
எனக்கு வயசு கம்மிதான். எக்ஸ்ப்ரிமென்ட் பண்ண இதான் சரியான நேரம்னு தோணுது. சிங்கீதம் சீனிவாச ராவ் சார் மாதிரி எக்ஸ்ப்ரிமென்ட் படங்கள் பண்ண ஆசை.
தருண் பாஸ்கர்... தெலுங்கு சினிமா கொண்டாடும் இளம் நம்பிக்கை இயக்குநர். குறும்படங்களிலிருந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்து இயக்கம்-நடிப்பு எனக் கலக்கிவருபவர். இரண்டு படங்கள்தான்... முதல் சினிமா ‘பெல்லி சூப்புலு’ (ஜோடிப்பொருத்தம்) மூலம் தெலுங்கு தேசத்தையும் தாண்டிப் பல மொழிகளில் கவனம் ஈர்த்தவர். அதே படத்துக்காக தேசிய விருது வரை பல விருதுகளை வாங்கிக்குவித்தவர். விஜய தேவரகொண்டாவைத் தமிழ்நாடுவரை கொண்டு சேர்த்தவர். ‘ஈ நகரினிக்கி ஏமைந்தி’ (நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு?) என்ற GenZ படத்தை இயக்கிய கையோடு, ‘மீக்கு மாத்ரமே செப்தா’ (உங்கிட்ட மட்டும்தான் சொல்றேன்) என நடிக்கவும் கிளம்பிவிட்டார். இப்போது ‘கீடா கோலா’ என்ற தன் மூன்றாவது படத்தின் இறுதிக்கட்டப் பணியில் பிஸியாக இருக்கிறார். ஒரு கரப்பான் பூச்சி + கோலா குளிர்பானத்தை மட்டுமே புரொமோஷன்களில் காட்டி எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளார். ஒரு விர்ச்சுவல் சேஸிங்கிற்குப் பிறகு அவரைப் பிடித்தேன்.

‘‘பெல்லி சூப்புலு 2016-ல் ரிலீஸானது. 2018-ல் இரண்டாவது படம் ஈநகரினிக்கி... இப்போது கீடா கோலா... ஏன் இத்தனை இடைவெளி?’’
‘‘நடுவில் வந்த கொரோனாவை விட்டுட்டீங்க. 2021-ல ‘பிட்டகதாலு’ ஆந்தாலஜியில் ஒரு படம் நெட்ப்ளிக்ஸில் வந்ததே. முதல் படம் ‘பெல்லி சூப்புலு’ ஃபீல் குட் படமா இருந்தாலும் அதுக்கான உழைப்பு இப்போதுவரை என்னால் நினைத்துப் பார்க்க முடியாதது. குறும்பட அனுபவத்தை மட்டுமே வைத்து சினிமாவுக்குள் நுழைவது ஈஸிதான். ஆனால், ஒரு படத்தை உருவாக்கப் பல்வேறு அபாய கட்டங்களைக் கடக்க வேண்டியிருந்தது. 50 லட்சத்தில் மொத்தப் படத்தையும் எடுத்துவிடலாம் என்று நினைத்த எனக்கு ஒண்ணே கால் கோடி தேவைப்பட்டது. அதற்கான பட்ஜெட் தர ஆட்களே இல்லை. நண்பர்களின் உதவியோடும், பெற்றோரின் தியாகத்தோடும்தான் மீதிப் பணத்தைச் சேர்த்துப் படத்தை எடுக்க முடிந்தது. ஒரு படத்தின் ஸ்கிரிப்ட்டை ரசித்துத் திறமையாக எழுதிவிடலாம். ஆனால், சினிமாவாக அதை உருவாக்க, ஒவ்வொரு நாளும் போராட வேண்டியிருந்தது. அதற்கான பலனாக தேசிய விருது கிடைத்ததில் அத்தனை மகிழ்ச்சி.
முதல் படம் ரிலீஸானதும் ஆசுவாசப்படுத்தக்கூட நேரம் இல்லாமல், விழாக்கள், அடுத்த பட ஸ்கிரிப்ட் என பிஸியாகவே இருந்தேன். நடுவில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு வர, ஓகே சொன்னேன். ‘சீதாராமம்’ வரை நிறைய கெஸ்ட் ரோல் பண்ணியபிறகு திரும்பிப் பார்த்தால் சின்ன இடைவெளி உருவாகியிருந்தது. இதோ அடுத்த படம் விரைவில் ரிலீஸாகிறது. Back with a bang!”

