சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

கொரியன் நாடகம் பார்த்தா கூல் ப்ரோ!

கொரியன் நாடகம்
பிரீமியம் ஸ்டோரி
News
கொரியன் நாடகம்

- ஜிரா

எல்லாரும் Squid Game பார்த்தாச்சா?

இந்தக் கொரிய நாடகத்தைப் பார்க்காதவங்க பார்த்துருங்க. 90 நாடுகள்ல நெட்பிளிக்ஸில் இதுதான் இப்ப நம்பர் 1 சீரிஸ். இதன் விளைவால் நெட்பிளிக்ஸ் கொரிய நாடகங்கள் எடுக்குறதுல 500 மில்லியன் டாலர் முதலீடு பண்றாங்க.

உலக வரைபடத்தோட வலது மூலையில ஜப்பானுக்குப் பக்கத்தில் இருக்கும் குட்டித் தீபகற்ப நாடு தென்கொரியா. ஆனா அவங்க எடுக்குற கொரிய நாடகங்களுக்கு உலகம் முழுக்க வரவேற்பிருக்கு. இதுவரை கொரிய நாடகங்களே பார்க்காதவங்க முதன்முதலில் பார்க்கிறப்போ அவங்க மைண்ட் வாய்ஸ், “நாடகத்துல ஹீரோ யாரு, ஹீரோயின் யாருன்னே கண்டுபிடிக்க முடியல. எல்லாரும் ஒரே மாதிரி இருக்காங்க” என்பதுதான்.

கொரியன் நாடகம் பார்த்தா கூல் ப்ரோ!
கொரியன் நாடகம் பார்த்தா கூல் ப்ரோ!

புதுசா வேறொரு நாட்டு மக்களைப் பார்க்கும்போது இது எல்லாருக்கும் தோணும். கொரிய நாடகங்கள் பார்க்கும் போதும் இந்தத் தடுமாற்றம் முதல்ல வரலாம். ஆனா போகப் போக உங்களுக்கு சொங் ஜூங் கீ யாரு கோங் யூ யாருன்னு தெளிவாத் தெரியும். இன்னொன்னும் சொல்லணும். கொரிய நாடகங்கள் பார்க்குறப்போ அங்கங்க தமிழ்ச் சொற்கள் காதுல விழும். அம்மா, அப்பா, நாள், பல், புல், நீ, நான்... இப்படி நிறைய இருக்கு. தமிழோடு கொரியாவுக்கு வரலாற்றுத் தொடர்பும் இருக்கு. பத்துக் கொரியன் நாடகம் பார்த்த பிறகு நீங்களே இதையெல்லாம் நாலு பேருக்கு எடுத்துச் சொல்வீங்க. அதுக்கு நானே சாட்சி!

கொரிய நாடக ரசிகர்களுக்குப் பிடிக்காதது என்னன்னா... கொரிய நாடகங்கள டப் பண்ணிப் பார்க்குறது. தமிழிலோ ஆங்கிலத்திலோ இந்தியிலோ டப் பண்ணிப் போட்டா அந்த ரசிகர்கள் ஏறாத மலைல ஏறி ஓடாத ரயில்ல விழுந்து உயிரையே விட்டுருவாங்க. English Subtitle இருந்தாலும், நாடகம் பார்க்கும்போது கொரிய மொழி காதுல விழணும். அந்த உச்சரிப்பு + உணர்ச்சி ரொம்ப அவசியம்.

சரி... நீங்க கொரிய நாடகங்கள் பார்க்கணும்னு முடிவு செஞ்சாச்சு. என்னென்ன நாடகங்கள் இருக்குன்னு கேட்டா, அதுக்கே பெரிய புத்தகம் போடணும்.

Rom-Com எனப்படும் காதல்+நகைச்சுவை கலந்த நாடகங்கள்

திகில் நாடகங்கள் (Horror)

மர்மக் கதை நாடகங்கள் (Mystery)

துப்பறியும் நாடகங்கள் (Investigation)

பேய் பிசாசு நாடகங்கள் (இது horror வகைல வராது. ஏன்னா... பேய வெச்சு அவ்வளவு வித்தை காட்டியிருப்பாங்க.)

