''நாங்களும் சமைக்கிறோம், வீட்டு வேலைகள் செய்கிறோம், குழந்தைக்கு டயப்பர் மாட்டுகிறோம், ஷாப்பிங்கில் ஹேண்ட்பேக்கை சுமக்கிறோம், இவ்வளவு உதவிகள்(?!) செய்தும் இந்த பெண்களுக்கு நன்றியே இல்லையே!” என்று ஆண்களை புலம்பவிட்டிருக்கிறது தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் மலையாள திரைப்படம் 'The Great Indian Kitchen'.
The Great Indian Kitchen-ல் படம் முழுக்க பெண்கள் சமைத்துக்கொண்டே இருக்கிறார்கள். சமையல், வீட்டு வேலைகள், கலவி என வீட்டுக்குள் பெண்கள் கேட்கும் சத்தத்தையும் அவர்கள் உணரும் மணத்தையும் திரைமொழியாக கொண்டு மிக அழுத்தமாக உருவாக்கப்பட்டிருக்கும் படம் இது. உணவை முக்கியமாக கருதும் நம்மூரில், சமையலை ஒரு வேலையாக, தொழிலாக அல்லாமல் உணர்வுகளுடன் கலந்து ரொமான்ட்டிசைஸ் செய்வது பெண்களை உணர்வுப்பூர்வமாக அடிமையாக்கி கொண்டிருக்கிறது என்பதை முக்கிய கருவாகப் பேசுகிறது படம்.
MA படித்திருக்கும் மாமியார் தன் கணவருக்கு பிரஷ்ஷில் பேஸ்ட் வைத்துக் கொடுப்பதிலிருந்து, வெளியில் போகும்போது செருப்பு எடுத்துக் கொடுக்கும்வரை ''பணிவிடைகள்” செய்கிறார். புது மருமகளும் அதே வேலைகளை செய்யவேண்டும் என்பதை இயல்பாக அந்த குடும்பம் அப்பெண்ணின் மேல் திணிக்கிறது. ஆரம்பத்தில் நம்முடைய குடும்பம்தானே என்றெண்ணி வேலைகளை செய்யத் தொடங்கும் அவள் ஒருகட்டத்தில் தான் அக்குடும்பத்தில் ஒரு பணியாளாக மட்டுமே இருப்பதையும், தன்னுடைய அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரம் பறிக்கப்பட்டிருப்பதையும் உணர்கிறாள். அவள் மேற்கொண்டு என்ன செய்கிறாள் என்பதுதான் படத்தின் முடிவு. தினசரி வீட்டில் பெண்கள் செய்யும் வேலைகளும், ஆண்களின் பங்கு என்ன என்பதும்தான் காட்சிகள்.
படத்தை பார்த்ததும் சொல்லி வைத்தாற்போல் அவ்வளவு ஆண்களும் இது 1980-களின் படம், தமிழ்ச்சமூகம் இப்படி இல்லை, இப்படிப்பட்ட குடும்பங்கள் இந்த கிரகத்திலேயே கிடையாது, இது விசு காலத்து சினிமா, #NotAllMen என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
விசு காலத்தை விடுங்கள். 2018-ல் வேலைக்கு செல்லும் மனைவி, வீட்டையும் குழந்தைகளையும் கவனித்து கொள்ளும் ’ஹவுஸ் ஹவுஸ்பண்ட்’ என்பதை கருவாக வைத்து ’ஆண் தேவதை’ என்றொரு படம் வந்தது. ட்ரெய்லரே பெரிய சலசலப்புகள் ஏற்படுத்தியது. இந்த ஒரே படத்தில் தமிழ்ச்சமூகமே மாறிவிடும் என காத்திருந்தோம். ஆனால் படம் ஆண்தான் சம்பாதிக்க வேண்டும், பெண்ணுக்கு குடும்பத் தலைவராகும் தகுதி இல்லை என்ற தீர்ப்போடு முடியும் வழக்கமான Cringe ஆக இருந்தது. ஆண் தேவதை போன்ற க்ளீஷேக்களை கொண்டாடிய தமிழ்ச்சமுகத்தினால் 'The Great Indian Kitchen' போன்று அசலான திரைப்படங்களை எதிர்கொள்ள முடியுமா என்பதே கேள்வி!

ஒரு உரையாடலை தொடங்குவதற்கு முன்னால் முன்முடிவுகளுடன் அந்த விஷயத்தை அணுகுவது ஆண்களுக்கே உரிய குணமா என சந்தேகம் கொள்ளும் அளவு விமர்சனங்களையும், கேலிகளையும் பெற்றிருக்கிறது The Great Indian Kitchen.
