சினிமா
தொடர்கள்
Published:Updated:

நம்மை நமக்கு விற்கிறார்கள்!

‘தி கிரேட் ஹேக்’
பிரீமியம் ஸ்டோரி
News
‘தி கிரேட் ஹேக்’

‘என்னைப்பற்றி நீங்கள் வைத்திருக்கும் தரவுகள் எனக்குத் திரும்பக் கிடைக்குமா?’

ந்த நூற்றாண்டின் மிக முக்கிய மோசடிகளில் ஒன்று அம்பலமானது இந்த ஒற்றைக் கேள்வியால்தான்.

‘கேம்பிரிட்ஜ் அனலிடிகா’ என்னும் நிறுவனம் அமெரிக்க வாக்காளர்களின் ஃபேஸ்புக் மற்றும் இன்னும் சில தகவல்களைச் சேகரித்து அதன் மூலம் அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் தேர்தல் பிரசாரத்தில் உதவியது. அதில் தன்னைப் பற்றிய தகவல்கள் என்ன இருக்கின்றன, அவை எப்படிப் பயன்படுத்தப்பட்டன என்று டேவிட் கரோல் என்பவர் கேட்ட கேள்விதான் டேட்டாவைச் சுற்றிச் சுழலும் டிஜிட்டல் உலகம் எவ்வளவு ஆபத்தானது என்பதை அனைவருக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டியது. இந்தப் பிரச்னையின் வீரியத்தை அப்படியே நம்முன் எடுத்துவைக்கும் முக்கியப் பதிவு, நெட்ஃப்ளிக்ஸின் ஆவணப்படமான ‘தி கிரேட் ஹேக்’ (The great hack).

‘என்றாவது, நாம் பேசுவதை ஒட்டுக்கேட்டுதான் நமக்கு ஆன்லைனில் விளம்பரங்கள் வருகின்றன என நினைத்திருக்கிறீர்களா?’ எனப் பேராசிரியர் ஒருவர் மாணவர்களிடம் கேட்கிறார். இதற்கு மாணவர்கள் அனைவரும் கைகளைத் தூக்குமிடத்தில் தொடங்குகிறது இந்த ஆவணப்படம். எப்படித் துல்லியமாக விளம்பரம் வருகிறது, இதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அரசியல் இருக்கிறது என்பது ஆவணப்படம் முடியும்போது உங்களுக்கே புரிந்துவிடும். இந்தக் கேள்வியை மாணவர்களிடம் கேட்கும் அமெரிக்கப் பேராசிரியர்தான் கேம்பிரிட்ஜ் அனலிடிகாவிடம் தனது டேட்டாவைக் கேட்டு பிரிட்டிஷ் நீதிமன்ற வாசல் ஏறிய டேவிட் கரோல். இவரது டேட்டா கடைசி வரை திரும்பத் தரப்படவில்லை. ஆனால், உண்மைகள் பல உலகுக்குத் தெரியவந்தன.

இந்த டேவிட் கரோல், கேம்பிரிட்ஜ் அனலிடிகாவின் முன்னாள் ஊழியர் பிரிட்னி கைசர், பிரெக்ஸிட்டுக்கு(Brexit) ஆதரவான பிரசாரத்திற்கும் இதற்கும் இருக்கும் தொடர்புகளை வெளிக்கொண்டுவந்த ‘கார்டியன்’ பத்திரிகையாளர் கரோல் கேட்வாலடர் என இந்த மூவரின் வழியாக மொத்த சர்ச்சையும் நமக்குச் சொல்லப்படுகிறது.

சமகாலத்தில் ‘டேட்டா’ எப்படி ஓர் ஆயுதமாக உருவெடுத்திருக்கிறது என்பதை நமக்கு உணர்த்துகிறது இந்த ஆவணப்படம்.

நம்மை நமக்கு விற்கிறார்கள்!

50 மில்லியன் மக்களின் தகவல்கள் ஃபேஸ்புக்கிடமிருந்துதான் கேம்பிரிட்ஜ் அனலிடிகாவுக்குச் சென்றிருக்கிறது. இதில் எப்படி மக்கள் பிரிக்கப்படுகின்றனர், எப்படி மூளைச்சலவை செய்யப்படுகின்றனர் எனக் காட்டப்படும் காட்சிகள்தான் இன்னும் பதறவைக்கின்றன. அதிலும் சேலஞ்ச், ஹேஷ்டேக் போன்றவற்றை மட்டுமே வைத்து ஒரு தேர்தலில் எந்த அளவில் மாற்றம் நிகழ்த்தமுடியும் என்பதை உணர்த்துகிறது ‘டிரினிடாட் அண்டு டொபாகோ’ தேர்தல் எபிசோடு.

கேம்பிரிட்ஜ் அனலிடிகா மக்களை இரண்டு வகைகளாகப் பிரித்திருக்கிறது. ஒன்று நிலையாக இருப்பவர்கள். அவர்களை என்ன செய்தாலும் மற்றொரு கட்சிக்கு ஓட்டளிக்கவைக்க முடியாது. நிலையாக இல்லாத, எளிதாக மனமாற்றம் அடையக்கூடிய மக்களை ‘Persuadables’ என அழைக்கின்றனர். இவர்களை எளிதாக ஒரு பக்கம் சாயவைத்துவிடலாம். இவர்களின் எண்ணிக்கை கணிசமாக இருப்பதால் ஒரு தேர்தலின் முடிவையே ‘டேட்டா’வால் தீர்மானிக்க முடியும். இதற்கு இவர்கள் பயன்படுத்துவது வதந்திகளையும் வெறுப்புணர்வைத் தூண்டும் பதிவுகளையும்தான்.

இதற்கு ஒரே தீர்வுதான். இந்த ஆவணப்படமும் அதையே சொல்கிறது. ‘Persuadables’ குறைவது மட்டுமே இதற்கு ஒரு முழுமையான தீர்வாக இருக்க முடியும். ‘தமிழனாய் இருந்தால் ஷேர் செய்’ மெசேஜுகள் பின்னும் ஆயிரம் அரசியல் ஒளிந்திருக்கும். அதைக் கண்டு ஏமாறாமல் இருக்க வேண்டியது யார் கடமை? டேட்டா என்னும் இந்த ஆயுதத்திற்கு எதிராக நம்மிடம் இருக்கும் ஒரே கேடயம் எது?

மெய்ப்பொருள் காணும் நம் அறிவுதான்.