Published:Updated:

``பாலா சார் சொன்ன மாதிரியே வாக்கைக் காப்பாத்திட்டார்!'' - `யாரடி நீ மோகினி' அக்‌ஷயா

அக்‌ஷயா
அக்‌ஷயா

பாலாவின் `தாரை தப்பட்டை' படத்தில் அறிமுகமாகி, தற்போது சில சீரியல்களில் நடித்து வரும் அக்‌ஷயாவுடன் சின்ன உரையாடல்.

இப்படி இருந்தால்தான் அழகுங்கிற பிம்பத்தைச் சுக்குநூறாக்கி, டான்ஸ், நடிப்பு என சின்னத்திரையில் தடம் பதித்து வருகிறார் அக்‌ஷயா. பாலாவின் `தாரை தப்பட்டை'யில் இவர் ஆடிய குத்தாட்டத்தை யாராலும் மறக்க முடியாது. தற்போது சீரியல்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தவிர, அண்மையில் நடந்த ஜீ குடும்ப விழாவில் `சிறந்த காமெடியன்' விருதையும் பெற்றார்.

அக்‌ஷயா
அக்‌ஷயா

`யாரடி நீ மோகினி' சீரியலில் ரசிக்கும்படியான வில்லத்தனத்தை வெளிக்காட்டிய அக்‌ஷயாவின் கதாபாத்திரம், நீண்ட நாள்களாக ஆப்சென்ட் ஆகியிருந்தது. `என்னதான் ஆச்சு' என்று தெரிந்துகொள்ள அவரைத் தொடர்புகொண்டோம். தன் சினிமா, சீரியல் அனுபவங்களை கலகலப்புடன் பகிர்ந்துகொண்டார் அக்‌ஷயா.

``நான் சென்னை பொண்ணு. விஸ்காம் படிச்சிட்டு நடிக்க வந்துட்டேன். என் வாழ்க்கையில எனக்கு நல்லா தெரிஞ்ச ஒரே விஷயம் டான்ஸ். ஆரம்பத்துல எனக்கு ஆடவே வராது. ஆனாலும், போராடிக் கத்துக்கிட்டேன். ஏதாவது ஒரு விஷயத்துல என்ன நிரூபிக்கணும்னு தோணுச்சு."

அக்‌ஷயா
அக்‌ஷயா

``பாலா சாருடைய `தாரை தப்பட்டை’ படத்துல நடிக்கிற வாய்ப்பு வந்தப்போ என் உழைப்பு வீண் போகலைன்னு சந்தோஷப்பட்டேன். ஒரு பாட்டுக்கு கரகாட்டக் கலைஞர்கள் மாதிரி முழங்காலுக்கு மேல உடை அணிந்து ஆடணும்னு பாலா சார் சொன்னார். நான் ரொம்ப பயந்துட்டேன்."

``என்னுடைய உடலுக்கு அந்த மாதிரி ஆடைகள் போட்டு குத்தாட்டம் ஆடினா எப்படி இருக்கும்னு தயங்கினேன். நேரா பாலா சார்கிட்டே போய்,`எனக்கு முட்டிக்கு மேல டிரெஸ் போட்டு ஆடுறதுல பிரச்னை இல்ல சார். ஆனா, இங்க இருக்கவங்க முகம் சுளிச்சிடக்கூடாது, சிரிக்கக் கூடாது. முக்கியமா ஸ்கிரீன்ல பார்க்கும்போது ச்சீனு சொல்லிடக் கூடாது'னு சொன்னேன்."

அக்‌ஷயா
அக்‌ஷயா

`` `எதுவுமே தப்பா தெரியாது. இதைத் தப்பா காட்டாத அளவுல படமாக்குறது என்னுடைய பொறுப்பு'னு ரொம்பப் பொறுமையா பதில் சொன்னார். அவர் கொடுத்த வாக்கைக் காப்பாத்திட்டார். அந்தப் பாடலுக்கு நிறைய பாராட்டுகளும் கிடைச்சது. ஒருவர்கூட என் ஆடையைப் பத்தி விமர்சிக்கலை. `தாரை தப்பட்டை' படத்துக்குப் பிறகு சில பட வாய்ப்புகள் வந்தது. எல்லாமே கிளாமர் ரோல், குத்தாட்டம் போடுற மாதிரி இருந்துச்சு."