இவர்களுக்கு கொஞ்சமும் சளைக்காமல் ''ஆமாஞ்சாமி” போடும் பெண்களையும் காண முடிவது காலக்கொடுமை! அது மட்டுமல்ல இந்த பெண்ணடிமைத்தனத்தை பாரம்பரியம் என்று வேறு சொல்லி நம்மை அசரடிக்கிறார்கள்.
“சில” வீடுகளில் ஆண்கள் வேலைகளை பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதை மறுக்கமுடியாது. இங்கே விதிவிலக்காக இருப்பவர்களுக்கு வாழ்த்துகளை சொல்லிவிட்டு பெரும்பான்மையினரின் பிரச்னையைப்பற்றி கொஞ்சம் பேசலாம்.
படம் தொடங்கிய பத்தாவது நிமிடத்தில் ''துவையலை அம்மியில் அரைத்தால்தான் அவங்க அப்பா சாப்பிடுவார்” என்று மாமியார் தன் புது மருமகளிடம் சொல்லும் காட்சியில் ஸ்தம்பித்து படத்தை சில நிமிடங்கள் நிறுத்திவிட்டேன். இன்றும் எங்கள் குடும்பங்களில் அப்பாக்களுக்காக மட்டுமல்ல, இந்தத் தலைமுறை ஆண்களுக்காகவும் தொடரும் காட்சி இது.
பெண்களுக்கென்று தனிப்பட்ட ஆசைகள், வாழ்க்கை முடிவுகள் இருக்கக்கூடாது. ஆண் பெண்ணைவிட உயர்ந்தவன் என்பதால் அவனுக்கு பணிவிடைகள் செய்வது, வீட்டை கவனிப்பது, குழந்தை வளர்ப்பது எல்லாம் பெண்களின் பொறுப்பு எனும் பாரபட்சமான விதியை பாரம்பரியமாக கொண்டதுதான் இந்திய குடும்ப அமைப்பு. ஆனால், ஆண், பெண், திருநர் என யாராக இருந்தாலும் சுயமரியாதையை விட்டுக்கொடுத்து அன்பின் பெயரால் அடுத்தவர் தேவைக்காக உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகக்கூடாது என்பதுதான் படம் சொல்லும் செய்தி.
அம்மா அம்மியில் அரைத்ததையும் மனைவி மிக்ஸியில் அரைப்பதையும் ஒப்புமைப்படுத்தி, “இன்றைய பெண்களுக்கு எல்லா வசதிகளும் செய்து கொடுத்திருக்கிறோமே, இன்னும் என்ன?” என்கிறார்கள் ஆண்கள்.
எதில் அரைப்பது என்பதில் இருந்து சமைப்பதா, வேண்டாமா என்பதுவரை அந்த பெண்களே தீர்மானிப்பதுதான் குடும்பத்திற்குள் சம உரிமை. ஆனால் அதைப்பற்றிய உரையாடல்கள்கூட நம் குடும்பங்களில் சாத்தியம் இல்லை என்பதைத்தான் படம் பேசுகிறது. தம் வீட்டு பெண்களுக்கு தாம் சுதந்திரம் கொடுத்திருப்பதாக ஆண்கள் சொல்லுவதே வேடிக்கையாக இருக்கிறது.

பெரும்பாலும் எல்லோருமே ”நானும் வீட்டு வேலைகளில் உதவுகிறேன்” என்கிறார்கள். ஐயா, அது உதவுதல் அல்ல, வேலைகளைப் பகிர்தல்!
இவர்களிடம் எஸ்கேப் ஆனாலும், அடுத்து ''பெண்கள் தங்கள் மகன்களை சரியாக வளர்க்கவேண்டும்” என்று பெண்கள் தலையில் Additional Baggage ஏற்றும் குரூப்பிடம் சிக்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. மீண்டும் பிள்ளை வளர்ப்பு பெண்களுக்கு மட்டுமேயான பொறுப்பு என்பதைதான் குறிப்பிடுகிறார்கள். குடும்பத்தினுள் எல்லோருக்கும் சமமான உரிமையும், மரியாதையும் இருந்தால் குழந்தைகள் தாமாகவே அதை கற்றுக் கொள்ள மாட்டார்களா?
