையால் உண்டாகும் சிக்கல்கள் எல்லாவற்றுக்கும் மேலாக சுயமரியாதையின் முக்கியத்துவம் என பல விஷயங்களை யதார்த்தமான காட்சிகளின் மூலம் நுணுக்கமாக பேசுகிறது இந்த யூ-ட்யூப் சீரிஸ்.

கிராமத்தில் கூட்டுக் குடும்பத்தில் பிறந்து வளரும் அபிராமி 10-12 வயதிலிருந்தே ’’வீட்டில் சத்தமாகப் பேசாதே’’, ‘’ஆடாதே ஓடாதே’’, ‘’ஆண் பிள்ளைகளுடன் விளையாடாதே’’ போன்ற அறிவுரைகளைக் கேட்டு வளர்கிறாள். அந்த வயதில் தெருவில் ஒருவர் அவளிடம் தவறாக நடக்க முயற்சி செய்கிறார். அந்த சம்பவத்திற்கு அந்த ஆணைக் கண்டிக்காமல், ’’வீட்டைவிட்டு வெளியில் வந்ததே தவறு’’ என அபிராமியின் அம்மா அவளைக் குற்றம் சொல்கிறாள். அவளுக்கு அப்போதிருந்து வீட்டில் தனக்குப் பிடித்தவற்றைக் கேட்பதில் தயக்கம், பயம் மற்றும் தனது விருப்பங்கள் சரியானதா என்கிற குழப்பங்களும் உருவாகின்றன.

முதல் மதிப்பெண் மற்றும் Gold Medal உடன் பட்டப்படிப்பு முடிக்கும் அவள் மேலும் படித்து, வேலைக்குச் செல்ல ஆசைப்படுகிறாள். ஆனால் வீட்டில் அவளுக்கு திருமணம் நிச்சயம் செய்கிறார்கள். வீட்டிலிருக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பேசி அவளை சம்மதிக்க வைக்க முயற்சி செய்கிறார்கள்.

முற்போக்குவாதியான அவளது அண்ணன் மட்டும் வீட்டைவிட்டு வெளியேறி அவளது கனவை நனவாக்கிக்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறான். அவள் முடிவெடுக்கத் தயங்கியபடியே இருக்கிறாள். 'குடும்பம் எப்போதும் நமக்கு நல்லதை மட்டுமே செய்யும்' என கண்மூடித்தனமாக நம்பும் வழக்கம் நம் எல்லோருக்குமே குறிப்பிட்ட வயதுவரை இருந்திருக்கும். அபிராமியும் சிறுவயதில் இருந்து அவ்வாறு நம்புகிறாள். அதனால் திருமணம் வேண்டாம் என பிடிவாதமாக அவளால் மறுக்க முடியவில்லை. அவளுக்கு சித்தார்த்தை பிடித்திருக்கிறது. இறுதிவரை முடிவெடுக்க முடியாமல் அவள் குழப்பத்துடனே திருமணம் செய்துகொள்கிறாள்.

வல்லமை தாராயோ
வல்லமை தாராயோ

இன்று முப்பது வயதில் இருக்கும் பெண்கள் பலரும் இந்தக் குழப்பங்களைக் கடந்து வந்திருப்பார்கள். கிராமங்களில் இன்றும் இருபதுகளில் இருக்கும் பெண்கள், 'பெற்றோர் சொல்படி நடப்பது கடமை' என திருமணம் செய்து கொள்கிறார்கள். ஒரு பெண் எவ்வளவு முன்னேறினாலும் திருமணம் செய்து கணவருடன் சேர்ந்து வாழ்வதுதான் சமுதாயத்தில் மரியாதையை ஈட்டித்தரும் என்ற எண்ணம் பெற்றோர்களிடத்தில் இருக்கிறது. அப்படி சேர்ந்து இருப்பதற்காக அவள் தனது சுயத்தை விட்டுக்கொடுக்க வேண்டி இருந்தாலும் அதைப்பற்றி பெற்றோர்கள் வருத்தப்படுவதில்லை. பல குடும்பங்களில் பெற்றோர்கள் தங்கள் சுயமரியாதையைக்கூட மகளுக்காக விட்டுக்கொடுத்து வாழ்கிறார்கள். இதனால் ஏற்படும் மன அழுத்தத்தைவிட “நாலு பேர் நாலு விதமாகப் பேசுவார்கள்” என்பதே பெற்றோர்களின் தலையாய பிரச்னையாக இருக்கிறது.

