Published:Updated:

``பாலாஜி அவளுக்கு அண்ணன் மாதிரி!'' - வதந்தி குறித்து யாஷிகாவின் அம்மா சோனல் ஆனந்த்

Yashika anand
Yashika anand

சில வருடங்களுக்கு முன்பு பாலாஜியும் - யாஷிகாவும் சேர்ந்து ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்ட வீடியோக்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

`திருவிளையாடல்' படத்தில் நாகேஷ், சிவாஜியிடம் `பிரிக்க முடியாதது என்னவோ..?' என்று ஒரு கேள்வி கேட்பார். அதற்கு சிவாஜி `தமிழும் சுவையும்' என்று அழகாகப் பதில் சொல்வார். ஒருவேளை இதே கேள்வியை 2021-ல் கேட்கும் பட்சத்தில், பொருத்தமான பதில் என்னவாக இருக்கும்...? வேறென்ன.. `பிக்பாஸும் வதந்தியும்'தான்!

Bigg boss
Bigg boss

ஒவ்வொரு முறையும் பிக்பாஸ் ஷோவில் கலந்துகொள்ளும் நடிகர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் குறைந்தபட்சம் நான்கு, ஐந்து வதந்திகளாவது வராமல் இருக்காது. குறிப்பாகக் காதல் வதந்தி!

ஒவ்வொரு சீஸனுக்கும் ஓர் இளம்ஜோடி சிக்கிவிடும். சமீபத்தில் முடிவடைந்த பிக்பாஸ் சீஸன்-4-ல் `சோம் - ரம்யா' ஜோடியைவிட, `பாலாஜி முருகதாஸ் - ஷிவானி' ஜோடி அதிகம் கிசுகிசுக்கப் பட்டது.

பாலாஜி சமீபத்தில் ஆனந்த விகடனுக்கு அளித்துள்ள பேட்டியில், ``ஷிவானியைச் சுத்திச் சுத்தி வந்தீங்களே, ஷிவானியை நிஜத்துலயே லவ் பண்றீங்களா?" என்ற கேள்விக்கு,

Balaji Murugadoss
Balaji Murugadoss
“அந்தக் கேள்வியால்தான்  ‘பிக்பாஸில்’ கலந்துக்கிட்டேன்!”

``பிக்பாஸ் வீட்டுக்குள்ள ஒருநாள், காலையில எழுந்ததும் நான் சோகமா ஃபீல் பண்ணிட்டு உட்கார்ந்திருந்தேன். அப்ப அங்க மத்த யாருமே எங்கிட்ட வந்து என்ன ஏதுன்னு கேக்கலை. ஷிவானிதான் வந்து அக்கறையா பேசினாங்க. அந்த அக்கறை எனக்குப் பிடிச்சிருந்தது. என் மேல அன்பா இருக்கிறவங்ககிட்ட நானும் அன்பாதானே இருக்கணும். ஷிவானி போலவே கேபியும் என்மீது பாசமாத்தான் இருந்தாங்க. ஆனா, அவங்ககிட்ட பழகறப்ப ஒரு தங்கச்சி ஃபீல் இருந்தது. ஆனா, ஷிவானியிடம் பழகறப்ப தங்கச்சி ஃபீல் எனக்கு வரலை. அவ்ளோதான் சொல்வேன். மத்தபடி கன்டென்டுக்காக ஷிவானி கூடப் பழகுனேங்கிறதெல்லாம் என்னைப் பத்தி எதிர்மறையா பேசறவங்க சொல்றது" என்று கூறி, அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ஆனால், தற்போது மற்றொரு வதந்தியில் சிக்கியுள்ளார் பாலாஜி! `பிக்பாஸ் சீஸன்-2-வில் கலந்து கொண்ட யாஷிகா ஆனந்தும், பாலாஜியும் காதலித்து வருகின்றனர்' என்பதே அந்தக் கிசுகிசு. இந்தச் செய்தி, சமூக வலைதளங்களில் தீயாகப் பரவியது. சில வருடங்களுக்கு முன்பு பாலாஜியும் - யாஷிகாவும் சேர்ந்து ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்ட வீடியோக்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Balaji Murugadoss-Yashika anand
Balaji Murugadoss-Yashika anand

இதற்கு விளக்கம் அளித்துள்ள யாஷிகா, ``நாங்கள் இருவரும் நண்பர்களாக இருந்தோம். அவர் வளர்ச்சியில் சந்தோஷப்படுகிறேன்’’ என்று கூறியுள்ளார்.

உண்மையில் யாஷிகா ஆனந்த், பாலாஜியைக் காதலிக்கிறாரா..? அவரிடமே கேட்டோம்.

``இதைப் பத்தி இப்போ நான் எந்தக் கருத்தையும் சொல்ல விரும்பல. யார் எப்படி வேணும்னாலும் நினைச்சிக்கட்டும். எனக்கு எந்தக் கவலையும் இல்ல" என்று கூறி அழைப்பைத் துண்டித்துவிட்டார்.

யாஷிகா-சோனல் ஆனந்த்
யாஷிகா-சோனல் ஆனந்த்

இந்த காதல் கிசுகிசு குறித்துப் பேசிய யாஷிகாவின் அம்மா சோனல் ஆனந்த்,

``இந்த மாதிரி செய்திகளைக் கேள்விப்படும்போது சிரிப்புதான் வருது. யாஷிகா பாலாஜியைக் காதலிக்கல. ரெண்டுபேரும் நல்ல நண்பர்கள். சொல்லப்போனா பாலாஜி அவளுக்கு அண்ணன் மாதிரி. இதுமாதிரி தேவையில்லாத வதந்திகளை யார் பரப்பி விடுறாங்கன்னு தெரியலை" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு