இந்தியாவின் மிகப்பெரிய பொழுதுபோக்கு நிறுவனங்களுள் ஒன்றான ஜீ என்டர்டெயின்மென்ட் (Zee Entertainment Enterprises Limited - ZEEL) நிறுவனம் சோனி பிக்சர்ஸ் (Sony Pictures Networks India - SPNI) நிறுவனத்துடன் இணையப் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், தற்போது அந்த இணைப்பு உறுதியாகியிருக்கிறது. இந்த இணைப்புக்குப் பிறகு இரு நிறுவனங்களும் இணைந்த கூட்டு நிறுவனத்தின் 50.86 சதவிகித பங்குகள் சோனி நிறுவனத்திடமே இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் ப்ரமோட்டர்களான எஸ்ஸெல் குழுமத்திடம் 3.99 சதவிகித பங்குகளும், ஜீ நிறுவனத்தின் மற்ற பங்குதாரர்களிடம் 45.15 சதவிகித பங்குகள் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செப் 21-ம் தேதி சோனி நிறுவனத்துடன் ஜீ நிறுவனத்தை இணைப்பதற்கா முதற்கட்ட அனுமதியை வழங்கியது ஜீ நிறுவனத்தின் நிர்வாகக் குழு. அதனைத் தொடர்ந்து 90 நாட்களுக்கு இரு நிறுவனங்களும் ஆராய்ந்து முடிவெடுப்பதற்கான காலக்கெடு கொடுக்கப்பட்டது. அந்த காலக்கெடு நேற்று (டிச. 21) முடிவடைந்தது. இதனையடுத்தே சோனி நிறுவனத்துடன் ஜீ நிறுவனத்தை இணைப்பதற்கான அனுமதியை அளித்திருக்கிறது ஜீ நிறுவனத்தின் நிர்வாகக் குழு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSதற்போது ஜீ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக புனித் கோயன்க்காவும், சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக என்.பி.சிங்கும் இருக்கின்றனர். இரு நிறுவனங்களும் இணைந்த பிறகு புனித் கோயன்க்காவே மொத்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும், தலைமை செயல் அதிகாரியாகவும் தொடர்வார் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், புனித் கோயன்க்கா தலைமை செயல் அதிகாரியாகத் தொடர வேண்டும் என்பது ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகவே இருந்திருக்கிறது. அதனை சோனி பிக்சர்ஸ் நிறுவனமும் ஒத்துக் கொண்டதாகத் தெரிவித்திருக்கிறது ஜீ நிறுவனம். இந்த இணைப்புக்குப் பிறகு என்.பி.சிங் சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் ஒரு பகுதியான சோனி பிக்சர்ஸ் இந்தியா பிரிவுக்குத் தலைவராகத் தொடர்வார் எனத் தெரிகிறது.

இந்த இணைப்புக்குப் பிறகு இணைந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் யார் யார் இருப்பார்கள் என்பதைச் சோனி நிறுவனம் தான் தேர்ந்தெடுக்குமாம். தற்போது 'ZEEL' என இந்தியப் பங்குச்சந்தையில் ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் பங்குகள் வர்த்தகமாகி வருகின்றன. இந்த இணைப்புக்குப் பிறகு, இணைந்த நிறுவனத்தின் பங்குகள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொழுதுபோக்கைப் பொருத்தவரை ஸ்டார் மற்றும் டிஸ்னியின் கூட்டணியே பெரிய அளவில் தற்போது வெற்றிகரமாக இருந்த வருகிறது. இந்தியாவில் ஆழக் கால் பதித்திருக்கும் ஸ்டார் குழுமத்துடன், டிஸ்னியும் சேர்ந்தது பெரு வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. சோனி பிக்சர்க்ஸ் நிறுவனத்தைப் பொருத்தவரை இந்தியாவில் ஹிந்தி மொழிப் படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள், விளையாட்டு தொலைக்காட்சி ஆகியவற்றில் சோனிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனமானது இந்தியாவின் பிராந்திய மொழிகளில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஸ்டார் மற்றும் டிஸ்னி கூட்டணியுடன் இந்தியாவில் போட்டியிடுவதற்காக ஏற்கனவே ரிலையன்ஸின் வயகாம் (Viacom) உடன் கூட்டணி வைக்க எடுக்கப்பட்ட சோனியின் முடிவுகள் தோல்வியில் முடிந்திருந்தது. இந்த நிலையில் தான் ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடனான இணைப்பு தற்போது சோனிக்கு சாத்தியமாகியிருக்கிறது. இரு நிறுவனங்களும் இணைந்து ஸ்டார் மற்றும் டிஸ்னி கூட்டணிக்கு இன்னும் வலுவான போட்டியை ஏற்படுத்த முடியும். ஜீ மற்றும் சோனி நிறுவனங்கள் இணைந்து மொத்தமாக மொத்தமாக 26 சதவிகித பார்வையாளர்களைக் கொண்டிருக்கின்றனர். தொலைக்காட்சிகள் மட்டுமின்றி ஓடிடி தளத்திலும் ஜீ நிறுவனத்தின் Zee5 9 சதவிகித சந்தைப் பங்கையும், சோனிலைவ் மற்றும் ஆல்ட்பாலாஜி இணைந்து 4 சதவிகித சந்தைப் பங்குகளையும் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் ஓடிடியில் ஆளுக்கு 20 சதவிகித பங்குகளுடன் நெட்பிளிக்ஸும், அமேசான் ப்ரைம் வீடியோவும் இருக்கின்றன. அதனைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் 17 சதவிகித சந்தப் பங்குகளுடன் ஹாட்ஸ்டார் மற்றும் டிஸ்னி கூட்டணி இருக்கிறது. ஜீ மற்றும் சோனி இணைப்பின் மூலம் கொஞ்சம் அதிகமான போட்டியைக் கொடுக்கமுடியும்.

தற்போது ஜீ நிறுவனத்தின் ப்ரமோட்டர்களிடம் 4 சதவிகிதத்துக்கும் குறைவான அளவே நிறுவனத்தின் பங்குகள் இருக்கின்றன. இரு நிறுவனங்களின் இணைப்புக்குப் பிறகு இதனை 20 சதவிகிதம் வரை சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு உயர்த்திக் கொள்ளலாம் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜீ நிறுவனத்தின் முக்கியமான பங்குதாரராக இருக்கும் இன்வெஸ்கோ நிறுவனம் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்திருக்கிறது. இந்த வழக்கு தற்போது பாம்பே உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.