அபிராமி வேலைக்குச் செல்ல அனுமதி கேட்கும்போது சித்தார்த் ’’அவளுடைய இஷ்டம்’’ என்கிறான். அதே சமயம் 'வீடும், பிள்ளைகளும் அவளது பொறுப்பு' என்பதையும் அவளுக்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறான். வேலையை விட்டுவிட்டு வீட்டில் இருக்கும் சித்தார்த், வீட்டு வேலைகளைப் பகிர்ந்துகொள்ள எரிச்சலடைகிறான். உதவி கேட்கும் அபிராமியிடம் உன்னால் சமாளிக்க முடியாவிட்டால் நீ வேலைக்கு செல்ல வேண்டாம் என்று வெளிப்படையாகவே சொல்கிறான். சித்தார்த் ஆரம்பம் முதலே எல்லா விஷயங்களிலும் இரண்டுவிதமான பதில்கள் சொல்கிறான். வேலைக்கு செல்வதற்கு மனைவியை அனுமதித்துவிட்டு குடும்பத்தினரிடம் 'அவள் தன் விருப்பம்போல நடந்துகொள்கிறாள்' என சொல்கிறான்.

’ஆம்’, ‘இல்லை’ என இரண்டு விதமான பதிலையும் வெவ்வேறு காரணங்களின் அடிப்படையில் கூறிவிட்டு, பிரச்னை என்று வரும்போது தனக்கு சாதகமான ஒன்றைத் தேர்வு செய்து ”நான் அப்பவே சொன்னேனே” என்று பேசும் சந்தர்ப்பவாதிகள் நம்மிடையே இருக்கிறார்கள். குறிப்பாக கணவன், தன் மனைவியின் விஷயத்தில் இப்படி நடந்துகொள்ளும்போது அந்த பெண்ணுக்கு அவளின் பெற்றோரின் ஆதரவும் கிடைப்பதில்லை. இதை மிகத் தெளிவாக, முக்கிய பிரச்னையாக இந்த சீரிஸில் காட்சிப்படுத்தியிருப்பதற்குப் பாராட்டுக்கள்.

ஒரு பிரச்னையின் போது ”இத்தனை ஆண்டுகளில் என்னிடம் ஒருமுறையாவது அன்பாகப் பேசி இருப்பீர்களா” என்று அபிராமி தன் கணவனை கேட்கிறாள்.

வீட்டில் தேவையான வசதிகள் இருப்பது மனைவிக்கு தாங்கள் செய்யும் கருணை என்று நினைக்கும் ஆண்கள் இருக்கிறார்கள். ”உனக்கு இந்த வீட்டில் என்ன குறை மகாராணி போல் இருக்கிறாய்” என்று எனது தாத்தா முதல் இன்று முப்பதுகளில் இருப்பவர்கள்வரை சொல்லிக் கேட்டிருக்கிறேன். மனைவியிடம் கனிவான பேச்சு, அவளது ஆசை மற்றும் எண்ணங்கள் பற்றி தெரிந்துகொள்வது, அவளுடன் நேரம் செலவழிப்பது எல்லாம் அவசியம் இல்லை என்று ஆண்கள் நினைக்கும் வீடுகளில் பெண்கள் மன உளைச்சலுடனே இருக்கிறார்கள். அது மொத்த குடும்பத்தின் நிம்மதியையும் கெடுக்கும் முதல் காரணி.