அதே சமயம் பெண்களின் கையில் சமையலறை அதிகாரம் உள்ள வீடுகளில் ”வலியது வாழும்” கோட்பாட்டினால் ஒரே குடும்பத்தில் உள்ள குழந்தைகளிடத்தில் (இரண்டுமே ஆண் குழந்தைகளாக இருந்தாலும்கூட) உணவுப் பாகுபாடுகள் காட்டும் பெண்களும் நம்மிடையே உண்டு.
என் தோழி ஒருத்தி தினமும் காலையில் பள்ளியில் வந்து முதல்நாள் வீட்டுப்பாடத்தை எழுதுவாள். வேலை ஆட்கள் வைத்துகொள்ளும் வசதி படைத்த குடும்பத்தை சேர்ந்த அவள் எப்போது கேட்டாலும் வீட்டில் எழுத நேரமில்லாத அளவு வேலை அதிகம் என்று சொல்லுவாள். ஏற்கனவே இரண்டு வருடங்கள் அவளுக்கு இளையவர்களை பார்த்து கொள்வதற்காக பள்ளியில் இருந்து நிறுத்தப்படிருந்தாள். அவளுடைய மூத்த சகோதரன் வெளியூரில் படிக்கச் சென்றுவிட, விவசாய வேலைகளை மேற்பார்வை செய்யவும், அம்மாவுக்கு வீட்டில் உதவுவதற்காகவும் பத்தாம் வகுப்போடு பள்ளியில் இருந்தும் நிறுத்தப்பட்டாள். நம் வீடுகளில் ஆண்பிள்ளைகளுக்கு பரிமாறிவிட்டு பெண்பிள்ளைகள் சாப்பிடவேண்டும் என்பது முதல்கொண்டு பெண் குழந்தைகளின் கல்வி பல்வேறு காரணங்களால் அவர்களுடன் பிறந்த சகோதர்களுக்காக பாதிக்கப்படுவதுவரை இன்றும் நடந்துதான் கொண்டிருக்கிறது. எத்தனைப் பெண்களுக்கு விருப்பப்பட்ட காலேஜில் சேர அனுமதி கிடைக்கிறது?
ஃபேஸ்புக்கில் ஜெசிந்தா ஆர்டனையும், ஷைலஜா டீச்சரையும் பார்த்து “Women should rule the World” எனப் புல்லரித்து Transitional period-ஐ கொண்டாடும் அத்தைகளும், சித்திகளும் சொந்த வாழ்வில் ஐம்பது வயதை தொட்டதும், ”கடைசி காலத்துல யார் பார்த்துக்குவாங்க” என அச்சப்பட்டு மகன்களை சார்ந்திருக்க ஆரம்பிக்கின்றனர். ஒரு ஆணை சார்ந்து வாழ்வதே பெண்ணுக்கு சமூகத்தில் மரியாதையும், பாதுகாப்பும் கொடுக்கும் என்கிற அபத்தமான புரிதல் நன்கு படித்த, சுய சம்பாத்யம் உள்ள பெண்களிடையேகூட உண்டு.
குடும்பம், ஆண்-பெண் உறவுகள் பற்றிய விஷயங்கள் ட்ரெண்டாகும்போது, அந்த நேரத்தின் #GooseBumps மொமென்ட்டுகளோடு அது முடிந்துவிடுகிறது. மாற்று வழி, நிரந்தர தீர்வு பற்றிய தொடர் உரையாடல்கள் ஏன் நிகழ்வதில்லை?
பேரிடர்கள், போராட்டங்களின் போது உருவாகும் கம்யூனிட்டி கிச்சன்களைப் பார்த்து பொது சமயலறை முறைக்கான சாத்தியக்கூறுகள் பற்றி அலசி ஆராய்கிறோம். பின் நடைமுறைக்கு ஒத்துவராது என்கிற வாதத்தோடு அது முடிவுக்கு வந்துவிடுகிறது.

இருவரும் வேலைக்கு செல்லும் குடும்பங்களில் ஆரோக்யமான உணவை குறைந்த விலையில் மாஸ் கிச்சனிலிருந்து வாங்கிக் கொள்ளலாம் என்பது எவ்வளவு பெரிய ஆசுவாசம். இது ஒரு வசதி, கட்டாயம் இல்லை.
ஆனால் சோஷியல் மீடியாவில் கம்யூனிட்டி / மாஸ் கிச்சன்கள் பற்றிய பேச்சுகள் கேலியாக பார்க்கப்படுகின்றன. ”சமைக்கும் நேரத்தை மிச்சம் செய்து நிலாவுக்கு ரோடு போடுகிறீர்களா?” என்கிறார்கள்.
