Published:Updated:

நல்ல காதல், நாடகக் காதல், கள்ளக்காதல், காமக்காதல்.... உண்மையில் எது காதல்?! மேடம் ஷகிலா - 4

காதல் - மேடம் ஷகிலா - 4
News
காதல் - மேடம் ஷகிலா - 4

நேரில் பார்த்து வரும் காதல்கள் புரிதலின்மையால் Short Duration-களில் முடியும் இக்காலத்தில், சோஷியல் மீடியாக்களில் பார்த்து, வீடியோ காலில் பழகி, பிறகு நேரில் டேட்டிங் செய்து திருமணம் செய்பவர்களின் எண்ணிக்கை நம் நெருங்கிய நண்பர்கள் பட்டியலிலேயே பெருகிக் கொண்டிருக்கிறது.

Published:Updated:

நல்ல காதல், நாடகக் காதல், கள்ளக்காதல், காமக்காதல்.... உண்மையில் எது காதல்?! மேடம் ஷகிலா - 4

நேரில் பார்த்து வரும் காதல்கள் புரிதலின்மையால் Short Duration-களில் முடியும் இக்காலத்தில், சோஷியல் மீடியாக்களில் பார்த்து, வீடியோ காலில் பழகி, பிறகு நேரில் டேட்டிங் செய்து திருமணம் செய்பவர்களின் எண்ணிக்கை நம் நெருங்கிய நண்பர்கள் பட்டியலிலேயே பெருகிக் கொண்டிருக்கிறது.

காதல் - மேடம் ஷகிலா - 4
News
காதல் - மேடம் ஷகிலா - 4
ஒரு புணர்ச்சி இறுதிப்புள்ளியென அழித்து விட முடியுமானால்... ஒரு வாய்த்தவறிய சொல் முத்தங்களை எரித்து விட முடியுமானால்... ஒரு சிறிய பிறழ்வு நம்பிக்கையத்தனையும் முறித்துவிடக் கூடுமானால்... ஒரு சம்மதம் சகல சுதந்திரத்தையும் பறித்து விடுமானால்... சகிக்கவும் மன்னிக்கவும் முடிகிற குற்றம் ஒன்று மீண்டும் மீண்டும் நினைவூட்டப் படுமானால்... சர்வ நிச்சயமாக நீங்கள் விலகி நடக்கலாம் அது காதல் இல்லை!
நேசமித்ரன்
எது காதல் என்பதற்கு கற்பிதங்கள் தேவையில்லை. ஆனால் எது காதல் இல்லை என்பதை தெளிவாக சொல்லும் நேசமித்ரனின் கவிதையோடு காதல் குறித்த உரையாடலைத் தொடங்கலாம் என நினைக்கிறேன்.

`வரனே அவஷ்யமுண்டு' என்றொரு மலையாளப்படம். கணவரை பிரிந்து மகளுடன் பல வருடங்களாக தனியாக வாழும் ஷோபனாவுக்கு ஐம்பது வயதை நெருங்கும்போது சுரேஷ் கோபியுடன் காதல் ஏற்படுகிறது. சொந்த மகள் முதல் சுற்றி இருப்பவர்கள்வரை அதை வித்தியாசமாகப் பார்க்கிறார்கள். ஆனால் ஷோபனா அதைப்பற்றி கவலைப்பட மாட்டார். ''சிறுவயதில் இருந்து எத்தனை காதல்” என்று கேலி செய்து பட்டியலிடும் தனது அண்ணனிடம், ''ஆறு'' என்று புன்னகையுடன் ஷோபனா சொல்வார். ''சர்ச்சில் பாவ மன்னிப்பு கேட்க வேண்டுமா'' என அவரது அண்ணன் கேட்பார். ''நான் பாவம் ஏதும் செய்யலையே, காதல்தானே செய்தேன்” என்பார் ஷோபனா.