“ ‘பெல்லிசூப்புலு’க்குப் பிறகு தெலுங்கு சினிமாவே உங்களை உற்று கவனிச்சிச்சு. அடுத்ததா பெரிய ஸ்டார்கள்கூட படம் பண்ணப்போறீங்கன்னு பார்த்தா, புதுமுகங்களை வெச்சு சம்பந்தமே இல்லாத ‘ஈ நகரினிக்கி’ படத்தைப் பண்ணுனீங்க?”
“எனக்கு வயசு கம்மிதான். எக்ஸ்ப்ரிமென்ட் பண்ண இதான் சரியான நேரம்னு தோணுது. சிங்கீதம் சீனிவாச ராவ் சார் மாதிரி எக்ஸ்ப்ரிமென்ட் படங்கள் பண்ண ஆசை. நிச்சயம் கமர்ஷியல் படங்கள் பண்ணுவேன். அதுக்குக் கொஞ்சம் நாளாகும். அதுவரை விதவிதமா எக்ஸ்ப்ரிமென்ட் பண்ணிட்டு இருப்பேன். அதனால சிம்பிளான Buddy comedy கதையை எழுதினேன். நான் குறும்படம் எடுக்க வந்த கதையைக் கொஞ்சம் அதுல சேர்த்ததால அது ஜாலியான த்ரில்லரா மாறிடுச்சு! இப்பவரை இந்தப்படம் பலரை குறும்படம் எடுக்க மோட்டிவேட் பண்ணிட்டு இருக்குறது சந்தோஷமா இருக்கு!”
‘‘நடுவில் இயக்கத்தை விட்டு நடிக்கப் போனீங்க?’’
‘‘சினிமாதான் எனக்கு எல்லாமே. அதில் கத்துக்க நிறைய இருக்குறதா தோணுச்சு. நடிக்க வந்ததால்தான் சிங்கீதம் சீனிவாச ராவ் சார் மாதிரியான லெஜண்ட்களின் அன்பு கிடைத்தது. ‘மகாநடிகை’ படத்துல சிங்கீதம் சாரின் சின்ன வயசு பாத்திரத்தில் நடிக்க முடிந்தது. கொரோனா லாக்டௌனில் நிறைய கதைகள் வாசித்தேன். ஸ்கிரிப்ட் எழுதினேன். ‘ஒரி தேவுடா’, ‘கணம்’ படங்களுக்குத் தெலுங்கில் வசனம் எழுதிக் கொடுத்தேன். நண்பர்கள் என்னை நடிக்க அழைத்தார்கள்.’’

“அதென்ன டைரக்டர் ஆகுறவங்க எல்லோரும் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிச்சுட்டே வர்றீங்க..?”
“ஹா...ஹா... கௌதம் வாசுதேவ் மேனன் ஆரம்பிச்சார்னு சொல்லலாமா? நானும் அவரைப்போல மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்தாலும் இன்ஜினீயரிங் பக்கம் போக விரும்பவில்லை. என் அப்பாவும் அப்படியே ‘வாரணம் ஆயிரம்’ அப்பா போலத்தான்.
என் ஆர்வத்தைத் தெரிந்துகொண்ட அவர் என்னைத் திட்டவில்லை. சுதந்திரத்தோடு வளர்த்தார். அதுவே எனக்கு குறும்படங்கள் எடுக்க ஆர்வத்தைத் தூண்டியது. அதில் நடித்த அனுபவம் பின்னாளில் நடிக்க வாய்ப்பு வந்தபோது பயன்படுத்திக்கொள்ள உதவியாக இருந்தது. அப்பா, ‘நீ நியூயார்க் பிலிம் அகாடமி போய் படிடா’ என்று உற்சாகப்படுத்தி அனுப்பி வைத்தார். அம்மா எப்போதும் என் கனவுக்குத் துணை இருந்தார். ‘என் மகன் பெரிய டைரக்டர் ஆகிடுவான்’ என இரண்டு பேரும் உறுதியாக நம்பினார்கள். எல்லோரிடமும் சொல்லவும் செய்தார்கள். ஒரே மகன் என்பதால் அத்தனை அன்பையும் கொட்டி என்னை வளர்த்தார்கள்.
இரண்டு படங்களுக்குப் பிறகு என் வெற்றியைப் பார்த்த என் அப்பா, எனக்கு எல்லாமுமாக இருந்த என் அப்பா, தவறியதும் மனரீதியாக ரொம்பவே உடைந்துபோனேன். அம்மாதான் என்னை மீட்டெடுத்தார். என்னைப்போலவே என் அம்மாவும் சினிமாவில் நடிக்க வந்தது எனக்கான பொறுப்பை இன்னும் உணர்த்தியது. மனைவியும் முழுச் சுதந்திரம் கொடுத்திருந்ததால் எதிலும் அவசரப்படவில்லை.”