சொகுசான வாழ்க்கைமுறையில் இருந்துகொண்டு பொழுதுபோகாமல் கஷ்டப்படுபவர்களுக்கு அட்வைஸ்களை வாரி வழங்கும் இவர்கள் யார் என்றால், மாஸ் கிச்சனால் மனைவி சமைப்பதை நிறுத்திவிட்டால் என்ன செய்வது என்று அஞ்சும் ஆண்களும், சமையலறை கையில் இருந்தால் மொத்த குடும்பத்தையும் தன் கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம் என முட்டாள்தனமாக நம்பிக்கொண்டிருக்கும் பெண்களும்தான்.
படத்தில் தன் மருமகளுக்கு வீட்டு வேலைகளைக் கற்றுத் தந்து தன்னை போலவே அவளையும் தயார் செய்யும் மாமியார், பிறகு அதே மருமகள் வேலைக்கு செல்ல வேண்டும் என கேட்கும்போது, அவளுக்கு ஆதரவாக இருப்பது நமக்கும் சிறிது நம்பிக்கையைத் தருகிறது.
சோஷியல் மீடியாவில் புழங்காத பெண்களிடம் இருந்து இந்த திரைப்படத்தை பற்றி வந்த கருத்துகள் ஆறுதலாக இருந்தது. படம் அவர்களை ரொம்பவே பாதித்திருக்கிறது. ''படம் ஆரம்பித்து பத்தே நிமிடத்தில் மூச்சு முட்டுவதுபோல் இருந்தது'' என என் வயது பெண் ஒருத்தி சொன்னது நான் கேட்ட மிகச்சிறந்த விமர்சனம்.
The Great Indian Kitchen படத்தில் வரும் அப்பா - மகனை போல் என் தாத்தாவும், அப்பாவும் இருந்தார்கள். சில ஆண்டுகள் முன்புவரை சமையலறையில் குடிநீர் எதில் இருக்கும் என்று அறிந்திராதவர் என் அப்பா. வெளியூரில் என் சகோதரனுக்கு உதவி தேவைப்பட்டபோது அம்மா அவனுடன் சென்றுவிட்ட பின் வெளியில் சாப்பிட்டு பழக்கமில்லாத அப்பா தானே சமைக்க ஆரம்பித்தார். அவருக்குத் தேவை என்றபோது இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகு சமைக்க கற்றுக்கொண்ட அவர் இப்போது புதுப்புது ரெசிப்பிகளை எல்லாம் எங்களுக்கு சொல்லித்தருகிறார். தேவையைப் போல் வாழ்க்கைப்பாடம் சொல்லித்தரும் ஆசான் வேறில்லை.
சமையல் செய்வது அடிமை வேலை அல்ல. அடிப்படை உணவுகளையாவது சமைக்க தெரிந்திருப்பது அவசியம் என்பதை உலகமே முடங்கிக் கிடந்த நாட்களில் உணவகங்கள் இல்லாமல், வீட்டில் சமைக்கும் வசதி இல்லாமல், இருந்தும் சமைக்க தெரியாமல் மாட்டிக்கொண்ட எல்லோருக்குமே கொரோனா லாக்டெளன் உணர்த்தி இருக்கும்.
சமைப்பதற்காக மட்டுமே பெண்களை வீட்டில் இருக்க வைக்கக்கூடிய காலம் மறைந்து கொண்டிருக்கிறது. அன்பு, பண்பாடு, குடும்ப ஐஸ்வரியம் என எந்த ஒரு பெயரிலும் இனி பெண்களை வீட்டுக்குள் முடக்க முடியாது. பெண்கள் தங்களுக்கு எது ப்ரியாரிட்டி என்று உணரும்போது இந்த அமைப்பில் இருந்து சட்டென்று வெளியேறி விடுக்கூடிய காலம் இது.
பிகு 1: உங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் சமஉரிமை இருக்கிறது என்று நம்புகிறீர்களானால் திரைப்படத்தை குடும்பத்துடன் பாருங்கள். படத்திலோ, இந்த கட்டுரையிலோ பிரச்னை இருப்பதுபோல் தோன்றினால் உங்கள் குடும்பத்தினருடன் திறந்த மனதுடன் ஒருமுறை உரையாடுங்கள்.
பிகு 2: The Great Indian Kitchen திரைப்படம் சமையல் மட்டுமல்லாமல் நமது பாரம்பரியம், பண்பாடுகளின்மீது மிக அழுத்தமான குற்றச்சாட்டுகளை வைக்கிறது. முடிந்தால் மற்ற விஷயங்களைப் பற்றியும் சிந்தியுங்கள், விவாதியுங்கள்.