மேடம் ஷகிலா
மேடம் ஷகிலா

ஒரு மனிதனுக்கு எத்தனை காதல்கள் வேண்டுமானாலும் வரலாம். நம்மை ரசனைமிக்கவர்களாக, எல்லோரிடமும் அன்பு செலுத்தக்கூடியவர்களாக வைத்திருக்கும் மாயத்தை காதல் மட்டுமே செய்யும். இங்கே குறிப்பிட வேண்டிய இன்னொரு விஷயம் ஷோபனா சொன்னதைபோல் தனக்கு இவ்வளவு காதல்கள் இருந்தது என்று நிஜத்தில் ஒரு பெண்ணால் சொல்லிவிட முடியாது. 'ஆட்டோகிராப்' க்ளாசிக்காக கொண்டாடப்படும் தமிழ் சினிமாவில் இன்றுவரை இப்படி ஒரு காட்சியோ, படமோ வந்துவிடவில்லை.

மேற்கத்திய நாடுகளில் 14-15 வயதில் இருந்தே பாய் ஃப்ரண்ட்/கேர்ள் ஃப்ரண்ட் வைத்துக் கொள்வது சாதாரணம். அவர்கள் காதலிக்க ஆரம்பிப்பதற்கு முன்பு ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து கொள்ள டேட்டிங் செல்கிறார்கள். அதை பெற்றோர்களிடமும் சொல்கிறார்கள்.

பதினான்கு வயதில் ஒருவரின் மேல் ஈர்ப்பு வருவது இயற்கை. நம் நாட்டில் பெற்றோர்கள் அதை ஒழுக்கக்கேடான குற்றமாக நினைத்துக் கொள்கிறார்கள். நம்மிடையே டேட்டிங் பற்றிய சரியான புரிதலோ, வெளிப்படையாக நடப்பதற்கான சாத்தியங்களோ இல்லை. அப்படியே சென்றாலும் பெரும்பாலான டீன் ஏஜ் காதல் உறவுகள் பாலியல் குற்றங்களில் முடிந்துவிடுகிறது.

ஜோதிகா சூர்யா
ஜோதிகா சூர்யா

ஒரு பெண்ணுக்குக் தன்னுடைய 16 வயதில் ஒரு ஆண் காதலிப்பதாக சொல்லும்போது முதன்முறை காதலை எதிர்கொள்ளும் சிலிர்ப்பு இல்லாமல், அவனை பிடித்திருக்கிறதா இல்லையா என யோசிக்க முடியாமல், அந்த காதல் சாதி ரீதியாக ஒத்து வராது எனும் எண்ணம் தோன்றும் அளவில்தான் நம் சமூகம் காதல் பற்றிய புரிதலையும் சாதி பற்றிய பயத்தையும் ஏற்படுத்தி வைத்திருக்கிறது. இந்த 2021-லும் பெரும்பாலான திருமணங்கள் காதல் இல்லாமல் சாதி, மதம், வர்க்கத்தின் அடிப்படையில் மட்டுமே நடக்கிறது.

திருமணத்திற்கு முன்பு வரும் எல்லா காதல்களும் ஆரம்பத்தில் திருமணம் நோக்கி செல்லவதாகவே நினைத்துக்கொள்வோம். ஆனால், உண்மையில் ஒரே ஒரு காதலை மட்டுமே மிகத் தீவிரமாக தடைகளை மீறி திருமணம் வரை கொண்டு செல்வோம். திருமணம் நடக்காவிட்டாலும்கூட நம் மனதில் அந்த ஒன்றுதான் காதல் எனும் பெயரில் எப்போதும் நிலைத்திருக்கும்.