``கிளாமரா நடிக்கிறது தப்புனு சொல்லலை. ஆனா, அப்படித்தான் நான் நடிப்பேன்னு முத்திரை குத்திடக் கூடாது. இந்தக் காரணங்களால வந்த வாய்ப்புகளை வேணாம்னு சொல்லிட்டேன். `தாரை தப்பட்டை' படத்துல மட்டும் கிளாமரா ஆடுனீங்கனு கேட்குறாங்க. கரகாட்டத்துக்கு ஜீன்ஸ், லெக்கின்ஸ் போட்டுகிட்டா ஆட முடியும்? இப்போவும் சொல்றேன், குத்தாட்டம் ஆடுறதுல எனக்குப் பிரச்னை இல்லை. அதுக்குத் தகுந்த மாதிரி காஸ்டியூமும் ரொம்ப முக்கியம்."`

அக்‌ஷயா
அக்‌ஷயா

``கேரக்டர் ரோல், டான்ஸ்னு இதுல சாதிக்கணும். அப்படி ஒரு நல்ல ரோல்தான் இப்போ பண்ணிகிட்டிருக்கேன். `பேப்பர் பாய்'னு ஒரு தெலுங்கு படத்தை தமிழ்ல ரீமேக் பண்றாங்க. தெலுங்குல வித்யூ ராமன் பண்ண ரோலை தமிழ்ல நான் பண்றேன்."

``நடிப்பு, டான்ஸ்ஸைப் பொறுத்தவரைக்கும் ஒல்லியா இருக்கிறவங்களுக்குத்தான் வாய்ப்புகள் தேடி வரும். விளம்பரங்கள்ல தொடங்கி சீரியல் கதாபாத்திரங்கள் வரை அவங்களுக்கு நிறையா வாய்ப்புகள் வரும். ஆனா, நான் குண்டா இருக்கேன். அதனால, ஆன் ஸ்கிரீன்ல என்னைப் பார்த்து அதுக்கு என்ன கமென்ட்ஸ் வருமோன்னு வீட்டுல பயந்தாங்க."

அக்‌ஷயா
அக்‌ஷயா

``எனக்கு சீரியல் வாய்ப்பு வந்தப்போ என் வீட்டுல, `உனக்கு நடிக்கலாம் வராது, இதெல்லாம் வேணாம்'னு சொன்னாங்க. இப்போ நான் நடிச்ச முதல் சீரியல்லே `பெஸ்ட் காமெடி நடிகை' விருது வாங்கிட்டேன். அதுவும் மக்களால தேர்வு செய்யப்பட்டிருக்கேன். முடியாததுனு எதுவுமே இல்லை. என் அம்மா இப்போ ஆச்சர்யப்படுறாங்க. உன் எக்ஸ்பிரஷன்ஸ் அழகா இருக்குன்னு பாராட்டுறாங்க."

`` `யாரடி நீ மோகினி' ஹாரர் கதை. எனக்கு பேய்னா ரொம்ப பயம். அடிக்கடி தர்காவுக்குப் போவேன். அங்க பேய் ஓட்டுறதைப் பார்த்தா எனக்கு தலை சுத்திடும். எனக்குப் பேய்தான் வந்துடுச்சுனு அம்மா நிறைய முறை பயந்திருக்காங்க. `யாரடி நீ மோகினி'யில வர்ற பேய் (யமுனா) எனக்கு க்ளோஸ் ஃபிரெண்ட்தான், அதனால பயமில்ல. நானும் யமுனாவும் செம க்ளோஸ். சைத்ரா, சீரியல்லதான் வில்லி. ஆனா, நிஜத்துல குழந்தை மாதிரி."

அக்‌ஷயா
அக்‌ஷயா

``சீரியல்ல என்னை அறையுற காட்சிகள் வரும்போது வருத்தப்படுவா. இந்த சீன் வேணாம்னு சொல்லுவா. நான்தான் சமாதானப்படுத்தி பரவாயில்ல அடி, அப்போதான் சீன் இயல்பா இருக்கும்னு சொல்வேன். நடிப்புக்காக நான் அடி வாங்குறதுல எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனா, எங்க வீட்டுல ரொம்ப வருத்தப்படுறாங்க."

``என் அம்மா அப்பா இதுவரை என்னை அடிச்சதில்லை. என் சொந்தக்காரங்க என் அம்மாவுக்கு போன் பண்ணி ஏன் குழந்தையப் போட்டு அடிக்குறாங்க, இதெல்லாம் நீங்க கேட்க மாட்டீங்களா'னு கோவப்படுறாங்க. அம்மாவை சமாதானப்படுத்தி வெச்சிருக்கேன். நடிப்புல இதெல்லாம் சகஜம்தானே."

அக்‌ஷயா
அக்‌ஷயா

`` 'யாரடி நீ மோகினி'யில ஏன் இப்போயெல்லாம் வர்றது இல்லைனு நிறைய பேர் கேட்டுகுறாங்க. சீரியல்ல கொஞ்ச நாள் பாசிட்டிவா எடுத்துகிட்டுப் போறாங்க. ஸ்வேதாவோட சேர்ந்து நாங்க பண்ற வில்லத்தனத்துக்கு கொஞ்சம் பிரேக் விட்டிருக்கோம். சீக்கிரமே திரும்ப வருவோம்'' என்றார் உற்சாகத்துடன்.

அடுத்த கட்டுரைக்கு