மாயாஜால நாடகங்கள் (Fantasy)

வரலாற்று நாடகங்கள் (Historical)

கொரியன் நாடகம் பார்த்தா கூல் ப்ரோ!
கொரியன் நாடகம் பார்த்தா கூல் ப்ரோ!

இன்னும் அறிவியல், காலப்பயணம், குடும்ப நாடகங்கள்னு நிறைய வகைகள் இருக்கு. இது போதாதுன்னு இதையெல்லாம் கலக்கிப் போட்டும் நாடகங்கள் வரும்.

2021-ல் Vincenzo-ன்னு ஒரு கொரிய நாடகம். பிரபல நடிகர் சொங் ஜூங் கீ நடிச்சது. மசாலான்னா மசாலா... மானாமதுரை அம்மில அரைச்ச மசாலா. வில்லன் கொடுக்குற அத்தனை பிரச்னைகளையும் கதாநாயகன் எப்படி சமாளிச்சு ஜெயிக்கிறாங்குறதுதான் கதை. ‘லாஜிக் எல்லாம் வேண்டாம், மசாலா மேஜிக் போதும்’னு முடிவு செஞ்சுட்டா Vincenzo அட்டகாசமான கொத்து பரோட்டா. சென்னைல முதன்முதல்ல திரையரங்கத்துல வெளியான கொரியத் திரைப்படம் Train To Busan. 2016-ம் ஆண்டுல சத்யம் திரையரங்குல வெளியாகி நல்லா ஓடிய படம். பூசான்ங்குற ஊருக்குப் போகும் ரயில் பயணிகளையும் ஜோம்பிகளையும் வெச்சு விறுவிறுன்னு கதை ஓடும். அதுக்குள்ளயே அப்பா-மகள் உறவு, நண்பர்கள், கணவன் - கர்ப்பிணி மனைவி உறவுன்னு அப்பப்ப அழவும் வெச்சிருப்பாங்க.

2019-ல் Parasite படமும் சென்னையில் வெளியாச்சு. பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இருக்கும் வர்க்கபேதத்தை அடிப்படையா வெச்சு Dark Humour படம். படம் முடியும்போது மொத்த தியேட்டரும் எழுந்து நின்னு கைதட்டும். ஆஸ்கரும் வாங்குச்சு. 2016-ல் W (Two worlds)ன்னு ஒரு கொரிய நாடகம், Descendants of Sun அப்படிங்குற அட்டகாசமான ஆக்‌ஷன் + ரொமான்டிக் நாடகம், 2018-ல் Memories of Alhambra-ன்னு ஒரு நாடகம்... எல்லாமே செம ஹிட்.

கொரியன் நாடகம் பார்த்தா கூல் ப்ரோ!
கொரியன் நாடகம் பார்த்தா கூல் ப்ரோ!

தென்கொரியாவுக்கு மேல வடகொரியான்னு ஒரு நாடு இருக்குன்னு தெரியும். ஆனா அங்க என்ன நடக்குதுன்னு யாருக்குமே தெரியாது. அப்படியொரு கட்டுப்பாடான சர்வாதிகார நாடு. கதாநாயகன் அந்த நாட்டுக்காரனாகவும் கதாநாயகி தென்கொரியாவைச் சேர்ந்த பெண்ணாகவும் இருந்தா என்னாகும்? Crash Landing On You நாடகமாகும். Oh My Ghostess, Master’s Sun, Hotel Del Luna-ன்னு உங்க பேய்த்தனமான ரசனைக்கு எக்கச்சக்க பேய் நாடகங்களும் இருக்கு. இதையெல்லாம்விட இன்னொரு ஸ்பெஷல் ஐட்டம் இருக்கு. அது, My Secret Terrius. 2018-ல் வந்த இந்த நாடகத்துல வில்லன் கோஷ்டி கொரோனா நோய்க் கிருமியை கொரியால பரப்ப வருவாங்க. கதாநாயகன் வழக்கம்போல என்னென்னவோ செஞ்சு தடுத்திடுவாரு. தடுத்தாதானே கதாநாயகன்! இந்த நாடகம் வெளிவந்து சரியா ரெண்டு வருடத்துல உலகம் முழுக்க கொரோனா பரவியது. இது காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையா, அல்லது, வைரஸ் உட்கார விளாம்பழம் விழுந்த கதையான்னு தெரியல.