ஒரு காதலை திருமணம் வரை கொண்டு செல்வது என்பது நம் சமூகத்தில் பெரும்பாடு. அப்படி காதலித்து புரிந்துகொண்டு திருமணம் செய்து கொள்பவர்கள் திருமணத்திற்கு பிறகு புரிதல் இன்மையால் விவாகரத்து வரை செல்கின்றனர். இல்லையென்றால் குழந்தைகளுக்காக சேர்ந்திருந்து மன உளைச்சலில் அவதிப்படுகின்றனர். அவ்வளவு உயிர்ப்புடன் காதலிக்கும் பலருக்கும் திருமணம் காதலின் Expiry Date ஆகிப்போவது ஏன் என்பதுதான் புரியாத புதிர். காதலில் ஒருவரைப்பற்றி இன்னொருவர் தெரிந்து கொள்ள காட்டும் ஆர்வம் ஒருவரை ஒருவர் அப்படியே ஏற்றுக்கொள்வதில் இருப்பதில்லை.

காதல் மற்றும் திருமணத்தினால் தனித்தன்மையை இழக்காமல் சுயமரியாதையுடன் சுதந்திரமாக இருப்பது மட்டுமே எத்தனை வயதானாலும் ஒருவர்மீது ஒருவருக்கு ஈர்ப்பை தக்க வைக்கும்.

கோபிகா, சேரன் -ஆட்டோகிராஃப்
கோபிகா, சேரன் -ஆட்டோகிராஃப்

நாற்பது வயதை நெருங்கும்போது பெரும்பலானவர்களுக்கு திருமண உறவுக்கு வெளியே ஒருவரின்மீது ஈர்ப்பு ஏற்படலாம். அந்த ஈர்ப்பு அக்கறை, அன்பு, கருணை, அரவணைப்பு, நம்பிக்கை, ஆறுதலான பேச்சு, காமம் என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். நாம் அதற்கு சூட்டும் பொதுப்பெயர் காதல். ஒருவரின்மீது ஈர்ப்பு ஏற்பட சினிமாக்களில் சொல்வதுபோல் திருமண வாழ்க்கையில் பிரச்னை இருக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. அதற்கான காரணங்களை வலிந்து உருவாக்க வேண்டிய தேவையுமில்லை. அதே சமயம் இழப்புகள், துரோகங்கள், தோல்விகளால் துவண்டு போகும் சிலருக்கு வாழ்க்கையை மீண்டும் உயிர்ப்புடன் வைப்பதும், முன்னகர்த்தி செல்வதும் இந்த இரண்டாம் இன்னிங்ஸ் காதல்தான்!

பார்க்காமலே காதலித்த `காதல்கோட்டை'யின் 2.0 வெர்ஷன்தான் இன்றைய சோஷியல் மீடியா காதல்கள் #VirtualLove. நேரில் பார்த்து வரும் காதல்கள் புரிதலின்மையால் Short Duration-களில் முடியும் இக்காலத்தில், சோஷியல் மீடியாக்களில் பார்த்து, வீடியோ காலில் பழகி, பிறகு நேரில் டேட்டிங் செய்து திருமணம் செய்பவர்களின் எண்ணிக்கை நம் நெருங்கிய நண்பர்கள் பட்டியலிலேயே பெருகிக் கொண்டிருக்கிறது. இணையத்தில் உண்டாகும் நட்பு/காதல் போலியானது எனும் Myth-ஐ இவர்கள் மகிழ்ச்சியாக வாழ்வதன் மூலம் உடைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அறுபது வயது பெண் ஒருவர் லாக்டெளனில் தனியாக இருந்த காலத்தில் வாழ்க்கை முழுவதும் தனிமையில் இருந்ததை உணர்ந்து தனக்கான ஒரு துணையை தேர்ந்தெடுத்து பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்கிறார். முதலில் அதிர்ச்சி ஆனாலும் பின் அவருடைய பிள்ளைகள் மகிழ்ச்சியில் சிரிக்கிறார்கள்.