வல்லமை தாராயோ
வல்லமை தாராயோ

சிறுவயதில் இருந்து பெற்றோர்கள் மற்றும் உடன் பிறந்தவர்களை சார்ந்து வாழும் ஆண்கள், திருமணத்திற்குப் பிறகும் தனித்து முடிவெடுக்கத் தயங்குகிறார்கள். தங்களது குடும்பத்தினரின் சொல் கேட்டு நடப்பது எளிதாக இருக்கிறது. அவர்களின் மனம் நோகாமல் நடந்து கொள்வதை நன்றிக்கடனாக நினைக்கும் சித்தார்த்தை போன்ற நல்லவர்களும்(?!) நம்மிடையே வாழ்கிறார்கள். இவ்வளவு அணுக்கமாக தன் ரத்த சொந்தங்களிடம் இருக்கும் சித்தார்த்கள் தன்னோடு வாழ வந்திருக்கும் மனைவிக்கும் பேசுவதற்கு, முடிவு எடுப்பதற்கு குடும்பத்தில் சம உரிமை இருக்கிறது என்பது புரிந்தாலும் ஏற்றுக்கொள்வதில்லை.

இதை எழுதிக் கொண்டிருக்கும்போது பிரபஞ்சனின் ’ஒரு வித்யாவின் கதை’ எனும் சிறுகதை நினைவிற்கு வருகிறது. எந்த பெரிய எதிர்பார்ப்பும் இல்லாமல் திருமண வாழ்வில் நுழையும் வித்யா, தன் கணவரிடம் கொஞ்சம் கனிவான வார்த்தைகளையும், தோழியை போல் நடத்தும் பரிவையும் எதிர்பார்ப்பாள். அவளது அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு சுயமரியாதை இழக்கும் சூழ்நிலையில் அவர்கள் திருமணம் விவாகரத்தில் முடிந்திருக்கும். எல்லோரிடமும் இயல்பாகப் பழகக்கூடிய, சுயமாக சிந்திக்கும் ஒரு பெண் விவாகரத்து பெறும்போது முன் அறிமுகமில்லாதவர்கள் முதல் நெருங்கிய நண்பர்கள் வரை அந்தப் பெண்ணின் மீதுதான் குற்றம் என்பது போல நடந்துகொள்கிறார்கள். 33 வருடங்களுக்குப் பிறகு இன்றும் நம் சமூகத்தில் இந்தக் காட்சிகள் மாறவில்லை எனும் உண்மை சற்று அதிர்ச்சியாகவே இருக்கிறது. ஒரு சமூகமாக பாலின சமத்துவத்தில் நம் வளர்ச்சி தேங்கி நிற்பதையும் உணர்த்துகிறது.

கணவனின் விருப்பம்தான் மனைவியின் விருப்பமாகவும் இருக்கவேண்டும் என்றும், கணவனை கவனித்துக்கொள்வது மட்டுமே மனைவியின் முழுநேர வேலை எனவும் என் அம்மா, மாமியார் என என்னைச் சுற்றியுள்ள முந்தைய தலைமுறை பெண்கள் அழுத்தம் திருத்தமாக சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். பண்பாடு, குடும்பப்பெண் எனும் Tag உடன் வரும் இத்தகைய அறிவுரைகள் மனைவியை அடிமையாக, உடைமையாகப பார்க்கும் #MalePatriarchyயின் Modern மற்றும் Elite version.

பக்கத்து வீட்டுப்பெண் மது அருந்துவது, கணவர் அல்லாத வேறு ஓர் ஆணுடன் இருப்பது குறித்து அபிராமி தன் கணவனிடம் சொல்லும்போது, “அது அவர்களது சுதந்திரம், மற்றவர் விஷயத்தில் Judgementalஆக இருக்காதே” என்று முற்போக்கு பாடம் எடுக்கும் சித்தார்த், ”இதெல்லாம் அவர்களுக்குத்தான். உனக்குப் பொருந்தாது, நீயும் இப்படி இருக்கலாம் என்று நினைக்காதே” என்பதையும் தெளிவுபடுத்துகிறான். சாதி, மதம், வர்க்கத்தை கடந்த முற்போக்கு ஆண்கள்கூட தங்கள் வீட்டுப் பெண்கள் சுயமரியாதை, சம உரிமை பற்றி பேசினால் பதறுகிறார்கள். வீட்டிலும், பொதுவெளியிலும் ஆண் எனும் முன்னுரிமையினால் கிடைக்கும் சொகுசை விட்டுக்கொடுக்க முடியாததால் வரும் பதற்றம் அது.