‘‘இயக்கிக்கொண்டிருக்கும் ‘கீடா கோலா’ படத்தின் போஸ்டரே வித்தியாசமாய் இருக்கிறது. ஒரு கரப்பான் பூச்சியை நடிக்க வைத்திருப்பதாகச் சொல்கிறார்களே?’’
‘‘கரப்பான் பூச்சியை நடிக்க வைக்கவில்லை. ஆனால் கரப்பான் பூச்சிக்கும் இந்தக் கதைக்கும் தொடர்பு இருக்கிறது. அது என்ன என்பது சஸ்பென்ஸ். ரிலீஸுக்குப் பிறகு, ‘அட, ஆமா... அதனாலதான் படத்தின் நடிகர்கள் யாரையும் வெளில சொல்லலையா?’ன்னு கேட்பீங்க பிரதர்! இது பான் இந்தியா மூவி மாதிரி ரிலீஸுக்குப் பிறகு எல்லோராலும் கவனிக்கப்படும்!”
“உங்கள் நண்பர் விஜய் தேவரகொண்டா பெரிய ஸ்டாரா ஆவார்னு எதிர்பார்த்தீங்களா?”
“விஜய் என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட். நான் ‘பெல்லி சூப்புலு’ பண்ணியபோது சம்பளமே வாங்காமல் நடித்துக்கொடுத்தான். என்மீது ரொம்ப நம்பிக்கை வைத்திருப்பவன். அந்தப் படத்தின் கடினமான நாள்களில் கூடவே இருந்து ரொம்ப உற்சாகப்படுத்துவான். அவனுக்கு சினிமாமீது வெறித்தனமான காதல் உண்டு. அதனாலேயே அவ்வளவு மெனக்கெட்டான். எனக்கு அவன் இந்தியாவின் முக்கியமான நடிகனாக வருவான் என்பது அவனது அர்ப்பணிப்பைப் பார்த்த அப்போதே தெரியும். ‘அர்ஜுன் ரெட்டி’ போல ஒரு படத்தில் நடிப்பது அவனால் எளிதாக முடியும்.”

“தமிழில் யாரை ரொம்பப் பிடிக்கும்..?”
“தமிழ் சினிமாவே ரொம்பப் பிடிக்கும் ப்ரோ. எல்லோரும் என் ஃபேவரைட்ஸ்தான். குறும்படத்துல ஆரம்பிச்ச லோகேஷ்லாம் ‘விக்ரம்’ படத்துக்குப் பிறகு கவனிக்கப்படும் இயக்குநராக மிரட்டுறார். மணிரத்னம் என் மானசீக குரு. அவரது ஒவ்வொரு படமும் ஒவ்வொரு வசனமும் எனக்கு அத்துப்படி. கடவுள் மாதிரி அவரை நினைக்காத நாளில்லை. ஒருவாட்டியாச்சும் அவரை நேர்ல சந்திக்கணும்னு கனவு கண்டவன். ‘பெல்லி சூப்புலு’க்குப் பிறகு அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைச்சுச்சு. சின்னவயசுல இருந்தே நல்லா ஓவியம் வரைவேன். அவரை அழகா வரைஞ்சு எடுத்துட்டுப் போயி கொடுத்தேன். அன்போட வாங்கிட்டு, படத்தை சிலாகித்துப் பாராட்டினார். ஒரு சிஷ்யனுக்கு அதைவிட என்ன சந்தோஷம் இருக்க முடியும்?
பாருங்க, இந்த வயசிலும் ‘பொன்னியின் செல்வன்’ பண்ணி அசத்துறார். அவரோட ரசிகனா நல்ல படங்கள் பண்ணுறதுதான் என் கனவு! ஒருவேளை சினிமாவுக்குள் நான் வராவிட்டாலும் நல்ல விளம்பரப்படங்கள் இயக்கியிருப்பேன். அவர் கூப்பிட்டுப் பாராட்டுற கிரியேட்டிவ் விளம்பரங்களை எடுத்திருப்பேன். அவ்வளவு பிடிக்கும் மணி சாரை!”