சமீபத்தில் வந்திருக்கும் ஒரு பற்பசை விளம்பரம் இது. இந்த விளம்பரம் சமூக மாற்றத்திற்கான தொடக்கம் என்றாலும் இது படித்த, நடுத்தர வர்க்க குடும்பத்தில் நடப்பதுபோல் காட்டப்பட்டிருக்கிறது. உண்மையில் சென்னை போன்ற பெருநகரங்களில்கூட இப்படி ஒரு விஷயம் நடக்கும் சாத்தியங்கள் மிகக் குறைவு. காரணம் எது காதல் என்கிற குழப்பம் இளைஞர்களை விட நடுத்தர வயதினருக்கும், முதியவர்களுக்கும் அதிகமாக இருக்கின்றது. எல்லா வயதிலும் காதல் இயற்கையானது. நாம் அதை மறுதலிக்க முதல் காரணமாக இருப்பது சுற்றி இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்கிற எண்ணம்தான்.

''காதல்ங்கறது பூ மாதிரி... ஒருமுறை உதிர்ந்தா மறுபடியும் ஒட்டவைக்க முடியாது”, ''காதலித்தவரை திருமணம் செய்து கொள்வதே புனிதமானது” என்பதுபோன்ற நியதிகள் நம் சமூகத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறு காதலித்தவரை திருமணம் செய்ய முடியாவிட்டால் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்பதெல்லாம் தொண்ணூறுகள் வரை அதிகமிருந்தது.

ஷாலினி அஜித், ஜோதிகா சூர்யா
ஷாலினி அஜித், ஜோதிகா சூர்யா

இன்றைய இளைஞர்களிடத்தில் காதலுக்காக தற்கொலை எண்ணங்கள் இல்லாதது ஒரு பக்கம் மகிழ்ச்சி என்றாலும், காதலிக்க மறுப்பவர்களை, கருத்து வேறுபாடுகளால் பிரிய நினைப்பவர்களை பழிவாங்க கீழ்த்தரமான செயல்களில் இறங்குவது அதிர்ச்சியாக இருக்கிறது. குறிப்பாக பெண்களை கொலை செய்வது வரை போவது இப்போது அதிகம் நடக்கிறது. தற்கொலை, கொலை இரண்டுக்குமே காதல், காமம் பற்றிய அடிப்படை பாலியல் கல்வி நம் பாடத்திட்டத்தில் இல்லாததுதான் காரணம்.

எந்த சூழ்நிலையிலும் நம்முடைய சுயமரியாதையை, சுதந்திரத்தை பறிப்பது காதல் இல்லை. நாளையைப் பற்றிய நிச்சயமில்லாத இவ்வாழ்வில் எதன் பொருட்டும் முக்கியமாக காதலின் பெயரில் சுரண்டப்படும், அடிமைப்படுத்தும் ஒரு நச்சு உறவுக்குள் (Toxic Relationship) இருப்பது அவசியமற்றது.

பத்தாம் வகுப்பில் பள்ளி தோழி ஒருத்தியை பள்ளி வேலைநாளில் ஒரு கல்லூரி மாணவனுடன் வெளியில் சந்திக்க நேர்ந்தது. என்னை குடும்பத்துடன் பார்த்ததும் துப்பட்டாவால் முகத்தை மூடி திரும்பிக் கொண்டாள். மறுநாள் பள்ளியில் 'கட்' அடித்ததற்காக அவளை ஆசிரியர் அறையில் விசாரிக்கையில், நான் அவளை வேறு இடத்தில் கண்டதை ஆசிரியர்களிடம் சொல்லிவிட்டேன். அவளிடம், “உன்னை வகுப்புக்கு கட் அடித்துவிட்டு, பொய் சொல்லி தனியாக வரவழைப்பது காதல் இல்லை. Love is Progressing together'' என்று அப்போது ஏதோ சினிமாவில் கேட்ட வசனத்தை சொல்லிவிட்டேன். இன்றுவரை நான் செய்த அதிகப்பிரசங்கித்தனதுக்கு வருத்தப்பட்டாலும் “காதல் இருவரையும் ஒருசேர முன்னேற்றுவது” என்று சொன்ன வரிகள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. காதல்/நட்பு எதுவாக இருந்தாலும் மன உளைச்சலில் நாட்கள் வீணாகும்போது அது Toxic Relationship என்று உணர்த்துவது இந்த வரிதான்.