பொருளாதார நெருக்கடியில் இருக்கும் ஆண்கள்கூட மனைவி வேலைக்கு செல்வதை விரும்பவில்லை என்பதன் பின்னணியில் இருக்கும் மனநிலை மிக நுட்பமானது. ஆண்கள் அவ்வளவு பேரும் மோசமானவர்கள் என்கிற எண்ணம் ஆண்களுக்கே இருக்கிறது. அலுவலகத்தில் மற்ற பெண்களோடு சகஜமாகப் பேசும் ஆண்கள் பலரும் தங்கள் மனைவி வேலைக்கு செல்வதை விரும்புவதில்லை. சமூக வலைதளங்களில் மனைவியை அனுமதிக்காத ’முற்போக்கு’ ஆண்களின் மனநிலையும் இதுதான்.

”நானும் மனுஷி தானே… எனக்கு சுயமாக கனவுகள், ஆசைகள் இருக்கக்கூடாதா?” என்று ‘வல்லமை தாராயோ’ சீரிஸ் முழுவதும் அபிராமி கேட்டுக் கொண்டேயிருக்கிறாள். ”சாப்டியா”, ”உன்னுடைய இன்றைய நாள் எப்படி கழிந்தது” இவை இரண்டும் நாள்தோறும் கணவன் - மனைவி உரையாடலில் இடம்பெற வேண்டிய இரண்டு அடிப்படையான கேள்விகள் என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரியும்?

வல்லமை தாராயோ
வல்லமை தாராயோ

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு குடும்பத்தின்மேல் அக்கறை இருக்காது எனும் குற்றச்சாட்டு இன்றும் தொடர்கிறது. இதில் முந்தைய திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி சீரியல்களின் பங்கும் இருக்கிறது. ஆனால், நடைமுறையில் வேலைக்கு செல்லும் அம்மாக்களை இன்றைய தலைமுறை குழந்தைகள் புரிந்து கொள்கிறார்கள். அம்மாக்களுடனான அவர்கள் உறவு இயல்பாக மற்ற வீடுகளைப் போலவே இருக்கிறது. அபிராமியின் குழந்தை அம்மா வேலைக்குச் செல்வதை ஆதரிப்பதாக காட்டியிருப்பது பல பெண்களுக்கும் தங்கள் குழந்தைகளிடம் உரையாடி புரிதல் ஏற்படுத்த உதவும்.

சித்தார்த்தை போன்ற ஆண்கள் இருப்பார்களா என்கிற சந்தேகம் ஆண்களுக்கும், எல்லோருமே சித்தார்த் தானா எனும் அச்சம் பெண்களுக்கும் வரலாம். இங்கு ஆண்களை வளர்க்கும் விதத்தில் பெரிதாக எந்த மாற்றமும் வந்துவிடவில்லை. ஆனால் அவற்றை மீறி தங்கள் சுய அறிவினால் பெண்களை சமமாக நடத்தும், அவர்களின் சுயமரியாதையை மதிக்க வேண்டும் என்கிற புரிதல் இன்றைய ஆண்களுக்கு இருக்கிறது என்பதற்கு அபிராமியின் அண்ணனாக வரும் சேது மற்றும் நண்பனாக வரும் கௌதமையும் சாட்சியாக கொள்ளலாம்.

இன்று பொதுவெளியில் இயங்கும் அனைத்து பெண்களுமே இந்த இடத்திற்கு வர பல சவால்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. முயற்சி செய்தால் எந்த பெண்ணும் தங்கள் லட்சியங்களை நிறைவேற்றிக்கொள்ள முடியும். ஆனால் அதுவரை தங்கள் திறமையை, ஆசைகளை, கனவுகளை பட்டுப்போகாமல் உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டியது அவசியம்!

‘வல்லமை தாராயோ’ பற்றி இன்னும் சில விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ளவேண்டும். அவையெல்லாம் அடுத்த வாரம்!