Six Flying Dragons, Sungkyunkwan Scandal, Empress Ki, Gu Family Book, Mr Sunshine... இன்னும் வரலாற்று நாடகங்களும் நிறைய இருக்கு. அதுக்கும் மேல... அதுக்கும் மேல... எல்லாத்துக்கும் மேலன்னு ஒண்ணு இருக்கு. அதுதான் ஹாஸ்பிட்டல் நாடகங்கள். டாக்டர்களை வெச்சு எடுக்கப்பட்ட நாடகங்கள். ஒரு நாலு நாடகம் பார்த்துட்டா, நமக்கே டாக்டர் கவுன் போட்டுக்கிட்டு, கைல கிளவுஸ் மாட்டிக்கிட்டு, ஆபரேஷன் தியேட்டருக்குள்ள போய் ரெண்டு ஆபரேஷன் பண்ணலாம்னு நம்பிக்கை வந்துரும். Romantic Doctor Kim, Emergency Couple, The Doctor, Doctor Stranger-ன்னு இதுலயும் பெரிய பட்டியல் இருக்கு. ஆட்டிசம் பாதிப்புள்ள குழந்தை வளர்ந்து டாக்டரா ஆனா எப்படியிருக்கும்னு The Good Doctor பார்த்துத் தெரிஞ்சிக்கலாம். The Good Doctor நாடகத்துல இருந்து சில காட்சிகள் தமிழ்த் திரைப்படங்கள்லயும் வந்திருக்கு. இதெல்லாம் போக, Tunnel, Voice, Signal மாதிரியான துப்பறியும் கதைகள். இதுலயும் நிறைய எடுத்திருக்காங்க. இன்னும் எடுத்துக்கிட்டேயிருக்காங்க.

கொரியன் நாடகம் பார்த்தா கூல் ப்ரோ!
கொரியன் நாடகம் பார்த்தா கூல் ப்ரோ!
கொரியன் நாடகம் பார்த்தா கூல் ப்ரோ!

``நாங்கெல்லாம் சன் டி.வி-ல நாலு பொங்கல் தாண்டி ஓடுற குடும்ப நாடகங்கள் பார்க்குறவங்க. இதெல்லாம் எங்களுக்குச் சரிப்படாது”ன்னு நினைக்கிறீங்களா?’’ கவலையே படாதீங்க. உங்களுக்காகவே நெடுந்தொடர்கள் எடுத்துக்கிட்டே இருக்காங்க. அங்கயும் குடும்பக் கதைகளை வெச்சு பெண்கள் பார்க்குற நேரத்துல ஓட்டப்படும் நாடகங்களும் உண்டு. குடும்பக் கதைகள்லயே Best of Best-னு சொல்லணும்னா Reply 1988. மொத்தம் 20 எபிசோடுகள். 2015-ல் வெளிவந்த நாடகம். கதைக்குள்ள போயிட்டீங்கன்னா, கதைல வர்ற அஞ்சு குடும்பங்களோட சேர்ந்து நீங்களும் வாழ்ந்துட்டு வருவீங்க. அண்மைல வந்த நாடகங்களைச் சொல்லணும்னா Racket Boys, Hometown Cha Cha Cha-வைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

சொன்னது கீபோர்டு அளவு. சொல்லாதது உலகளவுங்குறது கொரிய நாடகங்களுக்கும் பொருந்தும். நீங்க பார்க்கத் தொடங்கியாச்சுன்னா... ஒரு புது உலகம் உங்க கைக்கு வந்துரும். நீங்களும் ஹியொன் பின், பாக் ஷினே, சோஜி சொப், ஜொஞ்சி ஹியொன், ஐயூ-ன்னு சரளமா கொரிய நடிகர், நடிகையர் பேரெல்லாம் சொல்வீங்க.

2k கிட்ஸ் ஏன் கொரியன் கிரேஸ் பிடிச்சு அலையறாங்கன்னு நீங்களும் பார்த்தாத் தெரிஞ்சுக்குவீங்க!