கல்பற்றா நாராயணன் எழுதிய 'சுமித்ரா' நாவலில் ஒரு காட்சி. சுமித்ரா இறந்து விடுகிறாள். செய்தி கேட்டு வரும் ஒவ்வொருவரும் தங்களுக்கு சுமித்ராவுடன் நிகழ்ந்தவைகளை நினைத்துப் பார்க்கிறார்கள். அவள் மிகுந்த அன்பானவளாக இருந்திருக்கிறாள். முன்பொருமுறை அவள் வீட்டுக்கு பாத்திரம் விற்க வருபவர் அவள் சோர்வாக இருப்பதைப் பார்த்துவிட்டு ஏன் எனக் கேட்கிறார். அதற்கு அவள் தலைவலியாக இருக்கிறது என்று சொல்கிறாள்.

ராதிகா சரத்குமார்
ராதிகா சரத்குமார்

தலைவலிக்கு பச்சிலை அரைத்துக்கொண்டு தடவ வருகிறார். தடவும் முன் தலை வலிக்கும் இடத்தில் சிறிது அழுத்தி விடுகிறார். சுமித்ரா அவரது கைகளை பற்றி முத்தம் கொடுக்கிறாள். அதன் பிறகு அவர் கதவைத் திறந்து வெளியேறும்போது சுமித்ரா புன்னகைக்கிறாள். அந்த சிரிப்பை கல்பற்றா நாராயணன் இதயம் நிறைந்த, வலி நிறைந்த, கருணை ததும்பும் சிரிப்பு என்றும், எத்தனை ஆண்கள் இப்படி ஒரு கருணையை கண்டிருப்பார்கள் எனவும் குறிப்பிடுகிறார்.

நம் சமூகத்தில் இது மிகவும் தவறானது. சட்டத்துக்கு புறம்பானது. ஆனால் சரி, தவறுகளை கடந்து இந்த கதையிலிருந்து புரிந்துகொள்ள வேண்டியது ஒன்றுதான். தூக்கம், பசியை போல காதலும், காமமும்கூட மனிதனுக்கு இயற்கையானது.

நமக்கு ஒருவரின் மீது ஏற்படும் காதலும், ஈர்ப்பும் எதை பற்றிக்கொண்டு வேண்டுமானாலும் வரலாம். காதலை புனிதப்படுத்த வேண்டியதில்லை. உடலும் மனமும் சேர்ந்ததுதான் காதல் என்பதே நிதர்சனம். காதலை சொல்ல, காதலை ஏற்றுக்கொள்ள காரணங்கள் தேட வேண்டியதில்லை.

ஒரு பக்கம் ''காதலுக்கு உடல் முக்கியமல்ல”, ''காமம் வேறு காதல் வேறு” என்று காதலை புனிதப்படுத்துபவர்கள். இன்னொரு பக்கம் காதல் தவறு, அசிங்கம் என்று கேவலமாக நினைப்பவர்கள். இவர்களுக்கிடையில் சிக்காமல் தன்னை அழகாகக் காத்து தலைமுறைகள் தாண்டியும் மாயங்களை நிகழ்த்திக்கொண்டே இருக்கிறது காதல்.

நல்ல காதல், நாடகக் காதல், கள்ளக்காதல், காமக்காதல் என காதலுக்கு மனிதர்கள் என்னப் பெயர் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்... ஆனால், காதல் ஒன்றுதான்!

காதலுக்கு முடிவேயில்லை... முடித்துவைக்கும் ஆள் இந்த உலகத்திலேயே இல்லை!